தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் மின்வெட்டுகள் இருப்பதாகச் செய்திகள் வெளிவருகின்றன. கோடை கால வெயில் சுட்டெரிக்க, மின் வெட்டால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கடும் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். ஏன் இந்த திடீர் மின்வெட்டு?
மின்வெட்டு மீதான அரசியல் விவாதங்கள்
பாஜக தலைவர் அண்ணாமலை 'தனியார் முதலாளிகளிடம் மின்சாரம் வாங்க செயற்கை யாக மின்தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறது' என்று சொல்ல, முன்னாள் முதல்வர் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, 'நிர்வாகச் சீர்கேடுகள் தான் காரணம்' என்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'மத்திய தொகுப்பில் இருந்து வரவேண்டிய மின்சாரத்தில் பற்றாக்குறை ஏற்பட்டதும் தமிழ்நாட்டு அனல் மின் நிலையங்களுக்கு மத்திய அரசு தரவேண்டிய நிலக்கரி அளவு குறைக்கப்பட்டதால் கரித் தட்டுப்பாடு ஏற்பட்டு உற்பத்தி சில நிலையங் களில் நிறுத்தப்பட்டது' எனக் கூறுகிறார்.
அனல்மின் நிலையங்களுக்கான நிலக்கரித் தட்டுப்பாடு பிரச்சினை பற்றி வேறு மாநில முதல் வர்களும் மின்வாரிய பொறியாளர் அமைப்பு களும் எழுப்பியுள்ள கருத்துக்களையும் கவனத் தில் கொண்டு இப்பிரச்னையைப் பரிசீலனை செய்ய வேண்டியுள்ளது.
கோடையில் நிலக்கரி பற்றாக்குறையின் முக்கியத்துவம்:-
நாடு முழுவதும் கோடைக் காலத்தில் நிலவுகிற மின்வெட்டிற்கு, அனல்மின் நிலையங் களுக்கான நிலக்கரி பற்றாக்குறை பெரியதொரு பிரச்சினையாக மாறியிருப்பது உண்மைதான். கோடைகாலத்தில் நீர்மின் நிலையங்கள் வழியிலான புனல் மின்சார உற்பத்தி கடுமை யாகச் சரிகிறது. மாற்று மின்சார உற்பத்தியான காற்றாலை மின்சாரம் பருவநிலை சார்ந்த உற்பத்தி என்பதால் கோடை காலத்தில் பெரியளவு கிடைப்பதில்லை. ஆனால், சூரிய ஒளி மின்சாரம் பகல் நேரத்தில் கிடைக்கிறது. எனவே, அனல் மின்சாரம் மட்டுமே கோடைக்காலத்தில் உச்சபட்ச மின்தேவையை ஈடு செய்யும் வழி முறையாக இருப்பதால், அதற்கான நிலக்கரி தட்டுப்பாடு மிகமிக முக்கியமான அரசியல் விவாதமாக உருவெடுக்கிறது.
தமிழ்நாட்டின் குறிப்பான நிலைமை
நடப்பு ஆண்டில், தமிழ்நாட்டின் கோடைக்கால தினசரி மின்சார தேவை 17,000 மெகாவாட்டாகும். ஆனால், தமிழ்நாட்டின் மொத்த மின்சார உற்பத்தி திறன், தமிழ்நாட்டு அரசின் சொந்த உற்பத்தியில் கிடைக்கும் மின்சாரம், மத்திய (அரசின்) தொகுப்பு வழியாக பெறும் மின்சாரம், தனியார் மின்சார முதலாளிகளிடமிருந்து வாங்கும் மின்சாரம் ஆகியவற்றை தெரிந்து கொள்வது அவசியமாகும். அனல் மின்சாரம், புனல் மின்சாரம், அணு மின்சாரம் மற்றும் காற்றாலை, சூரிய ஒளி போன்ற மாற்று மின்சாரம் ஆகியவை தான் மின் உற்பத்திக்கான பொதுவான வழிமுறைகள் ஆகும்.
தமிழ்நாடு அரசின் தினசரி அனல், புனல் மின்சார உற்பத்தி திறன் 7145 மெகாவாட் ஆகும். அனல் மின் நிலையங்கள் 4845 மெகாவாட், நீர்மின் நிலையங்கள் 2300 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்டதாகும். இவற்றில் அனல்மின் நிலையங்களில் தொழில்நுட்ப பிரச்சினைகள் எதுவுமில்லை எனின் பொதுவாக சராசரியாக தினசரி 4000 மெகாவாட் உற்பத்தியாகிறது. கோடை காலத்திலும் நீர்மின் நிலையங்கள் சுமார் 1000 மெகாவாட் உற்பத்தியை தருகின்றன. அதாவது தினசரி 5000 மெகாவாட் மட்டுமே தமிழ்நாட்டின் சொந்த மின்சார உற்பத்தியாகும். சுமார் 7000 மெகாவாட் மத்திய அரசின் தொகுப்பில் இருந்து தமிழ்நாடு அரசு வாங்குகிறது. (தமிழ்நாட்டுக்குள் மத்திய அரசின் பொதுத்துறை அனல் மின் நிலையங்கள் உற்பத்தி 4500 மெகாவாட்டிற்கு கூடுதலாகவும், அணு மின்சார உற்பத்தி சுமார் 1500 மெகாவாட் அளவிலும் உற்பத்தி செய்து வருகிறது.)
இதுவல்லமால், அன்றாடத் தேவைக்காக, தனியார் மின்சார முதலாளிகளிடமிருந்து 4300 மெகாவாட்டிற்கு கூடுதலாகவும் மின்சாரம் வாங்கப்படுகிறது. இவற்றில் நீண்ட கால ஒப்பந்தத்தில் வாங்கப்படும் சூரிய ஒளி மின்சாரம் 2800 மெகாவாட்டும், மிறிறி எனப்படும் தனியார் மின் நிலையங்கள் மூலம் வாங்கப்படும் 1000 மெகாவாட் அனல் மின்சாரம் குறிப்பிடத்தக்க தாகும். இதுவல்லாமல், பீக் ஹவர் நெருக்கடி களைச் சமாளிக்க பவர் எக்சேஞ்சுகள் மூலமாக எக்கச்சக்கமான விலைக்கு வாங்கும் தனியார் மின்சார கொள்முதல் இப்போது அரசியல் கட்சிகள் மத்தியில் பலத்த விவாதங்களுக்கு உள்ளாகிறது. ஆகத் தனியார் மின்சாரக் கொள்முதல் என்பது நீண்டகாலத் தொடர் கதையாக நீடிக்கிறது.
தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான அனல்மின் நிலையங்கள் நிலக்கரி தட்டுப்பாட்டுக்குள் சிக்கும்போது, சிலமணி நேர மின்வெட்டுக்கள் பலத்த அரசியல் சர்ச்சைகளை உருவாக்குகிறது.
'தனியார் மின்சார முதலாளிகள் இலாபம் சம்பாதிக்க செயற்கையாக இந்த மின் தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறது' என்ற பாஜக வின் குற்றச்சாட்டுகளில் பொருள் இல்லை. பத்தாண்டுகளுக்கு முன்னர், முதன்மையாக மின்வெட்டுப் பிரச்சினையால் தனது ஆட்சியை இழந்த திமுக அரசானது மீண்டும் ஒரு மின்வெட்டுப் பிரச்சினையை தானே உருவாக்கி கொள்வதற்கு வாய்ப்பு இல்லை.
மஹாராஷ்டிரா, குசராத், உபி எனப் பல்வேறு மாநிலங்களிலும் நிலக்கரி தட்டுப் பாட்டால் மின்வெட்டுகள் உருவாகியுள்ளன. அதற்கு காரணமாக சொல்லப்படுவது போதிய நிலக்கரி கையிருப்பு இல்லை என்பதாகும்.
வழக்கமாக, ஒரு மாத நிலக்கரித் தேவையை அல்லது சுமார் 1.5 இலட்சம் மெட்ரிக் டன்கள் நிலக்கரியை இருப்பு வைத்திருக்கும் தமிழ் நாட்டின் நிலக்கரி கையிருப்பு இரண்டு, மூன்று நாட்கள் கையிருப்பு தான் என எப்போது மாறியது ? மோடி அரசாங்கம் மாநிலங்களில் உள்ள அனல் மின் நிலையங்கள் கையில் வைத்திருக்கும் நிலக்கரி இருப்புக்கு கட்டுப்பாடுகளை கொண்டு வந்ததால், கடந்த எடப்பாடி பழனிசாமி அரசாங்கத்தில், தமிழ்நாடு மின்வாரிய சேர்மேன் ஆக பங்கஜ் குமார் பன்சால் இருந்த காலத்திலேயே தமிழ்நாட்டு அனல்மின் நிலையங்களின் நிலக்கரி கையிருப்பு குறைக்கப்பட்டுவிட்டது. மேலும், கோல் இந்தியா உடனான மாநில அரசுகளின் நேரடி கொள்முதல் தடுக்கப்பட்டு, பாஜக அரசால் இடைத் தரகர்கள்/ வியாபாரிகள் உருவாக்கப்பட்டனர்.
நிலக்கரி கையிருப்பு குறைக்கப்பட்டதற்கான காரணங்கள்:
இந்தியாவில் உள்ள 173 அனல் மின் உற்பத்தி நிலையங்களில் 96 ஆலைகளில் நிலக்கரி தட்டுப்பாடு நிலவுகிறது. 76 ஆலைகள் உள் நாட்டு நிலக்கரியை கொண்டும், 11 ஆலைகள் இறக்குமதி நிலக்கரி மூலமாகவும் இயங்கு கின்றன. 2022 ஏப்ரல் 13, நிலவரப்படி 173 அனல் மின் நிலையங்களில் நிலக்கரி கையிருப்பு 23.17 மில்லியன் டன்கள் மட்டுமே இருந்தது. ஆலைகளுக்கான ஒரு நாள் நிலக்கரி தேவை 2.76 மில்லியன் டன்கள் என்பதால் மொத்த கையிருப்பும் ஒன்பது முதல் பத்து நாட்கள் வரையே இருக்கும். ஆனால், மத்திய அரசின் விதிமுறைகள்படி மின் உற்பத்தி நிலையங்கள் சராசரியாக குறைந்தது 24 நாட்கள் அளவுக்கு நிலக்கரி இருப்பை வைத்திருக்க வேண்டும். கடந்த ஆண்டு இறக்குமதி நிலக்கரியின் விலை அதிகரித்ததால் பெரும்பாலான நிறுவனங்கள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் நிலக்கரியை சார்ந்ததால், நிலக்கரி கையிருப்பு என்பது தொடர்ந்து மிகக் குறைவாகவே மாறியது. எனவே, மோடி அரசு "திருத்தப்பட்ட நிலக்கரி இருப்பு விதிமுறைகளை" வெளியிட்டது. இதன் விளைவாக, ஒரு மாத நிலக்கரி கையிருப்பு வைத்திருந்த மாநிலங்கள் 3 அல்லது 4 நாட்கள் உற்பத்திக்கான நிலக்கரியை மட்டுமே கையிருப்பில் வைத்திருக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டன. விளைவாக, அதிக விலையில் வெளிநாடுகளில் இருந்து நிலக்கரியை இறக்குமதி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டன. அவசரத்துக்கு மின்சாரத்தை கொள்முதல் செய்வதற்கும் தள்ளப்பட்டன.
இப்படியாகத்தான் கார்ப்பரேட் மின்சார சக்கரவர்த்திகளின் கரங்கள் ஓங்குகின்றன. என்டிபிசி, அதானி, டாடா, ஜிண்டால் மற்றும் டொரொண்டோ ஆகியவை மிகப் பெரும் சாம்ராஜ்யங்களை கட்டமைத்துள்ளன. தனியார் மின் உற்பத்தி மற்றும் விநியோகம் இந்தியாவில் அதிகரித்து வரும் போக்காகும். தற்போது அதானி பவர் என்டிபிசிக்கு அடுத்த மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
அதானி நிலக்கரி நிறுவனத்தின் எழுச்சி:-
அதானி நிலக்கரி எண்டர்பிரைசஸ், 90 மில்லியன் டன்கள் வரை நிலக்கரியை உற்பத்தி செய்வதற்கான ஆற்றல் மிக்க மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுக்கிறது. அடுத்த 30 ஆண்டுகளில் 3 பில்லியன் டன்களுக்கு மேல் இருப்பு வைத்திருந்து மாநில மின்சார வாரியங்கள் சுமார் 18,000 மெகாவாட் மின்சா ரத்தை உற்பத்தி செய்யப் போதுமான நிலக்கரி வழங்கும் மாபெரும் தனியார் நிறுவனமாகவும் உருவெடுக்க உள்ளது. இந்தியாவை முதன் மையான சந்தையாக குறிவைத்துதான், அதானி குழுமம் ஆஸ்திரேலியாவில் நிலக்கரிச் சுரங்கங்கள் வாங்கியது. கூடுதலாக, நாடெங்கும் அதானிக்கு பல துறை முகங்கள் உள்ளன. எனவே, நிலக்கரி இறக்குமதியின் மீதும் கூட அதானியின் பிடியுள்ளது. அதானியின் துறைமுகங்கள் அருகில் புதிதாக மென்மேலும் அனல்மின் நிலையங்கள் உருவாக்கப்படும் திட்டங்களும்கூட அதானி யிடம் உள்ளது.
தமிழ்நாட்டின் உண்மையான சிக்கல் என்ன?
நிலக்கரி பற்றாக்குறை, அனல் மின்னுற் பத்தியில் சரிவு, அதனால் மின்வெட்டும் அதற்குப் பின்னுள்ள, ஆதாயம் பெறுகிற கார்ப்பரேட் மின்சார முதலாளிகளின் அரசியல் பொருளாதாரம் பற்றி பார்த்தோம். இத்தகைய கார்ப்பரேட் முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையே நிலையான, நிரந்தரமான தீர்வுக்குத் தடையாக திகழ்கின்றன. மத்திய ஆட்சியாளர்களின் கொள்கைகளால், அரசு நிறுவனங்களின் மூலமான மின் உற்பத்தி மற்றும் விநியோகம் என்பது தலை கீழாக மாற்றப்பட்டு, தனியார் மின் முதலாளிகளின் உற்பத்தி மற்றும் விநியோகம் மேலோங்கிய போக்காக வளர்ந்து வருகிறது. அதற்கான கொள்கைகள் மற்றும் மின்சார திருத்தச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டுக்கு கோடைக் காலத்தில் சுமார் 17,000 மெகாவாட் வரை தினசரி மின்சாரம் தேவைப்படுகிறது; ஆனால், அரசுக்கு சொந்தமான தினசரி மின் உற்பத்தி (அனல், புனல் மின்சாரம் உட்பட) 7000 மெகாவாட் என்றளவில் இருக்கிறது. தமிழ்நாட்டின் மொத்த மின் தேவையில் ஏறக்குறைய 35% மட்டுமே, தமிழ்நாடு மின்சார வாரியம் மூலமாக உற்பத்தி யாகிறது. தமிழ் நாட்டின் தேவைக்கேற்ப புதிய மின் நிலையங் களை அமைக்க தடையாக இருப்பது புதிய மின்சார சட்டமும் மத்திய அரசின் ஒழுங்குமுறை ஆணையமும் ஆகும்.
பத்தாண்டுகளுக்கு மேலாக, உடன்குடி, உப்பூர், வடசென்னை-3 ஆகிய திட்டங்கள் முழுமையடையாமல் நிலுவையில் உள்ளன. இவற்றில் சுற்றுச்சூழல், நிலம் கையகப் படுத்துவதில் உள்ள சிக்கல்கள் ஒருபுறமிருப் பினும், புதிய மின்சாரத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கக் கூடாது எனும் புதிய மின்சாரச் சட்டம் மிகப் பெரிய தடைக் கல்லாக உருவாகியுள்ளது. மத்திய ஒழுங்குமுறை ஆணையம் உருவாக்கப் பட்டு அதன் கீழ் மாநில ஒழுங்குமுறை ஆணையங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. மின் நிலையங்களுக்கான நிதி ஒதுக்கீடு இவற்றின் வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டுவிட்டது. எனவே, புதிய மின் திட்டங்களை அமலாக்க நிதிப்பிரச்சினை பெரிதாக உருவானது. இத்தகைய பின்னணியில் தான், பாஜவுக்கு பினாமியாகவே வாழ்ந்த கடந்தகால எடப்பாடி பழனிசாமி அரசாங்கம் மின்னுற்பத்தி திட்டங்களை நிறைவேற்ற முழுமனதுடனும், அரசியல் உறுதியுடனும் செயல்படவில்லை. கூடுதலாக, மாநில மின்வாரியங்களை எல்லாம் தனியார்மயம் ஆக்கும் நோக்கத்தோடு நிலக்கரி ஒதுக்கீடு மற்றும் மின் கொள்முதல் போன்றவைகளையும் மத்திய அரசு கையாண்டு வருகிறது. பீக் ஹவர் மின்சார விற்பனை மற்றும் பரிவர்த்தனையில்/ பவர் எக்ஸ்சேஞ்சில், தனியார் மின் நிறுவனங்கள் என்ன விலை வைத்தாலும் அதை வாங்க வேண்டிய நிலையை மாநிலங்களுக்கு ஏற்படுத்தியும் இருக்கிறது, மத்திய பாஜக அரசு. அதானி மட்டுமல்லாமல், மின்சாரம் விற்கும் பல்வேறு தனியார் மின்சார நிறுவனங்களுக்கும் பாஜகவுக்கும், ஆட்சியாளர்களுக்கும் நெருக்க மானத் தொடர்புள்ளது. இப்படியான நெருக்க டிகளைப் பயன்படுத்தி, மாநில மின் வாரியங் களை தனியார் மயமாக்க முயற்சிகள் நடப்பதன் வெளிப்பாடு தான் தற்போதைய தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நிலவும் மின் வெட்டின் பின்னுள்ள அரசியல் பொருளாதார மாகும்.
தனியார் கார்ப்பரேட் சூறையாடலில் இருந்து தப்பிக்க, தமிழ்நாட்டின் சொந்தமான மின் உற்பத்தியை உயர்த்துவது என்பது வெறும் நிலக்கரி தட்டுப்பாடு பிரச்சினை மட்டுமல்ல, கார்ப்பரேட் சேவகர்களான பாஜக அரசுக்கு எதிரான மாநில உரிமைகளை உறுதி செய்து கொள்வதற்கான தமிழ்நாட்டின் அரசியல் பிரச்சினையும் ஆகும். மாநில உரிமைகளுக்காக குரல் கொடுப்பதுடன், கார்ப்பரேட் கொள்ளைக்கு வழிவகுக்கும் புதிய மின்சார (திருத்த) சட்டம் ரத்து செய்யப் படுவதற்கான இயக்கத்தையும் கட்டமைப்பதும் திமுக அரசாங்கத்தின் முன்னுள்ள கடமையாகும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)