மோடி அரசாங்கம் கலங்கிப் போயிருப்பது தெள்ளத் தெளிவாகியுள்ளது. உச்ச நீதிமன்றம் தேர்தல் பத்திர திட்டம் செல்லாது என்று வழங்கிய தீர்ப்பினால் மோடி அரசாங்கம் கிடுகிடுத்துப் போயுள்ளது. நன்கொடை வழங்கியவர்கள், பெற்றவர்கள் பற்றிய தகவல்களை வெளியிட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. தலைமை நீதிபதிக்கு தொல்லை கொடுக்கவும், நீதித்துறையை மிரட்டவும் பாஜகவோடு நெருங்கிய தொடர்பில் உள்ள வழக்கறிஞர்கள் ஒன்றுபட்டு செயல்படுகின்றனர். சந்தேகத்திற்கிடமான இந்த வழக்கறிஞர் குழுவினரால் கையெழுத்திடப்பட்ட கடிதத்தை மோடி அங்கீகரித்துள்ளார். அதன்மூலம், இந்த நடவடிக்கைகளுக்கு பிரதம மந்திரி தனது முழு ஆதரவை வழங்கியுள்ளார். அது மட்டுமல்ல உச்ச நீதிமன்றத்தால் சட்ட விரோதமானதாக அறிவிக்கப்பட்ட தேர்தல் பத்திரங்களுக்கு நியாயம் கற்பிக்க, கிடைக்கும் எந்த ஒரு வாய்ப்பையும் அவர் தவற விடுவதே இல்லை. யார், யாருக்கு எவ்வளவு நன்கொடை அளித்தார்கள் என பொது மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தேவையில்லை; அவர்களுக்கு அந்த உரிமையுமில்லை என உச்ச நீதிமன்றத்திடம் இந்த அரசாங்கம் கூறியிருந்தது. மேலும், தேர்தல் பத்திரங்கள் மூலம் யார், யாரிடம் இருந்து நிதி பெறப்பட்டது என்பது குறித்து தன்னிடம் எவ்வித தகவல்களும் இல்லை எனவும் அது தேர்தல் ஆணையத்திடம் கூறியிருந்தது. அப்படிக் கூறிய அதே அரசாங்கம், இப்போது, கார்ப்பரேட் நிதியளிப்பில் ஒரு வெளிப்படைத் தன்மையை இந்தப் பத்திரங்கள் கொண்டு வந்துள்ளதாக பெருமை பீற்றிக் கொள்கிறது. 

சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் மிகவும் ஊழல்கறை பிடித்த, அரசாங்கமாக மோடி அரசாங்கம் அம்பலப்பட்டு அம்மணமாக நிற்கிறது. இந்த வேளையில் ஒரு முரட்டுத் துணிச்சலுடன் எதிர்க்கட்சிகளை, அதன் தலைவர்களை ஊழல் கூட்டணி என கூறி பாஜக களங்கம் கற்பிக்கிறது. இந்தத் தேர்தல் பத்திரங்கள் என்பது சிக்கலான ஒரு ஊழல் முறையாக வெளிப்பட்டுள்ளது. இது ஒருபோதும் அம்பலமாகாது என இந்த அரசாங்கம் கருதியது. லஞ்சம் கொடுத்து ஒப்பந்தங்களைப் பெற பல நிறுவனங்கள் இந்தத் திட்டத்தை பயன்படுத்தியுள்ளன. சோதனைக்குள்ளாக்கப்பட்ட பல நிறுவனங்கள் தண்டனையிலிருந்து தப்பிப்பதற்காக நன்கொடை அளித்துள்ளன. எதிர்க்கட்சிகளை, அதன் தலைவர்களை பொய் வழக்குகளில் சிக்க வைப்பதில் அரசுக்கு உடந்தையாக செயல்பட சில நிறுவனங்கள் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றன. இவையெல்லாம் இப்போது நமக்கு வெளிப்படையாக தெரியவந்துள்ளன. ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக போடப்பட்டுள்ள டெல்லி மது கொள்கை வழக்கு இதற்கு ஒரு வெட்கக்கேடான உதாரணமாகும். எதிர்க்கட்சிகளை குறி வைத்து தாக்குவதை நோக்கமாகக் கொண்ட சதித் தந்திரம்தான் அமுலாக்கத் துறையின் சோதனைகளும், தேர்தல் பத்திரங்களும் என்னும் உண்மை அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.

இன்று டெல்லி மது கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட ஆம் ஆத்மி கட்சியின் முன்னணித் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதேவேளையில், அவர்களோடு இணைந்து குற்றம் செய்ததாக கைது செய்யப்பட்ட பி சரத் ரெட்டி, ராகவ் மகுந்த ரெட்டி போன்றோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அரசு தரப்பு சாட்சிகளாக மாறியுள்ளனர். தெலுங்கு தேசம் கட்சியின் என்டிஏ வேட்பாளராக ஓங்கோல் தொகுதியில் போட்டியிடும் அவரது தந்தை மகுந்த ஸ்ரீனிவாசலு ரெட்டிக்கு ஆதரவாக

ராகவ் மகுந்த ரெட்டி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். பிணை விடுதலையின்றி நீண்ட காலம் எதிர்கட்சித் தலைவர்களை சிறையில் அடைத்து வைப்பதற்காக, பணமோசடி தடுப்பு சட்டத்தைக் கண்மூடித்தனமாக பயன்படுத்துகிறது அமுலாக்கத் துறை. கடந்த இரண்டு ஆண்டுகளாக டெல்லி அரசாங்கத்தின் சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார். துணை முதலமைச்சரும் கல்வி அமைச்சருமான மனிஷ் சிசோடியா ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருக்கிறார். அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது இந்தியாவில் பரவலான எதிர்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும், இந்தியாவில் அதிகரித்து வரும் பாரபட்சமான கைதுகளும், மோடியின் நீதி நியாயமற்ற நடவடிக்கைகளும் சர்வதேச சமூகத்தின் கவலைகளை அதிகரிக்கச் செய்துள்ளது. ஆறு மாதங்களாக சிறையில் வாடிக் கொண்டிருந்த பின்பு, உச்ச நீதிமன்றம் எடுத்த உறுதியான நிலைப்பாட்டின் காரணமாகவும், அதற்கு மேலும் பிணை விடுதலை விண்ணப்பத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கான துணிச்சலை அமுலாக்கத் துறை இழந்த காரணத்தினாலும் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் இறுதியில் பிணை விடுதலை பெற்றார். 

ஊழலுக்கு எதிரான 'புனிதப் போர்' என சொல்லப்படும் பாஜகவின் வாய்ச்சவடால் முற்றிலும் வெறுமையானதாக, பாசாங்குத்தனமானதாக இருக்கிறது. பாஜகவால் பகிரங்கமாக கண்டிக்கப்பட்ட ஊழலின் நாயகர்களான ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா, சுவந்து அதிகாரி முதல் அஜித் பவார், பிரஃபுல் பட்டேல், நவீன் ஜிண்டால் வரை இன்று பாஜகவில் பெரும் பதவிகளை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றனர். மோடியின் ஊதுகுழல் ஊடகங்களின் நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் கூட, மோடியின் முக்கிய மூத்த அமைச்சர்களிடம் இப்போது இந்த கேள்விகளைக் கேட்க வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர். ஊழல் கறைபடிந்த அனைத்து தலைவர்களும் பாஜகவிற்கு வரவேற்கப்படுகிறார்கள் என எவ்வித வெட்கமுமின்றி, டைம்ஸ் நவ் நேர்காணலின் போது, கூறியுள்ளார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். காங்கிரசிலிருந்து பாஜகவிற்கு கட்சி தாவியவர்களை குப்பைத் தொட்டிகள் என விவரித்தார் மத்திய பிரதேசத்தைச் சார்ந்த பாஜகவின் மூத்த தலைவர் ஒருவர். 

உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ், சிறப்பு புலனாய்வு குழு ஒன்று தேர்தல் பத்திர ஊழலை விசாரிக்க வேண்டும் என்கிற கோரிக்கை இப்போது பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்கு மட்டுமே பண மதிப்பிழப்பு நடவடிக்கை பயன்பட்டது என நமக்கு மீண்டும் நினைவுறுத்தினார் அந்த உச்ச நீதிமன்ற வழக்கில் மாற்றுக் கருத்து கூறிய நீதிபதி பி வி நாகரத்னா. சுற்றுக்கு விடப்பட்டிருந்த மொத்த பணத்தில் கிட்டத்தட்ட 86 சதவீதம் (500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை தடை செய்ததன் மூலம்) பணம் மதிப்பிழக்கச் செய்யப்பட்டிருந்தது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையை ஒட்டி 98 சதவீதம் தொகை வங்கிகளில் செலுத்தப்பட்டிருக்கிறது. ஒருவேளை கருப்பு பணம் சேமித்து வைக்கப்பட்டு இருந்தால், அது எவ்வித விசாரணையும் தண்டனைகளும் இல்லாமலேயே தற்போது வெள்ளையாக மாற்றப்பட்டுவிட்டது. அதுபோலவே நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்கள், போலி நிறுவனங்கள் (நிதி மோசடி செய்வதற்காக பொய்யாக உருவாக்கப்படும் நிறுவனங்கள்) உட்பட அனைத்து வகையான நிறுவனங்களும் எவ்வளவு தொகைக்கு வேண்டுமானாலும் தேர்தல் பத்திரங்களை வாங்கிக் கொள்ளலாம் என அனுமதித்ததன் மூலம், பணமோசடி எளிமையாக்கப்பட்டு இருக்கிறது; ஊழலை சட்டப்பூர்வமானதாக்கியிருக்கிறது. எனவே ஆளும் கட்சிகளின், குறிப்பாக பாஜகவின், கஜானாவை நிரம்பி வழியச் செய்த மாபெரும் லஞ்சத்தின் ஊற்றுக்கண் எதுவென தெரிந்து கொள்ள, தேர்தல் பத்திரங்கள் குறித்த தரவுகளைக் கண்டிப்பாக முற்றாக புலனாய்வு செய்திட வேண்டும். 

"அதிகாரம் முறைகேட்டிற்கு வழிகோலும்; முழு முற்றூடான அதிகாரம் முழு முற்றூடான முறைகேட்டிற்கு வழிகோலும்" என 19 ஆம் நூற்றாண்டின் ஆங்கிலப் பழமொழி கூறுகிறது. இந்தக் கூற்று மோடியின் இந்தியாவில் விசித்திரமான பரிமாணங்களைப் பெற்றிருக்கிறது. பிரதம அமைச்சர் மோடி மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளிகளின் கைகளில் கட்டுக்கடங்காத அதிகாரம் குவிந்திருக்கிறது. அது பணமதிப்பிழப்பு, தேர்தல் பத்திரங்கள் போன்ற கண்மூடித்தனமான பொருளாதார முடிவுகள் எடுக்க வழி வகுத்திருக்கிறது. ஊழலை தேர்தல் பத்திரங்கள் நிறுவனமயமாக்கி இருக்கின்றன. அரசமைப்புச் சட்ட விரோத நடவடிக்கைகளையும் அதன் பேரழிவுமிக்க பின் விளைவுகளையும் நேர்செய்திட, இந்திய நாட்டு மக்கள் அதே அரசமைப்புச் சட்டம் வழங்கி இருக்கும் தமது வாக்குரிமையைப் பயன்படுத்திட வேண்டும். மோடி தலைமையிலான சர்வாதிகார ஆட்சியின் அரசமைப்புச் சட்ட விரோத நடவடிக்கைகளை ஒழித்துக் கட்டி, மக்களின் அரசமைப்புச் சட்ட அதிகாரம் வெற்றி பெற்றாக வேண்டும். காலங்கள் மாறுகின்றன; சர்வாதிகாரம் முடிவுக்கு வந்தாக வேண்டும்.