தமிழ்நாடு போலீஸ் ஆட்சியாகாமல் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்
மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் செய்த சாதனைகள் பல என பெருமைபட சொல்லிக் கொள்ளும் அதேவேளையில், தமிழ்நாட்டில் தடுத்து நிறுத்தப்பட வேண்டிய பல பிரச்சனைகளும் உள்ளன. அதில் முதன்மையானது பட்டியலின மக்கள் மீதான தொடர் தாக்குதல்கள் நான்குநேரி சின்னத்துரை மீதான சாதியாதிக்க வெறித் தாக்குதல் மாநிலத்தையே உலுக்கி, தலைகுனியவைத்தது. தென் மாவட்டங்களில் நடந்த தலித் மக்கள் மீதான தொடர் தாக்குதல்களுக்கு, படுகொலைகளுக்கு நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதையொட்டி ஒரு சிறு இடைவேளை காணப்பட்டது. தேர்தல் முடிந்த உடனேயே தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம், புளியங்காலனியைச் சேர்ந்த தலித் இளைஞர் படுகொலை செய்யப்பட்டார். யாராவது ஒரு தலித்தை கொலை செய்யவேண்டும் என்பதற்காகவே இந்தக் கொலை நடத்தப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின. வேங்கை வயல் குற்றவாளிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் அதே புதுக்கோட்டை மாவட்டம், சங்கம் விடுதி ஊராட்சி, குருவாண்டான்தெரு கிராமத்தில் குடிநீர்த் தொட்டியில் சாணம் கரைக்கப்பட்டது. சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியில் கோயிலுக்குள் செல்ல தலித் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதன் காரணமாக எதிர்ப்புகள், தலித் மக்கள் மீது தாக்குதல்கள், வழக்குகள். திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரி அருகே பட்டியிலின பெண் ஆசிரியர் ஒருவரை ஆதிக்க சாதி ஆசிரியர்கள் தாக்கினர். திருப்பூர் மாவட்டம், குமாரபாளையத்தில் அருந்ததியர் சமூக மாணவர்களை கழிவறையைச் சுத்தம் செய்ய வைத்த ஆசிரியர்கள். உடுமலைப்பேட்டையில் தலித் சிறுமிகளை வன்புணர்வு செய்த கொடூரம், இப்படித் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன சாதியாதிக்கக் கொடுமைகள். இதைத் தடுக்க தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன? இரண்டாவது, மனித உரிமை மீறல்களும் காவல்துறையின் அத்துமீறல்களும். நெல்லை மாநகரத்தில் சமூக ஆர்வலர் பெர்டினட் ராயன், தகவல் அறியும் சட்டத்தின் மூலம் சிலரின் ஊழல்களை, முறைகேடுகளை வெளிக் கொண்டு வந்தார் என்பதற்காக அவர் மீது கொலை வெறித் தாக்குதல். காவல்துறையின் மனித உரிமை மீறல்களைப் பார்க்கும் போது, அது அரசின் கட்டுப்பாட்டிலுள்ள அமைப்புதானா அல்லது தனித்தியங்கும் அமைப்பா என்கிற கேள்வி எழுகிறது. பல் பிடுங்கி பல்வீர் சிங், காவல்துறை பாதுகாப்புடன் நீதிமன்றம் வந்து செல்கிறார். சாத்தான்குளம் சம்பவம் போல் பல காவல் கொட்டடிச் சித்திரவதைகள் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. சமீபத்தில் சவுக்கு சங்கரும் அவரைப் பேட்டி எடுத்த பெலிக்ஸ் ஜெரால்டும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சவுக்கு சங்கர், பெண் காவலர்களைப் பற்றிப் பேசிய கருத்துக்களும் செயல்பாடுகளும் கடும் கண்டனத்திற்குரியன. அதற்குரிய தண்டனை சட்டப்படி அவருக்குக் கொடுக்கப்பட வேண்டும். அதேவேளை ஒரு ஊடகவியலாளரான சவுக்கு சங்கரை கைது செய்து கோவை மத்திய சிறையில் வைத்து அவரின் கையை உடைத்து, அவர் மீது பொய்யாக கஞ்சா வழக்கு போட்டிருப்பதும் டெல்லிக்குச் சென்று பெலிக்ஸ் ஜெரால்ட்டை கைது செய்திருப்பதும் கண்டிக்கத் தக்க மனித உரிமை மீறல் ஆகும். காவல்துறையினர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற கட்டுப்பாடற்ற போலீஸ் ஆட்சிக்கு இது வழிவகுக்கும். கடந்தகால அதிமுக ஆட்சியில் நடந்ததைப்போலவே திமுக அரசின் கீழ் இருக்கும் காவல்துறையும் செய்யுமானால் சமூக நீதி, பெரியாரின் ஆட்சி என்று சொல்லிக் கொள்வதில் பொருளின்றி போகும். மூன்றாவது, தொடரும் சட்டவிரோத கல்குவாரி மரணங்கள், பட்டாசு ஆலை மரணங்கள். இந்தச் சட்ட விரோதச் செயல்களில் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கே தொடர்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இவையெல்லாம் திமுக அரசால் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகள் ஆகும். அடுத்த இரண்டு ஆண்டுகளும் இப்படியே தொடருமானால், தமிழ்நாட்டிலும் சமூகநீதி காணாமல் போய் சர்வாதிகாரம் முழுமையாகத் தலையெடுக்கலாம். தமிழ்நாடு போலீஸ் ஆட்சியாகாமல் திமுக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)