உலகளாவிய கோவிட்19 பெருந்தொற்றின் கொடூரப் பரவல் நிகழ்ந்து மூன்றாண்டுகளுக்குப் பிறகும், அதன் இடையூறு மிகுந்த பின்விளைவுக ளிலிருந்து இந்த உலகம் மீண்டு வர வேண்டி யுள்ளது. வேறு எங்கேயும் உள்ளதை விடவும் இந்த பெருந்தொற்று உருவாகிய சீனா, அதன் தீவிரப்பரவலின் பின்னதிர்வுகளை தொடர்ந்து அனுபவித்துக் கொண்டு உள்ளது. மேலும், பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவது என்னும் பெயரில் நடந்து வரும் அடக்குமுறை அரசின் தலையீடுகளுக்கு எதிரான, மிகப் பரவலான சமூகப் போராட்டங்களையும் கூட கண்டது. உலகின் மற்ற பகுதிகளில் கோவிட்19 பின்வாங்கிய பிறகும் கூட, பெருமளவிலான மக்கள் பொருளாதார பின்னடைவில் தொடர்ந்து உழன்று கொண்டிருக்கின்றனர். குறிப்பாக, இந்தப் பெருந்தொற்றினால் பெருமளவு வேலை இழப்புகளும் சம்பள வெட்டுகளும் தூண்டி விடப்பட்டன. மேலும், உக்ரைன் மீதான ரஷ்யாவின் அதிர்ச்சிமிகு ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து, பெரும் போரை ஐரோப்பா கண்டு வருகிறது. அதனால் இந்த பொருளாதார அதிர்வு பல மடங்காகவும் மாறியுள்ளது.
போர் தொடங்கப்பட்டு பத்து மாதங் களுக்குப் பிறகும், எந்தவொரு முடிவும் கண்ணுக்கு புலப்படவில்லை. பெரும் அதிகாரப்போட்டி மிகுந்த பழைய பனிப்போர் சூழலின் மீட்சியை நாம் காண்கிறோம். இந்த உலகம் மீண்டும் ஒருமுறை அணு ஆயுத மோதலின் விளிம்புக்கு கொண்டுவரப் பட்டுள்ளது. நீண்டகால பொருளாதார நெருக்கடி, பின்னடைவுக்கு மத்தியில் பல்வேறு நாடுகளில் புதிய பாசிச சக்திகளின் பயமுறுத்தும் விரை வான எழுச்சியுடன், ஐரோப்பாவின் அரசியலில் பெரும் வலதுசாரி திருப்பம் நிகழ்ந்துள்ளது. இருப்பினும், லத்தீன் அமெரிக்காவில், வலதுசாரி ஆட்சியாளர்கள் சமீபத்திய தொடர்ச்சியான தேர்தல்களில் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலின் எதேச்சதிகார பொல்சனொரோ ஆட்சியின் தோல்வி இதில் மிகவும் குறிப்பிடத் தக்கதாகும்.
ஆசியாவில் நமக்கு அருகிலுள்ள இலங்கையில், ஆற்றல்மிகு மக்களின் எழுச்சி ராஜபக்சே ஆட்சியை வீழ்த்தியது. அதேநேரத்தில், மாசா அமினி என்ற பெண், உடை கட்டுப்பாட்டை மீறிய குற்றம் சாட்டப்பட்டு அந்நாட்டின் 'கலாச்சாரக் காவலர்கள்' எனப்படுபவர்களால் கொல்லப்பட்டதை அடுத்து, ஈரான் வீரமிகு பெண்களின் தலைமையிலான எதிர்ப்பினை தொடர்ந்து கண்டு வருகிறது. ஈரானுடைய மதத்தலைவர்களின் ஆட்சியால் கட்டவிழ்த்து விடப்படும் அடக்குமுறையை மறுத்து, ஈரானிய பெண்களின் ஆற்றல்மிகு எதிர்ப்புகள், நீடித்த வெகுமக்கள் இயக்கமாக வளர்ந்து வருகிறது. இம்ரான்கான் அரசாங்கம் வெளியேற்றப்பட்டதை அடுத்து பாகிஸ்தான் மீண்டுமொருமுறை அரசியல் நிலைத்தன்மையற்ற சூழலில் விழுந்து விட்டது. மற்ற காரணிகளுடன், இம்ரான்கானின் அமெரிக்க எதிர்ப்பு வாய்ச் சவடால் மீது பாகிஸ்தான் இராணுவ உயரதிகாரிகளுக்கு ஏற்பட்ட அதிருப்தியும் இதற்கு காரணமாக இருக்கலாம்.
இந்தியாவில், ஆழமடைந்து வரும் பொருளாதார நெருக்கடி, அதிகரித்து வரும் பாசிசத் தாக்குதலின் ஆண்டாக 2022 இருக்கிறது. அதிகபட்ச ஆதரவு விலைக்கான உரிமையை உறுதி செய்யப் போராடிய விவசாயிகளுக்கு பஞ்சாப், உபி, உத்தரகண்ட் தேர்தல்களுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிக்கு, வெட்கமற்ற வெளிப்படையுடன் இந்த அரசாங்கம் துரோக மிழைத்தது. தொழிலாளர் சட்டங்களை மறுசீர மைப்பாக்கல் என்ற பெயரில், தொழிலாளர் உரிமைகளை மறுத்தது. மோசடியான புதிய பென்சன் திட்டத்தின் மூலம் தொழிலாளர்களின், ஊழியர்களின் சமூகப் பாதுகாப்பை கேலிக்குரிய தாக்கிவிட்டது. ஆயுதப்படையில் சேரும் 75 சத இளைஞர்களுக்கு, நான்கு ஆண்டு ஒப்பந்தங்களாக இராணுவ வேலைகளை மாற்றியதன் மூலம், பணிப்பாதுகாப்பு என்னும் கருத்திற்கு பெரும் அடி கொடுத்துள்ளது. மேலும் தற்போது அனைத்து இடங்களுக்கும் அக்னி வீர் மாதிரியை நகலெடுத்து, நிரந்தர வேலைகளை தற்காலிக ஒப்பந்தங்களாக பெரும் அளவுகளில் மாற்றி விடும் திட்டம் உள்ளதாக பேசப்படும் இரகசியம்அதிகரித்துள்ளது.
விலைவாசி உயர்வு, காணாமல் போகும் வேலைகள், வருமான வீழ்ச்சி ஆகியவற்றால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியிருக்கும் போது, இந்த பற்றியெரியும் பிரச்சினைகளை பொது விவாதத்திலிருந்து விலக்கி வைக்க அரசாங்கம் தீர்மானம் கொண்டுள்ளது. வகுப்பு வாதத் துருவச் சேர்க்கையின் இஸ்லாமிய வெறுப்பு பரப்புரையை கூர்மையாக்கிட, சங்கப் படையின் கர்நாடக ஆய்வகம் ஹிஜாப் தடையை உருவாக்கியது. காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப் படத்தைச் சுற்றி அதிகாரப் பூர்வமாக ஒருங்கிணைக்கப்பட்ட மின்னல் வேக பரப்புரை யுடன் காஷ்மீரி பண்டிட்டுகளின் அவல நிலை மற்றொரு வலிமைமிக்க அதீத நச்சுத் தன்மையு டைய ஆயுதமாகவும், உணர்ச்சிமய வகுப்புவாத அணிசேர்க்கையாகவும் மாற்றப்பட்டுள்ளது. அரசமைப்புச்சட்ட சட்டகத்தின் அடிப்படையில் அமைந்த சட்டத்தின் ஆட்சியை அருவருப்பான முறையில் மீறியதாகும் என நீதிமன்றத்தால் அதே தீர்ப்பில் கண்டனம் செய்யப்பட்ட ஒரு இடிப்பு, அப்படி இடிக்கப்பட்ட, பாபர் மசூதியின் இடத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததால் தைரியம் பெற்ற பாஜக தற்போது 1991 சட்டத்திற்கு வெளிப்ப டையாக சவால் விடுகிறது. 15 ஆகஸ்ட் 1947 இல் மத வழிபாட்டுத் தலங்கள் எப்படி இருந்த தோ அதனை மீற முடியாத, இறுதியான நிலையென எடுத்துக்கொண்டு, அவற்றின் மீதான மோதலுக்குத் தடையாணை விதித்தது 1991 சட்டமாகும். அச்சம், பொய்களின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவோம்!
'வாலாட்டிக் குழையும்' வழக்கத்தை மறுத்து, இந்திய மக்கள் எதிர்கொள்ளும் பற்றியெரியும் பிரச்சினைகளை முன்னிலைப் படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்த முக்கியமான தொலைக்காட்சி நிறுவனத்தை, தற்போது இந்தியாவின் மிகப்பெரும் பணக்கார கார்ப்பரேட் நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது. இது எதிர்க் கருத்துக்களை மௌனமாக்கும் அரசாங்கத்தின் முயற்சிக்கு துணை செய்வதாக அமையும். ஆக, தவறான தகவல் தருவது, கவனத்தை திசை திருப்புவது என்ற ஆட்சியாளர் களின் நடவடிக்கைகளில், முதன்மை ஊடகங்கள் கூட்டுக் களவாணிகளாக, கூடவோ குறையவோ என்றாலும், ஒட்டுமொத்தமும் செல்லப்பிராணி ஊடகங்களாக தற்போது மாற்றப்பட்டு விட்டன. வெறுப்பையும் பொய்களையும் பரப்பும் பாசிச பரப்புரை இயக்கத்தை எதிர்கொள்ள, வாழ்வா தாரம், சுதந்திரம் போன்ற அடிப்படை பிரச்சினைகளில் கவனம் குவிப்பதை வழக்க மாகக் கொண்டிருந்த இந்தியாவின் மிகவும் செல்வாக்குமிக்க இந்தி தொலைக்காட்சி செய்தியாளர் ரவிஷ்குமார் இதன்மூலம் முதன்மை தொலைக்காட்சி ஊடகத்தை விட்டு விலகும் நிலைக்கு தள்ளப்பட்டார். அச்சம், திணிக்கப் பட்ட மௌனத்தின் அதிதீவிர சூழல் இருந்த போதும் கூட, மிகச் சமீபத்திய இமாச்சல் தேர்தல்களில் நாம் பார்த்தது போல, தேர்தல் அரங்கத்திலும் மக்களின் குரல் இன்னும் ஒலித்துக் கொண்டு தான் இருக்கிறது. ஆனந்த் டெல்டும்ப்தேவுக்கு பிணை வழங்கியதிலும், தேர்தல் ஆணையரை நியமிக்கும் முறை குறித்த வழக்கு விசாரணையில் வெளிப்படுத்திய கருத்துகளிலும் கண்டது போல, நீதிமன்றம் ஒரு சில நேரங்களில் அரசு நிர்வாகத்தை கண்டிக் கிறது. அதன் இடித்துத் தள்ளும் வேலையையும் தடுக்கிறது. தற்போது அரசாங்கம் நீதிபதிகளின் நியமனங்கள் வழியாக நீதித் துறையை கட்டுப்படுத்த கடும் முயற்சி செய்கிறது. பிணை மனுக்களையும், பொதுநல வழக்குகளையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்காக உச்ச நீதிமன்றத்தை ஒன்றிய சட்ட அமைச்சர் நாடாளுமன்ற அவைக் கூட்டத்தில் விமர்சித்தார்.
மோதலுக்கான எல்லைக்கோடுகள் தெளிவாக வரையறுக்கப்பட்டுவிட்டன. இந்தியக் குடியரசு அமைக்கப்பட்டதின் 73 வது ஆண்டு விழாவிற்கு இந்தியா ஆயத்தமாகிக் கொண்டி ருக்கும் போது, சுதந்திரம், சமத்துவம், சகோதரத் துவம், நீதி ஆகிய அரசமைப்புச் சட்ட பிரகடனத் தின் ஆன்மாவால் இந்திய மக்கள் அவர்களது அனைத்து வலிமையையும் துணிச்சலையும் வரவழைத்துக் கொண்டு குடியரசை மீட்க போராடவேண்டும். நவீன ஜனநாயக இந்தியா விற்கான நுழைவாயிலான அரசமைப்புச் சட்டத்தை காலனிய ஆட்சியிலிருந்து கிடைத்த விடுதலை நமக்களித்தது. அதனை பாதுகாக்க தற்போது நடைபெறும் இரண்டாம் விடுதலைப் போரில் வெற்றிபெற்று - பாசிசத்திலிருந்து விடுதலை பெற்றாகவேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)