திமுக அரசின் தனியார்மயத் தாகம்
தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணிகளுக்கான பணிகளில் வேலை செய்யும் ஓட்டுநர்கள் ஆகியோர்கள் ஒப்பந்தப் பணியாளர்களாக தனியார் நிறுவனங்களின் கீழ் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களை அரசு ஊழியர்களாக அறிவித்து பணி நிரந்தரப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வருகின்றது. அதுபோன்று பல ஒப்பந்தப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என்று சொல்லிதான் திமுக தேர்தலின் போது வாக்குறுதியளித்து, ஆட்சியைப் பிடித்தது. ஆனால், தற்போது அளித்த வாக்குறுதிக்கு மாறாக, அரசின் கைகளில் உள்ள பல துறைகளை தனியாரிடம் ஒப்படைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவிலேயே மற்ற மாநிலங்களை ஒப்பிட்டுப் பார்க்கும் போது தமிழ்நாட்டில்தான் பொதுப் போக்குவரத்து வசதி சிறப்பாக உள்ளது என்பதை அனைவரும் அறிவர். ஆனால், போக்குவரத்துத்துறையை படிப்படியாக தனியாரிடம் ஒப்படைப்பதற்கான வேலை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. அரசு போக்குவரத்து கழகங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். வழக்கமாக தீபாவளியின்போது பொது மக்கள் வசதிக்காக அரசுப் பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்படும். இந்த முறை அரசாங்கமே தனியார் பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு எடுத்து இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டது. கல்வி ஏற்கனவே தனியாரிடமும் இருக்கும் நிலையில், அரசுப் பள்ளிகளையும்கூட தனியார் நிறுவனங்கள் தத்து எடுத்து நிர்வாகம் செய்வது, அரசு மருத்துவமனைகளை தனியார் நிறுவனங்கள் தத்து எடுத்து நிர்வாகம் செய்வது என்று ஆலோசனைகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரசு மருத்துவமனையான சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு தலைமை மனநல மருத்துவமனையை தனியார் பொறுப்பில் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட வேண்டும் என்று சுகாதாரத் துறை செயலாளர் பரிந்துரைத்துள்ளார். இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அரசு மனநல மருத்துவமனை நிர்வாகத்தில் தனியாரை அனுமதிக்கும் எண்ணம் இல்லை என்று கூறியிருக்கிறார். அப்படியொரு எண்ணம் இல்லையென்றால், சுகாதாரத் துறைச் செயலாளர் அப்படியொரு பரிந்துரையை ஏன் மேற்கொள்ள வேண்டும். நிர்வாகத்தில் கோளாறு இருக்கிறது என்றால், அதற்குப் பொறுப்பு அரசும் அரசு அதிகாரிகளும்தானே. அதை அவர்கள்தானே சரி செய்ய வேண்டும். அதற்குப் பதிலாக, நிர்வாகத்தை லாபமே நோக்கமாகக் கொண்ட தனியார் நிறுவனங்களின் கையில் கொடுப்பது என்பது எப்படிச் சரியாகும். தனியார் பள்ளிகளை, தனியார் மருத்துவமனைகளை, தனியார் பேருந்துகளை பொது மக்கள் அதிகம் பயன்படுத்துகிறார்கள், விரும்புகிறார்கள் என்பதும், 'தனியார் நிர்வாகம் என்றால் சிறப்பு, அரசு நிர்வாகம் என்றால் அலங்கோலம்' என்பதும் முதலாளித்துவ அரசுகளால் திட்டமிட்டு மக்களின் பொதுப் புத்தியில் திணித்து வைக்கப்பட்டுள்ளது. வேண்டுமென்றே அரசு நிர்வாகத்தை கோளாறாக, ஊழல் பிடித்ததாக இருக்கிறது என்று ஒரு அரசே கூறுவது அந்த அரசுக்குத்தானே அவமானம். கோளாறையும் ஊழலையும் அரசு சரி செய்வதற்குப் பதிலாக, ஆட்சியாளர்களுக்கும் நிர்வாகக் கோளாறுக்கும் ஊழலுக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல், அவை அதிகாரிகளால் நடக்கின்றன என்பதுபோல் காட்டி மக்களை திசை திருப்பி தனியார்மயக் கொள்கைகளை அமல்படுத்திடுவதற்கான முயற்சிகளை, நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். கீழ்ப்பாக்கம் மருத்துவமனையானாது மனநல மருத்துவத்திற்கு பெயர் பெற்ற அரசு மருத்துவமனையாகும். அதுவும் அரசின் தலைமை மனநல மருத்துவமனையாகும். ஒரு தலைமை மருத்துவமனையின் நிர்வாகம் சரியில்லை என்று சொல்லி அதை தனியார் நிறுவனத்தின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு செல்வது என்பது ஒட்டுமொத்த மருத்துவ சேவையையே தனியாரின் கையில் கொடுப்பதற்கான நடவடிக்கையே அன்றி வேறு என்னவாக இருக்க முடியும். மனநல மருத்துவம், சிகிச்சையானது நீண்ட காலத்திற்கு மேற்கொள்ளப்பட வேண்டியது. பல சமயங்களில் மனநலம் பாதிக்கப்பட்டோரை உள் நோயாளிகளாகச் சேர்த்து மாதக் கணக்கில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை இருக்கும். அப்படி மாதக் கணக்கில் உள் நோயாளியாக, எவ்வித கட்டணமுமின்றி, வைத்து சிகிச்சை கொடுப்பார்களா தனியார் நிர்வாகத்தினர்? இன்றைய அரசியல், சமூகப் பொருளாதார, வாழ்க்கைச் சூழலில், மென் பொருள் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் முதல் அன்றாடங்காய்ச்சிகளாக உள்ளவர்கள் வரை மன அழுத்தத்திற்கு, மன நோய்க்குப் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட நிலையில், மன நல மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட வேண்டும். ஆராய்ச்சி மற்றும் தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மருத்துவர்களை உருவாக்கும் ஒரு கல்வி நிறுவனமாக மனநல மருத்துவமனை செயல்பட வேண்டும். மக்களின் மனநலத்தை மேம்படுத்தும் திட்டங்கள் வேண்டும். இவையெல்லாம் அரசிடம் அந்த நிறுவனம், மருத்துவமனை இருந்தால் மட்டுமே சாத்தியம். மக்கள் நல அரசு என்று சொன்னால், மக்களுக்கான அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் அரசே நிறைவேற்ற வேண்டும். அதிலும் குறிப்பாக மருத்துவம், சுகாதாரம், கல்வி இம்மூன்றும் கண்டிப்பாக அரசாங்கத்தின் கைகளில்தான் இருக்க வேண்டும். அப்போது மட்டும்தான் மக்களுக்கு லாப நோக்கம் இல்லாத இலவச மருத்துவம், கல்வி அளிக்க முடியும். சுகாதாரமான வாழ்க்கைச் சூழல் கிடைக்கும். அதற்கு ஆட்சியாளர்கள் ஊழலை ஒழித்து, அரசு நிர்வாகத்தை மேம்படுத்திட வேண்டும். அப்போதுதான் அது மக்கள் அரசு ஆகும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)