புதுச்சேரி லார்சன்&டியூப்ரோ (எல்&டி)

தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

புதுச்சேரி லார்சன்&டியூப்ரோ (எல்&டி) மூன்று ஆலைகளில் மார்ச் 15 முதல்  ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர் வேலைநிறுத்தம் துவங்கியது. புதுச்சேரியில் கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வரும் லார்சன்&டியுப்ரோ என்கிற  பன்னாட்டு நிறுவனத்திற்கு மெட்டல் ஷாப், ரோலிங் மில், டிஎல்டி, டிம்பர், அலுமினியம் ஷாப் என்கிற நான்கு ஆலைகள் உள்ளன. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்த போதிலும் 150க்கும் குறைவானவர்களே நிரந்தர தொழிலாளர்கள். 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிரந்தரப்படுத்தப்படாமல் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனர். ஒரே இயந்திரத்தில் ஒரே மாதிரியான வேலை பார்த்தாலும் நிரந்தரத் தொழிலாளர் களுக்கும் நிரந்தரமற்ற தொழிலாளர்களுக்கு மிடையே ஐந்து மடங்கு ஊதிய வேறுபாடு உள்ளது.   இங்குள்ள தொழிலாளர்கள் அய்ந்து ஆண்டுகளுக்கு முன்பு எல்&டி ஜனநாயக தொழிலாளர் சங்கத்தைத் (ஏஐசிசிடியு) துவங்கி பணிநிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம், சட்டக் கூலி, 8 மணிநேர வேலை, மிகுதி நேரப் பணிக்கு இருமடங்கு ஊதியம் கோரியபொழுது டிம்பர், அலுமினியம் ஷாப் என்ற ஆலையை நிர்வாகம் மூடிவிட்டது. இதனால் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்தனர். தொழிலாளர் பணிநிரந்தரம் கோரும் போது. நிரந்தரமற்ற தொழிலாளர்களை ஒப்பந்தத் தொழிலாளர் என்ற பொய்யான காரணங்களை சொல்லி நேரடி உற்பத்தியில் ஈடுபடுத்தி அவர்களை ஏமாற்றி வருகிறது. புதுச்சேரி அரசு ஒப்பந்தத் தொழிலாளர் முறையை தடைசெய்ய வில்லை. ஆண்டுக் கணக்கில் காத்திருந்த தொழிலாளர்கள் இறுதி முடிவாக மார்ச் 15 முதல் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆலைகள் அமைந் துள்ள சேதராப்பட்டு தொழிற் பேட்டை, புதுச்சேரி நகரம் முழுவதும் மக்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் பிரச்சார சுவர் எழுத்துக்கள், சுவர் ஒட்டிகள் ஒட்டப்பட்டன. தொழிலாளர் ஒற்றுமையை காட்டும் வகையில் தொழிலாளர் ஒற்றுமைப் பேரணி தொழிற்பேட்டையில் நடத்தி அனைத்து தரப்பு மக்களிடமும் ஆதரவு கோரினர். வேலை நிறுத்த கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 14 அன்று ஏஐசிசிடியு தலைவர்கள் மற்றும் சேதராப்பட்டு அனைத்து தொழிற்சங்கங்கள், தொழிலாளர் ஒருங்கிணைப்பு தலைவர்கள் பங்கேற்ற மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. வேலைநிறுத்தம் துவங்குவதற்கு முதல் நாள் தொழிலாளர் சமரச அதிகாரி முன்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நிர்வாகம், சங்கக் கோரிக்கைகள் ஒன்றைக் கூட ஏற்றுக் கொள்ளாததால் திட்டமிட்டப்படி வேலைநிறுத்தம் மார்ச் 15 முதல் முழுமையாக நடந்து வருகிறது. 15ஆம் தேதியன்றும் இரு சுற்று பேச்சுவார்த்தைகள் தொழிலாளர் துணை ஆணையர், தொழிற்சாலைகள் இணை தலைமை ஆய்வாளர், கொதிகலன்கள், தொழிலாளர் அமலாக்க அதிகாரி கண்காணிப்பாளர் (தொழில்நுட்பம்) ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. தொழிலாளர் துறை சார்பாக சமவேலைக்கு சம ஊதியம் வழங்கவும், சட்டவிரோத ஒப்பந்தத் தொழிலாளர் முறையை நிறுத்தவும் நிர்வாகத்திற்கு அறிவுரை வழங்கப்பட்டது. பதில் எதுவும் அளிக்காமல் நிர்வாகத்தினர் வெளியேறி விட்டனர். நிர்வாகத்தின் மூன்று ஆலைகளிலும் தொழிலாளர் துறை அதிகாரிகள் மூலம் தீவிர ஆய்வுகள் நடைபெறுகின்றன. புதுச்சேரி எல்&டி உற்பத்தி வரலாற்றில் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், ஒப்பந்தத் தொழிலாளர் முறை ஒழிப்பு கோரிக்கைகள் வலியுறுத்தி ஒரே நேரத்தில் மூன்று ஆலைகளிலும் தொழிலாளர் தொடர் வேலைநிறுத்தத்தில் முதல்முறையாக ஏஐசிசிடியு தலைமையில் ஈடுபட்டு வருகிறார்கள். உற்பத்தி 100% நின்றுபோய் உள்ளது. தொழிலாளர் மத்தியில் தொழிற்பேட்டை முழுவதும் நம்பிக்கையும் உற்சாகமும் ஏற்பட்டுள்ளது.