நீதி கேட்டு நடைபயணம் பீகார் மாநிலம் நவடா மாவட்டம், கிருஷ்ணா நகர் கிராமத்தில் இருந்து அக்.16 அன்று தொடங்கியது. இகக (மாலெ) பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் மற்றும் அரசியல் தலைமை குழு உறுப்பினர் அமர் தலைமையில் டாக்டர் அம்பேத்கார் , ஜெயபிரகாஷ் நாராயணன், இந்திய மக்கள் முன்னணியின் மூத்த தலைவர் சுரேந்திர சிங் ஆகியோர் சிலைக்கு மரியாதை செலுத்தி நூற்றுக்கணக்கானவர்கள் நடைபயணத்தைத் தொடங்கினார்கள். இகக மாலெ சட்டமன்ற உறுப்பினர்கள் மகானத் சிங், கோபால் ரவிதாஸ், ராம்பலி சிங் யாதவ் மற்றும் மேலவை உறுப்பினர் சசியாதவ் ஆகியோருடன்  பெண்களும் இளைஞர்களும் கிராமப்புறத் தொழிலாளர்களும் கலந்து கொண்டார்கள்.

நிதிஷ் - பாஜக ஆட்சியை மக்கள் நிராகரிக்க வேண்டும், பீகாரை மாற்ற வேண்டும், அம்பேத்கர் நமக்களித்த அரசியலமைப்புச் சட்டம் சாதி, மத, மொழி அடிப்படையில்  பாரபட்சமின்றி அனைவரும் சமம் என்கிறது. அரசமைப்புச்சட்ட முகவுரை இந்திய மக்கள் ஒவ்வொருவருக்கும் சமூக, பொருளாதார நீதியை  உத்தரவாதம் செய்கிறது. வேறுபாடுகளுக்கு முடிவு கட்டி நமது அரசமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை உத்தரவாதப் படுத்தும் ஒரு பீகாரை நாம் உருவாக்க வேண்டும் என தோழர் திபங்கர் தனது துவக்கவுரையில்  குறிப்பிட்டார். அவர் மேலும், இன்று ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களால் நமது அரசமைப்புச் சட்டம் தாக்குதலுக்குள்ளாக்கப்படுகிறது. தலித் மக்கள் மீது பாரபட்சம் காட்டப்படுகிறது. பாஜகவினர் வெளிப்படையாகவே வெறுப்பு பேச்சு பேசி முஸ்லீம்களை மிரட்டுகிறார்கள். அதன் மூலம் சமூகத்தைப் பிளவு படுத்துகிறார்கள். இந்த நீதிக்கான நடைப் பயணம், மக்கள் விரோத மதவெறிப் பாசிச சக்திகளை அந்நியப்படுத்தி, பீகார் மக்களுக்கான ஒரு நியாயமான, சமத்துவ சமுதாயத்தைப் படைப்பதை நோக்கமாகக் கொண்டது என்று கூறினார்.

நடைபயணத்தில் வரும் இகக மாலெ பொதுச் செயலாளர் உள்ளிட்ட தோழர்களுக்கு பீகாரின் உழைக்கும் மக்களும் இளைஞர்களும் பெண்களும் உற்சாகமாக வரவேற்பு அளித்து வருகிறார்கள். பல கிராமங்களில் இரவு நேரத்திலும் காத்திருந்து வரவேற்பு அளித்து, பொதுக் கூட்டத்திலும் மக்கள் பெருமளவில் கலந்து கொள்கிறார்கள்.

மகத் மண்டலப்பகுதியில் நடைபயணத்தை தோழர் திபங்கர் தலைமையேற்று நடத்தி வருகிறார். சாகாபாத் பகுதிக்கு இகக மாலெ பீகார் மாநிலச்செயலாளர் குணால் தலைமை ஏற்கிறார். மிதிலா பகுதியில் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் திரேந்திர ஜா மற்றும் இகக மாலெ பீகார் சட்டமன்றக் குழு தலைவர் மகபூப் ஆலம் தலைமையில் நடைபெற்றது. சரன் மண்டலத்தில் தரோலி தொகுதி எம்எல்ஏ சத்யதேவ் ராம், அமர்நாத் யாதவ், நைமுதின் அன்சாரி தலைமை தாங்கி்னர். திற்குட் மண்டலத்தில் மத்தியக் கமிட்டி உறுப்பினரும் எம் எல் ஏவுமான வீரேந்த பிரசாத் தலைமை தாங்கினார். ஜேஎன்யூ மாணவர் சங்கத் தலைவர் தனஞ்சை மகத் பகுதியில் கலந்து கொண்டார். சிங்காத்யா (வாசிர் கஞ்ச்) வழியாகச் சென்ற நடைபயணத்தைக் கண்ட 70 வயது ரகுநாத் தாஸ் ஓடோடி வந்து இகக(மாலெ) பொதுச் செயலாளர் திபங்கரை சந்தித்தார். அவரது கைகளை பிடித்துக் கொண்டு, அவரது கிராமத்தில் அவரைப்போன்ற ஏழை தலித்துகளின் நீண்டகாலமாக இருந்து வரும் நிலப்பிரச்சனையை எடுத்துச் சொன்னார். அவரும் அவரைப் போன்றோரும் நீண்டகாலமாக வசித்து வரும் பூமிதான நிலத்தை மிராசுதார்கள் அபகரிக்க முயன்று வருவதாக கூறினார். கயா மாவட்டம் தேகரி ஒன்றியம், சிரேலி கிராமத்தில் சஞ்சய் மஞ்சி என்பவர் தன்னுடைய நிலத்தை நிலப்பிரபுத்துவ  ஆதிக்கக் கொள்கையர்களிடம் இருந்து காப்பாற்றப் போராடியதில் தன்னுடைய ஒரு கையை இழந்தார். இது நாள் வரை அவருக்கு இழப்பீடு எதுவும் கொடுக்கப்படவில்லை. கட்சியின் நடைபயணம் சிரேலி கிராமத்தைக் கடந்த போது அவரும் மக்களுடன் வந்து வரவேற்றார்.

 

 

பீகாரை மாற்றுவோம்; நீதி கேட்டு நடைபயணம்! கோரிக்கைகள்

 

1. நிதீஷ் அரசாங்கம் 94 இலட்சம்  ஏழை குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி என்ற வாக்குறுதியை கட்டாயமாக நிறைவேற்ற வேண்டும். 

2. அனைவருக்கும் 5 சென்ட் வீட்டு மனை மற்றும் ஒரு வசதியான வீடு வழங்கப்பட வேண்டும். 

3. தலித்துகள், பெண்கள் மற்றும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள்  நிறுத்தப்பட வேண்டும்.

4. பல தலைமுறைகளாக, பரம்பரையாக  நிலத்தில் வாழும் அனைத்து ஏழைக் குடும்பங்களுக்கும்  நில பட்டா உரிமைகள் உறுதி செய்யப்படும் வரை நடைபெற்று வரும் நில அளவீட்டுப் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும்.  

5. ஸ்மார்ட் மீட்டர்களை வலுக்கட்டாயமாக திணிக்கக்  கூடாது. மின்சார கட்டணத்தை ஒவ்வொரு யுனிட்டிற்கும் குறைக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் குறைந்தபட்சம் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட வேண்டும். 

6. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலட்சக்கணக்கான மக்களுக்கு உடனடி நிவாரணம், ஒரு ஏக்கருக்கு ரூ. 50,000 பயிர் இழப்பீடு, இதர இழப்புகளுக்கும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். மாநிலத்தில் தொடரும் வெள்ள அபாயத்திற்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும். 

7. பீகாரிலுள்ள 10 லட்சத்துக்கும் அதிகமான திட்டப் பணியாளர்களுக்கு மத்திய அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதிய விகிதத்தில் கௌரவமான ஊதியம் வழங்கப்பட வேண்டும். அனைத்து ஆஷா, அங்கன்வாடி, ஜீவிகா, கிராமப்புற செவிலியர்கள், ஊரக வேலை திட்டம்  பணியாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள்  அனைவரும் தொழிலாளர்களாக அங்கீகரிக்கப்பட்டு அவர்களுக்கு தொழிலாளர் சட்டங்களின்படியான அனைத்து பயன்களையும்  வழங்க வேண்டும். 

8. பீகார் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டபடி, உயர்த்தப்பட்ட  இடஒதுக்கீட்டின் அளவுகளை  உறுதி செய்ய, அரசியலமைப்புச் சட்டம் 9வது அட்டவணையில் அதை இணைக்க வேண்டும். 

9. எவ்வித தாமதமின்றி நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்.

10. பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கொடுத்த வாக்குறுதியை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்.