தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தன்னுடைய அடுத்த அவதூறுப் பிரச்சார ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளார். இப்போது அவர் கார்ல் மார்க்ஸை நேரடியாகக் குறி வைத்துவிட்டார். கார்ல் மார்க்ஸின் சிந்தனை இந்தியாவைச் சிதைத்துவிட்டது என்கிறார். கூடவே டார்வினையும் வம்புக்கிழுக்கிறார். 'இழப்பதற்கு ஏதுமில்லை, அடிமை விலங்கைத் தவிர, அடைவதற்கோ ஒரு பொன்னுலகம் இருக்கிறது, உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்' என்று கூறி மானுட குலம் தழைத்தோங்க வறுமையில் வாடிய மாமேதை கார்ல் மார்க்ஸ். அவரைப்பற்றி ஆயிரக்கணக்கான பணியாளர்களுடன் ராஜ் பவனில், மக்கள் பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழும் ஆர்.என்.ரவி பேசுகிறார்!. மார்க்சியம் அந்நியக் கொள்கையாம். இத்தாலியின் பாசிச முசோலினியை மூஞ்சே சந்தித்ததும் ஜெர்மனியின் நாஜி கொள்கையான 'ஒரே கொடி, ஒரே தலைவர், ஒரே தத்துவம்' என்று ஆர்எஸ்எஸ் பேசிக் கொண்டு இருப்பதும் மட்டும் சுதேசிக் கொள்கையா? மார்க்ஸின் இயக்கவியல் பொருள்முதல்வாதமும் டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கொள்கையும் இராமாயணக் கதாபாத்திரங்களை வைத்து நாட்டு மக்களை ஏமாற்றி அதானி களைக் கொழுக்கச் செய்யும் ஆர்எஸ்எஸ் கூட்டத்தைச் சேர்ந்த ஆர்.என்.ரவிக்கு புரிந்திருக்க வாய்ப்பில்லைதான். அதனால்தான் வாயில் வந்தபடி பேசிக் கொண்டிருக்கிறார். இவரின் ஆர்எஸ்எஸ்- ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்தவர்கள் மத்திய பிரதேசத்தில் ஒரு பெண்ணை நரபலி கொடுப்பவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்ககள். அவர்களுக்கு பயந்து தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தனக்கு பாதுகாப்பு கேட்டு வழக்கு தொடுத்துள்ளார் அந்தப் பெண். அந்தப் பெண்ணே, 'நான் பாஜக-ஏபிவிபியைச் சேர்ந்தவள், என் தாயும் பாஜகதான். அவர் என்னை நரபலி கொடுக்க முயற்சிக்கிறார். அதற்கு பாஜக-ஆர்எஸ்எஸ்காரர்கள் துணை போகிறார்கள் என்று கூறியிருக்கிறார். தமிழ்நாட்டின் ஆளுநரான ஆர்.என்.ரவி அப் பெண்ணுக்குப் பாதுகாப்பு கொடுக்கலாமே! ஹரியானா மாநிலத்தில், நசீர் மற்றும் ஜுனைத் என இரண்டு இஸ்லாமியர்களை மோனு யாதவ் என்கிற பசுப் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்தவன் தீ வைத்து எரித்துக் கொன்றுள்ளான். ஹரியானாவை ஆளும் பாஜக அரசு இந்த பசுப் பாதுகாப்பு குண்டர்களுக்கு முழுமையான பாதுகாப்பை வழங்கிக் கொண்டிருக்கிறது. பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று பசுமாட்டைக் கட்டித் தழுவ வேண்டும் என்று ஒன்றிய அரசுத் துறையே அறிக்கைவிட்டு, அதன்படி மாட்டை கட்டிப்பிடிக்கப் போய் மாடு முட்டி குப்புறக் கிடந்தவர்களை பல இடங்களில் பார்த்தோம். (எதிர்ப்புகளுக்குப் பின்னர் அந்த அறிக்கை திரும்பப் பெறப்பட்டது). இப்படி நாடு முழுவதும் முட்டாள் தனத்தையும் மூடநம்பிக்கையையும் வளர்ப்பதும் பசுவைப் பாதுகாப்பதாகச் சொல்லிக் கொண்டு மனிதர்களை நரபலி கொடுப்பதும் கொலை செய்வதும்தான் சங்கிகளின் ஆட்சிகளில் நடந்து கொண்டிருக்கின்றன. இதற்கு ஆதரவாக ஆர்.என்.ரவி போன்றவர்கள் திட்டமிட்டு பொய்ப்பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அதற்கேற்ப ஒன்றிய பாஜக அரசு, பொதுத் துறையான பிரச்சார் பாரதி நிறுவனத்திற்கு செய்தி கொடுத்துக் கொண்டிருந்த பிடிஐ, யுஎன்ஐ நிறுவனங்களுடன் ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டுவிட்டு, ஆர்எஸ்எஸ் பின்புலம் உள்ள இந்துஸ்தான் சமாச்சார் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இனி வெறுப்பு,பொய் புரட்டுப் பிரச்சாரங்களும் மூடநம்பிக்கைச் செய்திகளுமே தூர்தர்ஷனிலும் ஆல் இந்தியா ரேடியோவிலும் முதலிடம் பிடிக்கும். இப்படி அனைத்தையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து சனாதனக் கொள்கையைப் பரப்பும் சங்கிகளுக்கு எதிராக இடதுசாரி, முற்போக்கு, ஜனநாயக சக்திகள் ஓர் அணியில் திரள வேண்டும். சமீபத்தில் பாட்னாவில் நடந்து முடிந்த இகக(மாலெ)யின் 11ஆவது கட்சிக் காங்கிரஸ் அதைத்தான் வலியுறுத்துகிறது.