நீர்வழிப்படூஉம்

தேவிபாரதியின்நாவல் அறிமுகம்

எழுத்தாளர் தேவிபாரதியின் இலக்கிய படைப்புகளில் மிகச் சிறந்த படைப்பானநீர்வழிப் படூஉம்என்ற நாவல், 2023ம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருது பெற்றுள்ளதுசமூகத்தை, வரலாற்றைச் சிறப்பாக பதிவு செய்வதில் ஒரு இலக்கிய படைப்பின் வெற்றி அடங்கியுள்ளது என்பதை இந்நாவல் நிரூபித்துள்ளது.நொய்யல் ஆற்றின் ஆம்பராத்துக் கரையில், உடையாம்பாளையம் கிராமத்தில் வாழ்ந்த  குடிநாவிதர்கள் சமூகத்தின் வாழ்க்கை, நீரின் போக்கில் அடித்துச் செல்வது போல அமைந்திருந்ததாக நாவல் சித்தரிக்கிறது. எழுத்தாளர் முத்து நாகு  எழுதிய புகழ்பெற்ற வரலாற்று புதினமானசுளூந்தீ’  தமிழர் நாகரிகத்தில் இடைக்கால வரலாற்று மன்னர் ஆட்சி காலகட்டத்தில்,  மருத்துவர்கள் - நாவிதர்கள், பொது மருத்துவத்தில்,   அமைச்சரவையில் பெற்றிருந்த உயர் நிலையை விவரித்தது எனில், தேவிபாரதியின்  ‘நீர்வழிப் படூஉம்நாவலானது, அவர்கள் குடிமகனாக(குடிமான்) / குடிநாசுவர்களாக மாறிய பின்னர் பட்ட கதைகளை விவரிக்கிறது. கொங்கு கவுண்டர்களின் புரோகிதராகவும் ( Priest class), மருத்துவச்சியாகவும் திகழ்ந்த ஒரு சமூகம், படிப்படியாக ஏவலாள்களாக மாறியதையும்  தொழில் வளர்ச்சி மற்றும் நகர்ப்புறமயமாக்கம் மற்றும் சாதியக் கட்டுமானத்தில் ஏற்பட்ட தளர்வுகள் காரணத்தால் நாவிதர் சமூகம் சிதறிப் போன வரலாற்றை நாவல்  சித்தரிக்கிறது.1970- 80களின் காலகட்டத்தில், கொங்கு கவுண்டர் சமூகம் நிறைந்த உடையாம்பாளையம் கிராமத்தில் வாழ்ந்த நாவிதர் குடும்பங்கள் பட்ட கதைகள், வாழ்ந்து மடிந்த பெரியவர்களின் துயரக் கதைகள் இவை.பெரியம்மா வழியாக மொத்த கதையும் நகர்கிறது. ஒரு வட்டாரத்தின், ஒரு தலைமுறை நாவிதர்கள் வாழ்க்கையும் அவரை சுற்றி இயங்குகிறது. நல்லதொரு குடிமகனான ( புரோகிதரான ) காருமாமா, அவரை விட்டுப்போன ராசம்மா அத்தை, முத்தையன்வலசு பெரியப்பா, சவுந்தரம் பெரியம்மா, லிங்க நாவிதன்பண்ணயக்காரர்களான  கவுண்டர்களும் அவர்கள் வீட்டுப் பெண்களும்  சிதைந்து போகும் கிராமங்களில் வாழ்ந்த ஏராளமான குடும்பங்களின் ஆன்மாக்களும்தான் கதைமாந்தர்கள். ஆம்பராத்து கரையை, கிராமங்களை அதன் இயற்கையை அச்சு அசலாக கொண்டு வந்து நம் கண்முன் நிறுத்துகிறது நாவல்; இத்தனை செடிகளா, கொடிகளா, மரங்களா, மூலிகைகளா, உணவு தானியங்களா, பறவைகளா, விலங்குகளா என திகைப்பூட்டும் அளவிற்கான அவற்றின் பண்புகள் மற்றும் பெயர்கள் நாவல் நெடுக நிரம்பி வழிகின்றன.

கூட்டாஞ்சோறு, அப்பா அம்மா விளையாட்டு,  தாயக்கரம், நோய் தீர்க்க வேண்டுதல்கள் என அழிந்துபோன விளையாட்டுகளையும், பல்வேறு  பண்பாட்டுக் கூறுகளையும் நாவல் விவரிக்கிறது; அந்தக் காலத்தின் சிவாஜி - எம்ஜிஆர் ரசிகர்களாக மக்கள் மாறியதையும், மோதிக் கொண்டதையும், மலர்ந்தும் மலராத நினைவுகளாக கொண்டு வந்து நிறுத்துகிறது

தொழில் வளர்ச்சிக்கு ஏற்ப கொங்கு கவுண்டர்கள் மேன்மேலும் வசதியாக முன்னேறுவதும், குடிதொழிலைக்  கைவிட்ட நாவிதர்கள் நிலபுலம் ஏதுமற்ற பாட்டாளிகளாக சிதறுவதும் நன்கு கதைக்கப்பட்டிருக்கிறது. தொழிற்துறை வளர்ச்சியின் அக்கம்பக்கமாக, குடிக்க குடிநீர் இல்லாத, கழிப்பிடங்கள் அற்ற ஈரோடு நகரத்தின் தொழிலாளர்களின் ஏழ்மையான குடியிருப்புகளும், பாட்டாளிகளின்  வாழ்க்கையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இயற்கையின் பேரழகை காட்சிப்படுத்தும் வண்ணக் காமிராவாக தேவிபாரதியின் எழுத்துநடை பிரமிக்க வைக்கிறது; மேலும், அது உரைநடையா கவிதையா என மயக்குகிறது. சலசலவென்று நிற்காமல் ஓடிக் கொண்டு இருக்கும் ஆறுபோல ஒவ்வொரு பத்தியும் நிற்காமல் ஓடுகிறது. அதற்குள்தான் எத்தனை சங்கதிகள், செய்திகள், துன்பங்கள், துயரங்கள், நையாண்டிகள் !!! 

தேவிபாரதியின் இலக்கிய படைப்பான நீர்வழிப் படூஉம் நாவல், ஒரு சமூகத்தின் ஆவணமாகத் திகழ்கிறது

நீர்வழிப் படூஉம்: தமிழ் கூறும் நல்லுலகம் புறக்கணிக்க முடியாத புதினம்!

சந்திரமோகன்