தலையங்கம்

வயநாடும் வினேஷ் போகத்தும் மோடியின் ஆட்சியும்

    கடவுளின் தேசத்தில் ஒரு சிறு குழந்தை கேட்கிறது தன் அப்பாவிடம், கடவுள் ஏன் இவர்களைக் காப்பாற்றவில்லை என்று. தோண்டத்தோண்ட உடல்களாக வந்து கொண்டிருக்கின்றன வயநாட்டில் சூரல்மலை, முண்டக்கை, மேப்பாடி மூன்று கிராமங்களும் முற்றிலும் மண்ணுக்குள் புதைந்து போய்விட்டன. அந்தக் கிராமங்கள் இருந்த தடயமே தெரியவில்லை. பெரும்பெரும் பாறைகள் மட்டுமே காட்சியளிக்கின்றன. மரணங்கள் ஆயிரக் கணக்கில். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் 20,30 பேர் என மொத்த மொத்தமாக அயர்ந்து தூங்கும் நேரத்தில் புதையுண்டு போய்விட்டார்கள். சாலிஆறு 90 கி.மீ தூரத்திற்கு அப்பால் நூற்றுக்கணக்கான உடல்களை இழுத்துச் சென்று போட்டிருக்கிறது. சுற்றுச் சூழலை பாதுகாப்பதில் அக்கறையின்மையே இதற்குக் காரணம் என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லிவிடமுடியுமா? கார்ப்பரேட்டுகளுக்காக, வணிகத்திற்காக காடுகளை அழிப்பதும் பழங்குடி மக்களை அவர்களின் வாழ் விடங்களில் இருந்து அப்புறப்படுத்துவதும் ஆட்சியாளர்களின் கொள்கைகளாலும் திட்டங்களாலும்தானே. நடந்திருப்பது மிகப் பெரிய இயற்கைச் சீற்றம். பேரழிவு. அந்த மூன்று கிராமங்களில் இனி யாரும் குடி போக முடியாது என்கிறார்கள். ஒன்றிய மோடி அரசு, இதைத் தேசியப் பேரிடர் என்று அறிவிக்க மறுக்கிறது. ஒரு வாரத்திற்கு முன்பே நாங்கள் எச்சரிக்கை விடுத்து விட்டோம் மாநில அரசுதான் அக்கறையில்லாமல் இருந்துவிட்டது என்று அமித்ஷா வாய் கூசாமல் பொய் சொல்கிறார். ஆரஞ்சு எச்சரிக்கை மட்டுமே விடப்பட்டது என்று கேரளத்தின் முதல்வர் பினரயி விஜயன் அந்தப் பொய்யை அம்பலப்படுத்தினார். தன் கட்சியைச் சேர்ந்த நடிகரின் திருமணத்திற்காக கேரளாவிற்குச் செல்ல முடிந்த மோடியால், வயநாட்டிற்கு ஏன் வர முடியவில்லை என்று மக்கள் கேட்கிறார்கள். பிணத்தில் கூட அரசியல் செய்யும் இந்தச் சங்கிக் கூட்டதாரிடம் மனித மாண்புகளை எப்படி எதிர்பார்க்கமுடியும். பாலியல் குற்றஞ்சாட்டப்பட்ட பாஜக எம்பி பிரிஜ் பூசனை எதிர்த்துப் போராடிய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், பாரிஸில் நடைபெறும் ஒலிம்பிக்கில் ஒரே நாளில், நடப்பு உலகச் சாம்பியன் உட்பட மூன்று பேர்களை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார். நிச்சயம் தங்கப்பதக்கம் வெல்வார் என்று ஒட்டு மொத்த இந்தியாவும் எதிர்பார்த்திருந்த வேளையில், வினேஷ் போகத் தெருவில் போராடிக் கொண்டிருந்தபோது கண்டு கொள்ளாத இந்திய பிரதமர் மோடி, பதக்கம் வென்று வரும் போகத்தை வரவேற்பார் என்று எல்லாரும் சொல்லிக் கொண்டிருந்த வேளையில், 50 கிலோவிற்குக் கூடுதலாக 100 கிராம் இருக்கிறார் என்று ஒரே இரவில் தகுதி நீக்கம் செய்யப்பட்டு ஒலிம்பிக் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். வினேஷ் போகத் தான் இனி குத்துச் சண்டை போட்டிகளில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று அறிவித்து விட்டார். கென்யா வீராங்கனை ஒருவர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட போது, கென்யா அரசு ஒலிம்பிக் கமிட்டியிடம் மேல்முறையீடு செய்து வாதாடி, தகுதி நீக்கத்தை ரத்து செய்தது. ஆனால், வினேஷ் போகத் விசயத்தில் பெயரளவுக்கு மட்டுமே மேல்முறையீடு செய்துள்ளது இந்திய ஒலிம்பிக் கமிட்டியும் அரசும். அந்த மேல்முறையீட்டையும் கிடப்பில் போட்டுவிட்டது. அது மட்டுமின்றி வினேஷ் போகத்தின் தகுதி நீக்கம் சரிதான் என்று வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் பாஜகவினர். இதிலிருந்தே தெரிகிறது இந்தியாவின் தங்க மங்கையாக வினேஷ் போகத் வந்து இறங்கிவிட்டால் நிலைமை என்னவாகும் என்று நினைத்துப் பார்த்ததால்தான் இப்படியொரு தகுதிநீக்கம் நடந்திருக்குமோ என்று மக்கள் சந்தேகிப்பதில் உண்மை இல்லாமல் இல்லை. பாசிச பாஜக சங்கிகளுக்கு மனித உயிர்களும் பெரிதல்ல,நாட்டின் மாண்பும் பெரிதல்ல என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.