1) நரேந்திர மோடி அரசாங்கம் எட்டு ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி அதிகாரத்தில் இருந்து வருகிறது. மோடி அரசாங்கத்தின் முதல் ஆட்சிகாலம், என்னவெல்லாம் வரவிருக்கின்றன என்பது பற்றிய முன்கூட்டிய எச்சரிக்கையாக இருந்தது என்றால், அதன் இரண்டாவது ஆட்சிகாலம், பல முனையிலும் ஒருமுனைப்பட்ட தாக்குதல்கள் அதிவிரைவாக உயர்ந்தெழுகிற காலமாக இருந்து வருகிறது. அமித்ஷா, ஒன்றிய உள்துறை அமைச்சராகவும் அஜித் தோவல் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் இருக்கிற நிலையில், முன்னெப்பொழுதும் கண்டிராதவாறு, இந்திய அரசு ஒடுக்குமுறை அரசாகவும், பழிவாங்கும் அரசாகவும் மாறியுள்ளது.