ஜூலை 10-11, 2022 இரண்டு நாட்கள் கோவை மாநகரில் சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவரங்கில் ஏஐசிசிடியூ வின் தேசிய கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் நடைபெற்ற அரங்கமும் வீதியும் கொடிகள், தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வீதியின் நுழைவாயிலில் சின்னியம்பாளையம் தியாகிகள் படங்கள் கொண்ட பதாகை வைக்கப்பட்டிருந்தது. அரங்க வாயிலில் அலங்கார வளைவுகள் மற்றும் அரங்கத்தில் ஏஐசிசிடியு முன்னோடி முன்னோடி தலைவர்களான தோழர்கள் டி.பி. பக்க்ஷி, ஸ்வப்பன் முகர்ஜி, ஸ்ரீலதா சாமிநாதன், ராம்கிஷன், ஜாபர் ஆகியோரின் படங்கள் அடங்கிய பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.முதல் நாள் நிகழ்வு 'நிகர்' கலைக்குழுவின் தப்பாட்டத்துடன் துவங்கியது. கூட்டத்தின் தலைமைக் குழுவாக தோழர்கள் சங்கர், சுவேந்து சென், ஆர். என். தாகூர், அடுல் டிகே, சசி யாதவ், மகேந்திர பரிதா, சங்கரபாண்டியன், இரணியப் பன், மோதிலால், நிர்மலா, ஜெயஸ்ரீ, சத்தார், பார்த்தா பானர்ஜி ஆகியோர் இருந்தனர். தியாகிகளுக்கான அஞ்சலி தீர்மானத்தை பொதுச் செயலாளர் தோழர் ராஜீவ் டிம்ரி முன் வைத்தார். தேசியக் குழு உறுப்பினர்கள் எழுந்து நின்று இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்திய பின் கூட்டம் துவங்கியது. "இன்றைய தேசிய சூழலும் நமது கடமையும்", "அமைப்பு சந்திக்கும் சவால்களும் நமது கடமையும்" ஆகிய தலைப் பிலான இரண்டு தாள்கள் தேசிய கவுன்சில் உறுப்பினர்களின் விவாதித்திற்காக பொதுச் செயலாளரால் முன்வைக்கப்பட்டது.பல்வேறு மாநிலங்கள், துறைகளைச் சேர்ந்த தேசிய கவுன்சில் உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். கட்டுமானம், ரயில்வே, ஆஷா, அங்கன்வாடி,மதிய உணவு, தூய்மைப்பணி ஆகியவற்றிற்காக உருவாக்கப் பட்ட அகில இந்திய கூட்டமைப்புகளின் செயல்பாடு பற்றியும் அதைப் பலப்படுத்துவது பற்றியும் கூட்டம் விவாதித்தது. பீடி, தேயிலை, போக்குவரத்து, சுகாதாரம் ஆகிய துறைகளில் அகில இந்திய கூட்டமைப்புகளை உருவாக்குவ தற்கான திட்டங்கள் விவாதிக்கப்பட்டன.
அகில இந்திய அளவில் மைய தொழிற்சங்க கூட்டுக்குழு அழைப்பு விடுத்து நடைபெற்ற இரண்டு அகில இந்திய வேலை நிறுத்தங்கள் பற்றியும் அதில் ஏஐசிசிடியூவின் பங்கு பாத்திரம் பற்றியும் தேசிய கவுன்சில் கவனத்தில் எடுத்துக் கொண்டது. மாநில அமைப்புகளின் முறையான செயல்பாடு உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மேலும் அமைப்பை வலுப்படுத்திடவும் தாக்கும் திறனை அதிகரிக்கவும் செயல்படக்கூடிய மாவட்ட அமைப்புகளின் தேவையை கவுன்சில் முன் வைத்தது. மைய தொழிற்சங்கங்களின் கூட்டு கமிட்டியில் அங்கம் வகிக்கிற அதே வேளை, ஏஐசிசிடியூவின் தனித்துவ செயல்பாடு, அணிதிரட்டல், சுதந்திர பிரச்சார இயக்கங்கள் ஆகியவற்றின் தேவையை கவுன்சில் கூட்டம் வலியுறுத்தியது. 5 லட்சம் பேரை புதிய உறுப்பினர்களாக சேர்க்க இலக்கு நிர்ணயித்து, அதற்கான துறைகள்,வாய்ப்புகள் பற்றி கூட்டம் முடிவு செய்தது.ரயில்வே, இரும்பு எஃகு, சுரங்கம், சுகாதாரம் ஆகிய துறையில் உள்ள ஒப்பந்த தொழிலாளர்களை அணிதிரட்டிட சிறப்பு கவனம் செலுத்திடவும் முடிவு செய்யப்பட்டது. பாஜக ஆளும் கர்நாடகாவில் தூய்மைப் பணியாளர்களை அணிதிரட்டி 4 நாட்கள் நடைபெற்ற வேலை நிறுத்தம் என்ற பின்னணியில் 'மூன்று மாத காலத்திற்குள் தூய்மை பணியாளர்கள் பணி வரன்முறை செய்யப்படுவார்கள் என்றும் பணி வரன்முறை செய்வது சம்பந்தமாக அரசாங்கத்துக்கு பரிந்துரைக்க ஒரு கமிட்டி உருவாக்கப்பட்டு இருப்பதும் பற்றிய எழுத்துப்பூர்வ உத்தரவாதம் அரசாங்கத்தால் அளிக்கப்பட்டு இருப்பது' தேசிய கவுன்சில் கூட்டத்திற்கு புத்துணர்ச்சியை வழங்கியது. மாநில முழுவதும் நடைபெற்ற தூய்மை பணியாளர்களின் போராட்டத்தில் ஏஐசிசிடியூவின் பாத்திரம் குறிப்பிடத்தக்கதாக அமைந்திருந்தது. 2017 போராட்டத்தின் போதே ஒப்பந்தக்காரர் என்ற முறை நீக்கப்பட்டு தூய்மை பணியாளர்கள் நிர்வாகத்திடம் இருந்து நேரடி ஊதியம் பெற்று வருகிறார்கள்.புதுச்சேரி யூனியன் பிரதேசம் சேத்திராப்பட்டு தொழிற்பேட்டையில் எல் & டி தொழிலாளர்கள் 100 நாட்களைத் தாண்டி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் கடினமான காலத்தில் ஏஐசிசிடியூ தலைமையில் நடைபெற்று வரும் இந்த முக்கிய போராட்டத்தில் ஜூலை 8 அன்று கவர்னர் மாளிகை நோக்கி நடைபெற்ற தொழிலாளர் பேரணியில் அகில இந்திய தலைவர்கள் தோழர் சங்கர், தோழர் ராஜீவ் டிம்ரி, தோழர் எஸ் கே சர்மா தோழர் சுவேந்து சென், தோழர் சசி யாதவ், தோழர் மகேந்திர பரிதா, தோழர் அபிஷேக், தோழர் ஞானதேசிகன், தோழர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டது போராட்ட களத்தில் இருக்கும் தோழர்களுக்கு உத்வேகம் அளித்தது.
டெல்லி மாநில அரசாங்கத்தின் பல்வேறு மருத்துவமனைகளில் கோவிட் உச்சத்தில் இருந்தபோது முன்களப் பணியாளர்களாக பணியாற்றிய மருத்துவமனை ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் இன்று மருத்துவமனை களால் வேலையை விட்டு வீதியில் தூக்கி வீசப்பட்டுள்ளனர்.அவர்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி ஏஐசிசிடியூ தலைமையில் நடந்து வரும் பல கட்ட போராட்டங்களை தேசிய
கவுன்சில் வரவேற்றுப் பாராட்டியது. செப்டம்பர் 28 பகத்சிங் பிறந்தநாள் அன்று மாநில தலைநகரங்களில் தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்புகள், தனியார்மயக்கம், தேசிய பணமாக்கல் திட்டம், ஒன்றிய மோடி அரசின் அடக்குமுறை சட்டங்கள் ஆகியவற்றுக்கு எதிராக பேரணிகள் நடத்தவும் அதே நாளில் டெல்லி நாடாளுமன்றம் நோக்கிய பேரணி ஒன்றை நடத்தவும் தேசிய கவுன்சில் முடிவு செய்தது.
2023ம் ஆண்டில் இந்தியா முழுவதும் 100 மாவட்டங்களில் ஏஐசிசிடியூ மாவட்ட மாநாடுகள் நடத்தி மாவட்ட அமைப்புகளை உறுதி செய்ய முடிவு செய்தது. 2023ல் திட்ட தொழிலாளர்களின் அகில இந்திய அளவிலான போராட்ட நிகழ்ச்சி ஒன்றும் டெல்லியில் நடத்தப்படும்.
அதே ஆண்டில் கட்டுமான தொழிலாளர் கள், திட்ட தொழிலாளர்களுக்கான அகில இந்திய பயிற்சி பட்டரைஒன்றும் நடத்திட தேசிய கவுன்சில் முடிவு செய்தது.
நவம்பர் 2022 இல் அகில இந்திய ரயில்வே தொழிலாளர் கூட்டமைப்பின் மாநாட்டை நடத்திடவும் தேசிய கவுன்சில் முடிவு செய்தது.
தேசிய கவுன்சில் கூட்டத்தில் போக்குவரத்து துறைக்கான அகில இந்திய ஒருங்கிணைப்பு குழு ஒன்றும் உருவாக்கப்பட்டது. தமிழகத்திலிருந்து அக்குழுவில் தோழர்கள் சூசை ராயப்பன், முருகன், மற்றும் முருகேசன் அங்கம் வகிக்கிறார்கள்.
விரைவிலேயே தொழிலாளர் சட்ட தொகுப்புகள் சம்பந்தமாக ஏஐசிசிடியூ ஒரு சிறு புத்தக வெளியீடு கொண்டு வரும். அது போல் கட்டுமான தொழிலாளர்கள், திட்ட தொழிலாளர்கள் பற்றிய ஒரு வெளியீடும் கொண்டு வரப்படும்.
கார்ப்பரேட் ஆதரவு தொழிலாளர் சட்ட தொகுப்புகளுக்கு காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ், இடது முன்னணி ஆகிய எதிர்க்கட்சி அரசாங்கங்கள் விதிகளை உருவாக்குவதில் "கார்ப்பரேட் கருத்தொற்று"மைக்கு வந்துள்ளன. இந்தப் பின்னணியில் எதிர்கொண்டு அம்பலப் படுத்தி இயக்கம், போராட்டம் நடத்த வேண்டிய பொறுப்பு ஏஐசிசிடியூ தொழிற்சங்கத்துக்கு உள்ளது என்றும், அதை திறம்படச் செய்ய தேசியக் குழு உறுதி பூண்டது.
ஜூலை 11, இரண்டாம் நாள் நிகழ்வு துவங்கும் முன் சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவிடத்திற்கு தேசிய கவுன்சில் உறுப்பினர் கள் சென்று, தலைவர் தோழர் சங்கர், பொதுச் செயலாளர் தோழர் ராஜிவ் டிம்ரி, ஏஐசிசிடியூ மாநில தலைவர் தோழர் சங்கரபாண்டியன், சிறப்பு தலைவர் தோழர் இரணியப்பன், பொதுச் செயலாளர் தோழர் ஞானதேசிகன் இகக(மாலெ) மத்திய கமிட்டி உறுப்பினர்கள் தோழர் என்.கே. நடராஜன், தோழர் ஆசைத்தம்பி, தோழர் பாலசுப்பிரமணியன், கோவை பாலசுப்பிரமணியன் ஆகியோர் மலர் வளையம் வைத்து, மலர் தூவி தியாகிகளுக்கு வீரவணக்கம் முழக்கமிட்டு அஞ்சலி செலுத்தினர்.
ஒன்றிய மோடி அரசின் தொழிலாளர் விரோத சட்ட தொகுப்புகள், தேசிய பணமாக்கல் திட்டம், நிதித்துறை சீர்திருத்தங்கள், ராணுவத்தில் அக்னிபாத் திட்டம், பொதுத்துறை தனியார் மயம், ஆள் தூக்கி கருப்பு சட்டங்கள் ஆகியவற்றுக்கு எதிராகவும் கௌரவமான வேலை, ஊதியம், பணிப் பாதுகாப்பு,சமூகப் பாதுகாப்பு, விவசாய விலைப் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, தூய்மை பணியாளர்களின் சமூக கௌரவம்,அரசியல் கைதிகளை விடுதலை செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் தேசிய கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றியது.
பாசிசத்தை வீழ்த்துவோம்! போராட்டங்களை தீவிரப்படுத்துவோம் !இன்குலாப் ஜிந்தாபாத்! என்ற முழக்கங்களுடன் கூட்டம் நிறைவு பெற்றது.
கூட்டத்தை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த ஏஐசிசிடியூ மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான தொண்டர்கள் மேடையில் கௌரவிக்கப்பட்டனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)