தலையங்கம்
ஊழல் மலிந்த மதவெறி பிடித்த சாதி ஆதிக்க கட்சிதான் பாஜக என்பது வெட்ட வெளிச்சமாகிறது
ஊழல் அற்ற ஆட்சியை மோடி தருவார் என்றுதான் 2014ல் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யப்பட்டது. ஊழலற்ற ஆட்சி, வாரிசு அல்லாத, அனைவருக்குமான ஆட்சிதான் பாஜக ஆட்சி என்று மார்தட்டிக் கொண்டிருந்தார்கள். உண்மையில் ஊழல் மலிந்து போன, வாரிசு அரசியல் அதிகம் உள்ள, கார்ப்பரேட் கொள்ளையர்களுக்கான இந்துத்துவ மதவெறி ஆட்சிதான் மோடி-அமித்ஷா ஆட்சி என்பது இன்று ஒவ்வொரு நாளும் உறுதியாகிக் கொண்டிருக்கின்றது. நாட்டு மக்களின் வேலை வாய்ப்பு, வருமானம், வாழ்வாதாரம் இவற்றைக் காட்டிலும் கோவில்களைக் காப்பதுதான் தலையாயக் கடமை என்பதுபோல் சங்கிகள் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். அதற்காக இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றார்கள். சங்பரிவாரங்களுக்காக வக்காலத்து வாங்கிட யூடியுப் சானலையும் நடத்திய கோபிநாத் என்கிற சங்கி கோயில் சொத்துக்கள் ரூ,50 லட்சத்தை ஆட்டயப் போட்டுள்ளார். இந்த நபரை யார் என்றே தெரியாது என்றார் பாஜகவின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை. கோபிநாத் கைது செய்யப்பட்டு நாடு முழுவதும் கோபிநாத் அண்ணாமலையுடனும் அமித்ஷாவுடனும் நிற்கின்ற புகைப் படங்கள் வெளியானவுடன் அண்ணாமலை, அப்படியே மாறி, கோபிநாத் கைதுக்கு கண்டனம் தெரிவிக்கிறார். அடுத்தடுத்து நாடு முழுவதும் உள்ள பாஜக தலைவர்கள் அமித்ஷா உட்பட அனைவரின் வாரிசுகள் என்னென்ன பதவிகளில் இருக்கிறார்கள், எப்படியெல்லாம் தங்கள் வருமானத்தை பெருக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது பற்றி சமூக வலைத் தளங்களில் புட்டுப்புட்டு வைத்துக் கொண்டிருக் கிறார்கள். இவற்றைப் பற்றி கேள்வி கேட்டால் அண்ணா மலைக்குக் கோபம் வருகிறது. அறிவாலயத்தில் காசு வாங்கிக் கொண்டு வந்திருக்கிறாயா? என்று பத்திரிகையாளர்களை தரக்குறைவாகப் பேசுகிறார். அதற்கு இப்போது கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். அது போதாது என்று மோடியின் எட்டு ஆண்டு கால ஆட்சியை புகழ்வதாகச் சொல்லிக் கொண்டு தன்னுடைய டுவிட்டரில், நம்பிக்கையின்மை யிலிருந்து நம்பிக்கை நோக்கி, இருளில் இருந்து வெளிச்சத்தை நோக்கி, பறையாவிலிருந்து விஸ்வகுருவாக... என்று பதிவிட்டு பட்டியலின மக்களை இழிவுபடுத்தியுள்ளார். அதற்கு எதிர்ப்பு வலுத்தபோதும்கூட தான் ஆங்கிலத்தில் பதிவிட்ட 'பறையா' என்பதற்கு மக்மில்லன் சொல் அகராதிப்படி, ஒரு நபராலோ, அமைப்பாலோ, நாட்டாலோ வெறுக்கப்படுபவர் என்பதுதான் என்று மீண்டும் தன் எண்ணத்தை உறுதிப்படுத்தியுள்ளார். மோடியின் எட்டு ஆண்டு கால ஆட்சியில், அவரது நண்பர் அதானியின் வருமானம் நாள் ஒன்றுக்கு ரூ.1002 கோடியாகவும் அம்பானியின் வருவாய் நாள் ஒன்றுக்கு ரூ.300 கோடியாகவும் உயர்ந்திருப்பதுதான் பெரும் சாதனை. ஆண்டாண்டு காலமாக குடியிருந்து வரும் இஸ்லாமிய மக்கள் வீடுகளை எல்லாம் ஆட்சியின் அதிகாரத்தைப் பயன்படுத்தி புல்டோசர் கொண்டு இடித்துத் தள்ளி அந்த மக்களை நிராதரவாக நடுவீதியில் நிற்கச் செய்து கொண்டிருப்பது மற்றொரு சாதனை. ஒரு லிட்டர் 60 ரூபாய் இருந்த பெட்ரோல் விலையை 110 ரூபாய்க்கு உயர்த்திவிட்டு 10 ரூபாய் குறைத்து தனக்குத்தானே பாராட்டு விழா எடுப்பதுதான் பாஜகவின் பம்மாத்துச் சாதனை. நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து இது வரை இல்லாத அளவிற்கு வேலையின்மையை உருவாக்கி கோடிக்கணக்கான இளைஞர்களை வீதியில் நிப்பாட்டி வேடிக்கை பார்ப்பதுதான் மோடியின் 8 ஆண்டு காலச் சாதனையாகும். இதையெல்லாம் தட்டிக் கேட்கக் கூடாது என்பதற்காக, மசூதிகளுக்கு மேலே ஒலி பெருக்கி வைக்காதே என்று மசூதிகளுக்குக் கீழே சிவலிங்கம் உள்ளது என்றும் முக்காடிட்டு கல்விச் சாலை வராதே புதுசு புதுசாய் கிளப்பிவிடுவதுதான் சங்கிகளின் சாதனை. இவற்றை
அம்பலப்படுத்தி ஆட்சியில் இருந்து அகற்றுவதே இடதுசாரி,
முற்போக்கு அமைப்புகளின் முதல் வேலை.