பிரதம மந்திரி மோடி, "கோட்சேவை (காந்தியைப் படுகொலை செய்தவர்) கடவுளாக கருதுகிறார்" என்றும் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அவரால் மீண்டும் ஒருமுறை சென்று பார்க்க இயலுமா என்றும் டிவிட்டர் பதிவின் வழியாக சவால் விட்ட காரணத்தால், குஜராத் மாநில சட்டமன்ற உறுப்பினரும் புகழ்பெற்ற தலித் இயக்கத்தின் தலைவருமான ஜிக்னேஷ் மேவானியை அசாம் காவல்துறையினர் கைது செய்தனர். ஆளும் பிஜேபியின் கையாளாக இந்தியாவின் காவல்துறை செயல்படுகிறது என்பது இதன்மூலம் மீண்டுமொரு முறை நமக்குத் தெரிய வந்துள்ளது. அசாம் காவல்துறையினர் மிக நீண்ட தொலைவு பயணம் செய்து, அவருடைய தொகுதி வரை வந்து அவரை கைது செய்து, அசாமிலுள்ள கோக்ரஜாருக்கு கொண்டு சென்றுள்ளனர். இந்த வழக்கில் அவருக்கு பிணை வழங்கப்பட்ட பிறகு, காவல்துறையின் வாகனத்தில் அவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என ஒரு பெண் காவல்துறை அதிகாரி கூறியதன் அடிப்படையில் மற்றொரு வழக்கை பதிவு செய்து, காவல்துறை மேவானியை உடனடியாக மீண்டும் கைது செய்தது. மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், முதல் வழக்கில் பிணை வழங்குவதற்கான விசாரணை நடந்த போது, இந்த இரண்டாம் வழக்கு பற்றிய எந்தவொரு தகவலையும் காவல்துறை குறிப்பிடவில்லை! மேவானியின் சிறைவாசத்தை நீட்டிக்கவே இந்த இரண்டாம் வழக்கு புனையப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது. மேவானியைக் காவல்துறையின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்கான சாக்குப்போக்காக இரண்டாவது முதல் தகவல் அறிக்கை புனையப்பட்டதாக, பொய்யான ஒன்றாக தோற்றமளிக்கிறது என இரண்டாவது வழக்கில் பிணை வழங்கும் போது, பார்பேட்டா மாவட்ட நீதிமன்றம் கண்டுகொண்டது. அஸ்ஸாம், (அதன் தொடர் விளைவாக) இந்தியாவும் "காவல் துறையின் அரசாக மாறிவிடும்" என நீதிமன்றம் தனது கவலையை வெளிப்படுத்தியது. அசாமில் பரவலாக நிகழும், குற்றம்சாட்டப் பட்டவர்கள் தப்பிக்க முனையும் போது சுடப்பட்டு காவல்துறையால் நிகழ்த்தப்படும் கொலைகளை கவனத்தில் எடுத்துக்கொண்ட மாவட்ட நீதிமன்றம் உயர்நீதிமன்றத்திற்கு சில யோசனை களை தெரிவித்துள்ளது. அதாவது, "சட்டம், ஒழுங்கு பணியில் ஈடுபடும் ஒவ்வொரு காவல் துறையினரும் உடல்களில் பொருத்தப்படும் கேமராக்களை அணிய வேண்டும்; குற்றம் சாட்டப்பட்டவரைக் கைதுசெய்யப்போகும் போதோ அல்லது திருடப்பட்ட பொருளைக் கண்டறிவதற்காகவோ வேறு ஏதாவது காரணத் திற்காகவோ குற்றம் சாட்டப்பட்டவரை ஏதாவது இடத்திற்கு அழைத்துக்கொண்டு போகும் போது காவல்துறையினரின் வாகனங்களில் கண் காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும்; அனைத்து காவல் நிலையங்களிலும் கண் காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும்; அஸ்ஸாம் காவல்துறை தன்னைத் தானே சீரமைத்துக் கொள்ள இது போன்ற நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும் என உயர் நீதிமன்றம் வழிகாட்டலாம் என மாவட்ட நீதிமன்றம் சொல்லியுள்ளது. எதிர்பார்த்தது போன்றே, அசாம் காவல்துறை இந்தத் தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. மேவானிக்கு வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்யாத அதேநேரத்தில், காவல்துறை யினரின் செயல்பாடுகள் குறித்த மாவட்ட நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை உயர் நீதிமன்றம் தடை செய்துள்ளது. இது பரிதாபகர மானதாகும். ஏனென்றால், குடிமக்கள் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடும், நாடு முழுவதும் உள்ள காவல்துறையினர் மற்றும் ஆயுதப் படையினரின் செயல்பாடுகள் குறித்த மாவட்ட நீதிமன்றத்தின் பரிந்துரைகள் அமல் படுத்தப்படுவதற்கு தகுதியானதாகும்.
எந்தவிதமான எதிர்ப்புகளும் பிஜேபியை பெருமளவுக்கு அச்சம் கொள்ள வைக்கிறது என்பதை ஜிக்னேஷ் மேவானியின் கைது நடவடிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. மோடி குறித்த மிகச்சிறிய விமர்சனம் கூட, எதிர்க்கட்சியின் ஒரு சட்டமன்ற உறுப்பினரையே கைது செய்ய காரணமாகியுள்ளது. ஒரு தலித்துக்கு எதிராக, அவர் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டார் என தவறாக குற்றம் சாட்டப்பட்டு, அவர் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது ஒன்றும் தற்செயல் நிகழ்வு அல்ல. அப்படியிருக்க, பாலியல் வன்முறைகள் குறித்து "பொய்யான புகார்களை" அளிப்பதாக பெண்கள் மீது, மேலாதிக்கம் மிகுந்த ஆணாதிக்க உரையாடல்கள் குற்றம் சாட்டுகின்றன. உண்மை என்னவென்றால், பெண்கள் அல்ல; காவல்துறையே இப்படியான பொய்யான வழக்குகளை தாக்கல் செய்கிறது. மேலும் பெரும்பாலான சமயங்களில், தலித்துகளும் ஆதிவாசிகளும் முஸ்லிம் ஆண்களும் தான் காவல்துறையினரால் இதுபோன்ற பொய்யான பாலியல் வன்முறை வழக்குகளில் குற்றம் சாட்டப்படுகின்றனர். இந்த ஒடுக்கப்பட்ட, சிறுபான்மை சமூகத்தை சார்ந்த ஆண்களை பாலியல் ரீதியில் அபாயகரமானவர்கள் என மனுஸ்மிருதியே வகைப்படுத்தியுள்ளது. இந்து மேலாதிக்கவாத அரசியலால் ஊதிப் பெரிதாக்கப் படும் இன்றைய மனுவாத அமைப்பு முறை, இது போன்ற தவறான கருத்துக்களை மறு உற்பத்தி செய்கிறது. காவல்துறையினரின் கொடூர மிருகத்தனத்திற்கு இந்தியா அவப்பெயர் பெற்றுள்ளது. இந்த நாட்டில், ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய ஐந்து நபர்கள் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும்போது உயிரிழக் கிறார்கள். பொய்யான வாக்குமூலங்களை பெறுவதற்காக நிகழ்த்தப்படும் காவல்துறையின் சித்திரவதை பரவலாக உள்ளது. பார்பேட்டா மாவட்ட நீதிமன்றம் கவனப்படுத்தியது போன்று காவல்துறையினரின் கட்டுப்பாட்டின் கீழ் நடக்கும் கொலைகள் எப்போதுமே ஒரு "திரைக்கதை"யைப் பின்பற்றுகின்றன. அது, மீண்டும் மீண்டும் திரும்பத் திரும்ப நிகழ்கிறது. "இந்த மாநிலத்தில் தினசரி சம்பவங்களாக ஆகியிருக்கின்ற, குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்யும் போது; நடுஇரவில் குற்றம்சாட்டப் பட்டவர் காவல் துறையினரின் கட்டுப்பாட்டில் இருந்து தப்பிக்க முனையும்போது; ஏதோ ஒன்றை கண்டுபிடிப்பதற்காக குற்றம்சாட்டப் பட்டவர் காவல்துறையினரை அழைத்துக் கொண்டு செல்லும் போது; அப்படி குற்றம் சாட்டப்பட்டவர்களை காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி, கொல்வது அல்லது காயப்படுத்துவது; என்பது போன்று காவல் துறையினர் சொல்லிக்கொள்ளும் நிகழ்வுகளில் காவல்துறையினருக்கு சாதகமான நன்மதிப்பைப் பெற்றுத் தருவதற்காக" மேவானி மீது காவல் துறையினர் தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கைகள் போன்ற பொய்யான முதல் தகவல் அறிக்கைகள் தாக்கல் செய்யப்படுகின்றன என இந்த நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. நரேந்திர மோடி முதலமைச்சராக இருந்த போது, காவல்துறையினரின் கட்டுப்பாட்டின் கீழ் முஸ்லீம் ஆண்கள் கொலை செய்யப்பட்டபோது, அவற்றை உடனடியாக கிடைத்த "நீதி"யின் வடிவமாக அவர் கொண்டாடினார். "குற்றவாளி களை நாம் என்ன செய்வது?" என்ற கேள்விக்கு, "அவர்களைக் கொல்லுங்கள்" என ஊர்வலங் களில் பெரும் கூட்டத்தைப் பதிலளிக்க வைத்தார். அதேபோன்று, காவல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் நடைபெறும் கொலைகளை உத்தரப்பிரதேசத்தின் யோகி ஆதித்யநாத்தும் கொண்டாடினார். அவருடைய முதல் ஐந்து ஆண்டு ஆட்சியில், முஸ்லீம் "குற்றவாளி"களின் வீடுகள் தரைமட்டமாக்கப்படும் என்ற அச்சுறுத்தல்களுக்கு "புல்டோசர் நீதி" என்ற வார்த்தையை பிரபலப்படுத்த முயற்சித்தார். அதேபோன்று அரங்கேற்றப்பட்ட என்கவுண்டர் கொலைகளை "என்கவுண்டர் நீதி" என்கிறார்.
டெல்லியில், அமைதி வழியில் போராட் டத்தில் ஈடுபடும் பெண் போராட்டக்காரர்களை தடுப்புக்காவலில் கைது செய்யும் சமயங்களில், அவர்களை பாலியல் ரீதியாக தொல்லைக் குட்படுத்துவது, அவமானப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளில் டெல்லி காவல்துறையினர் ஈடுபடுவதாக தொடர்ச்சியான புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. காவல்துறையினரின் வன்முறைகள், சித்ரவதைகள், கொலைகள் என்ற அவமானகரமான நோயைத் தடுக்க, அடிப்படை உரிமைகளின் பாதுகாவலனான நமது உயர்மட்ட நீதித்துறை, உடலில் பொருத்தப்படும் கேமராக்கள், காவல் நிலையங்களில் காவல் துறையினரின் வாகனங்களிலும் கண்காணிப்புக் கேமராக்களை பொருத்துவதைக் கட்டாயமாக்க மறுக்கிறது. அமெரிக்காவில், நிராயுதபாணியான கறுப்பின குழந்தைகள், ஆண்கள், பெண்கள் மீது காவல் துறையினரால், அவர்களின் கட்டுப் பாட்டில் இருக்கும் போது கொலைகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. குற்றமிழைத்த காவல் துறையினர் பாதிக்கப்பட்டவரால் உண்மை யிலேயே அபாயத்தில் இருந்ததாக உணர்ந்தார்கள் என்று அரசு வழக்கறிஞர்களாலும், நீதிபதிக ளாலும் காரணம் சொல்லப்பட்டு, பல நேரங்களில் மன்னித்து விடப்படுகிறார்கள். ஆனால், இதைப்போன்ற கொலைகளுக்கு எதிரான போராட்டங்களின் விளைவாக, காவல்துறையினர் உடலில் பொருத்தப்படும் கேமராக்களை அணிய வேண்டும் என்றும் கொலையோ அல்லது வேறு எந்த விதமான வன்முறையோ நிகழ்ந்தது என்றால், கேமராவில் பதிவான காணொளிகளை பொதுமக்களுக்கு காண்பிக்க வேண்டும் என்ற தேவை அதிகரித் துள்ளது. ஜிக்னேஷ் மேவானிக்கு ஒருமைப் பாட்டையும், ஆதரவையும் நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், பழிவாங்கும் நோக்கி லான கைது நடவடிக்கைகள், பேச்சு சுதந்திரத்திற் கான தடை, பொய்யான முதல் தகவல் அறிக்கைகள் ஆகியவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்ட சட்டமன்ற உறுப்பினரே கூட பாதுகாப் பற்ற நிலையில் இருக்கும், மோடி ஆட்சியின் காவல்துறை அரசு, முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்று கோருகிறோம்.
எம்எல் அப்டேட் & தலையங்கம்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)