நான்குகோடிப் பணம்:
இறைவனைகுற்றம் சுமத்தும் நயினார்!
“இருவர் மீதும் குற்றமில்லை இறைவன் செய்த குற்றமது” – பாரதிய ஜனதா கட்சியின் திருநெல்வேலி தொகுதி நாடாளுமன்ற வேட்பாளர் நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்கள், கடந்த 6ம் தேதி சென்னையில் பிடிபட்ட 4 கோடி ரூபாய் பற்றியும் அதைக் காட்டிக் கொடுத்தவர்கள் உங்கள் கட்சியைச் சேர்ந்தவர்களா என்று கேட்ட கேள்விக்கு நாகேந்திரன் இவ்வாறு கூறினார். ஏப்ரல் 6ம் தேதி சென்னையில் இருந்து நெல்லைக்குப் புறப்பட்ட ஏ.சி. ஏ1 பெட்டியில் இருக்கை எண்கள் 26,27,28ல் இருக்கும் 3 நபர்கள் முறையான ஆவணங்கள் இல்லாமல் கட்டு கட்டாகப் பணம் கொண்டு செல்கிறார்கள் என்று தாம்பரம் போலீஸ் கமிஷனருக்கு வந்த தகவலை அடுத்து, தேர்தல் பறக்கும் படையினர் அவர்களைப் பிடித்தார்கள். அவர்களிடம் ரூ 3கோடியே 99 லட்சம் இருந்தது. அவர்கள் மூவரும் பாஜக மாநில துணைத் தலைவரும் திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளருமான நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான சென்னை புரசைவாக்கம் புளூடைமண்ட் ஓட்டலில் பணிபுரியும் ஊழியர்கள் என்றும் பாஜக உறுப்பினர்கள் என்றும் கூறியதோடு, தாங்கள் அந்தப் பணத்தை நயினார் நாகேந்திரனுக்காகக் கொண்டு செல்கிறோம் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்கள். அதேவேளை நெல்லையில் நாகேந்திரனுக்கு நெருக்கமான கணேஷ்மணி என்பவர் வீட்டிலும் நயினாரின் உறவினர் குணசேகரன் என்பவர் வீட்டிலும் சோதனை நடத்தி, பணம் பொருள்கள், மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. அதைத் தொடர்ந்து நயினார் நாகேந்திரன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்தப் பணம் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும் அப்பணம் தனக்குரியது அல்ல என்றும் நயினார் நாகேந்திரன் உடனடியாக அறிவித்தார். பாஜகவின் மாநிலத் தலைவரும் கோவைத் தொகுதி வேட்பாளருமான அண்ணாமலையோ, தேர்தலில் பணம் புழங்குவதும் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதும் சட்டப்படி குற்றம் என்று சமூக அக்கறையுள்ள எவரோதான் காவல்துறைக்கு தகவல் தந்துள்ளார்கள். அதற்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது என்றார். என் அப்பன் எட்டாம் நம்பர் குதிருக்குள் இல்லையே என்று சொல்வது போல் உள்ளது என வலைஞர்கள் வறுத்தெடுத்தார்கள். அதனைத் தொடர்ந்துதான் எனக்கும் சம்பந்தமில்லை என் கட்சிக்கார ர்கள் போட்டுக் கொடுக்கவும் இல்லை, “இருவர் மீதும் குற்றமில்லை இறைவன் செய்த குற்றமது” என்று இறைவன் மீது பழி போட்டு நழுவினார் நயினார். பாஜகவினருக்கும் கடவுளுக்கும் இடையேயான உறவு எப்படிப்பட்டது என்பது இப்போது தெரிகிறதல்லவா?
கையும் களவுமாக மாட்டிக் கொண்டவர்களே வாக்குமூலம் கொடுத்த பின்னர் அனைத்து எதிர்க்கட்சியினரும் நயினார் நாகேந்திரனின் வேட்பு மனுவைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று சொன்னதற்கு தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாகு, 4 கோடி பணம் பற்றி வருமான வரித்துறையினர் விசாரித்து வருகிறார்கள் என்றார். அதன் பின்னர் காவல் துறையினர் நயினாரை விசாரணைக்கு அழைத்த போது தனக்கு 10 நாட்கள் அவகாசம் வேண்டும் என்றார் நயினார். இப்போது அந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தையே தன் கைக்குள் வைத்துள்ள பாஜக, மோடியை அழைத்து வந்து நெல்லையில் கூட்டம் நடத்திய தம் கட்சியின் மாநிலத் துணைத் தலைவரைக் காப்பாற்ற ரொம்பவும் கஷ்டப்படுகிறது.
தமிழகத்தில் எப்படியாவது சில இடங்களைக் கைப்பற்றிவிட வேண்டும் என்பதற்காக கடுமையான முயற்சிகள் மேற்கொண்ட பாஜக தலைமை, ஆயிரம் கோடி ரூபாய் வரை தமிழக பாஜகவுக்கு வழங்கி ஒவ்வொரு தொகுதிக்கும் தேர்தல் செலவுக்காகப் பிரித்துக் கொடுக்கச் சொன்னதாகச் செய்திகள் சொல்கின்றன. இதை அவர்கள் கட்சியைச் சேர்ந்தவர்களே, ஒன்றியத் தலைமை வழங்கிய பணத்தை, மாநிலத் தலைவர்கள் மாவட்டத் தலைவர்கள் அமுக்கிவிட்டார்கள், ஊழியர்களுக்குக் கொடுக்கப்பட வில்லை என்று புகார் கூறி போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளதன் மூலம் அது உறுதியாகிறது. அது மட்டுமின்றி, தென் சென்னை வேட்பாளர் தமிழிசையும் இது போன்ற ஒரு புகாரை மாநிலத் தலைவர் மீது கூறி பாஜகவின் மையத் தலைமைக்கு அனுப்பியுள்ளார் என்கிற செய்தியும் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் “தாமரை மலர்ந்தே தீரும்” என்று ஒரு கூட்டத்தில் கூறி அவருக்கே நம்பிக்கையில்லாமல் சிரித்த தமிழிசை அவர்கள், தன் ஆளுநர் பதவியை விட்டுவிட்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். இப்போது அவர் கட்சிக்குள்ளேயே ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு நாறிக் கொண்டிருக்கிறார்கள். மாட்டிய அந்த நான்கு கோடியும் அவ்வாறு கொடுக்க கொண்டு வரப்பட்டதுதான் என்று மற்றொரு செய்தி சொல்கிறது. தேர்தல் பத்திரங்கள் மூலம் அடித்த பணம் எல்லாம் ஆறாய் ஓடும் போது “என்னிடம் பணம் கிடையாது அதனால் நான் தேர்தலில் போட்டியிடவில்லை” என்று நிர்மலா சீதாராமன் சொன்னது, அவர் மக்களை விவரம் இல்லாத முட்டாள்கள் என நினைத்துக் கொண்டிருப்பது தெளிவாகிறது.
அண்ணாலையின் வேட்பு மனுவில் உறுதிமொழிப் பத்திரம் தவறாக தாக்கல் செய்யப்பட்டும் அதை கடைசி நேரத்தில் கமுக்கமாக மாற்றி அண்ணாமலையின் வேட்பு மனு ஏற்கப்பட்டதாக அறிவித்தார்கள். நான்கு கோடி ரூபாய் நயினாருக்குத்தான் கொண்டு செல்கிறோம் என்று நயினாரின் உறவினர்களே கூறிய பின்னரும் விசாரணை நீண்டு கொண்டே செல்கிறது. பாஜக கூட்டணியில் உள்ள இன்னொரு வேட்பாளர் தேவநாதன் யாதவ். இவர் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர். தேவநாதன் யாதவ் தலைவராக உள்ள மயிலாப்பூர் “ஹிந்து பெர்மனென்ட் பண்ட் லிட்” என்ற நிதி நிறுவனத்தில் டெபாசிட் செய்தவர்களின் ரூபாய் 525 கோடியைக் காணவில்லை என்று செய்திவர முதலீடு செய்தவர்கள் அந்த நிறுவனத்தை முற்றுகையிடத் தொடங்கினார்கள். சட்டமன்றத் தேர்தலின் போது பாஜக தலைமை அறிவிப்பதற்கு முன்பே தன்னுடைய வேட்புமனுவைத் தாக்கல் செய்தவர் நயினார் நாகேந்திரன். அப்போது பணத்தை அள்ளி வீசினார். எப்படியும் எம்பி ஆகிவிட வேண்டும் என்று இப்போதும் முதலிலேயே களம் இறங்கினார். கோயில்கள் வாயிலாகவும் விளக்குப் பூசைகள் மூலமும் வாக்குகளைப் பெற முயற்சித்தார். காட்டிக் கொடுத்து பிடிக்கப்பட்ட 4 கோடியால் நயினாரின் கனவு நனவாகுமா என்று அவர் கட்சியைச் சேர்ந்தவர்களே கவலை தெரிவிக்கிறார்கள். குஜராத்தின் சூரத், மத்திய பிரதேசத்தின் இந்தூரில் நடத்தியதுபோல் தமிழ்நாட்டிலும் பாஜகவுக்கு நடத்த முடியாமல் போய்விட்டது. 1 லட்சம் பாஜக ஆதரவு வாக்களர்கள் பெயரைக் காணவில்லை என்று புதுசா பிரச்சினை கிளப்பினர் அண்ணாமலையும் வானதியும். ஆனால், வாக்களித்தவர்களை அழைத்து வந்து அவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் மூலம் அம்பலப்பட்டுப் போனார்கள். தேர்தல் சமயத் தில்லு முல்லுவை பெரிய அளவில் நடத்த முடியாமல் அடிவாங்கிவிட்ட பாஜக, வாக்கு எண்ணிக்கைத் தில்லு முல்லுக்கு வழி தேடலாம் தமிழ்நாட்டிலும் இறைவன் மீது பழி போட்டு.
சங்கரந்தம்பி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)