டிசம்பர், 2022க்கு பிரியாவிடை கொடுக்கும் மாதம். 2023அய் கைகொடுத்து வரவேற்கும் மாதம். டிசம்பருக்குள் நுழைவோம்.

டிசம்பர் 1: "மனுசங்கடா நாங்க மனுசங்கடா

உன்னைப் போல அவனப்போல

எட்டுச்சாணு ஒசரமுள்ள மனுசங்கடா" என்ற பாடல் எண்பதுகள் தொடங்கி தலித்துகளின் உரிமை முழக்கமாக தமிழ்நாடு முழுவதும் ஒலித்துக் கொண்டிருக்கும் புரட்சிப் பாடல். மக்கள் கவிஞர் என போற்றப்பட்ட இன்குலாபின் பாடல் இது. கீழக்கரையில் பிறந்து, கல்லூரி காலத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கு பெற்று திமுகவில் ஆர்வம் கொண்டு, பின் நக்சல்பாரி எழுச்சியால் ஈர்க்கப்பட்டு "மக்கள் கவிஞராக" உயர்ந்தவர்.

இப்போதைய அரியலூர் மாவட்டம், குளப்பாடி கிராமத்தில், மிராசுதார் கிணறு ஒன்றில் குதித்து விளையாடிய நான்கு தாழ்த்தப்பட்ட சிறுவர்கள் மீது சீற்றம் கொண்டு, கிணற்றில் மின்சாரத்தைப் பாய்ச்சி கொன்று விட்டார் அந்த மிராசுதார். தமிழ்நாட்டிலுள்ள தலித்துகள், இடதுசாரி, முற்போக்கு சக்திகளின் ஆவேசப்பாடலாக, தலித்துகளின் கொள்கை முழக்கமாக தமிழ்நாடு முழுவதும் முழங்கி வரும் இந்த பாடல் தோழர் இன்குலாப் எழுதியது.

சென்னை அம்பேத்கர் கல்லூரியில் பயின்ற மாணவர் ஒருவர் மெட்டமைத்து, கோடம்பாக்கம் மாணவர் விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் சென்னை முழுவதும் சுற்றிவந்து பாடிய பாடல். பின்னர் மறைந்த கே.ஏ.குணசேகரன் இந்தப் பாடலை கூத்து மேடைகளில் ஏற்றி தமிழ்நாடு முழுவதும் அனுப்பினார். அதன் மெட்டு மெலிந்து, திரிந்து, வறண்டு போயிருந்தாலும் பாடலின் அனல் வீச்சு இன்னும் குறையவில்லை.

இந்த தொடரை எழுதிக் கொண்டிருக்கும் வேளையில், இரண்டு கொடூரமான செய்திகள் ஏடுகளில் வந்துள்ளன. புதுக்கோட்டை, இறையூர் கிராமத்து சிற்றூர் வேங்கை வயலில் தலித்துகள் மீதான குரூரம் தாண்டவமாடியிருக்கிறது. குடி தண்ணீரில் மலத்தைக் கலந்து சாதிவெறி ஆட்டம் போட்டிருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்,திருச்சி, திண்ணியத்தில் மலத்தை வாயில் திணித்து தலித்துகளை கொடுமைப்படுத்தியதைக் கண்டோம். இடதுசாரிகளும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் முற்போக்கு சக்திகளும் அநாகரிக இழிவைத் துடைக்க களத்தில் நின்றன. தலித்துகள் மீதான தீண்டாமைக் கொடூரத்தை எதிர்த்துப் போராடுவதில், சாணிப்பால், சவுக்கடியை ஒழித்துக் கட்டிய இடதுசாரிகள்தான் முன்னணியில் உள்ளனர். திராவிடக் கட்சிகள் வாய் திறப்பதில்லை. இப்போது கூட, மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பழ. ஆசைத்தம்பி, வேங்கை வயல் தலித் மக்களை நேரில் சந்தித்தார். அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள தீண்டாமைக் கொடுமையை ஒழிக்கவும் அம்மக்களது கோரிக்கைகள் நிறைவேற உடன் நிற்போம் போராடுவோம் என உறுதி கூறியுள்ளார். மாலெ கட்சி போலவே, மார்க்சிஸ்ட் கட்சியும் விடுதலை சிறுத்தைகளும் களத்தில் உள்ளன. இரண்டாவது செய்தி, சேலம் மாவட்டம் நங்கவள்ளிக்கு அருகிலுள்ள கிராமத் தில் தலித்துகள் கோவிலுக்குள் அனுமதிக் கப்படவில்லை என்ற செய்தியும் வந்துள்ளது. இந்த செய்திகள் தமிழ் நாளேடுகளில் வரவில்லை. இது மிகப்பெரிய ஆச்சரியத்தையும் கேள்விகளையும் எழுப்புகிறது. அடுத்து செல்வோம். அறநிலையத் துறையின் கீழ்வரும் விருதாசம்பட்டி கோயில் பூட்டப்பட்டதாவும் செய்திகள் வருகின்றன. புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமு வேங்கை வயல் தலித்துகளை கோவிலுக்கு அழைத்துச் சென்று சாமி கும்பிட வைத்திருக்கிறார்! ஆனால், சேலம் ஆட்சியர் அப்படி ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக கோவில் பூட்டுப் போட்டு மூடப்பட்டு விட்டது! கோவில்களில் தலித்துகள் உரிமை கேட்கும் போதெல்லாம் கோவில்கள் அரசு அதிகாரிகளால் ஆட்சியாளர்களால் மூடப்படுவது வழக்கமாகிவிட்டது. இதுவும் தீண்டாமை தான். ஆளும் அரசுகள், அப்போது அதிமுக ஆட்சியிலும் இப்போது திமுக ஆட்சியிலும் கோவில்களில் தலித்துகளின் உரிமையை, அரசியல் சட்ட உரிமையை நிலைநாட்ட எதுவும் செய்வதில்லை?

டிசம்பர் 29 அன்று முதலமைச்சரும் எந்த 'தடகளத்தையும், தாண்டாமலே முக்கிய அமைச்சராகி விட்ட உதயநிதியும் அமைச்சர் பொய்யாமொழியும் கோலாகலமான திருச்சி விழாவில் கலந்து கொண்டுள்ளனர். முதலமைச்ச ரும் "செல்லப்பிள்ளை" உதயநிதியும் "திராவிட மாடல் அரசு பற்றி பேசியிருக்கிறார்கள். அவர்கள் பக்கத்தில் இருக்கும் இறையூர், வேங்கை வயலுக்கு சென்று வந்திருக்கலாம். நூற்றாண்டு நரகல்களால், ஆறாத புண்களால் துன்பப்பட்டு வரும் அந்த மக்களை சந்தித்து அவர்களது மனக் காயத்துக்கு ஆறுதல் சொல்லி வந்திருக்கலாம். குறைந்த பட்சம், திருச்சி விழா மேடையில் திமுக ஆட்சி நடக்கும் தமிழ்நாட்டில் இனி வேங்கை வயல் கொடூரத்துக்கும் விருதாசம்பட்டி இழிவுகளுக்கும் இடமில்லை என்றாவது பேசி இருக்கலாம். அது,... சாதிவெறி ஆதிக்க சக்திக ளுக்கு மட்டுமல்ல சாதிவெறியூட்டி தமிழகத்தை பிளவுபடுத்த எண்ணும் பாஜகவுக்கும் எச்சரிக்கை யாக இருந்திருக்கும்.

அண்மையில் வந்த செய்தி ஒன்று தலித்து களுக்கு பொருளாதார, கல்வி மேம்பாட்டிற்கு என்று ஒதுக்கப்பட்ட தொகை ரூ.927 கோடியை ஒன்றிய அரசுக்கு திருப்பியனுப்பியிருக்கிறது திமுக அரசு! என்கிறது.

வேங்கை வயல் தலித்துகள் சுடுகாட்டுக்கு பாதை இல்லை; குடியிருப்புகள் இடிந்து விழும் நிலையில் உள்ளது என ஆட்சியரிடம் கூறியுள்ளனர். இதுதான் தமிழ்நாடு முழுவதும் தலித்துகளின் வாழ்நிலை. இந்த வாழ் நிலையை மாற்றுவதற்கு நிலம், வீடு, கல்வி, மருத்துவம் வழங்கும் திட்டங்கள் ஏராளமாக உள்ளன. அப்படிஇருக்க, செலவிடவில்லை என்று கூறி ஏன் திருப்பி அனுப்ப வேண்டும்? பொறுப்பற்ற, தலித்துகள் விரோத அதிமுக அரசு திருப்பி அனுப்பிய தென்றால் திமுக அரசுமா திருப்பி அனுப்பவேண்டும்? இது அநீதியில்லையா? என்றுநீதிக்கான மக்கள் இயக்கம் கேட்கிறது.

"சதையும் எலும்பும் நீங்கள் வச்ச தீயில்வேகுதே

.. எதை எதையோ சலுகை என்று அறிவிக்கிறீங்க

நாங்க எரியும் போது..... போனிங்க?

என்பது இன்குலாபின் "மனுசங்கடா" பாடல் வரிகள்.

சென்ற ஆண்டு ஆட்சி மாற்றம் நடந்து திமுக ஆட்சிப் பொறுப்பேற்று அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை 'சமத்துவ நாளாக' முதலமைச்சர் அறிவித்த போது தமிழ்நாட்டிலுள்ள ஒடுக்கப் பட்ட தலித்துகள் நம்பிக்கை பெற்றனர். நிலமை மாறும் என்று நம்பிக்கை கொண்டனர். இதன் வெளிப்பாடாக, தலித் அமைப்புகள் பலவும் வரவேற்றன. ஏன், இடதுசாரிகட்சிகளும் கூட இதை வரவேற்றனர். இந்த நம்பிக்கை மீண்டும் பொய்த்துப் போகுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தக் கேள்விகளுக்கு உரிய விடை கூற வேண்டியது திமுக அரசின் பொறுப்பு. "பாஜகவை எதிர்கொள்ள அனைத்து படைக் கலன்களையும் தயார்படுத்திக்" கொள்ளு மாறு திமுக தலைவர் திரு ஸ்டாலின் கூறியிருக் கிறார். பாஜக தலித்துகளை கவர பல ஆயுதங்க ளோடு வரும்போது அதை எதிர் கொள்ள, தலித்துகளும் உழைக்கும் மக்களுமே தகுந்த ஆயுதம் என்பது முதலமைச்சருக்கும் தெரியும்.

வேங்கை வயல் பிரச்சனை தொடர்பாக புதுக்கோட்டையைச் சேர்ந்த ஒருவர் வழக்கு கொடுத்துள்ளார். அந்த மனு மீது பேசிய உயர் நீதிமன்ற நீதிபதிகள், "இந்தியாவில் தீண்டாமை ஒழிந்து விட்டது. அங்கொன்றும் இங்கொன்று மாக 10% தான் இருக்கிறது" என்று கூறியுள்ளனர்! நாட்டில் நீதியரசர்கள் உயரமான சிம்மாசனத்தில் இருந்து கொண்டு பார்க்கிறார்கள். இறங்கி வந்து பார்த்தால்தான் உண்மை சதவீதம் தெரியும்.

தலித்துகள் கோவிலை தேடுவார்கள் ஆட்சிகளை நாடுவார்கள், நீதிமன்ற கதவுகளை தட்டுவார்கள். எதுவும் திறக்காவிட்டால் சோர்ந்து விடமாட்டார்கள். விழுந்து விடமாட்டார்கள். எழுந்து நிற்பார்கள். உரிமைகள் பெறும்வரை, உண்மை விடுதலை பெறுவது வரை கவிஞர் இன்குலாப்பின் 'மனுசங்கடா' பாடல் ஒலித்துக் கொண்டே இருக்கும். "ரத்தக் கணக்க தீர்க்க வந்த மனுசங்கடா; பழங் கட்டெ எல்லாம் வெட்டி எரியும் மனுசங்கடா" என ஒலித்துக் கொண்டி ருக்கும். (இந்த வரிகள், கே.ஏ. குணசேகரன் பிரபலப்படுத்திய பாட்டில் இல்லை). தலித்துகளின் நூற்றாண்டுகால ஆவேசக் குரலாய், கொள்கை முழக்கமாய் ஒலித்த தோழர் இன்குலாப்பின் குரல் 2016, டிசம்பர் 1ல் நின்றுபோனது. எழுதுகோலும் விடை பெற்றுக் கொண்டது. இந்த டிசம்பரில் அவரை நினைவு கொள்வது அவரது எழுத்துகளை எண்ணி நினைவு கூர்வது அந்த மாபெரும் மக்கள் கவிஞனுக்கு அஞ்சலியாக மட்டும் இருக்காது. போராடத் தூண்டுவதாகவும் இருக்கும்.

அடுத்து டிசம்பர் 5.