பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் பி.டெக் படிக்கும் 20 வயது மாணவியை மூன்று பேர் சேர்ந்து துப்பாக்கியைக் காட்டி மிரட்டி கூட்டுப் பாலியல் வன்முறை செய்துள்ளனர் என்கிற செய்தி, இரண்டு மாதங்களுக்குப் பிறகு தான், 2023ம் ஆண்டின் கடைசி நாளில்தான் வெளியே தெரிந்தது. இறுதியாக அந்த குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மூவரும் பிஜேபி ஐடி செல்லைச் சேர்ந்தவர்கள். அவர்களில் ஒருவர் பிஜேபி வாரணாசி ஐடி செல்லின் அமைப்பாளர். மற்றொருவர் துணை அமைப்பாளர். கைது செய்யப்பட்டவுடன், அவர்கள் பிஜேபியின் பெருந்தலைகளுக்கு பிரதமர் மோடிக்கு, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு, பிஜேபி தலைவர் ஜேபி நட்டாவுக்கு, பெண்கள் குழந்தைகள் நல அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு எவ்வளவு நெருக்கமானவர்கள் என்பதற்கு சாட்சியாக இருந்த அவர்களின் சமூக ஊடக கணக்குகள் நீக்கப்பட்டன. ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேச தேர்தல்களின் காரணமாக, அவர்களை முன்னரே கைது செய்யவில்லை. அவர்கள் பிஜேபிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்திட வாரணாசியிலிருந்து மத்திய பிரதேசத்துக்கு தப்பிச் சென்று விட்டனர்.

பல்கலைக் கழக வளாகத்தில் நடந்த மாபெரும் போராட்டத்தின் காரணமாகத்தான் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டது. நீதிமன்றத்திற்கு அந்த மாணவி வந்து தனக்கு நடந்த கொடூரத்தை, கூட்டு பாலியல் வன்முறையைச் சொன்ன பிறகுதான், வன்புணர்வு குற்றம் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டது. பல்கலைக் கழக நிர்வாகமும் போலீசும், பிஜேபியும் குற்றத்தை மறைத்திடவே, குற்றவாளிகளைக் காத்திடவே முயற்சித்தன. சங்கிப் படையின் பெண் வெறுப்பு கலாச்சாரத்திற்கு எதிராக, குண்டர் வன்முறைக்கு எதிராக, வாரணாசியில் செயலூக்கமான அமைப்புகள், அய்சா, பகத்சிங் மாணவர் முன்னணி போன்ற மாணவர் அமைப்புகள், பெண்கள் அமைப்புகள் மற்றும் பல எதிர்க் கட்சிகள் தொடர் போராட்டங்களை நடத்தினர். பிஜேபி அரசு அந்தப் போராட்டங்களை ஒடுக்கியது. உண்மையில், அய்சா, பகத்சிங் மாணவர் முன்னணி போன்ற அமைப்புகளின் மீது குற்றம் சுமத்தி போராட்டத்தைத் தடம்புரளச் செய்ய முயற்சித்தது பிஜேபியின் மாணவர் அமைப்பான அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத். ஆனால், மீண்டுமொரு முறை உண்மையை மறைக்க முடியாமல் போனது. சங்கிப் படையின் "பண்பட்ட கலாச்சாரம்” அம்பலப்பட்டுப் போனது.

வாரணாசி பிரதமர் மோடியின் தொகுதி. பனாரஸ் இந்து பல்கலைக் கழகம் நகரின் புகழ் பெற்றதோர் கல்வி நிறுவனம். "பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், பெண் குழந்தைகளைப் படிக்க வைப்போம் (பேட்டி பச்சாவ், பேட்டி படாவ்)" என்பது அரசாங்கத்தின் கேந்திர முழக்கம். மோடி அரசின் "தூய்மைப் பாரதம்" முதல் "சமையல் எரிபொருள் திட்டம் (உஜ்வாலா யோஜனா)" வரை பெண்களை அதிகாரம் படைத்திடச் செய்வதாக தம்பட்டம் அடிக்கப்பட்டது. சமீபத்தில்தான் பெண்கள் இட ஒதுக்கீட்டு மசோதாவைச் சட்டமாக்கி, பெண்கள் சக்தியை வணங்குவதாக சொன்னது. பல்கலைக் கழக வளாகத்தில் ஒரு பெண் மாணவியின் பாதுகாப்பு மிகக் கொடூரமாக அத்து மீறப்பட்டிருக்கும் போது, அதுவும் குற்றவாளிகள் பிஜேபியின் ஐடி செல் தலைவர்கள் என்கிறபோது, அது மோடி அரசு வெட்கித் தலைகுனிய வேண்டிய ஒன்றாக, பெருத்த அவமானமாக கருதப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அரசுக்கு அதுபற்றி கவலையே இல்லை.

உண்மையில் இந்த ஆட்சி, பெண்களுக்கு எதிரான வன்முறையாளர்களைப் பாதுகாக்கின்ற, வளர்க்கின்ற, பெண்களுக்குப் பாதுகாப்பற்ற ஆட்சியாக இருக்கிறது. பில்கிஸ் பானோ மீதான பாலியல் வன்முறைக் குற்றவாளிகளை, 75வது சுதந்தர தினத்தன்று, தண்டனைக் காலம் முடியும் முன்னரே விடுதலை செய்து, அவர்களைப் பெரிய தியாகிகள் போலக் கொண்டாடி, சுதந்திர தின பரிசாக அதைக் காட்ட முயற்சித்ததைப் பார்க்கும் போது பிஜேபி சொல்ல விரும்பும் கொடூர செய்தி சத்தமாகவும் தெளிவாகவும் கேட்கிறது. நல்ல வேளையாக உச்ச நீதிமன்றம் அந்த குற்றவாளிகளை மீண்டும் கைது செய்து சிறையிலடைக்க உத்தர விட்டிருக்கிறது. மேலும் உண்மையை மறைத்து,அதிகார மமதையில் அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளது என குஜராத் அரசின் மீது குற்றம் சாட்டியிருக்கிறது.

மணிப்பூரில் பெண்கள், குழந்தைகள் மீது இழைக்கப்படும் கொடூரங்கள் அளவிட முடியா தவை. பெண்கள் மீதான வன்முறை, ஒடுக்கு முறைக்கான பரிசோதனைக் களமாக மோடி-யோகி இரட்டை இன்ஜின் ஆட்சி நடக்கும் உத்தரப்பிரதேசம் திகழ்கிறது. மிகக் கொடூரமான பயங்கரத்தின் இலக்குகளாக தலித் பெண்கள் ஆகி இருப்பதைக் காண்கிறோம். பெண்களுக்கு எதிராக குற்றம் இழைத்த நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அறுதிப் பெரும்பான்மையாக இருக்கும் கட்சியாக பிஜேபி திகழ்கிறது. குல்தீப் சிங் சென்கர் (உன்னாவோ தொகுதி எம் எல் ஏ), ராம்துலர் கோண்ட் (சிறுமியைப் பாலியல் வன்புணர்வு செய்த குற்றத் துக்காக 25 ஆண்டு சிறைத் தண்டனை பெற்றவர்) போன்றோரைக் கடைசி நிமிடம் வரையிலும் இந்த அரசு பாதுகாத்தது. பரிசு பெற்ற இந்திய மல்யுத்த வீராங்கனைகளுக்கு எதிராக பாலியல் குற்றம் புரிந்த, டெல்லி போலீசால் அது உண்மை என உறுதி செய்யப்பட்ட பிறகும், பிரிஜ் பூஷண் ஷரண் சிங், கோண்டா எம்பி போலவே, உல்லாசமாக சுதந்திரமாக உலா வருகிறார். இது இந்தியாவோடு நின்று விட வில்லை. ”பிஜேபியின் வெளிநாட்டு நண்பர்கள்" என்கிற அமைப்பின் நிறுவனத் தலைவரான பலேஷ் தங்கர், ஆஸ்திரேலியாவில் தொடர் வன்புணர்வு குற்றங்களுக்காகவும், பெண்கள் மீதான தாக்குதலுக் காகவும் விசாரணையை எதிர்கொண்டு வருகிறார்.

பெண்களுக்கு எதிராக மிகமிக மோசமான குற்றங்கள் புரிபவர்கள், பிஜேபி-சங்கி மேல்மட்டத் தால் பாதுகாக்கப்படுகிறபோது, பெண்கள் பாது காப்பு, பெண்களுக்கு அதிகாரம் போன்ற முழக் கங்கள் பொருளற்றதாகி விடுகின்றன. மனு ஸ்மிருதியில் வேர் கொண்டிருக்கும் கருத்தியலை வைத்துக்கொண்டு, சமூக சமத்துவமின்மையையும் அடிமைத்தனத்தையும் மட்டுமே நிலைநாட்ட முடியும். அதுவும் அரசியல் அதிகாரத்தால் பாதுகாக் கப்படுகிற போது இன்னும் அபாயகர மானதாக ஆகிவிடுகிறது. சாதி எதிர்ப்பு, சமூக நீதி மற்றும் பெண்கள் கல்வியின் முன்னோடியான சாவித்திரி பாய் ஃபூலே அவர்கள் சொன்னார், பெண்கள் கல்வி மற்றும் அதிகாரத்துக்கான போராட்டம் என்பது பெண் வெறுப்பு பார்ப்பன கருத்தியலான மனு ஸ்மிருதியை உறுதியாக மறுதலித்திடலில்தான் இருக்கிறது என்று சொன்னார். அதிகாரக் கோட்டையில் அமர்ந்து கொண்டு, அந்த மனுஸ்மிருதியின் வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிடும் இந்த ஆட்சியை திட்டவட்டமாக அரசியல்ரீதியில் தோற்கடிப்பது இன்று அவசியமான ஒன்றாகும்.