ஒரு நூல் - ஒரு பார்வை

சமூக நீதிக்கான அறப்போர்

சமூகத்தில் புரட்சிகரமான மாறுதல்களை வேண்டுவோருக்கான புத்தகம் இது!

கபிலன்

அரசியல் சாசனத்தை உருவாக்கியவராக மட்டும்டாக்டர் அம்பேத்கரைக் குறுக்கி விட, இந்தியாவின் மேற்குடியினர் ஆசைப்படுகின்றனர். அரசியல் சாசன உருவாக்கத்தில், அவரது பங்கு முக்கியமானதுதான். ஆனால், அவரது புரட்சிகர செயல்பாடுகளில் அது மிகவும் குறைவானது. அவரை தலித்துகளின் தலைவராக மட்டும், ஒரு சட்ட மேதையாக மட்டும், குறைத்துக்காட்டவும் அவர்கள் விரும்புகின்றனர். சிந்தனையாற்றலும், பரந்த மனப்பான்மையும், கொண்ட மேற் குடியினர் கூட, அம்பேத்கரின் வாழ்க்கையைப் பற்றியும், அவர் உயிரோடு இருந்தபோதும், இறந்தபிறகும், சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கிற தாக்கங்களைப் பற்றி பேசுவதைப் பொதுவாக புறக்கணித்துவிடுகின்றனர்.

இந்திய ஜனநாயகத்தின் சிற்பி

அரசியல் ஒடுக்குமுறையின் ஆட்சியை விட சமூக ஒடுக்குமுறையின் ஆட்சி மிகக் கொடூரமானது. அரசாங்கத்தை வெளிப்படையாக எதிர்க்கிற அரசியல்வாதியை விட சமூகத்தை வெளிப்படையாக எதிர்க்கிற சமூகப் போராளி மிகவும் தைரியமானவன்என்கிறார் டாக்டர் அம்பேத்கர்.

நீதியும் ஜனநாயகமும் நிறைந்த சமூகமாக மாறுவதற்கு, அரசியல் மாற்றம் மட்டுமல்ல, தீவிரமான சமூக மாற்றமும் இந்தியாவுக்குத் தேவைப்படுகிறது. அரசியல் ஜனநாயகம் மட்டுமல்ல, சமூக ஜனநாயகமும் தேவைப் படுகிறது. சமூக ஜனநாயகத்தின் மீது மிகச் சிறிய அளவே கவனம் செலுத்திவிட்டு, அரசியல் ஜனநாயகம் மீது மட்டுமே கவனம் செலுத்துகிற போக்கைசாணிக் குவியலின் மீது அரண் மனையைக் கட்டுகிற போக்குஎன்கிறார் அம்பேத்கர்.

இந்தியாவில் ஜனநாயக உணர்வுகள் வளரவேண்டும் என்றால்நாம் அனைவரும் இந்தியக் குடிமக்களேஎன்ற உணர்வு இந்தியர்களுக்கு ஏற்பட வேண்டும். அந்த உணர்வின் மூலமாகத்தான் இந்தியாவுக்குஒரு தேசம்என்ற தன்மை ஏற்பட வேண்டும். காலகாலமாக படிந்து கிடக்கிற ஏற்றதாழ்வுகளும், சாதி மீதான பற்றும்தான் இந்தியாவை ஒரு தேசமாக உருவாகிவிடாமல் தடுக்கின்றன என்கிறார் அம்பேத்கர்.

வாய்ப்புகளை அனைவருக்கும் உறுதிப்ப டுத்துவதும், சிறுபான்மையோரைப் பாதுகாப் பதும், அமைப்புரீதியான பாகுபாட்டுக்கு எதிராக போராடுவதும்தான் ஜனநாயகத்தின் முக்கியமான பிரச்சனைகள். இந்தப் பிரச்சனைகள் தொடர்பாக, காந்தியடிகள், - நேரு ஆகியோரின் நிலைபாடு களும் அம்பேத்கரின் நிலைபாடுகளும் பெரிய அளவில் வேறுபடுகின்றன. அவை விரிவாகவும் ஆழமாகவும் விவாதிக்கப்படுவதில்லை. காந்திக்கும் நேருவுக்கும் கிடைக்கிற முக்கியத் துவம் அம்பேத்கருக்கு கிடைப்பதில்லை. இந்த மவுனத்தால் அம்பேத்கரின் வரலாற்றுப் பங்களிப்பு ஒன்றும் மண் மூடிப்போகவில்லை. மாறாக, இந்தியாவுக்கு வெளியிலும் அறிஞர்கள் இது பற்றி பேச ஆரம்பித்துவிட்டனர்.

நவீன இந்தியாவின் உருவாக்கத்தில் டாக்டர் அம்பேத்கரின் பங்களிப்பு அளவுக்கு அவரது தலைமுறையைச் சேர்ந்த வேறு எவரும் செய்யவில்லை என்கிறார் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவரும் தென்னாசிய வரலாறு மற்றும் அரசியல் அறிஞருமான கிறிஸ்டோப் ஜப்பார்லெட். காங்கிரஸ் தலைவர்கள் யாரையும் விட டாக்டர் அம்பேத்கர் தனது மேதமையால் உயர்ந்து நின்றார் என்கிறார் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் பெர்ரி ஆண்டர்ஸன்.

இங்கிலாந்து ராணியின் பிரதிநிதியாக இந்தியாவை ஆட்சி செய்த வைஸ்ராயின் அமைச்சரவையில் தொழிலாளர் அமைச்சராக 1942 ஜூலை 22 அன்று டாக்டர் அம்பேத்கர் பதவியேற்கிறபோது, சட்டரீதியான வேலை நேரம்  14 மணி நேரமாக இருந்தது. பதவியேற்ற நான்கு மாதங்களில் அவர்தான் தொழிலாளர்களின் சட்டபூர்வமான வேலைநேரத்தை  எட்டு மணி நேரமாக ஆக்கிச் சட்டம் உருவாக்கினார். 1942 நவம்பர் 27 ஆம் தேதியன்று அந்தச் சட்டத்தை அறிவித்தார். ஏராளமான தொழிலாளர் சட்டங் களையும்  பிரிட்டிஷ் இந்தியாவிலேயே நிறை வேற்றியவர் டாக்டர் அம்பேத்கர். “புதிய சட்டங்களை உருவாக்குஎன்று கோரிக்கைகள் வைப்பதைவிட, “இருக்கிற தொழிலாளர் சட்டங்களை முறையாக அமலாக்கு” “சட்டங் களை நீர்த்துப் போகச் செய்யாதேஎன்று கோரிக்கைகளின் தொனி இருக்கும் அளவுக்கு உழைக்கும் மக்களின் போராட்டங்கள் மீது இன்றும் தாக்கம் செலுத்தி வருகிறார் அவர்.

தலித் மக்கள் போராடிப் பெற்ற உரிமை களை சுதந்திர இந்தியாவில் பழங்குடி மக்களுக்கும் அப்படியே நீட்டித்தவர் அவர். பழங்குடி மக்களின் மத்தியில் தேசிய அளவிலான தலைவர் இன்னமும் உருவாகவில்லை என்பதைக் கவனியுங்கள்.

இங்கிலாந்து உருவாக்கியிருந்த  அன்றைய இந்தியாவின் அரசியல் சாசனம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஆய்வு செய்வது என்ற பெயரில் 1933 இல் வந்த அரசியல் சாசன ஆய்வுக் குழுவினரிடம் அம்பேத்கர்குற்றப் பரம்பரையினர்எனும் இழிவு சுமத்தப்பட்ட மக்களுக்காகவும் வாதாடியிருக்கிறார். அவரது நியாயங்கள் உணரப்பட்ட பிறகுதான்குற்றப் பரம்பரைச் சட்டத்தில் திருத்தம் செய்யவோ, குற்றப் பரம்பரையினருக்கு மறுவாழ்வு அளிப்பதற்கோ, அவர்களைக் கட்டுப்படுத்து வதற்கோ, இந்திய அரசின் ஆளுநரைவிட அந்தந்த மாகாண அரசுகளுக்கே அதிக அதிகாரம்என்ற நிலைமை உருவானது.

பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு கல்வி யிலும் அரசுப் பணிகளிலும் இடஒதுக்கீடு உரிமைகளை வழங்குவதற்கான வாய்ப்புகள் அம்பேத்கருக்கு அரசியல் சாசன சபையில் கிடைக்கவில்லை. ‘சுதந்திர இந்தியாவின் முதல் அரசாங்கம் அதனைச் செய்யும்என்று அரசியல் சாசன சபை அப்போது முடிவெடுத்தது.

சுதந்திர இந்தியாவின் முதல் அரசாங்கத்தில் சட்ட அமைச்சராக 1947 முதலாக 1951 வரையான நான்கு ஆண்டுகள் பணியாற்றிய போதும், அம்பேத்கரால் பிற்படுத்தப்பட்டோரின் உரிமைகளை உத்தரவாதம் செய்ய முடிய வில்லை. அவர் 1951 அக்டோபர் 6 ஆம் தேதி  அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தபோது தெரிவித்த காரணங்களில் அதுவும் ஒன்று. ‘ஏன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன்என்பதை விளக்கி அவர் 1951 அக்டோபர் 10 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் உரையாற்றி யிருக்கிறார். குடும்பத்தின் சொத்தில் இந்து மதப் பெண்களுக்கு சம பங்கு தருவதைச் சட்டமாக்க முடியவில்லை, பிற்படுத்தப்பட்டோரின் இட ஒதுக்கீட்டுக்கான பணிகள் நடக்கவில்லை என்பவை அந்த உரையில் அவர் கூறும் காரணங்களில் சில.

அம்பேத்கரின் இத்தகைய அரசியல் அழுத்தம் காரணமாகவே, சுதந்திர இந்தியாவின் பிற்படுத்தப்பட்டோருக்கான முதல் ஆணையமான டாக்டர் காகா காலேகர் ஆணையம் 1953 இல் அமைக்கப்பட்டது. 1955 இல் அது தனது அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்ததுபிற்படுத்தப்பட்டோருக்கு 52 சதவீத இடப் பங்கீடு தரவேண்டும் என்று அது பரிந்துரை வழங்கியது. நேருவின் தலைமையிலான மத்திய அரசு அதனை அமலாக்கவில்லை.

1956 டிசம்பர் 6&ல் அம்பேத்கர் இறந்து விட்டார். பிரதமர் வி.பி.சிங், மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான், இந்திய அரசு செயலாளர்  பி.எஸ்.கிருஷ்ணன் ஆகிய மூவர் கூட்டணியின் முன்முயற்சிகளுக்காக சுமார்  40 ஆண்டுகாலம் காத்துக் கிடந்தது  மண்டல் அறிக்கை.

இந்திய சமூகத்தின் பல்வேறு பிரிவினரின்  வாழ்நிலைகள் தொடர்பாக ஒப்பீட்டளவில் மற்றவர்களைவிட முழுமையான ஒரு தொலை நோக்கு பார்வையைக் கொண்ட ஜனநாயகச் சிற்பி அம்பேத்கர் என்பதை அவரது பங்களிப்புகள் உணர்த்துகின்றன.

ஜனநாயகம் தொடர்பான, சமூக சமத்துவம் தொடர்பான அம்பேத்கரின் சிந்தனைகளை தன்னுடைய அனுபவங்களோடு இணைத்து  நடைமுறைப்படுத்துவதற்காக உழைத்தவர்தான்  பி.எஸ். கிருஷ்ணன். ‘நாட்டின் வளங்களில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடப் பங்கீடுஎனும் அம்பேத்கரின் லட்சியக் கனவு நிறைவே றாமல் கிடந்தது. அந்தக் கனவை நிறைவேற்றி யவர்தான் பி.எஸ். கிருஷ்ணன்.

வி.பி.சிங் அரசாங்கம் அமைந்தபோது  ராம்விலாஸ் பாஸ்வானும், அரசின் செயலாளராக பி.எஸ். கிருஷ்ணனும் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளை எவ்வாறு, அரசை ஏற்க வைத்தனர் எனும் தகவல்கள் இந்தப் புத்தகத்தில் விரிவாக உள்ளன. அது மட்டுமல்ல, தலித்துகள், பழங்குடிகள், பிற்படுத்தப்பட்டோர் வாழ்நிலை களை மேம்படுத்துவதற்காக பி.எஸ்.கிருஷ்ணன் செய்த முக்கியமான முன்முயற்சிகளின் தொகுப்பு புத்தகத்துக்குள்ளே இருக்கிறது. அது சுதந்திர இந்தியாவின் நவீன வரலாற்றுக்கான ஒரு சாட்சியமாக இருக்கிறது.

பணிகளின் வரலாறு

..எஸ். அதிகாரி எனும் பதவியை தனது சமூக அரசியல் பணிக்கான ஆயுதமாக மாற்றிக்கொண்டு, தனது பணிக்காலம் முழுமையும், பி.எஸ். கிருஷ்ணன் இடைவிடாமல் சாதியின் மீது மோதிக் கொண்டே யிருந்தார். ஓய்வுபெற்ற பிறகும் அதன் மீது தனது இறுதி நாட்கள் வரையில் தினமும் மோதிக் கொண்டே யிருந்தார்.

சாதியக் கட்டமைப்பின் கொடூரத்தை தந்தையார் மூலமும் பத்திரிகை செய்திகள் மூலமும் பத்து வயதில், தெரிந்துகொண்டார் அவர். 87 வயதில் அவர் இறக்கும் வரை சாதிக்கு எதிரான போராட்டத்தை அவர்  தொடர்ந்து நடத்திக்கொண்டிருந்ததை இந்தப் புத்தகம் உங்கள் முன் வைக்கும். “இதனைவாழ்க்கை வரலாறுஎன்று சொல்வதை விடபணிகளின் வரலாறு(workography) என்றுதான் சொல்லவேண்டும்என்கிறார் டாக்டர் வே. வசந்தி தேவி. இந்தப் புத்தகம் ‘41 கேள்விகளுக்கான பதில்கள்என்ற வடிவத்தில் இருக்கிறது.

..எஸ். பதவியின் மூலமாக அடித்தள மக்களுக்கு சேவை செய்ய முயன்றபோது கிடைத்த வெற்றிகள், தோல்விகளின் தொகுப்பு இது. அவரது அனுபவங்கள் பல துறைகளில் பணியாற்றுவோருக்கு பயன்படக்கூடியவை. சமூக நீதிக்காகவும், ஜனநாயகம், பெண் உரிமைகள், குழந்தைகள் உரிமைகளுக்காகவும், சட்டத்தின் ஆட்சி, வெளிப்படையான அரசு நிர்வாகத்துக்காகவும், சமூகத்தில்  புரட்சிகரமான மாறுதல்களை ஏற்படுத்துவதற்காகவும்  உழைப்போருக்கு இவை பயன்படும்.

சமூக நீதியின் தனிநபர் ராணுவம்

அம்பேத்கருக்கு பிறகு இந்திய சமூகத்தில் சமூக நீதியைச் சுற்றி நடைபெற்ற, மிகப் பெரும்பாலான நிகழ்வுகளின் பின்னணியில் பி.எஸ். கிருஷ்ணன் இருக்கிறார். ‘அரசின் ஆளுகையில் மக்கள் நலன் சார்ந்த தலையீடுகள் செய்வதுஎன்ற அம்பேத்கரிய மரபை அறுந்துவிடாமல் வலுப்படுத்தி வந்திருக்கிறார். தலித்துகளுக்கான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், சிறப்புக் கூறு திட்டம் உள்ளிட்ட ஏராளமான தலையீடுகள் பி.எஸ். கிருஷ்ணனால் செய்யப்பட்டிருக்கின்றன. “அவற்றை முறையாக அமல்படுத்துஎன்று அவை மக்களை  வீதிகளில் போராட வைக்கின்றன.

பல சட்டங்களை, திட்டங்களை உருவாக்கி யவர்தான் என்றாலும் பி.எஸ். கிருஷ்ணன் இந்தியாவின் சட்டங்களைஅனாதைக் குழந்தைகள்என்று வர்ணித்தார். அவரது மனதில் மதிப்புக்குரியதாக உயர்ந்து நின்றது மக்களின் அறப்போராட்டமே. மக்களை ஆற்றல்படுத்துவதும் விழிப்படைய வைப்பதுமே அவரது நோக்கம்.

சமூக நீதியின் தனிநபர் ராணுவம் அவர். அனைத்து அரசாங்கங்கள், அரசியல் கட்சிகளின் தலைமைகள், மக்கள் அமைப்புகள் என அனைத் தோடும் அவர் தொடர்ந்து உரையாடினார்.

அரை நூற்றாண்டுக்கும் மேலான அனு பவம் கடலாக அவருக்குள்ளே இருந்தது. அதன் இயல்பான தர்க்கமாக அவரின் தத்துவம் இதில் படர்ந்து கிடக்கிறது. டாக்டர் வே. வசந்திதேவி எழுப்பிய கேள்விகள் எனும் பெருங்கால் வாய்கள் வழியாக அந்தக் கடல் உங்களின் அனுபவ உரசலுக்காக வந்து சேர்கிறது.

சாதி என்பது உழைப்பின் பிரிவினை அல்ல. உழைக்கும் மக்களைப் பிரித்து வைத்திருப்பதுதான் சாதிஎன்ற அம்பேத்கரின் வரையறையை வளர்த்தெடுக்கிறார் பி.எஸ். கிருஷ்ணன். “பல அடுக்கு ஏற்றதாழ்வு சமூகம்(Graded inequality society) என்று இந்திய சாதி சமூகம் தொடர்பாக அம்பேத்கர் செய்த வரையறையையும் அவர் வளர்த்தெடுக்கிறார்.

தலித்துகள், பழங்குடிகள், மிகவும் கடுமையாக பிற்படுத்தப்பட்ட சமூகப் பிரிவினரின் கருக்கள் தாய்களின் வயிறுகளில் உருவாகும்போதே நோஞ்சான்களாக உருவாகின்றன என்கிறார் அவர். ஒரு வயதுக்குள் இறக்கிற பச்சிளம் குழந்தைகளிலும், ஐந்து வயதுக்குள் இறக்கிற குழந்தைகளிலும், தலித், பழங்குடி குழந்தைகள் அதிகம் என்பதை வெளிப்படுத்தும் ஆய்வுகளை அவர் சுட்டிக் காட்டுகிறார். பள்ளிக் கல்வியைத் தாண்டாத, கல்லூரிக் கல்வியைத் தாண்டாத இளைஞர் களிலும் இதுவே நிலை. வறுமையிலும், பட்டினியிலும் சிக்கி சின்னாபின்னம் ஆகிறவர் களில், பட்டியல் சாதியினரும், பழங்குடிகளும்  இழப்பதற்கு எதுவும் இல்லாத வகையில் மிகக் கடுமையான அளவுக்கு பிற்படுத்தப்பட்டி ருப்பவர்களும் அதிகம் என்கிறார் அவர். குழந்தைகளின் உயிரிழப்புகள் முதலாக வாழ்வின் அனைத்து மட்டங்களிலும் நீடிக்கிற, ஏற்றத்தாழ்வான இந்த வாழ்நிலைகள்தான் சாதியின் உண்மையான இருப்பிடம் என்று நம்மை நெருக்கமாக அழைத்துச் சென்று காட்டுகிறார் அவர்.

உழைக்கும் மக்களை பிரித்து வைப்பது தான் சாதிஎன்ற அம்பேத்கரின் வரையறை பி.எஸ். கிருஷ்ணன் மூலம் முன்னேறுகிறது. சாதி என்பது அறிவாளிகள் அணு பிளந்து விளையாடு வதற்கான ஆய்வுப் பொருள் அல்ல. “ஒரு வயதுக்குள் இறக்கும் குழந்தைகளின் உயிர்தான் சாதிஎன்கிறது அது. உழைக்கும் மக்கள் மீது இந்திய சமூகம் ஏவுகிற சுரண்டலின் மையமே சாதி சமூக அமைப்பு முறைதான் என்று முன்னேறுகிறார் பி.எஸ்.கிருஷ்ணன்.

விவசாயத் தொழிலாளர்களில் தலித் மக்கள் பெரும்பான்மையினர். அவர்களை எப்படி சாதி சமூக கட்டமைப்பு சுரண்டுகிறது என்பதை அவர் விளக்கியிருப்பது தனிச் சிறப்பானது.

இந்திய விவசாயத்தின் சூழல்வானம் பார்த்த பூமியாகவே நீடிக்கிறது. குறிப்பிட்ட பருவகாலத்தில் அதிகமான மனித உழைப்பை இந்த விவசாயச் சூழல் கோருகிறது. தேவைப் படுகிற அந்த பருவ காலத்தைத் தவிர்த்து, மற்ற காலங்களில் பட்டியல் சாதியினரை அப்படியே சிறைப் பிடித்தது போல வைத்திருக்க வேண்டியிருக்கிறது. அந்தப் பணியைச் செய்கிற சுரண்டல் கருவிதான் தீண்டாமை. இந்திய சாதி சமூகம்தான் இந்தக் கருவியை வடிவமைத்தி ருக்கிறதுஎன்கிறார் பி.எஸ். கிருஷ்ணன்.

தீண்டாமையின் பரிணாம வளர்ச்சியாகவே வன்கொடுமைகளை உருவகப்படுத்துகிறார் அவர். பழங்காலத்திலும் வன்கொடுமைகள் நடந்திருந் தாலும், சுதந்திர இந்தியாவின் நவீன சுரண்டல் ஆயுதங்கள் அவை என்கிறார் அவர். பழங்கு டிகளின் வாழ்நிலையை தலித்துகளின் வாழ்நிலை யோடு தனித்துப் பிரித்து காட்டுகிறார். தனித்து ஒதுக்கிவைக்கப்பட்டு, நலிந்த நிலைமைக்கு ஆளாக்கப்பட்டு அவர்கள் இருப்பதும் சுரண் டலின் விளைவுதான் என்கிறார்.

தலித்துகள், பழங்குடிகள் மட்டுமல்ல, மனிதக் கழிவு அகற்றுவோரில் தலித்துகள் அல்லாதோர், மத சிறுபான்மையோர், குற்றப் பரம்பரை இழிவு சுமத்தப்பட்டோர், கைத்தொழில் கலைஞர்களின் சாதிகள், சேவை சாதிகள் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட சமூகப் பிரிவினரை  இந்திய சாதி சமூகம் சுரண்டுகிற விதம் பற்றியும் அவர் விளக்கியிருக்கிறார்.

பல நூற்றாண்டுகளாகத் தொடர்கிற சாதி சமூகத்தின் சுரண்டலின் பாதிப்புகள், இந்திய சமூகத்தின் பெரும்பான்மை மக்கள் மீதுசமூக அளவில்  பிற்படுத்தப்பட்ட வாழ்நிலைஎன்ற சமூக யதார்த்தத்தை சுமத்தியிருக்கின்றன. முன்னேறிய சாதிகளின் வாழ்க்கைத் தரத்துக்கு சமமாக, அடித்தள சாதிகளின் வாழ்க்கைத் தரத்தை சமப்படுத்தினால்தான் அதை சரி செய்ய முடியும் என்கிறார் பி.எஸ். கிருஷ்ணன்.

அதை எந்த மக்கள் சக்தி சாதிக்கும்? அவர்களை எவ்வாறு அணிதிரட்டுவது?  “பட்டியல் சாதிகள், பழங்குடிகள், இழப்பதற்கு ஏதுமற்றவகையில் மிகவும் கடுமையாக பிற்படுத்தப்பட்டிருக்கிற சாதிகள்ஆகியவற்றின் கூட்டுச் சக்தியை பி.எஸ்.கிருஷ்ணன் முன் வைக்கிறார். அவற்றின் மத்தியில் உள்ள நட்பு முரண்களுக்கு தீர்வு காண முடியும் என்கிறார். அவர்களை அணி திரட்டுவது சமூக மாற்றத்தை நோக்கிய தொடக்கமாக இருக்கும் என்கிறார்.

இத்தகைய சிந்தனையோட்டம் இந்திய சமூகத்தில் நீண்டகாலமாக விவாதிக்கப்படுகிற ஒரு விவாதத்தின் வளர்ச்சியடைந்த நிலைதான்.

ரஷ்ய அதிபர் லெனினை, இந்தியாவிலி ருந்து போய் சந்தித்தவர்களில் உத்தரப்பிரதே சத்திலிருந்து போன அப்துர் ரப்பார் என்பவரின் பெயர் வரலாற்றில் பதிந்திருக்கிறது. இந்தியாவின் Depressed Classes (தாழ்த்தப்பட்டோர்) எனப் படும் மக்களைத் திரட்டினால் சமூக மாற்றத்தை உருவாக்கிவிடலாம் என்று லெனினிடம் அப்துர் ரப்பார் விவாதித்ததாக சான்றுகளை முன்வைத்து விவாதிக்கிறார் மார்க்சிய செயல்பாட்டாளர்  இரா.ஜவஹர்.

இன்னொரு சம்பவமும் உள்ளது. கம்யூ னிஸ்ட் கட்சிகள் இணைந்து உருவாக்கிய உலக அமைப்பாக மூன்றாவது அகிலம் செயல்பட்டு வந்தது. அதன் கூட்டங்களில் இந்திய பிரதிநிதிகள் நடத்திய விவாதங்களின் வழியாக இந்தியாவின் சமூகச் சூழலைப் பற்றிய கணிப்புக்கு அகிலம் வந்தது. “இந்திய சமூகத்தில் வர்க்கங்கள் செங்குத்தாகவும் சாதிகள் குறுக்காகவும் செயல்படுகின்றனஎன்று தனது அறிக்கையில் அது குறிப்பிட்டது என்கிறார் மார்க்சிய செயல் பாட்டாளர் வே.மீனாட்சிசுந்தரம்.

இந்திய சமூகத்தின் தனித்தன்மையைப் புரிந்துகொண்ட செயல்பாடுகள் தேவைஎன்ற குரல்கள் கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்கு உள்ளும் வெளியிலும் பல்வேறு மட்டங்களில் தொடர்ந்து காலகாலமாக ஒலித்துக் கொண்டிருக்கின்றன. அந்தக் குரல்களின் தொடர்ச்சியாகவும் அடுத்த கட்ட வளர்ச்சியாகவும்தான் பி.எஸ்.கிருஷ்ண னின் விவாதமும் வலியுறுத்தல்களும் இந்தப் புத்தகத்தில் உள்ளன. ஆனால், சுமார் 70 ஆண்டு கால விடாமுயற்சியுடன் கூடிய கடும் உழைப்பு அவருடையது என்பதுதான் அவரை மற்றவர் களிடமிருந்து தனித்துக் காட்டுகிறது.

எனது வயதும் அனுபவமும் முதிர்ச்சி யடைந்த காலகட்டத்தில், அம்பேத்கர், காந்தி, பெரியார், நாராயண குரு, காரல் மார்க்ஸ் உள்ளிட்டோர் என்னைக் கவர்ந்தனர். அவர்களது கருத்துகளின் ஒன்றிணைப்பே எனது தத்துவம்என்கிறார் பி.எஸ். கிருஷ்ணன். இந்த முன்னோடிகளோடு மேலும் சிலரையும் இணைத்து, மூன்று வரிசைகளாக அட்டவணைப் படுத்துவதன் மூலம் மக்களின்மகா கூட்டணிக் கும்அவர் அழைப்பு விடுக்கிறார். டாக்டர் அம்பேத்கரை முதன்மையான வழிகாட்டியாக மதிப்பிடுகிற அவர், அம்பேத்கரால் மதிக்கப் பட்ட, சாதி ஒழிப்பையே ஆன்மிகப் பணியாக வாழ்ந்த துறவியர்களை பட்டியல் போடுகிறார். கேரளத்தைச் சேர்ந்த நாராயண குரு (1856-1928), உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த குரு ரவி தாஸ் (தோராயமாக 1450-1520), சுவாமி விவேகானந்தர் (1863-1902), சுவாமி சிரத்தானந்தா (1856-1926), கர்நாடகாவின் பசவேஸ்வரா (1134-1196) மற்றும் அசாம் மாநிலத்தின் ஸ்ரீமந்த சங்கரதேவா (1449-1569) என்று பட்டியலிடுகிறார்.

சமூக நீதியை வாழ்வின் பல்வேறு மட்டங் களிலும் விரிவுபடுத்தி அமல்படுத்தியவர் பி.எஸ். கிருஷ்ணன். உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்னும் முழக்கத்தைப்போன்று, ஆட்டோ ஓட்டுனருக்கு ஆட்டோ சொந்தம், கல் உடைத்தல் உள்ளிட்ட கைவேலைத் தொழிலாளர்களுக்கு அந்தந்த தொழில்களின் ஆதார வளங்களின் மீது முழுமையான முன்னுரிமை என, அவரின் கோரிக்கைள் பன்முகமாக வளர்ந்து விரிகின்றன. முதல் தலைமுறை பட்டதாரிகள் போலவே, முதல் தலைமுறை தொழில் முனைவோர்கள் மீதும் தனிப்பட்ட அக்கறை வேண்டும் என்கி றார். சந்தையை முதன்மைப்படுத்திய அரசாங்கத் தின் பொருளாதாரக் கொள்கைகள், மக்களின் நல்வாழ்வை முதன்மையாகக் கொண்ட கொள்கைகளாக மாறும்வரை, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள் காத்துக்கொண்டிருக்க முடியாது. யார் ஆட்சியதிகாரத்தில் இருந்தாலும், பொருளாதாரக் கொள்கைகள் என்னவாக இருந்தாலும், ஒடுக்கப்பட்டோருக்கான சமூகநீதி, சமூக சமத்துவத்துக்கான போராட்டம் முன்னேறிச் செல்ல வேண்டும் என்கிறார்.

முன்னேறிய சாதிகளுக்குச் சமமாக, ஒடுக்கப் பட்ட சாதிகள் வளர்ச்சியடைய வேண்டும். அதன் மூலம் சமூக சமத்துவம் ஏற்பட்டால்தான், இந்தியா தனது ஒட்டுமொத்த உள்ளார்ந்த ஆற்றலை தன்னு டைய வளர்ச்சிக்காகப் பயன்படுத்த முடியும். இந்தியா வின் அனைத்து மக்களின் முன்னேற்றத்தைத் தடுக்கிற பொது எதிரியாக சாதி இருக்கிறது என்கிறார் அவர்.

சாதியின் மையம் இந்திய சமூகத்தில் இருந் தாலும், பல நாடுகளிலும் சாதியின் பாதிப்புகள் இருக்கின்றன. இனவெறியைப் போலவே சாதிவெறியும் மனித குலத்துக்கு எதிரான குற்றமே எனும் புரிதல்  உலக அளவில்  மெல்ல மெல்ல உருவாகிவருகிறது. தற்போது அமெரிக்க பல்கலைகழகங்கள் தங்களின் வளாகங்களில் சாதி தொடர்பான பாரபட்சங்களுக்கும் தடைகள் விதித்துள்ளன.

இந்தக் காலகட்டத்தில் ஜனநாயகத்துக் காகவும் சமூக நீதிக்காகவும், சமூக மாறுதலுக் காகவும்  போராடுகிறவர்களுக்கு, இந்தப் புத்தகம் பெரிதும் பயன்படும்.

வெளியிட்டிருப்போர்: சவுத் விஷன் புக்ஸ்,

491பி, ஓமேகா பிளாட்ஸ், 4வது லிங்க் ரோடு, சதாசிவநகர், மடிப்பாக்கம், சென்னை 600091.  தொடர்புக்கு - 9445318520