சிதம்பரம் நடராசர்கோவில்;
தீட்சிதர்களின் ஆட்சியா?
அரசாங்கத்தின் ஆட்சியா?
விசுவ இந்து பரிசத் மதுரையில் நடத்திய அகில பாரத துறவியர் மாநாட்டில் "தமிழ்நாடு அரசாங்கம் கோவில்களை விட்டு வெளியேற வேண்டும்" என்ற தீர்மானத்திற்கு அடிபணிந்து தமிழ்நாடு இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, "தீட்சிதர்களுக்கு எதிராக அறநிலையத்துறை செயல்படாது" எனவும் "ஆதீனங்களின் பாரம்பரிய நிகழ்ச்சிகளில் இந்து சமய அறநிலையத்துறை தலையிடாது" எனவும் அறிவித்தார். தமிழ்நாடு அரசாங்கத்தின் இத்தகைய அடிபணிந்து போகும் சரணாகதி போக்கு தீட்சிதர்களின் அராஜகத்தை மேன்மேலும் அதிகரித்துள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தின் நிதி முறைகேடுகள் மீது புகார் எழுந்ததால் அதுகுறித்து விசாரிக்க, ஆய்வு செய்ய இந்து சமய அறநிலையத் துறையினர் சென்றபோது, கோயில் நிர்வாக கணக்கு விவரங்களை தீட்சிதர்கள் தர மறுத்ததோடு, ஆய்வு நடத்த அரசு அதிகாரிகளை அனுமதிக்க முடியாது என விவாதம் செய்து அறநிலையத் துறையினரை வெளியே அனுப்பினர். தீட்சிதர்கள் தமிழ்நாடு அரசுக்கு சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதி நிர்வாகத்திற்கு மேலானவர்கள் என்ற சனாதான பார்ப்பனீய மேட்டிமைத் தனத்தை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளனர்.
கடந்த 15.2.2022 அன்று சிதம்பரம் கோவிலுக்குள் நடராஜரை வழிபடச் சென்ற ஜெயசீலா என்ற தலித் பெண் தீட்சிதர்களால் சாதீய வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டார். 20 தீட்சிதர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டும் ஒருவர்கூட இதுவரை கைது செய்யப்படவில்லை. முதல் தகவல் அறிக்கையில் குற்றவாளி தீட்சிதர்களின் பெயர்கள் இல்லை. இதேபோல, 2019ல் தனது மகனுக்கு அர்ச்சனை செய்யச் சென்ற லதா என்ற 53 வயது பெண்மணியை கன்னத்தில் அறைந்த தீட்சிதர் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லை.தீட்சிதர்கள் மீது கொலை குற்றம் உட்பட பல வழக்குகள் உள்ளன. யார் மீதும் நடவடிக்கை இல்லை. போராட்டத்தால் பெற்ற சிற்றம்பல மேடையிலேறி தமிழில் பாடும் உரிமை, கொரோனா ஊரடங்கைக் காரணம் காட்டி பக்தர்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. பல்வேறு நிதி முறைகேடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 40 ஏக்கர் பரப்பளவில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சுமார் 2,700 ஏக்கர் நிலம் மற்றும் பல்லாயிரம் கோடி மதிப்புள்ள நகைகள், கட்டிடங்கள், சொத்துக்கள் உள்ளன. சுமார் 400 தீட்சித பார்ப்பனர்கள் இவை அனைத்தையும் கட்டுப்படுத்தி வைத்துக் கொண்டு, அவர்களின் சொத்தாகவே மாற்றியுள்ளனர்.
சிதம்பரம் நடராசர் கோவில் விசயத்தில், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை தமிழ்நாடு அரசு நிலை நாட்டிட பின்வரும் உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சிபிஐஎம்எல் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. தீட்சிதர்களால் அவமானப்படுத்தப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க, தீட்சிதர்கள் மீது போடப்பட்ட வழக்குகளில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். * சிதம்பரம் நடராசர் கோவிலில் நந்தனார் நுழைந்த வாசல் நீண்டகாலமாக சுவர் கட்டப்பட்டு பூட்டிக் கிடக்கிறது. அத்தீண்டாமைச் சுவர் உடனடியாக அகற்றப்பட்டு தெற்கு வாசல் திறக்கப்பட வேண்டும்.
இந்திய அரசமைப்பு சட்டம் வழங்கும் உரிமையான அனைத்து சாதி மக்களும் எவ்வித வேறுபாடோ பாரபட்சமோ இல்லாத சுதந்திரமான வழிபாடு சிதம்பரம் நடராசர் கோவிலிலும் உறுதி செய்யப்பட வேண்டும். சிதம்பரம் நடராசர் கோவிலை இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும். சிதம்பரம் நடராசர் கோவிலை தமிழ்நாடு அரசின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள்
கொண்டு வந்திட சட்டமன்றத்தில் ஒரு தனிச் சட்டம் இயற்றிட வேண்டும்.
தில்லை நடராசர் கோவிலில் இதுவரை தீட்சிதர்கள் நடத்திய அனைத்து வகை முறைகேடுகள் பற்றியும் நீதிபதி தலைமையில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். தமிழ்நாட்டில் சமூக நீதி நிலைநாட்டப்பட வேண்டும்! தீட்சிதர்கள் சாம்ராஜ்யத்திற்கு முடிவு கட்டப்பட வேண்டும்!