தேசிய கீதத்துக்கு ஆளுநர் அவமரியாதை

பிப் 12 அன்று ஆளுநர் உரையோடு ஆரம்பிக்க வேண்டிய சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர், ஆளுநர் வெளிநடப்போடு துவங்கியது. தேசிய கீதத்துடன் உரையை முடிப்பதற்குக் கூட அவர் காத்திருக்கவில்லை. சட்டப் பேரவைத் தலைவரால் அவமதிக்கப்பட்டதாக காரணம் கூறி, தேசிய கீதத்துக்காக எழுந்து நின்ற ஆளுநர், அது பாடப் படும் வரை காத்திராமல் வெளியேறி, தேசிய கீதத்தையே அவமதித்து விட்டார்.

ஆளுநர் கோட்சேவுக்கு எதிரானவரா?

நாதுராம் கோட்சேவைப் பின்பற்றுபவர் என ஆளுநரைச் சொல்லி, பேரவைத் தலைவர் தனது பதவியின் கண்ணியத்தைக் குறைத்து விட்டார் என்று ஆளுநர் மாளிகை சொல்லி இருக்கிறதே தவிர, ஆளுநர் கோட்சேவுக்கு எதிரானவர் என்றோ, கோட்சே பின்பற்றிய இந்து மதவெறிக் கொள்கைக்கு, இந்துத்துவாவுக்கு எதிரானவர் என்றோ குறிப்பிட வில்லை. தான் சனாதன ஆதரவாளர் என்று ஆளுநர் அறிவித்தது எல்லோருக்கும் தெரிந்ததுதான். அப்படி இருக்கும் போது கோட்சேவைப் பின்பற்றுபவர் ஆளுநர் என சொன்னால் அதில் அவமரியாதை என்ன இருக்கிறது?

பின்தள்ளப்பட்ட மக்கள் நலன்

இறுதியில், அன்றைய தின சட்டமன்ற ஆளுநர் உரையில், அரசின் நடவடிக்கைகள் என்ன, பட்ஜெட்டின் அம்சங்கள் என்ன, அதில் மக்களுக்கு நன்மை தீமை என்ன என்பதைப் பற்றிய விவாதம் பின்னுக்குத் தள்ளப்பட்டு, ஆளுநரின் வெளி நடப்பும், கோட்சேவும் மட்டுமே முன்னுக்குவந்திருக்கின்றன.

தமிழர் அடையாளத்தைப் பொறுக்க முடியவில்லை!

ஆளுநர் உரைக்கு முன்னால், தமிழ்த் தாய் வாழ்த்து பாடுவது, உரைக்குப் பின்னால் தேசிய கீதம் பாடுவது என சட்டமன்ற நடவடிக்கை விதிகள் தெளிவாகக் கூறுகின்றன. அப்படி இருந்தும், தமிழ் மக்களின் அடையாளமாக, தமிழ் நாட்டில், தமிழ்த் தாய் வாழ்த்து பாடுவதைக் கூட ஒன்றிய மோடி அரசும், நிர்மலா சீத்தாரமனும், ஆளுநர் ரவியும் பொறுத்துக் கொள்ளத் தயாராக இல்லை. கூட்டமைப்புத் தத்துவத்தை, கூட்டாட்சி முறையை ஒழித்துக்கட்டுவது மட்டுமல்ல, தமிழ்த்தாய் வாழ்த்து போன்ற மிகமிக குறைவான தமிழர் அடையாளங் களைக் கூட அழித்துவிட வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறது மோடியின் பிஜேபி அரசு. 

கூட்டாட்சி முறைக்கு சாவுமணி!

காலனியச் சட்டங்கள் என்கிற பெயரில் நாட்டில் உள்ள பல சட்டங்களைத் தமது இந்து ராஷ்ட்ரா நோக்கத்திற்கு ஏற்ப திருத்துவது, ரத்து செய்வது, புதியதாக இயற்றுவது என செய்துவரும் மோடி அரசு, இந்திய நாட்டு மக்கள் ஆட்சிகளின் மீது, தங்கள் அதிகாரத்தை நிறுவுவதற்காக வெள்ளை யர்களால் உருவாக்கப்பட்ட ஆளுநர் மற்றும் அதிபர் பதவிகளை ஒழிக்காமல், கட்டிக்காப்பதற்குக் காரணம் என்ன? தமிழ் நாடு போன்ற மாநிலங்களில் கூட்டாட்சி முறைக்கு சாவுமணி அடித்து, ஒன்றிய ஆட்சியின் அதிகாரத்தை மாநிலங்களில் நிறுவு வதற்காகத்தான், அதற்காக ஆளுநர் பதவியைப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் வெள்ளை எஜமானர்களின் பாரம்பரியத்தைக் கட்டிக்காத்து வருகிறது பிஜேபியும் மோடியும்.

ஒழிக ஆளுநர் பதவி!

ஆளுநர் பதவி ஒழிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை, இந்திய ஜனநாயக இயக்கங்களின் நீண்டநாள் கோரிக்கை. ஆளுநர் பதவி ஜனநாயக முறைக்கு, கூட்டாட்சி முறைக்கு எதிரானது. ஆளுநர் பதவியை ஒழிப்பதற்கானப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். அடுத்து வரும் அரசுகளாவது அதை ஒழித்திட வேண்டும்; அதை ஒழித்திடுவோம் என தேர்தல் வாக்குறுதி வழங்கிட வேண்டும். திமுக உள்ளிட்ட தமிழ்நாட்டுக் கட்சிகள் அதனை ஒரு முக்கிய வாக்குறுதியாக வழங்க வலியுறுத்திட வேண்டும்.

திமுக அரசின் கொள்கைகள் ஒரு பார்வை

ஆளுநர் உரை என்பது மாநில அரசின் கொள்கைப் பிரகடனம் எனலாம். வரவிருக்கும் பட்ஜெட் ஒதுக்கீடுகளுக்கான ஒரு முன்னோட்டம்.

 இந்த நாட்டின் புவியியல் பரப்பில் 4 சதவீதமும், மக்கள் தொகையில் 6 சதவீதமும் இருக்கும் தமிழ்நாடு, நாட்டின் பொருளாதாரத்திற்கு 9 சதவீதத்திற்கும் மேல் பங்களிக்கிறது. 2022-23ல் தமிழ்நாட்டின் சராசரி வளர்ச்சி விகிதமான 8.19 சதவீதம் என்பது நாட்டின் சராசரி வளர்ச்சி விகிதமான 7.24 சதவீதத்தை விட அதிகமானது என்கிறது ஆளுநர் உரை. 'நிதி ஆயோக்'கின் ஏற்றுமதி தயார்நிலை குறியீடு படி, 2021-22ல் 4ஆவது இடத்தில் இருந்த தமிழ்நாடு, 2022-23 மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத் போன்ற மாநிலங்களைத் தாண்டி முதல் இடத்துக்கு வந்திருக்கிறது என்கிறது. ஜனவரி 7-8 சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் சுமார் 14.54 லட்சம் பேருக்கு வேலைவாய்ப் பளிக்கத்தக்க 6.64 லட்சம் கோடி மூலதனம் பெறுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன என தமிழக அரசு சொல்கிறது. ”ஒரு டிரில்லியன் தமிழ்நாட்டின் பார்வை” என்கிற ஒரு புத்தகமும் கூட அப்போது வெளியிடப்பட்டது. அரசுப் பள்ளிகளிலிருந்து கல்லூரிக்குச் செல்லும் பெண் மாணவர்களின் எண்ணிக்கை 34 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் சொல்லப்படுகிறது.

வரவேற்கலாம்!

குடியுரிமைத் திருத்த சட்டத்தை தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம் என தமிழ்நாடு அரசு சொல்லி இருக்கிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல் முறைக்கு எதிராக, தொகுதி மறுவரையறை என்கிற பெயரில் தமிழ்நாட்டு தொகுதிகள் விகிதாச்சாரத்தைக் குறைப்பதற்கு எதிராக, சட்டமன்றத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. இதற்குமுன்னால், புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக,விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. இவை போன்ற கொள்கைகள் வரவேற்கப்பட வேண்டியதுதான்.சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் பத்தாண்டு கால மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறது. சரிதான். ஆனால், ஒன்றிய அரசு செய்யாதபட்சத்தில், சாதிவாரி கணக்கெடுப்பை தமிழ்நாட்டில், மாநில அரசே மேற்கொள்ள வேண்டும். ஒன்றிய அரசிடம் வலியுறுத்துவதோடு நின்றுபோய்விடக் கூடாது.

மக்கள்சார் வளர்ச்சிப் பாதையா? கார்ப்பரேட் வளர்ச்சிப் பாதையா?

ஆனால், ஒரு டிரில்லியன் பொருளாதாரத் துக்காக, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக, மக்கள் சார் பாதையைப் பின்பற்றுவதற்கு மாறாக, கார்ப்பரேட் முதலாளிகள் ஆதரவு பாதையைப் பின்பற்றுவதை தனது கொள்கையாக திமுக தலைமையிலான தமிழக அரசு கொண்டிருக்கிறது. அதனால்தான், மோடி அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கும் அதே வேளையில் கல்வி தனியார்மயமாக்கம் போன்ற கொள்கைகளைப் பின்பற்றி வருகிறது. கல்விக்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்குப் பதிலாக கல்விப் பணியையே தனியாருக்கு தாரை வார்க்கிறது. அதன் காரணமாக, ஏழை எளிய மக்களுக்கு கல்வி எட்டாக்கனியாகிப் போகிறது. 'இல்லம் தேடிக் கல்வி' என்பது கல்வியை முறை சாராத ஒன்றாக மாற்றுகிறது. அதில் இந்துத்துவா வாதிகளின், மதவெறியர்களின் செல்வாக்கு நிலவுகிறது என விமர்சனங்கள் ஏற்கனவே வந்த வண்ணமாக இருக்கின்றன. இது குறித்து தனது கொள்கையை அரசு மீண்டும் வலியுறுத்தி இருக்கிறதே தவிர அதை மாற்றியமைக்கும் திசையில் பயணிக்க,விமர்சனங்களின் வெளிச்சத்தில் அதை பரிசீலனை செய்யத் தயாராக இல்லை.

ஆக்கிரமிப்பு அகற்றலா? மதவாதத்தோடு சமரசமா?

கோவில் நில ஆக்கிரமிப்புக்களை அகற்றுவது என்கிற பெயரில் இந்துத்துவ கருத்துக்களின் முன்னால் மண்டியிடுவது ஆகி விடுகிறது. எண்ணற்ற கோவில்களின் சொத்துக்களையும், நிலங்களையும் பாதுகாக்க கடமைப்பட்டது இந்த அரசு என சொல்லி, தனது அரசு இந்து ஆதரவு அரசு என காட்டிக்கொள்ள முயற்சிக்கிறது. ஆனால், அதை ஏற்றுக் கொள்ள சனாதனவாதிகள் தயாராக இல்லை.மாறாக, இந்து அறநிலையத்துறையிடமிருந்து கடவுள்களை, கோவில்களை விடுவிக்க வேண்டும் என்கிறார்கள். சனாதனவாதிகளை எதிர்ப்பதில் நாமும் கரம் கோர்க்கிறோம். ஆனால், பணம் படைத்தவர்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்குப் பதிலாக ஏழை எளிய மக்கள் ஆக்கிரமிப்பாளர்களாக காட்சிப் படுத்தப்படுகிறார்கள். அவர் களுக்கு உருப்படியான ஒரு மாற்று இடமோ, புனர்வாழ்வுத் திட்டமோ கூட வழங்கப்படுவ தில்லை. இதனால் பாதிக்கப்பட்ட வசதி படைத்த வர்களை விரல்விட்டு எண்ணி விடலாம்.

மோடி மறுத்த மெட்ரோ !

மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தை நிறைவேற்றுவதற்கான தனது பாதி (50 சதவீதம்) பங்கைச் செலுத்திடாமல் ஒன்றிய அரசு துரோகம் இழைத்துவிட்டது. திட்ட முதலீட்டு வாரியத்தால் 17.08.2021லேயே அங்கீகாரம் வழங்கப்பட்ட பிறகும், ஒன்றிய உள்துறை அமைச்சரால் திறந்து வைக்கப்பட்ட பிறகும், அந்த திட்டத்திற்கு ஒன்றிய அரசு அங்கீகாரம் அளிக்க மறுத்துவிட்டது என்பதை துணிச்சலுடன் கூறி இருக்கிறது. மாநிலத்தின் பொருளாதார கூட்டமைப்புத் தன்மையைத் தக்கவைப்பதற்கான முயற்சி இது. வரவேற்கத் தக்கது. ஆனால், ஒப்பீட்டளவில் வசதி படைத்த, மேல் நடுத்தர மக்களின் வாகனமாக கருதப்படும் மெட்ரோ ரயில் திட்டம் என்பது வறிய மக்களின் பிரதான போக்குவரத்தாக இருக்கும் தற்போதைய மின்சார ரயில் திட்டத்தை படிப்படியாக அகற்று வதாக மாறிவிடக் கூடாது. மாறாக, மின்சார ரயில் திட்டத்திற்கு, ரயில் வலைப்பின்னலுக்கு வலு சேர்ப்பதாக அமைய வேண்டும்.

உணவுத் திட்டம், இலவசக் கல்வி ஆகுமா?

மதிய உணவுத் திட்டம் 1962ல் காமராஜரால் அறிமுகப்படுத்தப் பட்டது. 1982ல் அதனை சத்துணவுத் திட்டமாக பரிணமிக்கச் செய்தார் எம்ஜிஆர். 1989ல் மதிய உணவோடு முட்டை வழங்கும் திட்டத்தைக் கொண்டுவந்தார் கருணாநிதி. இப்போது காலை உணவுத் திட்டத்தை நாட்டிலேயே முதலாவதாக அறிமுகப்படுத்தி இருக்கிறார் முக ஸ்டாலின். இவையெல்லாம் சரிதான். வரவேற்க வேண்டியதுதான். ஆனால், கல்வி கற்கும் குழந்தைகளின் எதிர்காலத்தை தீர்மானிப்பது கல்வி அனைவருக்கும் எளிதாக கிடைப்பது ஆகும். அதை நிறைவேற்றிட வேண்டுமானால், பள்ளிக் கல்விமுதல் உயர் கல்வி வரை அனைவருக்கும் இலவசமாக கிடைத்திடும் விதத்தில் கல்விக் கொள்கை மாற்றியமைக்கப்பட வேண்டும்.

திறன் மேம்பாடா? முதலாளிகள் மேம்பாடா?

உன்னத மையங்களை உருவாக்குவது, அதன் மூலம் திறன் பெற்ற, பணிக்கமர்த்தப்படத் தக்க தொழிலாளர்களை உருவாக்குவது நோக்கம் என்கிறது திமுக அரசு. ஆனால், அத்தகைய உயர்கல்வி நிறுவனங்களை கார்ப்பரேட் தொழிற் கூட்டாளிகளின் ஆதரவோடு நடத்துவது, கார்ப்பரேட் முதலாளிகளின் தொழில் தேவைகளுக் கேற்ப பாடத் திட்டங்களை வகுப்பது, தொழில் நிறுவனங்களுக்கான அடிமைகளாக தொழிலாளர் களை தயார் செய்வது என்பது கல்வியின் உன்னத நோக்கத்தையே சிதைப்பதாகும். அது கல்வி தனியார் மயமாக்கத்தை ஊக்குவிப்பது மட்டுமல்ல, மாணவர்களின் அறிவார்ந்த, அனைத்தும் தழுவிய வளர்ச்சியை முடக்குவதாகும். இது குறித்து விவாதித்து அரசு தனது கொள்கைகளை மாற்றியமைக்க வேண்டும்.

முடக்கப்படும் நலப் பயன்கள்!

அமைப்பாக்கப்படாதத் தொழிலாளர் நலன் மற்றும் வாழ்க்கை மேம்பாடு மிகவும் முக்கியம் என ஒப்புக்கொள்ளும் தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு ஆன்லைன் விற்பனைத் தொழிலாளர் நல வாரியம் அமைப்பதைத்தவிர வேறு எதையும் ஆளுநர் உரையில் முன்வைக்கவில்லை என்பது வருத்தத்துக் குரியது. பீடித் தொழிலாளர் நலச் சட்ட பயன்கள் முடக்கப்பட்டுள்ளது. கட்டடத் தொழிலாளர் நல வாரியப் பதிவு முதல் பயன்கள் வழங்குவது வரை அனைத்தும் பல்வேறு வழிகளில் மறைமுகமாக மறுக்கப்படுகிறது. இதர அமைப்பாக் கப்படாதத் தொழிலாளர்களுக்கான நல வாரியங்கள் மூலம் உருப்படியான திட்டங்கள் ஏதும் உருவாக்கப்பட வில்லை. அமைப்பாக்கப்படாதத் தொழிலாளர்களின் வீடு, வீட்டு மனை, பட்டா போன்ற விசயங்கள் தமிழ் நாடு முழுவதும் மிகப்பெரும் பிரச்சனையாக விசுவ ரூபம் எடுத்திருக்கின்றன. அவற்றைப் பற்றியெல் லாம் மாநில அரசு, ஆளுநர் உரை மவுனம் சாதிக்கிறது.

காற்றில் பறந்த வாக்குறுதிகள்!

அரசு நிறுவனங்களில் பத்தாண்டுகளுக்கு மேல் பணியாற்றிய தொழிலாளர்களை நிரந்தரப் படுத்துவோம் என திமுகவின் தேர்தல் அறிக்கை கூறியது. ஆனால், இன்றுவரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் கொண்டு வருவோம் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. அது இன்னும் கானல் நீராகவே இருக்கிறது என்பது மட்டுமல்ல, முன்னாள் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அதை நிறைவேற்ற முடியாது என திட்டவட்டமாக அறிவித்து விட்டார். காங்கிரஸ் ஆளும் பல மாநிலங்களில் பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் கொண்டுவர தீர்மானிக்கப்பட்டு இருக்கும் பின்னணியில், மோடிக்கு எதிரான திமுக ஆட்சியில் பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் கொண்டு வர விடாமல் தடுப்பது என்ன?

பட்டியலின வளர்ச்சியா? கடன் வளர்ச்சியா?

பட்டியல் இனத்தவர் வளர்ச்சி செயல் திட்ட சட்ட மசோதா 2024அய் விரைவில் அறிமுகப்படுத்த இருப்பதாக சொல்லப்படுகிறது. நமக்குக் கிடைக்கும் செய்திகள் அடிப்படையில் பார்த்தால், அது தலித் தொழில்முனைவோரை உருவாக்குவது, மானியங்கள், கடன் வசதிகள் வழங்குவது போன்றவை குறித்தனவாக மட்டுமே இருக்குமோ என எண்ணத் தோன்றுகிறது. மாறாக, தலித் மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை, பாலியல் வன் முறைகளை, ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதாகவோ, வேங்கை வயல்களைத் தடுப்ப தாகவோ, மாணவர் மத்தியிலான சாதி வெறி உணர்வுகளைத் தணிப்பதாகவோ, அது போன்ற வற்றுக்கான செயல் திட்டமாக இருப்பதாகத் தெரியவில்லை.

ஜல் ஜீவன் கடைச் சரக்காகும் தண்ணீர்!

ஒன்றிய அரசின் ஜல் ஜீவன் திட்டம் என்பது தண்ணீரையும் கடைச்சரக்காக மாற்றும் திசையில், தனியார்மயமாக்கும் திசையில் முதல்படியாகும். அதனை விமர்சனப் பூர்வமாக ஆராய்ந்து, தண்ணீரைப் பொதுச் சொத்தாகவே, இலவசமான ஒன்றாகவே தொடர்வோம் என அறுதியிடுவதற்குப் பதிலாக அதை எவ்வளவு தீவிரமாக அமுல்படுத்தி இருக்கிறோம் என பெருமைப் பட்டுக் கொள்வது கவலைக்குரியது ஆகும். கோவை போன்ற மாநகர மக்களுக்கு குடிநீர் வழங்கும் பணியை சூயஸ் போன்ற பன்னாட்டு கம்பெனிக்கு கொடுத்துவிட்ட பிறகு எத்தனை போராட்டங்கள் எழுந்தன, இறுதியில் சூயஸ் கம்பெனிக்கு அரசு எவ்வளவு மானியம் வழங்கி வருகிறது என்பதெல்லாம் இன்னும் பொதுவெளிக்கு முற்றாக வரவில்லை. ஆனால், அப்படி வெளிவரும் போது, தண்ணீருக்கும் பெரும்தொகை கட்ட வேண்டும் எனும் நிலை வரும்போது, எழ இருக்கும் தண்ணீர்க் கலகங்கள்எப்படி இருக்கும் என்பது யூகங்களுக்கு அப்பாற்பட்டதல்ல.

நிர்மலா சீத்தாராமன் மாடல்!

திராவிட மாடல் என்பது உள்ளார்ந்த வளர்ச்சி, சமூக நீதி, சமத்துவம் குறித்தது என்கிறது ஆளுநர் உரையும் திமுக அரசும். அது சமூக நீதி, சமூக நல்லிணக்கம், பகுத்தறிவுச் சிந்தனை, ஜனநாயக லட்சியங்கள் ஆகியவற்றைப் படைப்பது என்கிறது திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு. ஆனால், அது இந்தி எதிர்ப்பு, இந்து மத எதிர்ப்பு, சில சாதிகள் எதிர்ப்பு, பிரிவினை சிந்தனை போன்றவற்றைத் தூண்டுவதுதான் திராவிட மாடல் என்கிறார் நிர்மலா சீத்தாராமன். ஆளுநர் உரை குறித்த சர்ச்சையின் பின்னணியில், பிப் 17 அன்று தினமணிக்கு அளித்த பேட்டியில், அவர் அவ்வாறு கூறி இருக்கிறார். திராவிட மாடல் குறித்து நமக்கு பல விமர்சனங்கள் இருந்த போதிலும், அது வெறும் இந்தி எதிர்ப்பாக மட்டுமே முடிந்து போகுமோ, சமூக நீதி வெறும் இட ஒதுக்கீடு நீதியாக மட்டுமே ஆகிப் போகுமோ என்பது போன்ற கவலைகள் இருந்தபோதிலும், அது குறித்த நிர்மலா சீத்தாராமன் அவர்களின் மதவெறி மற்றும் பிரிவினைவாத திரிபு வன்மையாக கண்டிக்கத் தக்கது.

பிராமணர் எதிர்ப்பு என்பதை, ஆதிக்க சாதி எதிர்ப்பு என்பதைத்தான் "சில சாதிகள்" எதிர்ப்பு என அவர் நாசூக்காகக் கூறுகிறார். பிராமணர்களுக்கு சேவை செய்வதற்கென்றே பிறந்தவர்கள்தான் இதர அனைத்து சாதியினரும்; அவர்கள் அதை மீறும் குற்றத்துக்கு என்ன தண்டனை என்பதை விவரிப்பது தான் மனு ஸ்மிருதி. அம்பேத்கர் முக்கிய பங்காற்றி இயற்றிய இன்றைய அரசியலமைப்புச் சட்டத்தை அகற்றிவிட்டு அதனிடத்தில் அந்த காட்டுமிராண்டி கால மனு ஸ்மிருதியைத்தான் கொண்டு வர வேண்டுமென துடிக்கின்றன ஆர்எஸ்எஸ்சும் பிஜேபியும். அப்படிப் பார்க்கும்போது, பிராமணர் உள்ளிட்ட ஆதிக்க சாதிகளுக்கான நீதிதான் நிர்மலா சீத்தாராமன் முன்வைக்கும் மாடல், ஆர்எஸ்எஸ்-பிஜேபி மாடல் என்பதாக முன்னுக்கு வருகிறது.

அப்படிப் பார்க்கும்போது, என்ன விலைகொடுத்தேனும் பிஜேபியின் அத்தகைய மனுஸ்மிருதிக் கனவுகளை, இந்து ராஷ்ட்ரக் கனவுகளைத் தவிடுபொடியாக்கியே தீர வேண்டும். அத்தகைய பாசிச எதிர்ப்புப் போராட்ட சக்திகளோடு நாம் கரம் கோர்த்து நிற்பதும், வரவிருக்கும் தேர்தலில் பிஜேபியைத் தோற்கடிப்பதும், இந்தியா கூட்டணியை வெற்றிபெறச் செய்வதும் நமது முதன்மைக் கடமையாகிறது.