வேதாந்தா நிறுவனத்திற்குக் கொடுக்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமித்த தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. பாஜகவின் அண்ணாமலை, சுரங்கத் திட்டம் கைவிடப்படும் என்று ஒன்றிய அரசு சொல்வது போன்ற செய்திகளை பரப்பி வருகிறார். இப்படியாக, அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க விவகாரம் முடிவுக்கு வந்துவிட்டது போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால், அரிட்டாபட்டி மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் என்று உறுதியாக உள்ளனர்.
டங்ஸ்டன் சுரங்கத்தைக் கொண்டுவருவதுதான் இந்திய அரசு, முதலாளிகளின் உறுதியான முடிவு:
மாலிப்டினம், டங்ஸ்டன் மூலகங்களை எடுப்பதற்கு ஸ்டாலின் அரசின் இயற்கை வள ஆதாரத்துறை எடுத்த நிர்வாக முயற்சிகளும், ஒன்றிய மோடி அரசின் நடவடிக்கைகளும் ஆச்சரியத்துக்கு உரியதல்ல. ஏனென்றால், மின்னாற்றல் உற்பத்தி, சாதனங்களை உருவாக்குவது- இதுதான் இந்தியா முதலாளிகளின் இலக்கு. அதற்கு உதவியாக இருப்பது இந்திய அரசின் எதிர்காலத் திட்டம்.
பருவநிலை மாற்றம் கதவைத் தட்டுவதும், அதனால் ஏற்படும் புயல், வெள்ளம், உயிரிழப்பு உள்ளிட்ட பிரச்சனைகளும் மக்களின் விழிப்புணர்வை வலுப்படுத்தி வருகின்றன. கார்பன் சார்ந்த (பெட்ரோல் போன்ற நிலத்தடி) எரிபொருட்களைக் கைவிட்டு, கார்பன் உமிழ்வைக் குறைக்கும் தொழில் நுட்பங்களை நோக்கி உலகம் முன்னேறி வருகிறது. தற்போது நாம் காணும் மின்சார வாகனம் ஓர் உதாரணம். எந்த வகையிலும் கார்பன் உமிழ்வை மின்சார வாகனம் குறைக்காது என்றாலும், மக்களின் விழிப்புணர்வைக் காசாக்கிக் கொள்ளவும், அரசு தரும் மான்யங்களின் வழி வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்ளவும் வாகன உற்பத்தியாளர்களுக்கு வாய்ப்பிருக்கிறது.
எதிர்காலத்தில், பெட்ரோல்- நிலக்கரி அல்லாத ஆற்றல் (ஹைட்ரஜன், சூரிய சக்தி, காற்று சக்தி, அலை சக்தி) மூலங்களுக்கும், அவற்றுக்கான சாதனங்கள், மின் கலங்களுக்கும் (பேட்டரிகள்) பெரிய சந்தை உருவாகும். அச்சந்தையைக் கைப்பற்ற உலக உற்பத்தியாளர்கள் முன்னேறி வருகிறார்கள். அந்த முதலாளித்துவ முயற்சிகளில் பங்கேற்க இந்திய முதலாளிகள் போடும் திட்டமே டங்ஸ்டன், மாலிப்டினம் தோண்டுவதற்கு ஒன்றிய அரசும் மாநில அரசும் எடுத்த முன்கூட்டிய நடவடிக்கைகள்.
இப்பிரச்சனை 2019க்கு முன்பு துவங்கியது. 2023 செப்டம்பரில் ஒன்றிய மோடி அரசு தனது அரசிதழில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அறிவிப்பு வெளியிடப்பட்ட 45 நாட்களுக்குள் மாநில அரசுகள் தங்கள் மாநிலத்தில் உள்ள சுரங்கம் தோண்டக் கூடிய பகுதிகள் பற்றி தகவல் அளிக்க வேண்டுமென்றது. சற்றும் தயங்காத தமிழ்நாடு மாநில அரசின் இயற்கைவள ஆதாரங்கள் துறை, அக்டோபர் 2023ல் மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் அமைக்கவும் தர்மபுரி /கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மாலிப்டினம் (Molybdenum) சுரங்கம் அமைக்கவும் வேண்டுகோள் விடுத்ததை 23 டிசம்பர் 2023 தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் சுட்டிக் காட்டி எழுதி யுள்ளது.
எதிர்காலத்துக்கான மூலகங்களைத் தோண்ட சட்டத்தையே திருத்திய ஒன்றிய மோடி அரசு!
ஒன்றிய பாஜக ஆட்சி, 2015ல் சுரங்கங்கள் & உலோகங்கள் (வளர்ச்சியும் கட்டுப்படுத்துதலும்) சட்டம் 1957யைத் திருத்தியது. அதன்பின் 2021 வரை மூன்று திருத்தங்கள் செய்யப்பட்டன. இவையெல்லாம் போதாது என்று ராணுவத்திற்கும் எதிர்கால தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் அவசியமான உலோகங்களைத் தோண்டி எடுக்க 2023ல் மறுபடியும் திருத்தம் செய்தது.
கிரிட்டிக்கல் மினரல் (முக்கியமான தாதுக்கள்) என்ற பட்டியலில் லித்தியம், கிராபைட், கோபால்ட், டைட்டானியம், டங்ஸ்டன், மாலிப்டினம் உள்ளிட்ட உலோகங்கள் வருகின்றன. ஆற்றல் உற்பத்தி முறையை மாற்றிக் கொள்வதற்கும் 2070க்குள் கரிம வாயு உமிழ்வை பூஜ்யம் என்றாக்கவும் இந்த உலோகங்கள் தேவை என்பதற்காக தொடர்ச்சியான சட்ட திருத்தங்களை பாஜக அரசு செய்தது.
மாநிலங்களின் கட்டுப்பாட்டை உடைத்து ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உலோகங்களை ஏலம் விடுவது, ஏல விதிகளைத் திருத்தி தனது விருப்பத்திற்குரிய தனியார் கம்பெனிகளுக்கு ஏலம் விடுவது போன்ற காரியங்களை பாஜக அரசு செய்துள்ளது.
இவையெல்லாம் இந்திய பெருமுதலாளித்துவத்தின் நலனை மனதில் கொண்டு ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள திருத்தங்களாகும்.
மாலிப்டினம் எதிர்கால ஆற்றல் மூலாதாரமான ஹைட்ரஜன் உற்பத்தியோடு தொடர்புடையது. டங்ஸ்டன் மின் கலங்களை உற்பத்தி செய்வதற்கான தொழில்நுட்பத்தில் மிக முன்னேறிய வடிவம்; எதிர்காலத்தின் தேவையாக உள்ளது. லித்தியம் -டங்ஸ்டன் ஆக்சைடு மின்கலங்கள் (lithium-tungsten oxide batteries) கூடுதல் மின் சேமிப்பு, நிலைத்தன்மை கொண்டவை. இவற்றின் காரணமாகவே, தமிழ்நாடு அரசின் இயற்கை வள ஆதாரத்துறை 2023லேயே மேற்கண்ட இரண்டு தாதுப்பொருள்
சுரங்கத்துக்கு ஒன்றிய அரசு அனுமதி அளிக்க வேண்டும் எனக் கோரியிருந்தது.
நவம்பர் 30, 2024 அன்று தமிழ்நாடு அரசின் இயற்கை வள ஆதாரத்துறை அமைச்சர் துரைமுருகன் ஒன்றிய அரசும், எதிர்க்கட்சிகளும் திமுகவுக்கு எதிராக "டங்ஸ்டனுக்கு ஒப்புதல் தந்துவிட்டதாக" தவறான செய்திகளைப் பரப்புவதாகச் சாடினார். அரசின் நிர்வாக அதிகாரிகள் முதலாளிகளின் நலனை காப்பதற்கு தயக்கமின்றி நடவடிக்கை எடுத்திருக்க, அரசியல் நிர்வாகியான அமைச்சர் எதிர்ப்பது உடனடி அரசியல் காரணங்களால்தான்.
பாஜக-திமுகவின் நாடக அரசியல்:
பாஜக தலைவர் அண்ணாமலை ‘மக்களைப் பாதிக்கும் எந்த விஷயத்தையும் மத்திய அரசு செய்யாது என்பதால் இப்பிரச்சனை தொடர்பாக ஒன்றிய சுரங்கம் - நிலக்கரி அமைச்சர் கிஷன் ரெட்டியைச் சந்தித்துப் பேசி… திட்டத்தை கைவிடுவது குறித்து பரிசீலனை செய்யக் கோரியுள்ளதாகவும் அமைச்சர் பரிசீலனை செய்வதாக அவர் ஒப்புக் கொண்டதாகவும்’ சொல்லியுள்ளார். மக்களை நலனைக் கருத்தில்கொண்டு நல்ல முடிவு எடுக்கப்படும்’, டங்ஸ்டன் வராது என்று நாடகம் போடுகிறார்.
அரசு என்ற முறையில் டங்ஸ்டனுக்கும் மாலிப்டினத்துக்கும் நல்வரவு சொன்னதை மூடிமறைக்கும் திமுக அமைச்சர் துரை முருகன், எதிர்கட்சிகள் சதி என்று தங்களின் முந்தைய அரசுத்துறை நடவடிக்கையை மறைக்கிறார். இறுதியாக, ‘நான் முதல்வராக இருக்கும்வரை டங்ஸ்டன் வராது’ என்று எச்சரிக்கையாக சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின். இரண்டு கட்சிகளுமே 2026 தமிழ்நாடு தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு நாடகம் ஆடுகிறார்கள்.
வேதாந்தாவின் புதிய வருகை:
வேதாந்தாவின் துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜின்க் என்ற கம்பெனி, 24 அக்டோபர் 2024ல் நடைபெற்ற டங்ஸ்டன் சுரங்கத்தை கைப்பற்றும் இரண்டாவது ஏலத்தில் கலந்துகொண்ட ஒரே நிறுவனம்! ஒரே நிறுவனம் கலந்து கொண்டால் கூட ஏலத்தை நடத்தி முடிக்கலாம் என்று ஒன்றிய அரசு செப்டம்பர் 2023ல் விதிகளைத் திருத்தியுள்ளது.
டங்ஸ்டன் விற்ற பணத்தில் 4 சதத்தை இந்திய அரசுக்கு அளிப்பதாகச் சொன்ன வேதாந்தாவின் ஜின்க் நிறுவனம், இரண்டாவது கட்ட ஏலத்தில் 6.05% அளிப்பதாகச் சொல்லி டங்ஸ்டனைத் தட்டிச் சென்றது. ஒரு கிலோ டங்ஸ்டனின் விலை 2500 அமெரிக்க டாலர்கள் ஆகும். அப்படியென்றால், வேதாந்தா அள்ளப் போகும் பணத்தின் மதிப்பை கணக்கிட்டு பாருங்கள்.
குற்றமிழைத்த முதலாளிகள் தப்பிக்கும் கதை:
ஒன்றிய, மாநில அரசுகள் முதலாளிகளைப் பாசத்துடனும் மக்களைத் தேர்தல் கண்ணோட்டத்துடனும் அணுகுகின்றன. "வளர்ச்சியை முதலாளிகள்தான் கொண்டு வருகிறார்கள்" என்று நிர்மலா சீத்தாராமன் மூடத்தனமாக கூறுவதை திமுகவும் நம்புகிறது; அமுலாக்குகிறது. தூத்துக்குடி
ஸ்டெர்லைட் ஏற்படுத்திய மாசுபாடு மக்களைப் போராடத் தூண்டியது. தமிழ்நாடு அரசின் வருவாய் துறையும் காவல்துறையும் சேர்ந்துகொண்டு போராடிய மக்களை வேட்டையாடின. அப்போதிருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி "துப்பாக்கிச் சூடு பற்றி தொலைக்காட்சி பார்த்துதான் தெரிந்துகொண்டேன்", என்றார். அதிகாரிகளே களத்தில் இறங்கி போராடிய மக்களில் 13 பேரைச் சதிகார- கொடூரத்துடன் சுட்டுக் கொன்றனர். ஆட்சியர் உள்ளிட்ட வருவாய் அதிகாரிகள் மீதும், காவல்துறை தலைவர் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் மீதும் கொலைக்கான குற்ற விசாரணையும், துறைவாரியான விசாரணையும் நடத்த வேண்டும் என்று நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் பரிந்துரைத்திருந்தது. ஆனால், அதிகாரிகள் மீது கொலைக் குற்ற விசாரணைக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிடவில்லை. வெறும் துறைவாரியான விசாரணைதான் நடந்து கொண்டிருக்கிறது. இப்படியாக, காவல்துறையைப் பயன்படுத்தி கொலை செய்தது யார் என்ற கேள்விக்கான பதில் மறைக்கப்பட்டுள்ளது.
வேதாந்தா கொட்டிய நச்சுப் பொருட்களை அகற்றுவதற்கு எந்த நடவடிக்கையும் தமிழ்நாடு அரசு எடுக்கவில்லை. மாசுபடுத்தியவரே மாசுபாட்டை அகற்றும் செலவையும் ஏற்க வேண்டும் என்ற சட்ட கோட்பாட்டை ஸ்டெர்லைட் தொடர்பான தீர்ப்பில் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது. ஆனபோதும் வேதாந்தாவின் சொத்துகளை ஏலம்விட்டு மாசுபாடு அகற்றும் சட்டப்படியான வேலையை தமிழக அரசு செய்யவில்லை. அனில் அகர்வாலைக் காப்பாற்றிய தமிழ்நாடு அரசு அனைத்து முதலாளிகளும் அவர்தம் குற்றங்களும் விசாரணைக்கு அப்பாற்பட்டவை என்று உலகத்துக்குச் சொல்கிறது. அது மூலதனத்தின் வருகைக்குத் தேவையெனக் கருதுகிறது.
பாஜக, அதிமுக, திமுக நடத்தும் நாடகங்கள்:
மதுரை அரிட்டாப்பட்டி மக்கள் டங்ஸ்டனுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில், டங்ஸ்டன் சுரங்கத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்று சிறப்புத் தீர்மானம் இயற்றிய தமிழ்நாடு அரசு மாலிப்டினத்திற்கு (Molybdenum) தர்மபுரி/ கிருஷ்ணகிரியில் எதிர்ப்பு இல்லாததால் அப்பிரச்சனை பற்றி அமைதி காக்கிறது.
ஏலத்தை எதிர்ப்பதாகச் சொல்லும் திமுகவும் அஇஅதிமுகவும் அரிய வகை மூலகங்களை முதலாளிகள் கொள்ளையடிப்பதற்காக பாஜக கொண்டுவந்த சட்டத் திருத்தங்களை எதிர்க்காதது ஏன்?
அரசு அதிகாரிகள் டங்ஸ்டன் ஏலம் கேட்டு ஒன்றிய அரசுக்கு எழுதியதை அந்த துறையின் அமைச்சரான துரைமுருகன் மறைப்பது ஏன்?
நான் முதலமைச்சராக இருக்கும்வரை டங்ஸ்டன் வராது என்று சத்தியம் செய்யும் ஸ்டாலின், வேதாந்தா முதலாளி நடத்திய படுகொலைகளுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தின் பரிந்துரையை அமலாக்காதது ஏன்?
நாடகங்களைக் கடந்துபோவது அவசியம்:
கிரனைடு சுரங்கத்துக்கு எதிராக அரிட்டாபட்டி மக்கள் நடத்திய போராட்டம் கம்பெனிகளின் சூறையாடலுக்கு எதிரான மக்களின் போராட்ட ஆற்றலை வளர்த்தெடுத்துள்ளது. மக்களின் நலனுக்கான தமிழ்நாடு நமக்கு வேண்டும். பருவநிலை மாற்றத்தை உண்மையில் எதிர்க்கும் இந்தியா நமக்கு வேண்டும். அதனைச் சாதிக்க பாஜக-திமுகவின் நாடக அரசியலை எச்சரிக்கையுடன் அணுக வேண்டும். அரிட்டாபட்டி மக்களின் தொடர் போராட்ட போர்க்குரலுக்கு ஆதரவாக தமிழகமெங்கும் குரல்கள் ஒலிக்க வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)