வாணியம்பாடி, ஆம்பூர் பகுதிகளில் லட்சம் கோடிகள் அரசுக்கு அந்நிய செலவாணி ஈட்டி தந்த புளோரின்ட் ஷூஸ் பிரைவேட் லிமிடெட், புளோ ரின்ட் அப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட், யுனைடெட் இந்தியா அப்பர்ஸ் லிமிடெட் ஆகிய கம்பெனிகள் திவாலாகி விட்டதாக அதன் முதலாளிகள் அறிவித்ததைத் தொடர்ந்து, அதில் பணியாற்றிய ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து, வாழ்வாதாரம் இழந்து நிற்கிறார்கள். இந்தக் கம்பெனிகளை கலைப்பதற்கான நிறுவனம் (Liquidator) நியமிக்கப்பட்டு தொழிலாளர் தரப்பில் தோல் மற்றும் தோல் பொருள் ஜனநாயக தொழிலாளர் சங்கம் (இணைப்பு ஏஐசிசிடியு) சார்பில் அதன் தலைவர் தோழர் சுகுந்தன் முறையிட்டு, பின்பு தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்திற்கு சென்ற CA6(CAA)6/2021 வழக்கில் 10.6.2021 அன்று அளிக்கப்பட்ட தீர்ப்பை நடைமுறைப்படுத்தாமல் இழுத்தடித்து வருவதால் தொழிலாளர்கள் கடும் துயரத்துக்கு ஆளாகி வருகிறார்கள். தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பு நிதியான வருங்கால வைப்பு நிதியைக் கூட அவர்களால் எடுத்து பயன்படுத்த முடியவில்லை. இதுவரை பல தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். கொள்ளை லாபம் ஈட்டி வந்த புளோரின்ட் ஷூஸ் பிரைவேட் லிமிடெட், புளோரின்ட் அப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட், யுனைடெட் இந்தியா அப்பர்ஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் நிர்வாகக் குளறுபடி காரணமாகவே இன்று திவால் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றன.

சமீபத்தில் தோல் மற்றும் தோல் காலணி தயாரிப்பில் தமிழகத்திற்குள்ள பிரகாசமான வாய்ப் புகள் கருதியே தமிழ்நாடு அரசு கூட தோல் காலணி கொள்கை 2022 அறிவித்துள்ளது. 2 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு, 2250 கோடி அந்நிய நேரடி முதலீடு ஈர்ப்பு பற்றி எல்லாம் பேசப்படுகிற சூழலில் இந்த மூன்று ஆலைகளை இயங்க வைத்து வேலை செய்த தொழிலாளர்களுக்கு வேலை வழங்க முடியும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க முடியும். ஆனால் 10.6.2021 அன்று வழங்கப்பட்ட கம்பெனி சட்ட தீர்ப்பாய தீர்ப்பு மீது இன்றுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. திவாலா சட்டத் தொகுப்பு 2016 விதி 53ன் படி கம்பெனி கலைக்கப்படும் போது முன்னுரிமை அடிப்படையில் தொழிலாளர்களின் பாக்கிகள் முதலில் செலுத்தப்பட வேண்டும்.

கம்பெனி சட்ட தீர்ப்பாய முடிவை அமுல்படுத்த தவறிய பெரும் குற்றத்திற்கு ஆலை நிர்வாகம், நீதித்துறை மற்றும் தமிழக அரசே பொறுப்பாவார்கள். தொழிலாளர்களின் ரத்தத்தையும் வியர்வையையும் உறிஞ்சி விட்டு மனம் போன போக்கில் ஆலைகளை மூடி திவால் என்று அறிவிக்க அனுமதிக்கக் கூடாது. வாழ்வாதாரம் இழந்து நிற்கும் தொழிலாளர்கள், அவர்கள் குடும்பங்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மாண்புமிகு நீதித்துறைக்கு, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு, மாண்புமிகு சட்ட அமைச்சர் அவர்களுக்கு உண்டு. உடனே தலையிட்டு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி வரும் 15.9.2022 வியாழன் அன்று தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயம், சென்னை முன்பு பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் தோழர் சுகுந்தன் தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஏஐசிசிடியு மாநில சிறப்புத் தலைவர் சொ.இரணியப்பன் மாநிலச் செயலாளர்கள் திருநாவுக்கரசு, அதியமான், அஇமுபெக மாநிலக்குழு உறுப்பினர் கிருஷ்ணவேனி உரையாற்றினர். இகக மாலெ மாநிலச் செயலாளர் என்.கே.நடராஜன் வாழ்த்துரை வழங்கினார். நீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்தக் கோரி தலைமைச் செயலகத்தில் தொழிலாளர் அமைச்சரின் செயலாளரை சந்தித்து மனு கொடுத்தனர். ஆர்பாட்டத்திற்கு தோல் மற்றும் தோல் பொருள் ஜனநாயக தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சதிஸ் முன்னிலை வகித்தார்