நீட் தேர்வை ஒழித்திடு!
மோடி 3.0 க்கு எதிரான முதல் போர் முழக்கம்!
“அனைத்து மதங்களும் சமம் - அனைத்து முடிவுகளிலும் ஒருமித்த கருத்து” என்று கூறி, அரசியல் சாசனத்தை வணங்கி, அதிர்ச்சியளித்த மோடி 3வது முறையாக பிரதமராகப் பதவியேற்கும்போதே, “மோடி அரசே ! நீட் தேர்வை ஒழித்திடு! என்கிற முழக்கம் நாடெங்கும் ஒலிக்கத் துவங்கிவிட்டது. மோடிக்கு அறுதிப் பெரும்பான்மையை இந்திய மக்கள் மறுத்துவிட்ட செய்தி வெளிவந்த நாளில்தான் மோடி அரசின் சிறப்புமிக்க(!) நீட் தேர்வின் அவலங்களும் அப்பட்டமாக வெளிவந்தன. மே5ம் தேதி நடைபெற்ற மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வின் முடிவு ஜூன் 4 அன்று வெளியிடப்பட்டது. நாடு முழுவதும் 67 மாணவர்கள் 720க்கு 720 மதிப்பெண்கள் வாங்கியிருந்தார்கள். அதில் 6 பேரின் பதிவெண்கள் அடுத்தடுத்து வரிசையாக இருந்தன. ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டுமே 11 பேர் முதலிடம் பெற்றிருந்தார்கள். அந்த ராஜஸ்தானில்தான் நீட் தேர்வு வினாத் தாள் முதலில் கசிந்தது. அங்கு நடப்பதோ பாஜக ஆட்சி. அடுத்து இப்பொழுது பீகாரில் வினாத்தாள் கசிந்தது தொடர்பாக மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். மதிப்பெண்கள் போட்டதில் முறைகேடு நடந்துள்ளது. 1563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் போடப்பட்டுள்ளன. அவர்களின் விடைத்தாள்களை மறு மதிப்பீடு செய்யப் போவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. வினாத் தாள்களில் பல குளறுபடிகள். தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதியவர்கள் எல்லாருக்கும் கியூ,ஆர்,எஸ்,டி என்ற வரிசை கொண்ட வினாத் தாள் வழங்கப்பட்ட நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் 2 மையங்களில் தேர்வு எழுதிய சுமார் 1500 மாணவர்களுக்கு எம்,என்,ஓ,பி வரிசை கொண்ட வினாத் தாள் வழங்கப்பட்டுள்ளது. இந்த வினாத்தாள் கடினமாக இருந்துள்ளது. அதனால் விடையளிக்க அதிக நேரம் தேவைப்பட்டுள்ளது. அம்மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து, தங்களுக்கு ஏற்பட்ட வினாத் தாள் மாற்றம், நேர விரயத்தைப் பற்றி உடனே புகார் அளித்தும் தேர்வு முகமை கணக்கில் கொள்ளவில்லை, ஆகையால் , தங்களுக்கு தனி கட் ஆப் மார்க் வேண்டும் என்றும் தனி கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என்றும் முறையிட்டுள்ளார்கள். இப்படி நாடு முழுவதும் பல குளறுபடிகள்; முறைகேடுகள்; ஊழல்கள். பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் இருந்து நீட்தேர்வு ரத்து செய்ய வேண்டும் அல்லது விதிவிலக்கு வேண்டும் என்றுதான் இதுவரை கோரிக்கை வந்து கொண்டிருந்து. இப்போது, சிறந்த மருத்துவர்களை உருவாக்கவே நீட்தேர்வு என்று பெருமை பேசிய பாஜகவினர் ஆளும் மாநிலங்களில் இருந்தே, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று குரல் வருகின்றது. பாஜக கூட்டணி ஆளும் மாநிலமான மகாராஷ்டிராவில் நீட் எழுதிய மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர், வஞ்சிக்கப்பட்டுள்ளனர். நீட் தேர்வு பணம் வாங்கிக் கொண்டு நடத்தப்படுகிறது, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அம்மாநில அமைச்சர் ஹசன் முஷ்ரிப் கூறியுள்ளார். நீட் தேர்வில் ஊழல்களும் முறைகேடுகளும் இப்போது புதிதாக நடக்கவில்லை. மோடி அரசு நீட் தேர்வை அறிமுகப்படுத்தியபோதே ஆரம்பித்துவிட்டன. ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதாக சிலர் கைது செய்யப்பட்டனர். தற்போது மறு தேர்வு நடத்தப்பட வேண்டும் என்றும் கலந்தாய்வுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் சில மாணவர்கள், அமைப்புகள் வழக்கு தொடுத்துள்ளன. உச்ச நீதிமன்றமோ, நீட் தேர்வின் புனிதம் கெட்டுப்போய்விட்டது என்று கவலை தெரிவித்துவிட்டு, கலந்தாய்வுக்குத் தடை விதிக்க மறுத்துள்ளது. இது நீட் தேர்வே கூடாது, நீட் தேர்வு ஏழை, கிராமப்புற, பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மாணவர்களின் மருத்துவர் கனவை சிதைக்கக்கூடியது என்கிற கருத்துக்கு எதிரானதாகும். தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநில அரசுகளும் எதிர்க்கட்சிகளும் நீட் தேர்வில் இருந்து விதிவிலக்கு வேண்டும் என்று கேட்கிறார்கள். இகக(மாலெ) கட்சி நீட், க்யூட் தேர்வுகள் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்று கோரி வருகிறது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் அறிக்கையிலும் அதை முன்வைத்திருந்தது. இப்போது இந்தியா முழுவதும் மாணவர்கள் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி போராட்டக் களத்தில் இறங்கியுள்ளனர். அகில இந்திய மாணவர் கழகம், இந்திய மாணவர் சங்கம், ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் சங்கம் சார்பாக டெல்லியில் ஒன்றிய அரசின் கல்வி அமைச்சகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஜேஎன்யு மாணவர் சங்கத் தலைவர் தனஞ்சய், டெல்லி பல்கலைக் கழக மாணவர் சங்கச் செயலாளர் அஞ்சலி உள்ளிட்டோர் கல்வி அமைச்சகச் செயலாளரைச் சந்தித்து நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி மனுக் கொடுத்துள்ளார்கள். நீட் தேர்வு முற்றிலும் ஒழிக்கப்பட புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இகக(மாலெ) கட்சியின் இரண்டு மக்களவை உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் தங்கள் குரலை ஓங்கி ஒலிப்பார்கள். இந்த குரலோடு இணைந்து தமிழ்நாட்டின் மக்களவை உறுப்பினர் களும்‘நீட், க்யூட் வேண்டாமென குரல் கொடுக்க வேண்டும். நீட்டை ஒழித்துக்கட்ட வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)