தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டதிலிருந்து, தமிழ்நாட்டிற்கு எதிரான பொய் புரட்டுக் கருத்துக்களை திட்டமிட்டுப் பரப்பிக் கொண்டிருக்கிறார். தமிழ்நாடு என்று அழைப்பதைவிட, தமிழகம் என்று அழைப்பதே சரி என்று காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பேசினார் ஆர்.என்.ரவி. அடுத்து இந்த ஆண்டு துவக்கத்தில் சட்டமன்றத்தில் உரையாற்றிய ஆளுநர், மரபிற்கு மாறாக, தமிழ்நாடு அரசு தயார் செய்து கொடுத்த உரையில், சிலவற்றைத் தவிர்த்தும் தானாக சிலவற்றைச் சேர்த்தும் வாசித்தார். உடனடியாக, ஆளுநர் மாற்றி வாசித்த உரை அவைக் குறிப்பில் இடம் பெறாது என்றும் தமிழ்நாடு அரசு தயாரித்துக் கொடுத்த உரையே அவைக் குறிப்பில் இடம் பெறும் என்றும் தீர்மானத்தினைக் கொண்டு வந்தார் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின். அந்த தீர்மானத்தை வாசித்துக் கொண்டிருக்கும்போதே ஆளுநர், அவையில் இருந்து எழுந்து போய்விட்டார். இது அரசமைப்புச் சட்டத்தை, தமிழ்நாட்டு மக்களை அவமதிக்கும் செயலாகும். தமிழ்நாடு அரசு தயார் செய்து கொடுத்த உரையில் ஆளுநர் வாசிக்க மறுத்த 65வது பத்தியில், சமூகநீதி, சுயமரியாதை, சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம் போன்ற வார்த்தைகளும் பெரியார், அம்பேத்கர், காமராசர், அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்கள் பெயரும், திராவிட மாடல் ஆட்சி போன்றவை இடம் பெற்றிருந்தன. அவற்றை வாசிக்க மறுத்தது மட்டுமின்றி ஜனநாயக விரோதமாக, தான்தோன்றித்தனமாக சிலவற்றை இணைத்தும் படித்து தான் ஒரு ஆர்எஸ்எஸ்காரர், சனாதனவாதி என்பதைக் காட்டினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. சமூகநீதி, சுயமரியாதை, சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம் போன்றவை இந்திய அரசமைப்பு வகுத்துக் கொடுத்துள்ள கோட்பாடுகள் ஆகும். இந்திய அரசமைப்புச் சட்டத்தை காலில் போட்டு மிதித்தார் ஆளுநர். தமிழ்நாடு என்கிற பெயர் சாதாரணமாக வந்துவிடவில்லை. அதன் பின்னால் தியாக வரலாறு உள்ளது. தமிழ் படிக்க தனியாக ஆசிரியரை வைத்துள்ளதாகச் சொல்லிக்கொள்ளும்ஆர்.என்.ரவிக்கு அந்த வரலாற்றையும் கட்டாயம் சொல்லிக் கொடுத்திருப்பார்கள். பிரச்சினை பெரிதானவுடன் "தமிழ்நாடு என்பது பழங்காலத்தில் இல்லை என்பதால் தமிழகம் பொருத்தமான பெயர் என்று கூறினேன்" என்று சப்பைக்கட்டு கட்டினார். இதனிடையே, இந்திய ஆட்சிப்பணி பயிற்சி அதிகாரிகள் மத்தியில் உரையாற்றிய ஆர்.என்.ரவி, ஒன்றிய அரசிற்கும் மாநில அரசாங்கத்திற்கும் இடையே பிரச்சனை என்று வரும்போது நீங்கள் எல்லாரும் ஒன்றிய அரசின் பக்கம்தான் இருக்க வேண்டும். ஏனென்றால், உங்களை எல்லாம் பணியமர்த்துவது ஒன்றிய அரசுதான் என்று பேசினார். ஆளுநர் மாளிகையின் பொங்கல் நிகழ்ச்சி அழைப்பிதழில் தமிழ்நாடு என்றும் இல்லை. தமிழ்நாடு அரசின் இலச்சினையான ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரமும் இல்லை. 'இந்து, இந்து’ கத்தும் எந்தச் சங்கிகளும் ஆளுநரின் இச்செயலை கண்டிக்கவேயில்லை. இதில் இருந்தே சங்கிகளின் இந்துப் பாசம் நன்றாக விளங்கிடும். திருவள்ளுவர் நாள் அன்று, திருவள்ளுவரை சனாதனவாதியாகச் சித்தரித்துப் பேசினார் ஆர்.என்.ரவி. இப்படி தொடர்ந்து அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக, ஜனநாயகத்திற்கு எதிராக, தமிழ்நாட்டையும் தமிழ்நாட்டு மக்களையும் அவமதிக்கும் வகையில் செயல்பட்டு வரும் ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக மோடியின் ஒன்றிய அரசு திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும். அனைத்து கட்சிகளும் சட்டசபையில் ஆளுநர் நடந்து கொண்டது முறையற்ற செயல் என்று சொல்லி கண்டித்துக் கொண்டிருக்கும்போது, அதிமுகவின் ஒபிஎஸ், இபிஎஸ் இருவரும் ஆளுநரைப் பின் தொடர்ந்து வெளியேறிச் சென்றார்களே யொழிய சிறு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. இது தமிழ்நாட்டின் எதிர்க் கட்சி என்ன லட்சணத்தில் இருக்கிறது என்பதை வெளிக் காட்டுகிறது. இந்த நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும், ஆர்.என்.ரவியும் ஆளுநர் பதவியில் இருந்து வெளியேற வேண்டும் என்று மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.