பெண்கள் சுயசார்பு, சுயமரியாதை, கவுரவம் பெறஎன்ன வழி?
அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக மாநிலக் கூட்டம் ஜூன் 13ல் சென்னையில் நடைபெற்றது. தமிழ்நாட்டில் பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் குறித்து விவாதித்தது. தேசிய ஊரக வேலைத்திட்டத்தில் வேலை மறுப்பு, கூலி குறைப்பு, வரதட்சணை, பணியிடத்தில் பாலியல் வன்கொடுமை போன்றவை கவனத்துக்கு வந்தன. அவற்றுள் ஒன்று நுண்கடன் பிரச்சினை.
சீர்காழிக்கு அருகிலுள்ள சேமங்குளம் கிராமத்தில் வசித்து வந்த மூன்று குழந்தைகளுக்கு தாயான தலித் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடன் வசூல் செய்ய வந்த தனியார் நுண்கடன் முகவர்கள், அந்தப் பெண் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் வீட்டு வாசலிலேயே உட்கார்ந்து விட அவரது சுயமரியாதை நொறுங்கிப்போனது. வீட்டின் உள்ளே சென்று தூக்கிட்டுக் கொண்டார். இதேபோல் பிப்ரவரி 2024 ல் மயிலாடுதுறை அருகிலுள்ள கேணிக்கரை கிராமத்தைச் சேர்ந்த ஜெயலட்சுமி (33) நுண்கடன் முகவர்களின் நெருக்குதல், அவரது கவுரவுத்துக்கு இழுக்கு ஏற்படுத்தியதை தாங்காமல் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தலித் பெண்ணான இவரது குழந்தை பரிதவித்துக் கொண்டிருக்கிறது.
இது போல் பல மாநிலங்களில் நூற்றுக்கணக்கான பெண்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆந்திராவில் மட்டும் தனியார் நுண்கடன் நிறுவனங்கள் 70 பெண்களை தற்கொலையில் தள்ளி உள்ளன. இது அகில இந்திய பிரச்சனையாக உள்ளது.
சீர்காழி, பனங்காட்டான்குடிக்கு அருகிலுள்ள எலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த நடராசன் என்பவரது வீட்டை ஜப்தி செய்யப்போவதாக அச்சுறுத்தி பணம் பறித்துள்ளனர். பெருந்தோட்டம் கிராமத்தில் 16 தனியார் நிறுவனங்கள் சுமார் 6 கோடி கடன் கொடுத்துள்ளன. தஞ்சாவூர் மாவட்டம் வேப்பத்தூர் பேரூராட்சியில் உள்ள 2000 குடும்பங்களில் 90% குடும்பங்கள் இந்த தனியார் நிறுவனங்களிடம் கடன் பெற்றுள்ளன. இந்த பேரூராட்சியில் மட்டும் மக்கள் சுமார் ரூ 18 கோடி கடன் வாங்கியுள்ளதாக ஜெசிந்தா கூறுகிறார். வட்டி விகிதம் 24 % முதல் 31% வரை வசூலிக்கப்படுகிறது. கள்ளக்குரிச்சி மாவட்டம், கூட்டடி-கள்ளக்குரிச்சி கிராம விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த வசந்தா ரூ 50000 கடனுக்கு ரூ 64 ஆயிரம் வட்டி (29%) கொடுத்துள்ளதாக ஆறுமுகம் கூறுகிறார். 60% வரை வட்டி வசூலிப்பதாக பந்துவாக்கோட்டை (புதுக்கோட்டை மாவட்டம்) இளவரசன் சொல்கிறார்.
1989ல் சுய உதவிக் குழுக்கள் மூலம் நுண்கடன் வழங்கும் முறை திரு. மு.கருணாநிதியால் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம் மிகப் பெரிய பொருளாதாரமாக வளர்ந்தது. கிராமப்புர பெண்களின் சேலை முடிச்சுகளில் இருந்த ’ஆறு, அறுநூறாகி’ வங்கிகளில் குவிந்தன. 90% முதல் 95% வரை வட்டியுடன் கடன் வசூலானதால் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் முண்டியடித்துக் கொண்டு கடன் கொடுத்தன. இதைக்கண்டு நாக்கில் எச்சில் சொட்டச் சொட்ட தனியார் நிறுவனங்களும் பெரிய அளவில் இந்த தொழிலில் இறங்கின. சிறீராம் பைனான்ஸ் தொடங்கி, ஹெடிஎப்சி, எல் அண்ட் டி, ரெப்கோ பெரும்பாலான பெரு நிறுவனங்களும் நுண்கடன் வணிகத்தில் இறங்கியுள்ளன. முதலில் கால்பதித்த ஈக்கிடாஸ், உஜ்ஜீவன் போன்ற நிறுவனங்கள், சிறுவங்கிகளாக பதிவு செய்து கொண்டதுடன் ஏடிஎம் இயந்திரங்கள் வைத்துக் கொள்ளும் அளவுக்கு கொழுத்துள்ளன. லாபநோக்கமில்லாத நடவடிக்கை, பெண்கள் அதிகாரம் என்ற பேரில் இறங்கியுள்ளன. ஆனால் இந்த நிறுவனங்கள், அடாவடியான, அநீதியான வழிகளில் வட்டி வசூலித்து கொள்ளை லாபம் பார்க்கின்றன. அதிமுக ஆட்சியில் சுய உதவிக்குழு திட்டம் புறக்கணிக்கப்பட்டதால், அந்த இடத்தை தனியார் நுண்கடன் நிறுவனங்கள் புற்றீசல் போல் ஆக்கிரமித்துக் கொண்டன.
இந்த நிறுவனங்கள் தங்களுக்கு சூட்டிக்கொண்டுள்ள பெயர்களைக் கேட்டாலே சிரிப்பு வரும். கிராம விடியல், மகர ஜோதி, புது ஆறு, ஆசிர்வாதம், சமதா, மகிழ்ச்சி, சிகரம் என நீள்கின்றன. தங்கள் அடாவடியை மறைத்துக்கொள்ள சொக்கவைக்கும் பெயர்கள்! இவை பெண்களுக்கு மட்டுமே கடன் கொடுக்கின்றன. பெண்கள் முன்னேற்றம், வறுமை ஒழிப்பு என்றெல்லாம் பசப்பினாலும் பெண்கள் எளிதான இலக்கு என்பதால் கடன் கொடுக்கின்றனர். தங்கள் சுயமரியாதை, தன்மானத்தை இழக்க விரும்பமாட்டார்கள். அதையே கருவியாக்கி எப்படியும் பணம் கறந்து விடலாம் என்பதுதான் இந்த தனியார் நிறுவனங்களின் திட்டம்.
கிராமப்புரங்களில் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்து ஆடுகிறது. விவசாயம் கைவிட்ட நிலையில் மாற்று வேலைவாய்ப்பும் உறுதியில்லாத போது கடன் வாங்குவதைத் தவிர மக்களுக்கு வேறு வழியில்லை. குறைந்த வட்டி வசூலிக்கும் தேசிய வங்கிகள், விவசாய கூட்டுறவு கடன் சங்கங்கள் கடன் கொடுப்பதில்லை. அவை விதிக்கும் நிபந்னைகளும் ஏற்படுத்தும் அலைச்சலும் வறியவர் முதல் நடுத்தரப் பிரிவினர் வரை விரட்டி அடிக்கின்றன. செல்வாக்கு உள்ளவர்கள் மட்டுமே கடன் வாங்க முடியும்.
அடாவடி வட்டி, அவமானம், அச்சுறுத்தல் இருந்தாலும் எளிய நிபந்தனைகள், வீட்டுக்கு பக்கத்திலேயே கடன் என வலை விரிக்கும் இந்த நிறுவனங்களை நாடி பெண்கள் படையெடுக்கின்றனர். படிப்பு, மருத்துவம், திருமணம், சடங்குகள், மோட்டர் சைக்கிள், டிராக்டர் என அனைத்து தேவைகளுக்கும் நுண்கடன் நிறுவனங்களிடம் கைகட்டி நிற்கின்றனர். ஒரு நிறுவனத்தில் வாங்கும் கடனை அடைக்க இன்னொரு நிறுவனத்திடம் கடன், அதை அடைக்க இன்னொரு நிறுவனத்திடம் கடன் என வாங்குகின்றனர். இவ்வாறு ஒவ்வொரு குடும்பமும் நாலைந்து நிறுவனங்களிடம் கடன் பெற்றுள்ளன. தமிழ்நாட்டிலுள்ள 65 லட்சம் கிராமப்புர குடும்பங்கள் ஒவ்வொன்றும் ரூ 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை கடனாளி. கடன் சங்கிலியில் சிக்கி மீள முடியாமல் உள்ளன. கடன் நிறுவனங்களுக்கு ‘விடியல்’ பெண்களுக்கு இருட்டு; கடன் கொடுப்பவருக்கு ‘சிகரம்’ கடன் வாங்கிய பெண்களுக்கு பள்ளத்தாக்கு!
தவணை கட்டத் தவறும் குடும்பங்களின் ஆதார் அட்டைகளை முடக்கி விடுகின்றனர். ஆதாரை உயிர்ப்பிக்க வேறு இடத்தில் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்படுவதாக வீரடிப்பட்டி (புதுக்கோட்டை) குமார் சொல்கிறார்.
தமிழ்நாட்டில் 34 தனியார் நுண்கடன் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவை கிராமப்புரத்தில், ஆண்டுக்கு 32 ஆயிரம் கோடிக்கு மேல் வியாபாரம் செய்கின்றன. இந்திய அளவில் 3 லட்சம் கோடிக்கு மேல் வியாபாரம் நடக்கிறது. இந்த நிறுவனங்களில் வேலை செய்யும் பிராந்திய மேலாளர் ஒருவருக்கு மாதம் ரூ 6 லட்சம் ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால் பணம் வசூல் செய்பவர்களுக்கும் அலுவலகங்களில் வேலை செய்வோருக்கும் மாதம் ரூ 18000 முதல் 22,000 மட்டுமே வழங்கப்படுகின்றன. (நாள் சம்பளம் ரூ 600 முதல் 700 வரை). இதற்கு இவர்கள் நாயாய் பேயாய் அலைய வேண்டும். இளைஞர் மத்தியில் தலைவிரித்தாடும் வேலை இல்லா திண்டாட்டத்தைப் பயன்படுத்தி அநியாயமாக சுரண்டி கொழுக்கின்றன இந்த நிறுவனங்கள். வெளியூரைச்சேர்ந்த ஆண், பெண்களையே இந்த நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்கின்றன.
திமுக அரசு பெண்கள் முன்னேற்றத்துக்காக ‘விடியல் பயணம்’ ’மகளிர் உரிமைத் தொகை’ உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தி வருவதால் மாதமொன்றுக்கு ரூ 2000 முதல் 3000 வரை சேமிப்பு உருவாகிறது என்று கூறுகிறது. இலவச பேருந்து பயணத்தால் மட்டும் மாதம் ரூ 888 மிச்சமாகிறது என்றும் கூறுகிறது. இதனால் கட்டுமான வேலை உள்ளிட்ட அமைப்புசாரா தொழிலில் ஈடுபடும் பெண்கள் சுயமரியாதை பெற்றிருக்கிறார்கள் என்றும் சொல்கிறது. ஆனால், தனியார் நுண்கடன் நிறுவனங்களிடம் கிராமப்புர குடும்பம் ஒவ்வொன்றும் ரூ 49,500 முதல் 95,000 வரை கடனாளியாக உள்ளதே அரசுக்கு தெரியுமா? ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் சராசரியாக மாதம் ஒன்றுக்கு ரூ 2300 டாஸ்மாக் கடைக்கு (குடிக்காத குடும்பங்களை கணக்கிட்டால் இந்த தொகை இன்னும் அதிகமாகும்) சென்று அரசின் வருமானமாக மாறுவதும் அரசுக்கு தெரிந்ததுதானே?
தனித்து வாழும் பெண்களுக்கு குடும்ப அட்டை போன்ற நல்ல திட்டங்களை அறிவித்தாலும் தமிழ் நாட்டு பெண்களை தனியார் நுண்கடன் அரக்கர்களிடமிருந்து மீட்க அரசுக்கு திட்டம் வேண்டாமா? தனியார் நுண்கடன் நிறுவனங்களை தடை செய்ய வேண்டும். தமிழ்நாடு மகளிர் திட்டத்தின் வாயிலாக, சுய உதவிக் குழுக்கள் மூலம் நுண்கடன் பெறும் திட்டங்களை அதிகரிக்க வேண்டும். தேசிய வங்கிகள், விவசாய கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வட்டியில்லா கடன் தருவதற்கு ஒன்றிய அரசுக்கு அரசியல் அழுத்தம் தர வேண்டும். கிராமப்புர பொருளாதாரத்தில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் சுயசார்பு அளிக்கும் திட்டங்கள் வேண்டும். அப்போதுதான் பெண் மய்ய திட்டங்கள் உண்மையான பலனளிக்கும். பெண்கள் சுயசார்பு, சுயமரியாதை, கவுரவம் பெற வழியாகவும் இருக்கும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் வரும் நாட்களில் தொடர் இயக்கங்களை நடத்த முடிவு செய்துள்ளது.
-செய்திகள் உதவி: ரேவதி, மாதவி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)