நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் சிபிஐஎம்எல் கட்சி, இந்தியா கூட்டணியின் அங்கமாக பீகாரில் 3 தொகுதிகளும் ஜார்க்கண்டில் ஒரு தொகுதியும் மட்டுமே போட்டியிடுகிறது. இந்தியா கூட்டணி வடிவம் பெறாத மேற்கு வங்கம் மற்றும் ஆந்திராவில் ஒவ்வொரு தொகுதியில் போட்டியிடுகிறது. தமிழ்நாட்டில் தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால், அதற்காக சோம்பி இருக்கவில்லை. தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து செயலூக்கமிக்க பரப்புரை இயக்கத்தை சுதந்திரமாக மேற்கொண்டது. எந்த கூட்டணி கட்சிகளையும், பணத்திற்காகவோ, வாகனங்களுக்காகவோ, எந்த விதத்திலும் சற்றும் கட்சி சார்ந்திராமல், முற்றிலும் சுதந்திரமானதோர் பரப்புரை இயக்கத்தை சிபிஐஎம்எல் கட்சி மேற்கொண்டது.
மாநில, மாவட்ட தலைவர்கள் மட்டுமல்ல, கிளைச் செயலாளர்கள் கூட உணர்வுபூர்வமாக அத்தகைய பரப்புரையில் ஈடுபட்டனர். ஒரு கூட்டணி கட்சியின் நண்பர்கள், சிபிஐஎம்எல் கட்சியின் ஒரு கிளைச் செயலாளரைப் பார்த்து நிதி வழங்க, வாகனம் வழங்க முன்வந்தபோது, கடும் வறுமையில் உழலும், விவசாயத் தொழிலாளர் பின்னணி கொண்ட அந்த கிளைச் செயலாளர் அதைக் கறாராக மறுத்து விட்டார். அது மட்டுமல்ல, நாங்கள், தேர்தல் பத்திர ஊழலுக்கு எதிராக “ஒரு ஓட்டு கொடு, 20 ரூபாய் நோட்டு கொடு” எனும் முழக்கத்துடன் வறிய மக்களை வீடுவீடாக சந்தித்து தேர்தல் நிதி பெற்று பரப்புரை மேற்கொள்பவர்கள், மக்களிடம் நிதி பெறும் வரைதான் நாம் மக்கள் கட்சியாக இருக்க முடியும் என்று சரியான பதிலுரையும் அவர்களுக்கு சொல்லி அனுப்பி வைத்தார் என்பது சிபிஐஎம்எல் கட்சியின், கட்சித் தோழர்களின் அரசியல் உறுதியைச் சுட்டிக்காட்டுவதாக இருந்தது.
பல மாவட்டங்களில் கட்சி நடத்திய பரப்புரை அரசியல் கூர்மையும் விவேகமும் கொண்டதாக இருந்தது. சிபிஐஎம்எல் கட்சியின் துண்டுப் பிரசுரங்கள் முதல் சமூக ஊடக பரப்புரை வரை அனைத்தும் அரசியல் கூர்மையுள்ளதாக இருக்கின்றன என இதர கட்சி நண்பர்களே வியக்கும் விதத்தில் பரப்புரை அமைந்திருந்தது.
சிபிஐஎம்எல் கட்சி பரப்புரையின் தாக்கத்தின் விளைவாக பல மாவட்டங்களிலும் பல்வேறு பிரிவைச் சார்ந்த மக்கள், அரசியல் செயல்வீரர்கள் சாரைசாரையாக, நூற்றுக்கணக்கில் கட்சியில் இணைந்தனர் என்பது கூட கவனிக்கத்தக்கதோர் அம்சமாகும்.
சுமார் 25 மாவட்டங்களில் உள்ள ஆயிரக்கணக்கான கட்சிக் கிளைகள், கிளைத் தோழர்கள் தாம் வாழும் வார்டுகள், பகுதிகள், ஊராட்சிகளில் வீடுவீடாகச் சென்று பொதுமக்களிடம் அரசியல் விவாதத்தில் ஈடுபட்டதும், 'பிஜேபியைத் தோற்கடிக்க வேண்டும், இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்’ என மாற்றுக் கருத்துள்ளவர்களையும் கூட இணங்க வைக்க செய்த முயற்சிகளும் எண்ணற்றவை. அந்த முயற்சியில் வெற்றி கண்டதாக நம்புகிறோம். ஜூன் 4 அன்று அது நமக்குத் தெரியும்.
அதே போல, ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் 20 பேருடன் பல வாகனப் பரப்புரைகள் உரிய அனுமதியுடன் நடந்திருக்கின்றன. பல நாடாளுமன்றத் தொகுதிகளில் குறைந்தபட்சம் ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு வாகனப்பரப்புரை சில நாட்கள் நடந்திருக்கின்றன.
திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், சிதம்பரம், திருச்சி, சிவகங்கை, கோவை, திருப்பூர், சேலம், திருநெல்வேலி, தூத்துக்குடி தொகுதிகளில் இரு சக்கர வாகனப் பேரணிகள், பிரச்சார ஊர்வலங்கள் வெற்றிகரமாக நடந்தன.
சேலம், மயிலாடுதுறை, சிதம்பரம் தொகுதிகளில் பல நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன.
கன்னியாகுமரி தொகுதியில் பல வாகனப் பரப்புரையும் வாக்கு சேகரிப்பு ஊர்வலங்களும் நடத்தப்பட்டன. பொய்வழக்கும் போடப்பட்டுள்ளது.
வேலூர், திருவண்ணாமலை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், கள்ளக்குறிச்சி, கடலூர், நாகப்பட்டிணம், நாமக்கல், தர்மபுரி, திண்டுக்கல், மதுரை, கரூர், தஞ்சாவூர், தென்காசி போன்ற தொகுதிகளில் வாகனப் பரப்புரைகளும், விரிவான பரப்புரைப் பயணங்களும் பகுதிகளில் விரிவான வாக்கு சேகரிப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.
திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி கட்சிகள், குறிப்பாக காங்கிரஸ், சிபிஎம் கட்சிகள் நடத்திய பொதுக்கூட்டங்களில் சிபிஐ எம்எல் கட்சித் தலைவர்கள் அழைக்கப்பட்டு, உரையாற்றினார்கள்.
சிவகங்கையில் தேர்தல் பரப்புரை நடைபெற்றது. புதிய பகுதியில் ஒரு நல்ல முயற்சியாக பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)