நீதிக்கான தேடல் :கிளிப்டன் டி ரொசாரியோ

கர்நாடகா மாநிலம், கொப்பல் மாவட்டம், மரக்கும்பி கிராமத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு தலித் மக்கள் மீது சாதி ஆதிக்க வெறியர்களால் நடத்தப்பட்ட தாக்குதல் வழக்கில் மாவட்ட அமர்வு நீதிமன்றம் கடந்த 21.10.2024 அன்று 101 பேருக்கு தண்டனை வழங்கி உத்தரவிட்டது. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 98 பேருக்கு ஆயுள் தண்டனையும் 3 பேருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும் வழங்கியுள்ளது. 28.8.2014 அன்று கங்காவதி நகர திரையரங்கத்தில் வைத்து தலித் இளைஞர்களுக்கும் ஆதிக்க சாதி இளைஞர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதற்காக தலித் சமூகத்தினர் வசிக்கும் மரக்கும்பி கிராமத்திற்கு வந்த ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள், தலித் பெண்கள் உள்ளிட்ட 36 பேரை கொடூரமாகத் தாக்கி, சாதியைச் சொல்லி திட்டி, அவர்களுடைய வீடுகளை அடித்து நொறுக்கி தீ வைத்துக் கொளுத்தினார்கள்.கல்யாண கர்நாடகா என்று அழைக்கப்படும் கர்நாடகாவின் வட பகுதியில் கொப்பல் மாவட்டம்உள்ளது. இந்த பின் தங்கிய மாவட்டத்துடன் மற்ற பின் தங்கிய மாவட்டமான பீதர், யாத்கிர், ரெய்சூர். கலபுர்கி, பல்லாரி, விஜயநகரம் போன்ற மாவட்டங்களும் உள்ளன. இப் பகுதிகள் மனித வளர்ச்சிக் குறியீடுகளில், சமூக பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய, உரிமைகள் மறுக்கப்பட்ட பகுதிகள் என நஞ்சுண்டப்பா கமிட்டியால் அறிவிப்பு செய்யப்பட்டவையாகும். 2021ஆம்ஆண்டு அரசமைப்புச் சட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 371 ஜே சரத்துப்படி சிறப்பு அந்தஸ்து பெறும் பகுதிகளாகும். அதன் மூலம் இந்த கல்யாண கர்நாடகா பகுதியில் வேலைவாய்ப்பில், கல்வியில், இடஒதுக்கீட்டில் சிறப்பு கவனம் குவிக்கப்பட்டது என்றாலும் கூட அப்பகுதியில் வசிக்கும் தலித் மக்களின் நிலைமை சமூக, பொருளாதார ரீதியில் மிக மிக மோசமாக இருக்கின்றது.

சாதிய ஒடுக்குமுறைக்கு, சாதி ரீதியான பிளவுகளுக்கு மிகவும் பெயர் பெற்றது இந்த கொப்பல் மாவட்டம். தலித் மக்கள் கிராமங்களில் மையப் பகுதியை விட்டு ஒதுக்குப்புறமான இடத்தில் வாழ்கிறார்கள். அவர்கள் வாழும் பகுதி 'கேரி' என அழைக்கப்படுகிறது. அந்தப் பகுதியைத் தாண்டி அவர்கள் ஊருக்குள் வரக்கூடாது. தலித் மக்கள் உணவகங்களுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. கூட அவர்களுக்கென தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. தலித் மக்கள் தண்ணீர் குடிக்க இரட்டைக் குவளை, காப்பி, டீ குடிக்க பிளாஸ்டிக் டம்ளர், கோவில்களில் நுழைவதற்குத் தடை, வெளியே நின்றுதான் சாமி கும்பிட வேண்டும், அதுவும் ஆதிக்க சாதியினர் அனுமதித்தால் மட்டுமே. ஆதிக்க சாதியினர் வீட்டிற்குள் தலித் மக்களுக்கு அனுமதி கிடையாது. சில ஆதிக்க சாதியினரை தலித்கள் தொடக் கூடாது. இதுதான் அன்றாட நடைமுறை. இந்த ஆதிக்க சாதி ஒழுங்குக்கு எதிராகச் செயல்பட்டால் தண்டிக்கப்படுவார்கள். சமூக விலக்கம் செய்யப்படுவார்கள். மரக்கும்பியும் இந்த சாதிய சட்டத்திற்கு விதிவிலக்கல்ல.

இடதுசாரி மற்றும் தலித் அமைப்புகளால் அரசியல் உணர்வு, கல்வி கிடைக்கப்பட்ட இளைஞர்கள் இந்த ஆதிக்க சாதி ஒழுங்குமுறையை கேள்வி கேட்க

ஆரம்பித்தார்கள். அதற்கு ஆதிக்க சாதியினர் பதில் சொல்ல முடியாமல், தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கினர். அப்படித்தான் மிகக் கொடூரமான தாக்குதலை மரக்கும்பில் ஆதிக்க சாதியினர் 2014 ஆகஸ்டு 28 அன்று நடத்தினார்கள். அந்த கொடூரத் தாக்குதலுக்கு எதிராக, அச்சுறுத்தல்கள், அச்சம் எல்லாம் இருந்தபோதும், அந்த கிராமத்தின் தலித் மக்கள் ஒட்டுமொத்தமாக ஒற்றுமையுடன் நின்று வழக்கு பதிய வைத்து நீதிமன்றத்திலும் வழக்கை நடத்தினார்கள்.

இந்தத் தீர்ப்பில் மற்றொரு சுவாரஸ்யமும் உண்டு. தீர்ப்பை வழங்கிய அமர்வு நீதிமன்ற நீதிபதி திரு.சி.சந்திரசேகர், நிறவெறி பாகுபாட்டிற்கு எதிராக குரல் கொடுக்கும் புகழ்பெற்ற ஆப்பிரிக்க, அமெரிக்க ஒபராபாடகர் மரியன் ஆண்டர்சனை மேற்கோள் காட்டி தனது தீர்ப்பைத் தொடங்கியிருந்தார். 1939ல், வாஷிங்டன் அரசமைப்புச் சட்ட அரங்கத்தில், அவருடைய நிறத்தைக் காரணமாகக்காட்டி, மரியன் ஆண்டர்சன் பாடல் நிகழ்ச்சி நடத்துவதற்கு அனுமதிக்கப்படாததைத் தொடர்ந்து லிங்கன் நினைவகத்தில் நடத்திய அவர் நடத்திய தைரியமான, கிளர்ச்சி யூட்டும் நிகழ்ச்சிக்காக அவர் எப்போதும் நினைவுகூரப்படுவார். 1957ஆம் ஆண்டு அவர் இந்தியா வந்திருந்தபோது, புது டெல்லி அகில இந்திய வானொலியில் தாரா அலி பெய்க்கிற்கு அவர் பேட்டி அளித்தபோது சொன்னவற்றைத்தான் நீதிபதி சந்திரசேகர் அவர்கள் தனது தீர்ப்பில் சுட்டிக் காட்டியிருந்தார். அந்த பேட்டியின் போது தாரா அலி பெய்க், மரியன் ஆண்டர்சனிடம் 1939ல் அவர் லிங்கன் நினைவகத்தில் நடத்திய நிகழ்ச்சி பற்றி குறிப்பிட்டு கேள்வி கேட்டார். அந்த கேள்வி இனப்பாகுபாட்டினைச் சுற்றியே இருந்தது. அதற்கு பதில் அளித்த மரியன் ஆண்டர்சன், "ஒரு நாடு எவ்வளவு பெரிதாக இருந்தாலும், அது அதனுடைய பலவீனமான மக்களைக் காட்டிலும் பலமானதல்ல என்பதே உண்மை. ஒருவரை நீங்கள் கீழ் நிலையில் வைத்திருக்கும் வரை, அவர்களை கீழே வைத்திருப்பதற்காக, சிலவற்றில் நீங்களும் கீழ் நிலையிலேதான் இருக்க வேண்டியதிருக்கும். அது வரை நீங்களும் உயர முடியாது" என்று கூறினார்.

அதைதன்னுடைய தீர்ப்பில் நீதிபதி அவர்கள் தற்செயலாகச் சுட்டிக் காட்டியிருந்தாலும், 38 பேருடைய சாட்சியத்தையும் பல்வேறு சான்றாவணங்களையும் நன்றாக ஆழமாக ஆராய்ந்து பார்த்து பாராட்டியுள்ளார்.

நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட சாட்சிகள், ஆதிக்க சாதி குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கான நம்பத்தகுந்த சாட்சியங்கள் என மிகச் சரியாகவே முடிவு செய்துள்ளார். சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் சம்பவத்தில் காயம்பட்டிருந்தார்கள். இது மருத்துவச் சான்றாவணங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 36 தலித்துகளின் காயச் சான்றுகள் அவர்களுக்கு ஏற்பட்ட காயங்கள் சாதி வெறிக் கும்பல் தாக்கியதில் ஏற்பட்டதுதான் என்பதை மிகத் தெளிவாகவே காட்டுகின்றன.

மேற்படி வழக்கை தொடர்ந்து நடத்தாமல் இருக்க குற்றவாளிகள், தலித் மக்களை மிரட்டுவது, அச்சுறுத்துவது, ஆசை வார்த்தைகள் கூறுவது என பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டார்கள் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. குறிப்பாக, குற்றப்பத்திரிகையில் உள்ள சாட்சிகளைக் குறி வைத்தார்கள். முக்கிய சாட்சியான வீரேஷ் மரக்கும்பி என்பவர் 2015 ஜூலை 10 அன்று படுகொலை செய்யப்பட்டார். அதற்குப் பின்னரும் கூட தலித் மக்கள் எந்தவொரு தூண்டிலுக்கும் அச்சுறுத்தலுக்கும் அடிபணியாமல் சாட்சியமளித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்துள்ளார்கள். கங்காதரய்யா சாமியும்அவரது மனைவி மகந்தம்மாவும் மற்றொரு சாட்சியான தேவராஜ் ஆகிய மூவர் மட்டுமே பிறழ் சாட்சிகளாக மாறினர். அக் கிராமத்தின் ஒடுக்கப்பட்ட மக்களால் நன்கு அறிப்பட்ட கங்காதரய்யா சாமியும்அவரது மனைவி மகந்தம்மாவும் நடந்த வன்முறைச் சம்பவத்தில் தாக்கப்பட்டார்கள் என்பதுதான் விந்தை முரண் ஆகும். இருப்பினும், அவர்கள் ஏதோ காரணத்தால், தூண்டுதலால், அச்சுறுத்தலால் பிறழ் சாட்சியாக மாறிவிட்டார்கள் என்றாலும் அவர்கள் சம்பவத்தில் தாக்கப்பட்டு கங்காவதி மருத்துவமனையில் சிகிச்கை எடுத்ததற்கான ஆதாரங்கள் உள்ளன என்பதே போதுமானது என்று நீதிமன்றம் அதையும் கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளது. சம்பவத்தில் காயம் படாத போதும் சம்பவத்தைப் பார்த்த மற்ற தலித்துகள் வலிமையாகவும் உறுதியாகவும் சாட்சியமளித்துள்ளார்கள். கர்நாடகாவில் மற்ற பிற வழக்குகளில் தண்டனையானது 50 சதவீதம் இருக்கும்போது தலித் மக்கள் தாக்கப்படும் வழக்குகளில் வெறும் 7 சதவீதம் மட்டுமே உள்ள நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை வெறுமனே கடந்து போய்விட முடியாது.

தலித் மக்கள் மீதான ஒடுக்குமுறை

வன்முறையானது கொப்பல் மாவட்டத்தில் மட்டுமின்றி. மாநில முழுவதுமே அன்றாட நிகழ்வாக உள்ளது. தேசிய குற்ற ஆவணப் பதிவுகள் படி 2020 ஆண்டு வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கர்நாடகாவில் பதிவான வழக்குகள் 1398 ஆகும். அது 2021ல் 1673, 2022ல் 1977 என அதிகரித்துள்ளன. இவை பதிவான வழக்குகள் மட்டும்தான். அன்றாடம் நடைபெறும் தீண்டாமைக் குற்றங்கள், சாதியப் பாகுபாடு, சாதியாதிக்க வன்முறை குற்றங்கள் பலவும் கண்டு கொள்ளப்படாமலும் வழக்கு பதியப்படாமலும் பதிவுகளே இல்லாமலும் போய் விடுகின்றன.

மாவட்ட அமர்வு நீதிபதி அவர்கள், இந்த தண்டனைக்கான உத்தரவை வழங்கிய போது குறிப்பிட்டுள்ளது என்றைக்கும் நினைவுகூரத் தக்கதாகும்.- "நீதிமுறையில் உள்ள சாதியப் பாகுபாடு மற்றும் சட்டத்தை அமல்படுத்துவதில் உள்ள குறைபாடு பெருமளவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது' சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு சமத்துவம், சமூகநீதி. சகோதரத்துவம், சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்றும் தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும் என்றும் அரசியலமைப்புச் சட்டம் உறுதியளிக்கிறது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால், நடைமுறையில் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் உறுதியற்ற நிலைப்பாட்டால், சில சமயங்களில் (நீதித்துறையின் மீது

நம்பிக்கை இழக்கச் செய்யும் வகையில்) நீதிமன்றங்களின் கண்ணை மறைக்கும் அதீத சாதிய பாகுபாட்டால், பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம் 1989 பல் பிடுங்கப்பட்ட நிலையில்தான் உள்ளது.

இப்படிப்பட்ட சூழலில், இந்தத் தீர்ப்பானது உண்மையிலேயே, சாதியாதிக்க சக்திகளுக்கு ஒரு எச்சரிக்கையாகும். அரசுக்கும் சாதிய ஆதரவாளர்களுக்கும் தீண்டாமையையும் சாதியத்தைக் கொண்டாடுபவர்களுக்கும்கூட எச்சரிக்கையாகும். சாதி ஒழிப்புதான் சமூகத்தை ஜனநாயகப்படுத்துவதில், சமத்துவத்திற்கான போராட்டத்தில் மிக முக்கியமானதும் தீவிரமானதும் ஆகும். சாதி ஒழிப்புக்கான எந்தவொரு நிகழ்வும் சாதிய கருத்தியல் மற்றும் பொருளாதார அடித்தளங்களுக்கு எதிரான, மனுதர்மம் மற்றும் அதன் அடிப்படைக்கு எதிரான இடைவிடாத போராட்டத்தை முன்னெடுக்கும். உண்மையில் எந்தவொரு போராட்டத்தின் பகுதியாக சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டமும் இருக்க வேண்டும். மரக்கும்பி தலித் மக்களின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த போராட்டமானது தலித் மக்கள், இடதுசாரிமற்றும் முற்போக்கு சக்திகள் ஒன்றுபட்டு அதைச் சாதிக்க முடியும் என்பதை செயல்படுத்திக் காட்டியிருக்கிறது.

தமிழாக்கம் – சங்கரந்தம்பி