பட்டியல் இன மக்களின் இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு :
சிபிஐஎம்எல் அரசியல் தலைமைக்குழு தீர்மானம்
பட்டியலின மக்களில், ஒப்பீட்டளவில் விளிம்பு நிலையிலிருக்கும் சாதிகள் குறித்த அனுபவத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு பட்டியலின மக்களின் ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்க உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது. ஆகவே, இந்த உள் ஒதுக்கீடு வழங்குவதற்கு சாதிவாரிக் கணக்கெடுப்பு தேவையான ஒன்றாகிறது. இல்லையென்றால் பலதரப்பட்ட சாதிகளுக்கு ஒப்பீட்டளவில், வாய்ப்பு மறுக்கப்பட்டதின் அளவை மதிப்பிட எவ்வித எதார்த்த அடிப்படையும் இருக்காது. எனவே குறை பிரதிநிதித்துவமுள்ள அனைத்து குழுக்களுக்கும் அவர்களுக்குரிய, போதுமான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்கும் சாதிவாரிக் கணக்கெடுப்பும் அதற்கேற்ப விகிதாசார அடிப்படையில் இட ஒதுக்கீட்டுத் சூத்திரமும் காலத்தின் கட்டாயமாகும்.
உள் ஒதுக்கீடுகளை நிர்ணயிக்கும் அதிகாரத்தை மாநில அரசாங்கங்களுக்கு இத்தீர்ப்பு வழங்கியுள்ளது. அதேவேளையில், வழக்கின் வரையறைகளைத் தாண்டிச்சென்று பட்டியலின இட ஒதுக்கீட்டுக்குள்ளேயே 'கிரீமி லேயர்' கருத்தாக்கத்தை கொண்டுவருவதற்கும் பரிந்துரைத்திருக்கிறது; ஒரு தலைமுறைக்கு மட்டுமே இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தையும் கூறியுள்ளது.
பட்டியலின இட ஒதுக்கீடு என்பது, தலித்-பழங்குடியின மக்கள் எதிர்கொள்ளும் சமூக விலக்கம், விளிம்பு நிலைக்கு தள்ளப்படுவது என்கிற தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் எதார்த்தத்தை எதிர்கொள்ளவும் அதனை மட்டுப்படுத்தவுமான ஒரு அனுசரணையான நடவடிக்கையாகும். சாதியப் பாகுபாடு கிராமப்புரங்களில் மட்டுமே இருக்கிறது; நகரமயமாக்கத்தின் காரணமாக இது குறைந்து விடும் என்ற கருத்தை முன்வைப்பது இந்திய எதார்த்தத்தை மிகப்பெருமளவுக்கு தவறாக பிரதிநிதித்துவப்படுத்துவதாகும். இங்கே, புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களிலும், ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர்கல்வி மையங்களிலும், மருத்துவ, பொறியியல் கல்லூரிகளிலும் பட்டியல் சமூக மாணவர்களும் ஆய்வாளர்கள்/அறிஞர்களும் தொடர்ந்து பெரும் துன்புறுத்தல்களை எதிர்கொள்கின்றனர். அதிகம் வாய்பை இழந்தவர்களுக்கு அதிக நீதி வழங்குவது என்ற பெயரில் இட ஒதுக்கீட்டின் அரசமைப்புச் சட்ட அடிப்படையை கீழ்மைப்படுத்தும் எந்த ஒரு முயற்சியும் ஏற்றுக் கொள்ளத் தக்கதல்ல.
சமூக நீதிக்கான, சமூக சமத்துவத்திற்கான ஒரு கருவியாக அரசமைப்புச் சட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இட ஒதுக்கீடு அதிகரித்த அளவு தாக்குதலை எதிர்கொள்கிறது; அரசமைப்புச் சட்டமும் கூட அப்படியான தாக்குதலை எதிர்கொள்கிறது. இவ்வேளையில் சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட அனைத்து மக்களிடையேயும் அதிகரித்த அளவில் ஒற்றுமையும் சகோதரத்துவமும் நமக்கு தேவையாக உள்ளது. ஒடுக்கப்பட்ட, வாய்ப்பு மறுக்கப்பட்ட மக்களிடையே இன்னும் அதிகமான பிரிவினையையும் பகைமையுணர்வையும் ஊக்குவிக்க உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பே இடம் கொடுத்துவிடாமல் இருக்க வேண்டும் என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். தங்களது சமூக, பொருளாதார மேலாதிக்கத்தை மீண்டும் நிலை நிறுத்திக் கொள்ள, அதிகாரமிக்கவர்கள், சலுகை பெற்றவர்களின் பிரித்தாளும் தந்திரத்திற்கு உதவி புரிவதாகவும் இந்தத் தீர்ப்பு அமைந்து விடக்கூடாது