திமுகவின் இரண்டாண்டு ஆட்சியை, "ஈடில்லா ஆட்சி, இரண்டாண்டு ஆட்சி" 'ஆண்டது ஈராண்டு ஆளப்போவது நூறாண்டு" என்றும் கொண்டாடப்படுகிறது. திமுக ஆட்சியின் இரண்டாண்டு சாதனைகளை விளக்கி மாநிலம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்துவதென்றும் திமுக தலைமை முடிவு செய்துள்ளது.
இதிலிருந்து திமுக அரசின் எண்ணத்தையும் அணுகு முறையையும் எளிதாகப் புரிந்து கொள்ளமுடியும். மேலே கூறிய முழக்கங்களை வெறும் ஜனரஞ்சக அரசியல் முழக்கமாக மட்டும் கருதி, கடந்து சென்றுவிட முடியாது. இந்த ஆட்சியில், யாருக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை. எல்லாம் மிகச் சிறப்பாகவே நடக்கிறது. இந்த "திராவிட மாடல்'' ஆட்சிதான் இந்தியா முழுவதும் பின்பற்றப்பட வேண்டிய ஆட்சி என்றும் கருத்து பரப்பப்படுகிறது.
ஆனால், இரண்டாண்டு வெற்றிக் கொண்டாட்டத்தை அறிவிப்பதற்கு முன்பு திமுக அரசு பெரும் எதிர்ப்பை சந்தித்து பின்வாங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஏஐசிசிடியு உள்ளிட்ட தமிழ்நாட்டின் தொழிற்சங்கங்கள் மட்டுமின்றி, திமுகவின் கூட்டணிக் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், தொழிலாளர்களுக்கு 12 மணி நேர வேலை என்ற தொழிலாளர் விரோத சட்டத்தை திரும்பப் பெறவேண்டிய நெருக்கடி திமுக ஆட்சிக்கு ஏற்பட்டது. மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையாக, சட்டத்தை திரும்பப் பெறுவதற்கும் "துணிச்சல்" வேண்டும் என்று கூறி முதலமைச்சர் தனது வீரத்தை பறைசாற்றிக் கொண்டார்.
கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் இறுதிநாளில் 17 சட்டங்களை நிறைவேற்றி திமுக அரசு சாதனை படைத்தது! இதில் மற்றுமொரு சட்டம், நில ஒருங்கிணைப்பு சட்டம். அகில இந்திய விவசாயிகள் மகாசபை உள்ளிட்ட இடது விவசாய அமைப்புகளும் இகக(மாலெ) உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் இந்த சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும் பல விவசாய அமைப்புகளும் ஆளுமைகளும் திமுக அரசின் இந்த சட்டத்தை எதிர்த்து வருகின்றனர். மோடி அரசின் விவசாய விரோத விவசாயச் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய அதே சட்டமன்றத்தில், கார்ப்பரேட் ஆதரவு விவசாயிகள் விரோத நில ஒருங்கிணைப்புச் சட்டத்தை நிறைவேற்றியிருப்பது அரசின் இரட்டை நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. 12 மணி நேரவேலைச் சட்டம் போல, இந்தச் சட்டமும் திரும்பப் பெறப் படுகிற வரை திமுக ஆட்சி, போராட்டங்களை எதிர்கொள்ளப் போவது தவிர்க்க முடியாதது.
12 மணி நேர வேலை நேரம், நில ஒருங்கிணைப்புச் சட்டம் இவ்விரண்டும் அரசின் பொருளாதார கொள்கைத் திசைவழியைக் காட்டுவதாகவே உள்ளன. 2030ல் தமிழ்நாட்டை ஒரு ட்ரில்லியன் (ரூ.75 லட்சம் கோடி) பொருளா தாரமாக ஆக்கும் இலக்கை எட்டும் நோக்க முடையது. அந்நிய முதலீட்டை ஈர்ப்பதில் தென்கிழக்காசியாவிலேயே தமிழ்நாட்டை முதல் மாநிலமாக்கும் நோக்கத்தை ஒட்டியே இந்த முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. ஒரு தொழிற் சாலை நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், அமைச்சர் மாறினாலும் தொழில்துறைக்கும் முதலீட்டுத் துறைக்கும் அரசு அளிக்கும் முக்கியத் துவம் மாறாது என்று கூறி தொழில்துறை சமூகத்துக்கு தனது ஆட்சியின் உறுதிப்பாட்டை தெரிவித்திருக்கிறார். அமைச்சரவையில் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கும் டிஆர்பி.ராஜா குறித்து சமூக வலைத் தளங்களில் பல கருத்துகள் உலவுகின்றன. ஆனால், முதலமைச்சர் கூறிய கருத்திலிருந்தும், அமைச்சர் டிஆர்பி.ராஜாவின் பின்புலத்திலிருந்தும் தெரியவருவது, அவர் காவிரிச் சமவெளியிலிருந்து வரும் கார்ப்பரேட் பெரும்புள்ளி என்பதுதான். சமூகநீதி அமைச்சரவையில், கார்ப்பரேட் செல்வாக்கு மேலும் அதிகரித்திருப்பதன் அடையாளம்தான் அமைச் சரவை மாற்றம். இதனோடு சேர்த்துப் பார்க்க வேண்டியது, கல்விக் கொள்கை தொடர்பாக மாநில அரசின் அணுகுமுறை. மோடி அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக, மாநிலத்திற் கென்று ஒரு கல்விக் கொள்கை உருவாக்கு வதற்காக மாநில அரசு கல்வியாளர் குழு வொன்றை ஏற்படுத்தியது. இது கல்விச் சமூகத்தின் வரவேற்பை பெற்றது. ஆனால், பல மாதங்களுக்குப்பிறகும் இதில் எவ்வித முன்னேற் றத்தையும் காணமுடியவில்லை. எனவேதான், கடந்த மார்ச் 31, தோழர் சந்திரசேகர் நினைவு நாளில், அகில இந்திய மாணவர் கழகமும் புரட்சிகர இளைஞர் கழகமும் சேர்ந்து ஒரு சிறப்பு மாநாட்டை மதுரையில் நடத்தியது. இந்த மாநாட்டில், தேசிய கல்விக் கொள்கைக்கெதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்; மாநிலத்திற்கான கல்விக் கொள்கை விரைவில் கொண்டுவர வேண்டுமென்றும் வலியுறுத்தப்பட்டது. இப்போது, மேனாள் துணைவேந்தர் திரு.ஜவகர் நேசன், அந்தக் கல்விக் குழுவிலிருந்து விலகியுள்ளார். கல்விக்குழுவின் சுதந்திர செயல்பாட்டிற்கு அரசு செயலாளர் தடையாக இருக்கிறார் என்று ஜவகர் நேசன் குற்றஞ்சாட்டியுள்ளார். மட்டுமின்றி, தேசிய கல்விக் கொள்கையைச் செயல்படுத்துகிற வகையிலேயே அரசின் செயல்பாடு இருக்கிறது என்று குற்றஞ்சாட்டியுள்ள ஜவகர் நேசன், முதலமைச்சர் தனது கடிதங்களுக்கு பதிலளிக்க வில்லையென்ற ஆழ்ந்த வருத்தத்தையும் தெரிவித்துள்ளார். தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரான தனது போராட்டம் தொடரும் என்றும் உறுதிபட தெரிவித்திருக்கிறார்.
இதுபற்றி முதலமைச்சர் இதுவரை எந்த கருத்தையும் சொல்லவில்லை. மாறாக குழுவின் தலைவர் மேனாள் நீதிபதி முருகேசன் மட்டும் குழுவின் செயல்பாட்டில் எவ்வித தலையீடு மில்லை என்று அறிக்கை விடுத்துள்ளார். இந்த சச்சரவுக்கு தீர்வுகாண ஒரே வழி, சட்டப் பேரவையில் தேசியக் கல்விக்கொள்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவதும் மாநிலக் கல்விக் கொள்கையை விரைவில் வெளியிடு வதும்தான். தொகுத்துச் சொன்னால், அரசின் தொழில், முதலீட்டுக்கொள்கை, நிலத்தை அடிப்படையாகக் கொண்ட விவசாயக் கொள்கை, கல்விக் கொள்கை தனியார்மய, தாராளமய, உலகமயக் கொள்கை அடிப்படையிலானது.
திமுக ஆட்சியின் இந்த இரண்டாண்டு காலத்தில், தலித்துகள், பெண்கள் பாதுகாப்பும் மானுட உரிமையும் மிகக் கேள்விக்குள்ளாகி உள்ளன. பள்ளி மாணவி சிறிமதி மர்ம மரணம் தமிழ்நாடு தழுவிய கோபத்தை ஏற்படுத்தியது. மாணவியின் மரணம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்த கருத்துகளை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. ஆயினும், ஓராண்டை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த மர்ம மரணத்தில், குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதில், அந்த குடும்பத்துக்கு நீதி வழங்குவதில் அரசு எந்த முன்னெடுப்பையும் மேற்கொள்வதாக தெரியவில்லை. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடங்கி, கலா ஷேத்திரா மாணவிகள் மீதான வன்கொடுமைகள் வரை இன்னும் குற்றவாளிகள் எவரும் தண்டிக்கப் படவில்லை. இதுபோன்ற நிகழ்வு களில் ஏடுகளில் பரபரப்பாக செய்தி வருவதோடு சரி, பிறகு அவை கரைந்து காணாமல் போய் விடுகின்றன. சமூக நீதி ஆட்சியில் பெண்களது பாதுகாப்பும் உரிமையும் பாதுகாக்கப்படாவிடில், எங்கே இருக்கிறது சமூகநீதி? பெண்களுக்கு அச்சமற்ற சுதந்திரம் வேண்டும்; கல்வி நிறுவனங்கள் பெண்மாணவர்களுக்கு பாதுகாப் பானதாக இருக்க வேண்டும், பெண்கள் வன்கொடுமை வழக்குகளில் குற்றவாளிகள் விரைந்து தண்டிக்கப்பட வேண்டுமென்று அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் குரலெழுப்பி வருகிறது. இந்தக் குரலை ஒதுக்கித் தள்ளிவிடாமல் அரசு உரிய அக்கறை செலுத்தி தீர்வுகாண வேண்டும்.
தமிழ்நாட்டின் 'நாகரிக', 'பண்பாட்டுப் பெருமைக்கு பெருத்த கறையாக வந்திருப்பது வேங்கைவயல் கொடூரச் சம்பவம். ஐந்து மாதங்களுக்குப் பிறகும் காவல்துறை சிறு துரும்பைக் கூட கண்டுபிடிக்கவில்லை. மாறாக, வேங்கைவயல் மக்களைச் சந்திக்க முயன்ற இகக(மாலெ), அவிகிதொச தலைவர்களையும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர் களையும் ஊருக்குள் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தியுள்ளது காவல்துறை. கடந்த மே 9 அன்று, "வேங்கைவயல் குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்படுவது எப்போது? தண்டிக்கப்படுவது எப்போது? எனக்கேட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்), நீதிக்கான மக்கள் இயக்கம், அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் ஆகிய அமைப்புகள் சேர்ந்து நடத்தவிருந்த பொது விசாரணைக்கு அரசு அனுமதி மறுத்துவிட்டது. ஆனால், நீதிக்கான குரலை எந்தவகையிலும் நெரித்துவிடமுடியாது.
கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு அனுமதி அளித்துள்ள தமிழ்நாடு அரசு, விடுதலை சிகப்பி எழுதிய உருவக கவிதை, இந்துக் கடவுள்களை அவமதித்துவிட்டதாகக் கூறி அவரை காவல் துறை கைது செய்துள்ளது. இதை, முற்போக்கு, ஜனநாயக சக்திகள், கலாச்சார அமைப்புகள் கண்டித்த பிறகும் தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்தவில்லை! கனியாமூர், வேங்கைவயல், அம்பாசமுத்திரம், தூத்துக்குடி என தமிழ்நாடு காவல்துறையின் செயல்பாடு கேள்விக்குள்ளாகி உள்ளது. ஆனால் சட்டப்பேரவையில், காவல் துறை மானியக் கோரிக்கையின் போது, காவல்துறை எவ்வித அரசியல் தலையீடுமின்றி மிகச்சிறப்பாகச் செயல்பட்டு வருவதாக முதலமைச்சர் காவல்துறைக்கு நற்சான்று அளித்துள்ளார். காவல்துறை மனித உரிமைகளை, குடியுரிமைகளை மதித்து நடக்கவேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு. ஆனால், காவல்துறை பற்றிய முதலமைச்சரின் எண்ணம் வேறாக இருக்கிறது. "காக்கி உடையில் காவிகள்" என்ற கருத்தை வலுப்படுத்துவதுபோல் உள்ளது. இது தொடர்ந்தால், 'சாத்தான்குளங்களை' நோக்கி நகரும் நாட்கள் வெகுதொலைவில் இல்லையோ என்ற ஐயத்தையும் ஏற்படுத்துகிறது. தூத்துக்குடி மாவட்ட கிராம நிர்வாக அலுவலர் கொலை செய்யப்பட்டது, ஆற்றுமணல் உள்ளிட்ட கனிம வளங்களை, இயற்கைவளங்களைக் கொள்ளை யடிக்கும் சட்டவிரோத மாபியா கும்பல் காவல்துறை உள்ளிட்ட அனைத்துதுறைகளிலும் கோலோச்சுகிறது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கொலையுண்டவருக்கு இழப்பீடு சரிதான்.
ஆனால் இனி எவரும் கொலையாகாம லிருக்க, மாபியா கும்பல்கள் கம்பிகளுக்குப் பின்னால் அடைக்கப்பட வேண்டும். இதற்கு, திமுக அரசுக்கு 'துணிச்சல்' வேண்டும்.
இதற்கிடையில், கர்நாடகாவிலிருந்து மிக நல்ல செய்தி வந்திருக்கிறது. பாரதிய ஜனதா கட்சி ஆட்சியிலிருந்து அப்புறப்படுத்தப் பட்டிருக்கிறது. இது குறித்து, "திராவிட நிலப்பரப்பிலிருந்து பாஜக வெளியேற்றப் பட்டிருக்கிறது" என்று முதலமைச்சர் கூறியிருக் கிறார். பாஜக தோற்கடிக்க முடியாத சக்தியல்ல என்பதை கர்நாடக மக்கள் சாதித்துக் காட்டி யிருக்கும் உறுதிப்பாட்டை பாராட்டுகிற வகையில் முதலமைச்சரின் மகிழ்ச்சியை நாமும் பகிர்ந்துகொள்ளலாம். ஆனால், பாஜக, அரசியலில், சமூகத்தில் இன்னும் இருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது.
கர்நாடக மக்கள், பாஜகவின் மதவெறுப்பு அரசியலுக்கெதிராக கிளர்ந்து எழுந்துள்ளனர். அதுமட்டுமின்றி, பாஜகவின் ஊழல், தாங்க முடியாத விலைவாசி உயர்வு, வேலை இல்லாத் திண்டாட்டம் உள்ளிட்ட மிக மோசமான பாஜக ஆட்சிக்கு எதிராக கர்நாடக மக்கள் கிளர்ந்து எழுந்துள்ளார்கள் என்பதையும் மறந்து விடக்கூடாது.
"பாரதிய ஜனதாவுக்கும் நரேந்திர மோடியின் பாசிசத்துக்கும் எதிரான வாக்குகள் ஒன்று திரண்டதால் மட்டுமே, பத்தாண்டுகள் காத்திருப்பில் இருந்த திமுகவால், மீண்டும் ஆட்சிக்கு வரமுடிந்தது என்பதை வசதி கருதி ஸ்டாலின் மறக்க நேர்ந்தால் 'திமுகவின் எதிர்காலத்துக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கே கூட நல்லதல்ல' என்று உயிர் எழுத்து (மே 2023) தலையங்கம் சுட்டிக்காட்டுகிறது. கர்நாடக தேர்தல் தீர்ப்பின் பின்னணியில், இதை மீண்டும் நினைவுபடுத்துவது அவசியம்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)