ஜூலை மாதத்தின் கடைசி வாரத்தில் நாடாளுமன்றத்தில் கிராமப்புற வளர்ச்சி அமைச்சர் கிரிராஜ் சிங் எழுத்துப்பூர்வமான அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தார். 2022-23 நிதியாண்டு காலத்தில் இதுவரை 5 கோடி தொழிலாளர்களின் பெயர்களை வேலை உறுதித் திட்டத்திலிருந்து நீக்கி இருப்பதாக அவர் தெரிவித்தார். இது சென்ற ஆண்டான 2021-2022 காட்டிலும் 247 சதம் அதிகமானதாகும்.

தொழிலாளர்களின் பெயர்களை நீக்குவது ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் ஒன்றுதான் என்று அமைச்சர் குறிப்பிட்டிருந்தார். போலி வேலை அட்டைகளை நீக்குதல், வேலை செய்ய விருப்பமில்லாதவர்களை நீக்குதல், வேறு ஊறு குடியேறியவர்கள், மரணம் போன்ற காரணங்களால் வேலை செய்பவர்கள் பட்டியலிலிருந்து பெயர்கள் நீக்கப்படும் என்றும் அவர் சொன்னார். ஆனால், இந்த விளக்கம் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை.

ஏனென்றால், மேற்கு வங்கத்தில் மட்டும் சென்ற ஆண்டைக் காட்டிலும் கூடுதலாக 5,199 சதம் தொழிலாளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கின்றன. தெலுங்கானாவில் 2727 சதம் தொழிலாளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆந்திரப்பிரதேசத்தில் 1147 சதம் தொழிலாளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆயிரம் சத விகிதத்தில் நீக்கம் செய்யப்படுவது இயல்பான ஒன்றல்ல!

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், நடப்பு நிதியாண்டில், அதாவது 2023 - 2024 ஜூன் வரையிலான 3 மாத காலகட்டத்தில் 61 லட்சம் பதிவு பெற்ற தொழிலாளர்கள் நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். அப்படியானால், பிரச்சனை எங்கிருக்கிறது?

மோடி 2014ல் பதவி ஏற்றபோது, 'வேலை உறுதித் திட்டம் தேவையற்ற ஒன்று மக்களே சொல்லும் அளவுக்கு நான் அதனை அமலாக்கம் செய்வேன்' என்று அறிவித்தார். மோடியின் மனதில் என்ன இருந்தது என்பதை நாம் நேரடியாகச் சொன்னால், 'தொழிலாளர்கள் தாங்களே வேலை உறுதித் திட்டத்தை விட்டு வெளியேறிவிடுவார்கள்' என்று சொல்ல வேண்டும். மோடியின் இரண்டு ஆட்சிக் காலங்களில் அவர் எடுத்த நடவடிக்கைகளே தொழிலாளர்கள் வெளியேற்றத்துக்குக் காரணம். ஆதாரையும் வேலை அட்டையையும் இணைப்பதில் உள்ள பிரச்சனைகளின் காரணமாக பெருமளவு காரணம் என்று தி இந்து ஆங்கில ஏடு எழுதியிருந்தது.

மகாத்மா காந்தி வேலை உறுதி சட்டத்தின் வாசகங்களை நேரடியாக அமலாக்கம் செய்வதற்கு மாறாக, சட்டத்திற்கு புறம்பான செயல் பாடுகளை, நிர்வாக உத்தரவுகள், நிர்வாக முறைகள் மூலமாக மோடி அரசு கொண்டு வந்தது. அவற்றில் பிரதானமான ஒன்று கூலியை உரிய நேரத்தில் கொடுக்காதது ஆகும். வேலை முடிந்த இரண்டு வார காலத்திற்குள் ஊதியத்தை அளித்துவிட வேண்டும் என்பது சட்டமாகும். சம்பள அலுவலரான வட்டார வளர்ச்சி அலுவலர் 15 நாட்களுக்குள் சம்பளம் அளிக்க வேண்டும் என்ற உத்தரவை அளித்து விடுவார். எனவே, சம்பளம் அளிக்கப்பட்டு விட்டது என்று கூறுவார். ஆனால், அவரின் உத்தரவு ஒன்றிய அரசின் கைக்குச் சென்று அங்கு பணமாக மாறி தொழிலாளியின் கைக்கு வருவதற்கு ஆறு மாதங்கள் வரை கூட ஆகும். உதாரணமாக, இந்த ஆண்டு ஆகஸ்ட் 31க்குள், திட்ட தொழிலாளர்களின் ஊதிய பாக்கி அனைத்தும் அளிக்கப்பட்டுவிடும் என்று ஒன்றிய கிராமப்புற அமைச்சர் தெரிவித்திருக்கிறார். இந்த கட்டுரை எழுதப்படும் நாளிலிருந்து 32 நாட்கள் கழித்துத் தான் ஊதிய பாக்கி வரும் என்று இதற்குப் பொருளாகும். சட்டப்படியான 15 இடை வெளியை ஒன்றிய அரசு கவனத்தில் கொள்வ தில்லை என்பதை இது காட்டுகிறது. இந்த கால தாமதம் தொழிலாளர்களின் வயிற்றுப் பசிக்குப் புரிவதில்லை என்பதால், மக்கள் திட்டத்தை விட்டு வேகமாக வெளியேறுவது நடக்கிறது.

திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைப்பதன் மூலம் திட்டம் சிதைக்கப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி கேட்கும் அனைவருக்கும் இந்தியா முழுமைக்கும் 100 நாள் வேலை அளிக்க வேண்டும் என்றால் 2.5 லட்சம் கோடி ரூபாய்களையாவது மோடி அரசு ஒதுக்க வேண்டும். ஆனால், இந்த நிதியாண்டு மோடி அரசு ஒதுக்கியிருப்பது 73 ஆயிரம் கோடி ரூபாய்தான். இந்த ஒதுக்கீட்டில் ஏறக்குறைய 21 ஆயிரம் கோடி ரூபாய் முந்தைய ஆண்டுக்கான கூலி பாக்கிக்குச் சென்றுவிடும் என்பதால், இந்த ஆண்டுக்கான ஒதுக்கீடு ஏறக்குறைய 50 ஆயிரம் கோடி மட்டுமே. இது தேவைப்படும் தொகையில் ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே.

இதற்கு அப்பால், ஆதாருடன் வேலை அட்டையை இணைப்பது என்ற நடைமுறையை மோடி அரசு கொண்டுவந்தது. ஆதாரில் உள்ள பெயரில் உள்ள எழுத்துகளில் ஒன்று வேலை அட்டையில் இல்லையென்றால், தொழிலாளிக்கு ஆதார் இணைப்பு கிடைக்காது. சம்பளம் அவருக்குக் கிடைக்காது. தொழிலாளர் திட்டத்தை விட்டு வெளியேறி வேறு வேலைக்குப் போவதைத் தவிர வேறு வழியில்லை.

புகைப்படம் எடுத்து வருகைப்பதிவேடு எடுப்பது என்ற முறை மற்றொரு வெடிகுண்டு வீச்சாகும். தொழிலாளர் வேலை செய்வதை படமெடுத்து அப்லோடு செய்வதில் ஏற்படும் சிக்னல் கிடைக்காதது போன்ற தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக தொழிலாளர் வேலை செய்தாலும் வருகைப் பதிவேடு மறுக்கப்பட்டு விடும் என்பதால், தொழிலாளர்கள் திட்டத்தை விட்டு ஓட்டம் பிடிப்பது மிக வேகமாக நடந்தது.

இவற்றின் விளைவுதான்,5 கோடி தொழிலாளர்கள் ஒரே ஆண்டில் வேலை செய்பவர்கள் பட்டியலிலிருந்து அகற்றப்பட்டது.

இதுபோன்ற ஒரு வேலை மறுப்பு நடவடிக்கை மதுரை மாவட்ட வேலை உறுதித் திட்ட அலுவலரால் மேற்கொள்ளப்பட்டி ருக்கிறது. வறுமைக்கோடு பட்டியலில் இருப்ப வர்களுக்கு வேலையில் முன்னுரிமை, அவர்க ளுக்கு 100 நாட்கள் வேலை அளித்துவிடுவது என்ற திட்டத்தை அவர் ஒரு உத்தரவின் மூலம் அறிமுகம் செய்துள்ளார். அதன் காரணமாக, ஊராட்சியின் உள்ள வறுமைக்கோடு குடும்பங்கள் பட்டியல் எடுக்கப் பட்டு அவர்களுக்கு வேலை அளிக்கப்படுகிறது. இது முற்றிலும் சட்ட விரோதமாகும்.

மதுரை மாவட்ட திட்ட அலுவலர் எழுதிய கடிதத்தில் ஆணையர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறையின் ஆணையர் எழுதிய கடிதம் ஒன்று குறிப்பிடப்படுகிறது. அப்படி யாயின் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர் களுக்கு முன்னுரிமை என்பது மாநில அளவி லான பிரச்சனையாகும். தமிழ்நாட்டில் வேலை யுறுதித் திட்டத் தொழிலாளர்களின் எண்ணிக் கையைக் குறைப்பதற்கு ஒன்றிய அரசு எடுக்கும் முயற்சிக்கு ஆதரவாக தமிழ்நாட்டு அதிகாரிகள் செயல்படுகிறார்கள் என்பதை இது காட்டுகிறது.

வறுமைக்கோட்டைக் குறைத்துக் காட்டுவது அரசின் வழக்கம். எனவே, வேலை வாய்ப்பு மிகப்பெரும்பான்மைக்கு மறுக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டுவிடுகிறது.

வேலை உறுதித் திட்ட வேலை கோரிக்கையின் அடிப்படையில் கொடுக்கப்படுவதாகும். தனக்கு வேலை வேண்டும் என்று கோரும் ஒருவருக்கு வேலையைக் கொடுக்க வேண்டும் என்றுதான் சட்டம் சொல் கிறது. அதிகாரிகள் விருப்பப்படும் முறையில், அவர்கள் தேர்ந்தெடுக்கும் நபருக்கு வேலை என்று சட்டம் சொல்லவில்லை. மதுரை மாவட்ட அதிகாரியின் உத்தரவு மகாத்மா காந்தி வேலை உத்திரவாத சட்டத்திற்கு நேர் எதிரானதாகும். அதற்கு அஸ்திவாரமாக மாநில ஊரக வளர்ச்சி / ஊராட்சிகள் துறை ஆணையர் உத்தரவு கண்டத்துக்கு உரிய ஒன்றாகும், எதிர்த்து முறியடிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். தான் போட்ட உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என்று மதுரை மாவட்ட அவிகிதொச மாவட்ட அதிகாரியிடம் கோரிக்கை வைத்துள்ளது.

இந்த உத்தரவு வந்த பின்னர், வேலை கிடைக்காத கிராமங்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டி ருக்கிறது. ஏனென்றால், திட்டங்களின் பலன்களைப் பெற வேண்டும் என்று முந்திக் கொள்ளும் வளமான பிரிவினர்தான் வறுமைக்கோடு பட்டியலில் அதிகம் உள்ளனர். இதனால், வேலை வேண்டும் என்று கோருபவர்களுக்கு வேலை மறுக்கப்பட்ட ஒன்றாக மாறியுள்ளது. பாதிக்கப்பட்ட கிராமங்களைத் திரட்டி வேலை வழங்கும் அலுவலரை (BDO) முற்றுகையிடுவது பற்றி மாவட்ட அவிகிதொச யோசித்து வருகிறது.

இந்த சூழலில், நாடெங்கும் மோடிக்கு எதிரான கிராமப்புற மக்களின் கோபத்தைக் கட்டமைத்து வழி நடத்தும் வகையில் ஆகஸ்ட் 1 முதல் 15 வரையிலான இயக்கத்தை நாம் நடத்தியாக வேண்டும்.

கடந்த தேர்தலில் வேலை உறுதித் திட்ட வேலை நாட்களை 150 நாட்களாக அதிகரிப்போம் என்று திமுக வாக்குறுதி அளித்திருந்தது. அக்கட்சி ஆட்சிக்கு வந்திருக்கிறதென்றால், கிராமப்புற மக்கள் அளித்த வாக்கினால்தான். 150 நாட்களாக வேலை நாட்களை அதிகரிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதினால் மட்டும் போதாது. பதிலாக, வேலை உத்திரவாத திட்டத்தை ஒழித்துக் கட்டும் மோடியின் முயற்சியைக் கண்டித்து தமிழக அரசு குரல் எழுப்ப வேண்டும் என்று நாம் கோர வேண்டும்.

அதைவிட முக்கியமாக, வேலை உறுதித் திட்ட தொழிலாளர்களைக் குறைக்கும் வகையில் தமிழக ஊரக வளர்ச்சி ஆணையரும், மதுரை மாவட்ட திட்ட அலுவலர் உள்ளிட்டு பிறரும் எடுத்துள்ள முயற்சிகளைக் கைவிட வேண்டும் என்று தமிழக அரசு தன் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

தமிழக அரசின் அதிகாரிகள் விடுத்துள்ள வேலை உறுதிச் சட்ட விரோத உத்தரவைத் திரும்பப்பெறுவதாக தமிழக முதல்வர் அறிவிக்க வேண்டும்!