மதச் சிறுபான்மையினர்  மக்கள்தொகை

தவறான தகவல்கள்

விஷமத்தனமான அரசியல்

மூன்றாம் கட்ட தேர்தல்களின் போது, மே 7 அன்று, பிரதம மந்திரியின் பொருளாதார ஆலோசனைக் குழு (ஈஏசி-பிஎம்) ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டது. அது 1950 க்கும் 2015 க்கும் இடைப்பட்ட காலத்தில், உலகிலுள்ள 167 நாடுகளின் மக்கள்தொகையில், மதச் சிறுபான்மையினரின் பங்கில், ஏற்பட்ட மாற்றம் குறித்ததாகும். அது உண்மையை மறைத்துக் காட்டும் நோக்கில் முன்வைக்கப்பட்ட ஓர் ஒப்பீட்டு ஆய்வு. உலகளாவிய போக்கிற்கு ஏற்ப, இந்திய மக்கள்தொகையில் நிகழ்ந்த மாற்றங்களை ஆய்வு செய்கிறது. இந்தியாவின் மக்கள்தொகையில் மதப் பெரும்பான்மையினரின் விகிதத்தில் ஏற்பட்ட குறைவு (1950 இல் 84.68% இருந்து 2015ல் 78.05% ஆக), உலக அளவில் ஏற்பட்ட குறைவின் சராசரி விகிதத்தை விட, அதிலும் குறிப்பாக, உலகின் வளர்ந்த நாடுகளை ஒப்பிடும்போது, மிகவும் குறைவான முக்கியத்துவம் கொண்டது என கண்டது167 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின்படி, உலக அளவில் ஏற்பட்ட குறைவின் சராசரி 22%  ஆகவும், 35 ஓஈசிடி (பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு) நாடுகளில் அது 29% ஆகவும் உள்ளது. பல்வேறு நாடுகளில் மக்கள்தொகையின் சேர்மானத்தில் ஏற்பட்ட மாற்றத்திற்கு காரணமான பலதரப்பட்ட காரணிகளைப் பற்றி இந்த அறிக்கை ஆய்வு செய்யவில்லை. அதற்கு மாறாக, மாறிக்கொண்டிருக்கும் மக்கள்தொகையின் வகைமாதிரிகளை மட்டுமே பிரதிபலிக்கிறது. அதன் ஒட்டுமொத்த முடிவுகளைப் பற்றி மட்டுமே அது கவனம் செலுத்துகிறது. குறிப்பான சமூக அல்லது வரலாற்று சூழ்நிலைகள் மக்கள்தொகை மீது செலுத்தும் தாக்கங்களைப் பற்றி பேசாமல், மாற்றங்களைப் பொதுவாக விவரிக்கிறது. பல்வேறு சமூகங்களில் குழந்தை பெறும் விகிதம் என்பது பொருளாதார சூழ்நிலைகள், கல்வி பெற்றவர்களின் எண்ணிக்கைகளை முதன்மையாக சார்ந்துள்ளது. பொருளாதாரத்தில் நல்ல நிலையில் உள்ளவர்களையும் அதிக கல்வி கற்றவர்களையும் விட, கல்வி பெறுவதற்கான வாய்ப்பு குறைவான ஏழைகள் அதிக குழந்தைகளைப் பெறுகிறார்கள். அது பற்றி அறிக்கை பேசவில்லை. அது மட்டுமல்லாமல், புலம் பெயர்தல், மதம் மாறுதல் ஆகியவையும் கூட மக்கள் தொகையின் சேர்மானத்தில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. பல்வேறு சமூகங்களின் ஒட்டுமொத்த நிலைமைகள் காரணமாக மக்கள்தொகை அமைகிறது. ஆனால், மக்கள்தொகையின் காரணமாகவே ஒட்டுமொத்த நிலைமைகள் அமைவது போல முன்வைக்க, அதனையே மாற்றாக முன்வைத்து விவரிக்க இந்த ஆய்வறிக்கை முனைகிறது. இந்தியாவில் சிறுபான்மையினர் பாதுகாக்கப்படுகிறார்கள் என்பது மட்டுமல்ல, அவர்கள் உண்மையிலேயே செழித்து வளர்கிறார்கள் என்று சொல்லி, அதற்கு இந்தியாவில் முஸ்லிம் மக்கள்தொகை விகிதம் அதிகரித்து வருகிறது, அதுவே சான்று என்பது போல முன்வைக்கிறது. இந்தியாவில் மத சிறுபான்மையினரின், மத சுதந்திரத்தின் நிலை குறித்து இந்த உலகமே கவலையை வெளிப்படுத்துகிறது. அதற்குக் காரணம் இந்திய முஸ்லிம்களுக்கு எதிராக இடைவிடாமல் அன்றாடம் மேற்கொள்ளப்படும் வெறுப்பு மற்றும் வன்முறை நடவடிக்கைகளாகும். இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் தேர்தல்களிலும் கூட முஸ்லிம்களுக்கு எதிராக பிரதம மந்திரியே தலைமை தாங்கி நடத்துகிற மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த வெறுப்பு பரப்புரையை நாம் கண்டு கொண்டிருக்கிறோம். இந்த நோக்கத்திற்காகவே ஈஏசி-பிஎம் ஆய்வறிக்கையும் கூட பயன்படுத்தப்படுகிறது. குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான படுகொலை நடத்தப்பட்ட நேரத்தில், நிவாரண முகாம்களை 'குழந்தைகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள்' என மோடி விவரித்ததையும் நாம் நினைவில் கொண்டிருக்கிறோம். பலதார மணம், மக்கள் தொகை அதிகரிப்பு என்ற பீதியைக் கிளப்புவதன் மூலம் முஸ்லிம் சமூகத்தினரை தாக்குவதற்கு 'நாம் ஐவர், நமக்கு இருபத்தைந்து குழந்தைகள்' என்ற அதீத ஆத்திரமூட்டக் கூடிய நச்சு முழக்கத்தையும் கூட அவர் முன்வைத்தார்.பிற சமூகத்தினரை விட முஸ்லிம் சமூகத்தினரின் மொத்த குழந்தை பெறும் விகிதம் மிகவும் வேகமாக குறைந்து கொண்டிருக்கிறது; அது தேசிய சராசரியை நோக்கி வீழ்ந்து கொண்டிருக்கிறது என தற்போது நன்கு நிறுவப்பட்டுள்ளது1991 க்கும் 2001 க்கும் இடையே இந்திய முஸ்லிம்களின் மக்கள்தொகை 29.3% ஆக அதிகரித்துள்ளது. அதேவேளையில் அடுத்த பத்தாண்டுகளில் இந்த விகிதம் 5% வீழ்ச்சி அடைந்து 24.4% ஆகியுள்ளது. மோடி அரசு 2021 க்கான கணக்கெடுப்பை செய்திருந்தால், இந்தியாவின் மக்கள்தொகை குறித்த கண்மூடித்தனமான ஊகங்களையும் விஷமத்தனமான பரப்புரைகளையும் எதிர்கொள்ள நமக்கு மேம்படுத்தப்பட்ட விபரங்கள் கிடைத்திருக்கும். அசாமிலும் மேற்கு வங்கத்திலும் வங்காளதேச முஸ்லிம்கள் ஊடுருவுகிறார்கள் என சொல்லப்படுபவை குறித்த பரப்புரையையும் கூட 2001, 2011 கணக்கெடுப்புகள் கேள்விக்குள்ளாக்கி இருக்கின்றன1991 க்குப் பிந்தைய கணக்கெடுப்புத் தரவுகளின் படி, மேற்கு வங்க முஸ்லிம் மக்கள்தொகை, உண்மையில், தேசிய சராசரியை விட குறைவான விகிதத்திலேயே வளர்ச்சி பெற்றுள்ளது

மூலதனத்தின், உற்பத்தியின் உலகமயமாக்கம், அந்நிய நாடுகளில் மக்கள் குடியேற்றத்தை அதிகரிக்கக் காரணமாகியுள்ளது. மிகவும் வளர்ந்த நாடுகள் இத்தகைய குடியேற்றத்தை ஊக்கமிழக்கச் செய்ய, குடியேற்றத் தடுப்புக் கொள்கைகளை கொண்டிருக்கின்றன. அதேவேளையில், குடியேறிகளுக்கு எதிரான நச்சு மிகுந்த தப்பெண்ணங்களையும் வன்முறையையும் சுற்றியே உலகம் முழுவதும் உள்ள வலதுசாரி அரசியல் சுழலுகிறது. 2022 ல் 2,25,620 இந்தியர்கள் தங்களது இந்தியக் குடியுரிமையை விட்டுவிட்டு, அந்நிய நாடுகளின் குடியுரிமையை பெற்றுள்ளனர். சட்ட விரோதமாக குடியேறுகிறவர்கள் என்ற குற்றச்சாட்டுகளால் இந்தியர்கள் திருப்பி அனுப்பப்படும் செய்திகள் தற்போது நமக்கு அடிக்கடி கிடைக்கிறது. மேலும் மேலும் அதிக இந்தியர்கள் வெளிநாடுகளில் தங்கி வாழ்வதற்கு முயற்சிக்கின்றனர் என்பதே இதிலிருந்து நமக்கு கிடைக்கும் செய்தியாகும். மதப் பெரும்பான்மையினரின் ஒப்பீட்டளவிலான எண்ணிக்கை பெருமளவு குறைந்திருக்கிறது என்றால், அதற்கீடாக மதச் சிறுபான்மையினரின் எண்ணிக்கை அதிகரிப்பதை ஓஈசிடி நாடுகள் வெளிப்படுத்துகிறதென்றால், இந்த அதிகரிக்கும் எண்ணிக்கைக்கு இந்தியர்களும் பங்களிப்பு செய்துள்ளார்கள் என்பதை நாம் நிச்சயமாக நினைவில் கொள்ள வேண்டும்

1970 இல் வங்காளதேச விடுதலைப் போரும் அதோடு தொடர்புடைய சமூக, பொருளாதார, அரசியல் கொந்தளிப்புகளும் இந்தப் பகுதியில் மக்கள்தொகையின் பெரும் மாற்றங்களுக்குக் காரணமாயின. அண்மைய காலங்களில் மக்கள்தொகை நிலைத்தன்மை பெற்று, அதன் உச்சத்தை வங்காளதேசம் எட்டியுள்ளது. மேலும் சமூக, பொருளாதாரத்தின் பல குறியீடுகளில் இந்தியாவை விட அது சிறப்பாக செயல்படுகிறது. அதன் மொத்த குழந்தை பெறும் விகிதம் இந்தியாவை விட குறைவாக உள்ளது. இந்திய மக்கள்தொகை பரப்புரையாளர்கள் வங்காளதேசம் குறித்து மிகுந்த விருப்புடன் எப்போதும் பேசுகின்றனர். இலங்கை மீது மிகவும் குறைவான கவனமே செலுத்தப்படுகிறது. அங்கு பெரும்பாலும் இந்துக்களாக உள்ள இலங்கைத் தமிழர்கள் ஒரு இனப்படுகொலை போரினால் பாதிக்கப்பட்டனர். அதன் காரணமாக அங்கு இந்துக்களின் மக்கள்தொகை 5% குறைந்து விட்டது. புத்த சமயத்தினரின் எண்ணிக்கை பலம் அதற்கீடாக அதிகரித்துள்ளது. வங்காளதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் மத சிறுபான்மையினர் துன்புறுத்தப்படும் பிரச்சனைகள் குறித்து, உண்மைகளை மறைக்கும் நோக்கத்துடன் விவாதிக்கிற, பாரபட்சமான, பிரிவினைவாத குடியுரிமை திருத்தச் சட்டம் இலங்கையின் வளர்ச்சி போக்குகள் குறித்து மௌனம் காக்கிறது.

சங்கிப் படையினரின் கெடுநோக்கு அரசியல் செயல்திட்டத்திற்கு சேவை புரிய பிரதம மந்திரிக்கான பொருளாதார ஆலோசனை குழு பயன்படுத்தப்படுவது, உண்மையிலேயே வெட்கக்கேடானதும் தீய அறிகுறியுடையதுமாகும். இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டில் பிரதம மந்திரியின் முதன்மை பொருளாதார ஆலோசகர், அம்பேத்கரின் அரசமைப்புச் சட்டம் காலாவதியாகிப் போனது என சொன்னது மட்டுமல்ல, அதற்குப் பதிலாக புதிய அரசமைப்புச் சட்டம் ஏற்படுத்தப்பட வேண்டும் என வெளிப்படையாக முன்வைத்தார். பிரதம மந்திரியே தலைமை தாங்கி நடத்தும், பாஜகவின் நச்சு மிகுந்த முஸ்லிம் எதிர்ப்புப் பரப்புரை இயக்கத்திற்கு தேவையான ஆயுதங்களை அந்த அறிக்கை வழங்குகிறது.   மேலும் தற்போது 167 நாடுகளில் நடத்தப்பட்ட நாடுகடந்த ஆய்வு என்கிற போர்வையில், அவ்வாறு செய்திட முனைகிறது ஈஏசி-பிஎம் அறிக்கை. இந்திய மக்கள்தொகையை சுமையாகப் பார்க்கும் மால்தூசியன் கண்ணோட்டமே இந்தியாவில் பல தவறுகளுக்கு, கொள்கைரீதியான தவறுகளுக்கு வழிவகுத்தது. வீணாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மக்கள்தொகையின் ஆற்றலை பயன்படுத்திட, அதனால் விளையும் பயனை அறுவடை செய்திட வேண்டுமானால் அதற்கு, பொருளுள்ள வேலைவாய்ப்பு கொள்கைகள் வேண்டும்; அநீதியும் சமத்துவமின்மையும் ஆழமாக வேரூன்றியிருக்கும் சமூக அமைப்பினை சேதப்படுத்திட, மேலும் கூடுதல் பிரதிநிதித்துவம் அளிக்கும் கொள்கைகள் வேண்டும்; அதற்கான வாய்ப்பை ஏற்படுத்திட சாதிவாரி கணக்கெடுப்பு இந்தியாவிற்கு தேவைப்படுகிறது. இவ்வேளையில் இந்திய மக்கள்தொகையின் மத ரீதியான சேர்க்கை குறித்து கவனம் குவிப்பது தவறான விசயத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதாகும்

Editorial, ML Update, 14-20 May 2024