பஞ்சமி நிலம் மீட்பு இயக்கம் குறித்து நாகர் சேனையின் அருங்குணம் விநாயகம் அவர்கள் தீப்பொறி இதழுக்கு வழங்கிய நேர்காணல்
1. பஞ்சமி நிலம் மீட்பு இயக்கத்தில் உங்களது அனுபவம் பற்றி கூறுங்கள்
நான் 1974லிருந்து இயக்கச் செயல்பாடுகளில் இருந்து கொண்டிருக்கிறேன். 2008லிருந்து இந்த பஞ்சமி நிலம் மீட்பு இயக்கத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து கொண்டிருக்கிறேன். தமிழ்நாடு முழுவதும் 15,000 கிராமங்களில் கிட்டத்தட்ட 19 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்கள் உள்ளன. ஆனால் அரசு ஆவணங்களில் அவை பஞ்சமி நிலம் என இருப்பதில்லை. அவை வெவ்வேறு பெயர்களில் இருக்கின்றன. இது பஞ்சமர்களுக்கு வழங்கப்பட்ட நிலம். 14 வகைப்பட்ட திட்டங்களில் நிலம் வழங்கப்பட்டுள்ளது. அதிகாரமிக்கவர்களும் பணம் படைத்தவர்களும் இவற்றை ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளனர். இவர்களுக்கு எதிராக நில மீட்பு இயக்கத்தை நடத்துவதில் பெரும் சிக்கல்களை சந்திக்க வேண்டியுள்ளது. தங்களது அதிகார வலிமையையும் பண பலத்தைக் கொண்டும் நிலத்தை மீளப் பெறுவதில் செயல்படும் இயக்கத்திற்கு இவர்கள் பல்வேறு இடையூறுகளைத் தருகின்றனர்.
ஈரோட்டில் ராம்ராஜ் நிறுவனம் ₹4,600 கோடி மதிப்பிலான நிலங்களை ஆக்கிரமித்து வைத்துள்ளது. நிலங்களை மீளப்பெற்று மீண்டும் உரியவர்களுக்கு நிலங்களை ஒப்படைக்க வேண்டுமென ஒரு கமிட்டி அமைத்தனர். அந்தக் கமிட்டியின் தலைவர் நாகராஜனே நிலங்களை ராம்ராஜ் முதலாளிக்கு கொடுக்கிறார். இந்த அரசாங்கம் அவருக்கு அரசாணை 56 போட்டு நிலங்களை வழங்குகிறது. ஆக அரசாங்கமும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு கூட்டாக இணைந்து செயல்படுகின்றனர். நமது முயற்சிகள் வீணாகின்றன. அரியலூர் மாவட்டத்தில் 9 சிமிண்ட் ஆலைகள் வைத்துள்ள முதலாளி 9 ஆலைகளையும் இந்த நிலத்தில் தான் வைத்துள்ளார். அவர் கோடி கோடியாக இந்த இயக்கத்திற்கு எதிராக செலவு செய்கிறார்.
இது சிரமமான பாதை. பாதுகாப்பற்றதும் கூட. உடுமலைப் பேட்டையில் ஒரு மார்வாரி சேட் 1500 ஏக்கர் நிலங்களை ஆக்கிரமித்து வைத்துள்ளார். அவரைக் கேட்பதற்கு ஆளில்லை. அரசாங்கத்தின் வனத்துறை 31,702 ஏக்கர் நிலங்களை தமிழ்நாடு முழுவதும் ஆக்கிரமித்து வைத்துள்ளது. இப்படி இருக்கும் போது தனியார் முதலாளிகளை யார் கேள்வி கேட்பது?
2. பத்தாண்டுகளுக்கு மேலாக நீண்டு தொடர்ந்த போராட்ட இயக்கத்தில் மக்களை எப்படி சோர்வடையாமல் நிற்க வைக்க முடிந்தது?
மக்களை அணிதிரட்டுவதில் பெரும் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. முதலில் அவர்கள் நம்பிக்கையைப் பெறுவதே மிகக் கடினமாகும். பல நபர்களிடம் பணம் கொடுத்து ஏமாந்து போன அனுபவத்தில் விரக்தியுடன் உள்ளனர். மறுபுறம் மக்கள் அச்சப்படுகிறார்கள். முதலாளிகளின் கைக்கூலிகளாக உள்ள ரவுடிகளால் மிரட்டப்படுகிறார்கள். என்னையும் கூட மிரட்டுகிறார்கள். பலர் ஊழலுக்கும் ஆட்படுகிறார்கள். இவையெல்லாவற்றையும் தாண்டியும் மக்கள் இயக்கத்திற்கு வருகிறார்கள். ஆண்களை விட பெண்கள் போராட்டத்திற்கு தயாராக உள்ளனர். சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளை சந்திக்க அவர்களை நான் பெருமளவு அணிதிரட்டிச் செல்கிறேன்.
3. சட்டப் போராட்டங்கள் குறித்தும், நீதிமன்றங்களின் இழுத்தடிக்கும் முயற்சிகள் தாண்டி வெற்றி பெற்ற அனுபவம் குறித்தும் சொல்லுங்கள்
சட்ட ரீதியான போராட்டங்கள் விஏஓவில் துவங்கி ஆர்ஐ, தாசில்தார், ஆர்டிஓ, டிஆர்ஓ, கலெக்டர் வரை கவன ஈர்ப்பு நடவடிக்கைகள் என பல நிலைகளிலும் மேற்கொள்கிறோம். அதன் பிறகுதான் நீதிமன்றத்தை அணுகுகிறோம். மாவட்ட வருவாய் அதிகாரிகள் அளவிலேயே இதற்கு சாதகமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு விட்டால், நிலங்கள் மீளப்பெற்று சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டால் நாம் இவ்வளவு தூரம் நீதிமன்றம் வரை வரவேண்டிய தேவை இல்லை. ஆனால் அப்படி நடைமுறையில் நடப்பதில்லை. அப்படி நடப்பதற்கு யாரும் அனுமதிப்பதில்லை. நீதிமன்றத்தில் வெற்றிபெற்று நமக்கு சாதகமாக தீர்ப்புக் கிடைத்தாலும் நடைமுறையில் எதுவும் மாறுவதில்லை. நீதிமன்ற அவதூறு வழக்கு போடுகிறோம். நீதிமன்றங்களையே இவர்கள் யாரும் மதிப்பதில்லை. இப்படிப்பட்ட நீண்ட நெடிய போராட்டங்களுக்குப் பின்னர் தற்போது மேல் மருவத்தூர், திருநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் 272 ஏக்கர் நிலத்தை மீளப் பெற்று அந்தந்த மக்கள் கணக்கில் ஒப்படைக்கும் ஆணையை பெற்றுள்ளேன். இதில் டிஆர் பாலு உறவினரால் கட்டப்பட்டுள்ள 10 கல்லூரிகள் இடங்களும் அடங்கும். இதற்காக 2011லிருந்து பல்வேறு நடவடிக்கைகளை நான் எடுத்து வந்துள்ளேன். விஏஓ தொடங்கி நீதி மன்றம் வரையிலும் பல்வேறு நிலைகளில் இந்த நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வந்துள்ளன.
4. அதிகார வர்க்கத்தினரை எதிர்கொண்ட விதம் குறித்து சொல்லுங்கள்
நிலங்களை மீளப் பெற்று உரியவர்களிடம் ஒப்படைக்கும் நடைமுறைக்கு 17 நாட்கள் மட்டுமே தேவைப்படும். ஆனால் இதனை 15 ஆண்டுகளுக்கு இழுத்தடித்து காலம் கடத்தி வருகின்றனர். இதில்தான் அதிகார வர்க்கத்தினரின் எண்ணம் அப்பட்டமாக வெளிப்படுகிறது. அவர்கள் நிலத்தை ஆக்கிரமித்து உள்ளவர்களிடம் கூட்டாக இணைந்து செயல்படுகின்றனர். நான் அவர்கள் மீதும் வழக்கு போடுவதன் மூலமாக எதிர்கொள்கிறேன். அவர்கள் தங்கள் கடமையை செய்ய தவறிவிட்டார்கள் என அவர்கள் மீது குற்றம் சாட்டுகிறேன். அதன் காரணமாக ஏற்படும் அச்சத்தால் அவர்கள் செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
5. அரசாங்கத்தின் எதிர்வினை எப்படி உள்ளது?
அரசாங்கம் எப்போதும் மக்களுக்கு எதிராகவே செயல்படுகிறது. குறிப்பாக இப்போதுள்ள திமுக அரசாங்கம் இந்த விஷயத்தில் மிகவும் மோசமாக செயலற்றுள்ளது. 2015 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற ஆணையின்படி பஞ்சமர் அல்லாதவர்கள் வைத்திருக்கும் பஞ்சமி நிலங்களை மீளப் பெற்று மீண்டும் பஞ்சமர்களிடமே திரும்ப ஒப்படைப்பதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி ஆராய அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் மூவர் கொண்ட குழு ஒன்றினை மாநில அரசு அமைத்து ஆணையிட்டது. இது எனது போராட்ட இயக்கத்திற்கு கிடைத்த வெற்றியாகும். இந்த பஞ்சமி நில மீட்பு மத்திய குழு கடந்த அதிமுக ஆட்சியின் போது தொடர்ச்சியாக செயல்பட்டது. தற்போது திமுக ஆட்சியில் இந்த குழு கூட்டப்படுவதே இல்லை. கிடப்பில் போடப்பட்டு விட்டது. அது உடனடியாகக் கூட்டப்பட வேண்டும்.
6. தமிழகம் முழுவதும் பஞ்சமி நிலம் மீட்பு இயக்கம் வெற்றி பெறுவதற்கான உங்களது ஆலோசனை என்ன?
அந்தந்த பகுதி மக்களை அணிதிரட்டி வருவாய் அதிகாரிகள் மட்டத்தில் இயக்கங்களை முன்னெடுக்க வேண்டும். அதோடு மாநில அளவில் இந்த இயக்கங்களை ஒன்றிணைக்க வேண்டும். இந்த பஞ்சமி நிலம் மீட்பு மத்திய குழு உடனடியாகக் கூட்டப்பட வேண்டும்; செயல்பட வேண்டும் என்பதை முக்கிய கோரிக்கையாக முன்வைக்கலாம். இதன்மூலம் தமிழக அரசு இந்த விசயத்தில் உடனடியாக தலையிட நெருக்கடியை ஏற்படுத்த வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)