உள்ளாட்சியில் நல்லாட்சி மலர்ந்திட;

உள்ளாட்சிகளுக்கு அதிக அதிகாரம்;

உள்ளாட்சியில் ஜனநாயகத்துக்காகப்

போராடுவோம்!

உள்ளாட்சியிலும் நல்லாட்சியை தொடர்வோம்என்ற குரல் கேட்கிறது! நல்லது. ஒன்றிய பாஜக அரசு, தனது ஒரே நாடு வரிசையில்ஒரே நாடு; ஒரே பதிவுஎன்ற முழக்கத்தை கையிலெடுத்திருக்கிறது. தமிழ் பேசும் நிதியமைச்சர் நிர்மலா, நிதிநிலை அறிக்கையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பு, ‘மூன்றடுக்கு - ஒன்றியம், மாநிலம், உள்ளாட்சி’- கூட்டாட்சி முறைக்கு வேட்டு வைக்கும் மற்றொரு அறிவிப்பு. மாநில அரசுகளே, நகராட்சிகள் போல் தரம் தாழ்த்தப்பட்டுள்ள நிலையில், உள்ளாட்சிகளுக்கு உள்ள அரைகுறை அதிகாரமும் முழுவதுமாக பிடுங்கப்பட்டு விடும். நகர்ப்புர உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிடும் எமது கட்சியும் அதன் வேட்பாளர்களும் உள்ளாட்சி அமைப்புகள் ஜனநாயக முறையில் செயல்பட வாதாடுவார்கள், போராடுவார்கள். பாஜக ஒன்றிய ஆட்சியிடமிருந்து மூன்றடுக்கு கூட்டாட்சி அமைப்பு முறையை பாதுகாக்க, அரசமைப்புசட்ட உரிமையை பாதுகாக்க, உள்ளாட்சிகள், சுயாட்சி உரிமைகள் பெற வாதாடுவார்கள், போராடுவார்கள். உள்ளாட்சி அமைப்புகள் மக்களின் பிரதிநிதியாக செயல்பட பின்வரும் கோரிக்கைகளுக்காக வாதாடுவார்கள்; போராடுவார்கள் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) உறுதியளிக்கிறது.

உள்ளாட்சி அமைப்புகள் மக்கள் அமைப்புகளாக செயல்பட;

1.            நகர்ப்புர உள்ளாட்சிகளில் - பேரூராட்சித் தலைவர், துணைத்தலைவர்; நகராட்சித் தலைவர், துணைத்தலைவர்; மாநகராட்சி மேயர், துணை மேயர்- உள்ளிட்ட அனைத்து மட்டத் திலும், அரசியல் பேரத்திற்கு வழி வகுக்கும் மறைமுகத் தேர்தலை ஒழித்துக்கட்டி, மக்கள் விருப்பத்தை நிலைநாட்டும் நேரடி தேர்தல்கள் நடத்தப்பட போராடுவோம்.

2.            ஒன்றிய அரசிடம் மாநில அரசுகள் கையேந்தாமலும் உள்ளாட்சி அமைப்புகள் மாநில அரசுகளிடம் கையேந்தாமல் இருக்கவும் சுய ஆட்சி அமைப்பு முறையை கொண்டு வரும் நோக்கில் நிதி, நிர்வாகம் உள்ளிட்டவற்றில் அதிக அதிகாரம் கொண்ட கூட்டாட்சி சட்டதிருத்தங்க ளுக்காகப் போராடுவோம். ஒன்றிய அரசு தனது அனைத்துவகை வருவாய்களிலிருந்தும் 50%-அய் உள்ளாட்சி அமைப்புகளுக்கு பகிர்ந்தளிக்கக் கோரி போராடுவோம்.

3.            அரசமைப்பு சட்டம் 12வது அட்ட வணையில் உள்ள 18 பிரிவுகளுக்கான அதாவது நகர்ப்புர திட்டம், நில பயன்பாடு, கட்டுமான பணிகள் முறைப்படுத்துதல், வீடுகள், தொழிற்சாலை, வர்த்தக நிறுவனங்களுக்கு தண்ணீர் வழங்குதல், சுகாதாரம், தூய்மை பணி, திடக்கழிவு மேலாண்மை, தீயணைப்பு பணி சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமூகத்தின் பலவீனமான மாற்றுத்திறனாளிகள் ,மூளை வளர்ச்சி குன்றியோர் நலன் பாதுகாப்பு, குடிசை பகுதி மேம்பாடு, நகர்ப்புற வறுமை ஒழிப்பு, பூங்கா, விளையாட்டு மைதானம் உள்ளிட்ட நகர்ப்புற வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், கல்வி கலாச்சார அம்சங்களை மேம்படுத்துதல், சுடுகாடு, இடுகாடு, மின்சார தகனக் கூடம் அமைத்தல், பிராணிகள் வதை தடுப்பு, பிறப்பு இறப்பு பதிவு, தெருவிளக்கு, வாகன நிறுத்தம், பொதுக்கழிப்பிடம் உள்ளிட்ட வசதிகள் அமைத்துக் கொடுத்தல், இறைச்சிக் கூடம், தோல் பதனிடுதல் முறைப்படுத்துதல் ஆகிய அதிகாரங் களை நகர்ப்புர உள்ளாட்சிகளிடம் முழுமையாக வழங்கிடவும் மேலும் கூடுதலான நிதி, நிர்வாக அதிகாரங்கள் வழங்கப்படவும்; உள்ளாட்சி நிர்வாகத்தில் மேலோங்கியிருக்கும் அதிகாரிகளின் ஆட்சிமுறைக்கு முடிவுகட்டவும் போராடுவோம்.

4.            அனைவருக்கும் வீட்டுமனை, பட்டா, வீடு, பொதுசுகாதாரம், சாலை, தெருவிளக்கு, குடிதண்ணீர், பொதுக் கழிப்பறை, பெண்கள் தனிக்கழிப்பறை, கல்வி, மருத்துவம், இடுகாடு\ சுடுகாடு, நூலகம், சமுதாயக்கூடம், பால்வாடி, முதியோர் இல்லம், ஆதரவற்றோர் இல்லம், விளையாட்டுத்திடல், பேருந்து நிழற்குடை, தொழிலாளர் தங்குமிடங்கள், பொழுது போக்கு உள்ளிட்ட அனைத்தையும் உருவாக்கி, செயல் படுத்தும் நிர்வகிக்கும் பொறுப்பை உள்ளாட்சி அமைப்புகள் வசம் ஒப்படைக்கப்படவும், இருக்கும் நீர்நிலைகளை பாதுகாப்பது, காலநிலை மாறுபாட்டை எதிர்கொள்ள புதிய நீர்நிலைகளை உருவாக்குவது, மக்கள் பங்கேற்புடன் சமூகக் காடுகள் திட்டத்தை உருவாக்கி பராமரிப்பது, பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கையை மேற் கொள்வது, கட்டட தொழிலாளர் உள்ளிட்ட அனைத்து அமைப்பாக்கப்படாத தொழிலாளர் காலனிகளை உருவாக்குவது போன்றவற்றுக் காகப் போராடுவோம். இலவச பொது சுகாதாரம், அரசு மருத்துவமனை, இஎஸ்அய் திட்டத்தை உழைக்கும் மக்கள் அனைவருக்கும் விரிவுபடுத்துவது, நகர்ப்புற கிராமப்புற வேறுபாடின்றி அனைத்து மாணவர்களுக்கும் தரமான இலவச கல்வி அருகாமைப் பள்ளிகள் மூலம் வழங்கப்பட போராடும்.

5.            பெருகிவரும் எலக்ட்ரானிக் கழிவுப் பொருட்கள், இதர கழிவு பொருட்கள், கழிவுநீர், குப்பைகள் ஆகியவற்றை அகற்றிட மேலான அறிவியல்பூர்வ திட்டங்களுக்காக போராடும்.

6.            இயற்கை வளங்கள் சூறையாடலுக்கும் சுற்றுப்புறசூழல் சீர்கேட்டுக்கும் காரணமான ஸ்மார்ட் சிட்டி, தேசிய நெடுஞ்சாலைகள் போன்ற ஒன்றிய, மாநில அரசுகளின் பெருந் திட்டங்கள், காட்டுப்பள்ளி தனியார் துறைமுகம் போன்ற தனியார் திட்டங்கள் செயல்படுத்தப் படுவதை சம்பந்தப்பட்ட பகுதி / உள்ளாட்சி மக்கள் (வார்டு பொதுமக்கள் கூட்டங்கள் - வார்டு சபை நடத்தி, பெரும்பான்மை கருத்தறிந்து) முடிவு செய்வதாக இருக்கவேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் அதிகாரத்தில், வார்டு சபை கூட்ட முடிவுகளில், மாநில, ஒன்றிய அரசுகள் தலையிடக்கூடாது என்கிற வகையில் சட்டங்கள் கொண்டுவரப் போராடுவோம்.

7.            பேரூராட்சி தொடங்கி, மாநகராட்சிகள் வரை தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் போன்ற நகர்ப்புர வேலைவாய்ப்பு திட்டத்தை ஒன்றிய, மாநில அரசுகள் தொடங்கிடவும்; தினக்கூலி ரூ 500 ஆக உயர்த்திடவும், ஆண்டுக்கு 200 நாள் வேலை வழங்கிடவும், அதை செயல்படுத்தும் நிதி நிர்வாகப் பொறுப்பை உள்ளாட்சி அமைப்புகள் வசம் ஒப்படைத்திடக் கோரியும், அதற்குத் தேவையான நிதியை ஒன்றிய, மாநில அரசுகள் அளித்திட கோரியும் போராடுவோம்.

8.            உள்ளாட்சி அமைப்புகள், அனைத்து திட்டங்களையும் மக்கள் கருத்தறிந்து திட்டமிடுவது, செயல்படுத்துவது வேண்டும்; வரவு-செலவு உள்ளிட்ட உள்ளாட்சி நிர்வாகம் குறித்த அனைத்திலும் மக்களுக்கு பதில் சொல்லும் கடமைப்பட்ட, வெளிப்படையான, ஊழலற்ற, நேர்மையான, நிர்வாகத்திற்காகப் போராடுவோம். இரண்டு தேர்தல்களுக்கு இடைப்பட்ட காலத்தில், ஊழல் செய்யும், மக்களுக்கு எதிராக செயல்படும் பிரதிநிதிகளை திரும்பப்பெறும் உரிமைக்காக போராடுவோம்.

9.            உள்ளாட்சி அமைப்புகளில் குடிநீர் இணைப்பு பெறுவது முதல் வீடு கட்ட வரைபட ஒப்புதல் பெறுவது, இறப்புச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ் பெறுவது வரை தலைவிரித்தாடும் லஞ்ச லாவண்யத்துக்கு முடிவுகட்ட போராடும்.

10.          சாலை போடுவது முதல் அனைத்து உள்கட்டுமான பணிகளும் மக்கள் கண்காணிப்புக் குழுக்கள் மேற்பார்வையில் அமல்படுத்த குரல் கொடுக்கும், போராடும்.

11.          நகர்ப்புர உள்ளாட்சிப் பகுதிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள், சத்துணவுப் பணியாளர்கள், சுகாதார செவிலி யர்கள், பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், உள்ளாட்சி சேவைப் பணியாளர்கள் அனைவரையும் அரசுப்பணியாளர்களாக அறிவித்து நடைமுறைப் படுத்திட மாநில அரசை வலியுறுத்திட வேண்டும். அதுவரை சம வேலைக்கு சம ஊதியம் என்ற விதத்தில் அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கும் நடைமுறையை செயல்படுத்திடக் கோரி போராடு வோம்.

12.          நகர்ப்புர உள்ளாட்சிப் பகுதிகள் அனைத் திலும் பால் பேதமின்றியும் சாதி, மத வேறுபாடு இன்றியும், வெறுப்பு இன்றியும் மக்கள் கலந்து வாழவும் அனைத்துவித சமூக நிகழ்வுகளிலும் பொது இடங்களிலும் மாற்றுத் திறனாளிகள், மூன்றாம் பாலினத்தினர், விளிம்புநிலை சமூகத்தினரது உரிய பங்கையும், புழக்கத்தையும் உறுதிப்படுத்திடவும்; தனித்துவாழும் பெண்கள், விதவைப் பெண்கள் சுயமரியாதையோடும் கவுரவத்தோடும் வாழ்வதற்கான சிறப்புத் திட்டங்கள் தீட்டக்கோரி போராடுவோம். சமத்துவபுரங்கள் மக்கள் தொகை விகிதாச் சாரத்துக்கு ஏற்ப கூடுதலாக்கப்பட வேண்டும்.

13.          நகர்ப்புறத்தைக் கட்டியெழுப்பும் தொழி லாளர்கள், வறிய உழைக்கும் மக்கள் நகர்ப்புறப் பகுதிகளில் இருந்து அப்புறப்படுத்தப் படுவதற்கு எதிராக அவர்களது குடியுரிமை, வாழ்வாதாரத்தை பாதுகாக்க குரல் கொடுக்கும், போராடும்.

14.          நகர்ப்புறப் பகுதிகளில் சாலையோர வியாபாரிகள் பாதுகாப்பு சட்டத்தை முறையாக அமல்படுத்தவும் அவர்களது நலனைப் பாது காக்கவும் போராடும்.

15.          நகர்ப்புர ஏழை மக்கள், பெண்களை கசக்கிப்பிழியும் கந்துவட்டிக் கடன், தனியார் நுண்கடன் அமைப்புகளை ஒழித்துக்கட்டி, உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வங்கிக் கடன், தொழில் தொடங்கும் திட்டங்கள் தொடங்கிட குரல் கொடுப்போம். மக்களது வாழ்வாதாரத்தை, பெண்களின் பாதுகாப்பை, குடும்பத்தின் அமைதியை, குழந்தைகளின் எதிர்காலத்தை இருளச்செய்யும் டாஸ்மாக் அரசுமதுபானக் கடைகளை உடனடியாக மூடக்கோரி போராடுவோம்.

16.          அனைத்து தொழிலாளர்களுக்கும், குறிப்பாக அமைப்பாக்கப்படாத தொழிலாளர் களுக்கு, குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ 26,000 அறிவித்திடவும், உழைக்கும் மக்களின் வாழ்க்கைத்தர மேம்பாட்டுக்காகவும் போராடு வோம்.

17.          நீட் தேர்வு ரத்து மசோதாவை ஜனநாயக மரபு, மாண்புகளுக்கு எதிராக, திருப்பி அனுப்பிய தமிழக ஆளுநரை திரும்ப அழைத்துக் கொள்ள வலியுறுத்தி போராடும்.

வாக்களார்களே,

உள்ளாட்சியில் ஜனநாயகத்தைக் கொண்டு வருவது வாக்காளர்கள் கைகளில்தான் உள்ளது. உள்ளாட்சி அமைப்புகள் மக்களாட்சி அமைப்பு களாக செயல்பட வாக்காளர்கள் மேற்கண்ட மக்கள் கோரிக்கைகளை முன்னெடுக்கும் மா லெ கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும். பணத்துக்கும் பரிசுப்பொருட்களுக்கும் மதிப்பளிக்காதீர்கள், புறக்கணியுங்கள். மக்கள் கோரிக்கைகளுக்கும் மக்கள் சேவகர்களுக்கும் மதிப்பளியுங்கள். உள்ளாட்சியில் ஜனநாயகம் மலர்வதற்கு முதல்படியாய் மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் வேட்பாளர்களுக்கு மூன்று நட்சத்திரக் கொடி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்! மக்கள் விரோத பாஜக வை தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் காலூன்ற அனும திக்கவே கூடாது. திமுக - அதிமுக கூட்டணி களுக்கு மாற்றான மக்கள் கட்சிக்கு மூன்று நட்சத்திரக் கொடி சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச்செய்யுங்கள்!

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி

(மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) (விடுதலை)

தமிழ்நாடு