தமிழகத்தில் காலூன்றிடத் துடிக்கும் பாஜக புதுப்புது அவதாரங்களை எடுப்பதும் புதுப்புது பிரச்சினைகளை உருவாக்குவதும் பிரபலங்களை (பிரபல ரௌடிகளையும்கூட) கட்சிக்குள் இழுப்பதும் அவர்களைக் கொண்டு மோடி புகழ் பாட வைப்பதும் அன்றாடம் நடக்கும் முயற்சிகள் என்றாலும், கடந்த ஏப்ரல் மாதம் ராஜாக்கள் இருவர் (பிரதம)மந்திரிக்கு பல்லக்குத் தூக்கி பல்லவி பாடியதுதான் பாஜகவின் கோயபல்ஸ் பரப்புரைப் புத்தியையும் ராசாக்களின் அறியாமையின் உச்சத்தையும் படம்பிடித்துக் காட்டியிருக்கிறது.
இளமைக்காலம் முதல் இன்று வரை இசைக் குறிப்புகள் மட்டுமே எழுதி வந்த ‘இசைஞானி’ இளையராஜா முதன்முதலாக ஒரு புத்தகத்திற்கு முன்னுரை எழுதிக் கொடுத்தார். ஒரு புத்தகத்தைப் படித்து அதற்கு முன்னுரை எழுதுவது என்பது அவர் உரிமை, விருப்பம். அவரை எழுதக் கேட்டுக் கொண்டவர்களின் உரிமை, விருப்பம். அம்பேத்கரின் 152ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, புளு க்ராஸ் டிஜிட்டல் பவுண்டேசன் என்ற அமைப்பு “அம்பேத்கரும் மோடியும் & சீர்திருத்தவாதிகளின் கருத்துக்களும் செயற்பாட் டாளர்களின் அமலாக்கமும்” (Ambedkar & Modi - Reformer's, Performer's Implementation) என்ற புத்தகத்திற்குத்தான் இளையராஜா முன்னுரை எழுதிக் கொடுத்துள்ளார். அந்த புத்தகம் அம்பேத்கருக்கு நிகராக மோடியைச் சித்தரித்துள்ளது. அதற்கேற்ப முன்னுரை எழுத வேண்டும் என்பதற்காக இளையராசாவும், “மேக் இன் இந்தியா & திட்டம் பல்வேறு சாதனைகளை படைத்து இருக்கிறது. இந்தியாவில் சாலைகள், ரயில் போக்குவரத்து, மெட்ரோ ரயில், விரைவு பாதைகள் போன்றவை உலகத் தரத்துடன் அமைக்கப்பட்டு உள்ளன. உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. சமூக நீதியை எடுத்துக் கொண்டால், பல்வேறு சட்டங்களை பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார். பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைத்ததன் மூலமாக சமுதாயத்தில் பின் தங்கிய மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி சட்டரீதியாக பாதுகாப்பை வழங்கி இருக்கிறார். வீடுகள் கழிப்பிடங்களை கட்டிக் கொடுத்ததுடன் ஏழைகளின் வாழ்க்கையையும் முன்னேற்றி இருக்கிறார்” என அந்த முன்னுரையில் இசைஞானி குறிப்பிட்டுள்ளார்.
இந்த முன்னுரையை அவர் எழுதுவதற்கு முன் திரைத்துறையில் இருப்பவர்களிடம், அதுவும் இசைஞானியை பெரிதும் மதிக்கும் பிரகாஷ்ராஜ், சித்தார்த் போன்றவர்களிடமாவது இளையராஜா ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம். ஆனால், அது அவருக்கு இயலாத காரியம். தனக்கு எல்லாம் தெரியும் என்கிற இறுமாப்பு. குறைந்த பட்சம் நாட்டில் யதார்த்தத்தில் என்ன நடக்கிறது என்பதையாவது தெரிந்து கொண்டு அதன் பின்னர் எழுதியிருக்கலாம். மோடியின் திட்டங்கள் இப்போது யாருக்குப் பயன்பட்டுக் கொண்டிருக்கிறது-? மேக் இன் இந்தியா திட்டத்தால் மேம்பட்டுக் கொண்டிருப்பவர்கள் யார்? யார்? நாட்டில் பெட்ரோல், டீசல், காஸ் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டிருக்கும் போது, இவரின் இசையை மட்டுமே உயிர் மூச்சாகக் கொண்டு கால் வயிற்றுக் கஞ்சிக்குக் கூட வழியில்லாமல் அன்றாடங்காய்ச்சிகளாக வாழ்பவர்கள் நிலை என்ன? என்று கொஞ்சம் விசாரித்துப் பார்த்து விட்டாவது எழுதியிருக்க லாம் இசைஞானி.
“பிரதமர் மோடி அரசு பெண்களின் திருமண வயதை உயர்த்த முடிவெடுத்து இருப்பதால் கிராமபுற பெண்கள் படிப்பைத் தொடர முடியும். இலவச எரிவாயு திட்டம், பெண்கள் குழந்தை களின் பாதுகாப்புக்காக பிரதமர் மோடி கொண்டு வந்துள்ள திட்டங்களே நினைவுக்கு வருகின்றன. குழந்தைகளை காப்போம், குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தாலும் முத்தலாக் கிற்கு எதிரான சட்டத்தின் மூலமாகவும் பெண்கள் வாழ்வில் மாற்றத்தை பிரதமர் மோடி ஏற்படுத்தி யுள்ளார். இதனை கண்டு அம்பேத்கரே பெருமைப்படுவார்” என்று எழுதியிருப்பதுதான் அறியாமையின் உச்சம்.
காஷ்மீரில் கோயில் கருவறைக்குள் சிறுமியைச் சீரழித்துக் கொன்ற மோடியின் பக்தர்கள் பற்றி, உத்தரப் பிரதேசத்தில் உன்னாவ் கிராமத்தில் 17 வயது தலித் பெண்ணை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கி காவல் துறையின் துணையுடன் எரித்துக் கொன்ற பாஜக சங்கிகள் பற்றி, ‘நீட்’ தேர்வால் தமிழ்நாட்டில் செத்துக் கொண்டிருக்கும் அனிதாக்கள் பற்றி, இலவச எரிவாயுத் திட்டம் அறிவித்து விட்டு எரிவாயுக்கு விலை கொடுக்க முடியாமல் தவிக்கும் கிராமப்புறப் பெண்கள் பற்றி, ‘குழந்தைகளைக் காப்போம், குழந்தைகளுக்குக் கற்பிப்போம்’ திட்டத்திற்கு தன் பெயரில் ‘நமோ ஆப்’பை உருவாக்கி மக்களிடமே நன்கொடை பெற்று அதை தன் கட்சிக்குப் போகும்படி செய்துள்ளது மட்டுமின்றி, அது பற்றிய எந்தவொரு விவரமும் அரசாங்கத்திடம் இல்லாமல் செய்துள்ளது பற்றி, இந்த திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 80% (ஐந்து ஆண்டுகளில் ரூ.622.48 கோடியில் ரூ.446.72 கோடி) பிரதமந்திரியின் படம் போட்ட விளம்பரத்திற்கே பயன்படுத்தப்பட்டுள்ளது பற்றி யெல்லாம் கொஞ்சமாவது தெரிந்து கொண்டு முன்னுரை எழுதியிருக்கலாம் ராசா.
இதில் ஆகக் கொடுமை என்னவென்றால், மோடியின் செயலைப் பார்த்து அம்பேத்காரே பெருமைப்படுவார் என்பதுதான். அண்ணல் அம்பேத்கார் படித்து வாங்கிய பட்டப் படிப்புகளும் வாசித்த புத்தகங்களும் எழுதிய புத்தகங்களும் எண்ணில் அடங்காதவை. மோடியோ, என்ன படித்தார் என்பது இன்று வரை யாருக்கும் தெரியாத பரம ரகசியம். குஜராத் பல்கலைக் கழகத்திலேயே இல்லாத ‘என்டயர் பொலிட்டிக்கல் சயின்ஸ்’ என்ற பாடத்தைப் படித்து பட்டம் வாங்கியதாகச் சொல்லப்படுகிறது.
“அம்பேத்கர்&மோடிக்கு இருக்கும் ஒற்றுமை அம்பேத்கரும், மோடியும் ஏழ்மையையும் ஒடுக்குமுறையையும் அனுபவித்தவர்கள், அதை ஒழிக்க பாடுபட்டவர்கள், இருவருமே இந்தியா வின் மீது பெரிய கனவுகளை கண்டதுடன் செயல்பாடுகளின் மீது நம்பிக்கை கொண்டனர். இப்படி இருவரும் ஒன்றுபடுவதை இந்த புத்தகம் எடுத்துக்காட்டி இருக்கிறது. பிரதமர் மோடியால் கட்டமைக்கப்பட்டு வரும் தற்சார்பு இந்தியா என்பது விடுதலை போராட்ட தியாகிகளுக்கு செலுத்தும் சரியான அஞ்சலி. இந்த புத்தகம் விடுதலை போராட்ட வீரர்கள் கனவின்படி புதிய இந்தியா எப்படி கட்டமைக்கப்படுகிறது என்பதை தெரிவிக்கிறது. நம் மண்ணின் சிறந்த மைந்தனின் பெருமையை வெளிக்காட்டுகிறது. இதனை இளைய தலைமுறையினருக்கு நான் பரிந்து ரைக்கிறேன்.” என அதில் ராஜா எழுதியிருப்பது தான் அபத்தம். மோடியைப் புகழ்வது ராஜாவின் விருப்பம், அவரின் உரிமை. ஆனால், அம்பேத் காருடன் ஒப்பிடும்போது, அம்பேத்காரைப் பற்றி, மோடியின் ஆட்சியில் நாட்டில் நடப்பவைகள் பற்றி கொஞ்சமாவது தெரிந்து கொண்டு எழுத வேண்டும்.
அம்பேத்கர் சனாதனத்திற்கு எதிராக, சாதி, மத பேதமற்ற சகோதரத்துவம், சமத்துவம் கொண்ட பொதுவுடமைச் சமூகத்தைக் கனவு கண்டார். ஆனால், மோடியோ, அம்பேத்காரின் கொள்கைக்கு நேர் மாறாக, ஆர்எஸ்எஸ்ஸின் ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி என்று இந்து மதவெறி பாசிச சமுதாயத்தைக் கட்டமைக்கப் பார்க்கிறார். இஸ்லாமியர்கள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தப்படுகிறது. அவர்கள் குடியிருப்புகள் ஆட்சியாளர்களாலேயே புல்டோசர்கள் கொண்டு இடித்துத் தள்ளப் படுகின்றன. தலித் மக்கள் கட்டி வைத்து தாக்கப்பட்டு கொல்லப்படுகிறார்கள். இவற்றை யெல்லாம் ராஜாக்கள் அன்றாட நாளிதழ்கள் பார்த்தாலே தெரிந்து கொள்ள முடியும். மதச்சார்பின்மை, கூட்டாட்சி, ஜனநாயம், அணிசேராக் கொள்கை போன்றவற்றை பள்ளிப் பாடப் புத்தகங்களில் இருந்து நீக்கிக் கொண்டிருக்கிறது மோடி அரசு.
பிற்போக்குச் சிந்தனைக்கு பெயர் பெற்றவர் என்றாலும் சிறந்த திரைக்கதை வசனகர்தா என்று பெயர் எடுத்தவர் பாக்கியராஜ். இவர், ‘பிரதம மந்திரியின் மக்கள் நலத் திட்டங்கள் &புதிய இந்தியா 2022’ என்ற புத்தகத்தை வெளியிட்டு, மோடியை விமர்ச்சிப்பவர்கள் எல்லாம் கண்ணும் காதும் இல்லாமல் குறைப் பிரசவத்தில் பிறந்தவர்கள் என்றார். பாவம் இவருக்குத்தான் கண்ணும் இல்லை, காது இல்லை. அதனால்தான் நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்றே தெரியாமல் பேசியிருக்கிறார். மாற்றுத் திறனாளிகள் மத்தியில் இருந்து எதிர்ப்பு வந்தவுடன் நான் பாஜககாரன் அல்ல. பெரியார், அண்ணா, கலைஞர், எம்ஜிஆர் வழியில் வந்தவன், தமிழன் என்கிறார்.
பாஜக தமிழ்நாட்டில் தாமரையை மலரச் செய்ய பல்வேறு நிகழ்ச்சிநிரல்களை முன் வைத்து வன்செயல்களில் இறங்குகிறது. ஆண்டாளை அவதூறாகப் பேசலாமா வைரமுத்து என்றும், கந்த சஷ்டிக் கவசத்தை கேலி செய்ய லாமா என்றும் மாணவிகளை மதம் மாற்று கிறார்கள் கிறிஸ்தவர்கள் என்றும் காதல் ஜிகாத்தில் ஈடுபடுகிறார்கள் இஸ்லாமியர்கள் என்றும் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணியக்கூடாது என்றும் அவதூறு பிரச்சாரங் களில் ஈடுபட்டு வந்தார்கள். இப்போது கொஞ்சம் மாற்றி பிரபலங்களைக் கொண்டு மோடி புகழ்பாடும் பரப்புரையில் ஈடுபட்டு வருகி றார்கள். இளையராஜாவை விமர்சிப்ப வர்கள் அவரை அவமதிக்கிறார்கள் என்று பாஜகவின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா பொங்குகிறார். அம்பேத்காரை மோடியோடு ஒப்பிட்டதில் என்ன தவறு இருக்கிறது? இவர்களுக்கு அம்பேத்காரை பட்டா எழுதிக் கொடுத்திருக்கிறார்களா? ஏதோ இவர்கள் நாங்கள்தான் அம்பேத்கார் வாரிசுகள் என்று நினைத்துக்கொண்டு துள்ளிக் குதிக்கி றார்கள் என்று இளையராஜாவை ஆர்எஸ்எஸ்காரர் கள் சுற்றி வளைத்திருக்கக்கூடும் என்று பேசிய திருமாவளவனைப் பார்த்து துக்ளக் துர்வாசர் கேட்கிறார். மேலும் எழுத்தாளர் சோ.தர்மன் ஒரு தலித் எழுத்தாளர்தான். அவர் இளையராஜாவுக்கு தன் அபிப்ராயத்தைச் சொல்ல உரிமை உண்டு என்று அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார் என்கிறார் துர்வாசர். இதன்மூலம் சனாதன துக்ளக் துர்வாசர் வெகு சாமர்த்தியமாக அம்பேத்காரையே தலித் வரையறைக்குள் அடைக்கப்பார்க்கிறார்.
அடுத்து மாலன், இளையராஜாவுக்கு ஆதரவாக, அம்பேத்காரைப் போல சிறுவயதி லேயே சமூக சீர்திருத்த நாடகங்களை பள்ளிக்கூடத்தில் போட்டவர் நரேந்திர மோடி என்கிறார். அதற்கு ஆதாரமாக தி மேன் ஆப் தி மூவ்மென்ட் & எம்.பி.காமத் புத்தகத்தைக் கூறுகிறார். அவர் எழுதியுள்ள கட்டுரைக்கு குமுதம் இதழில், சுட்டு விரலை நீட்டி கையை உயர்த்தியுள்ள அம்பேத்கார் படத்தைப் போட்டு, அவரைப் போலவே சுட்டு விரலை நீட்டி கையை உயர்த்தியுள்ள மோடி படத்தையும் போட்டு அதன் மூலம் அம்பேத்காரும் மோடியும் ஒன்று எனக் காட்ட முயற்சித்துள்ளார்கள். இப்படி திட்ட மிட்டு, ஒரு பெரிய படையே மோடி புகழ்பாட உருவாக்கப் பட்டுள்ளது சங்கிகளால். அப்படி உருவாக்கப் பட்டதுதான் புளு க்ராஸ் டிஜிட்டல் பவுண்டேசன் என்ற அமைப்பும். இந்த அமைப்புக்கு வேலையே மோடி புகழ்பாடி புத்தகங்களை வெளியிடுவது தான். சில ஆண்டுக ளுக்கு முன்பு 5 புத்தகங்களை வெளியிட்டிருக் கிறது.
‘அனிருத் போல் இளையராஜாவும் சிறந்த இசையமைப்பாளர்’ என்று ஊடகவிலாளர் செந்தில் சொல்லியுள்ளதை இளையராஜா ஏற்றுக் கொள்வாரா? அல்லது அவர் ரசிகர்கள்தான் ஏற்றுக்கொள்வார்களா?. அதைப் போலத்தான் யாரை யாரோடு ஒப்பிட வேண்டும் என்று தெரிய வேண்டும். இளையராஜா தன்னுடைய கருத்தைத் திரும்பப் பெறப்போவதில்லை என்கிறார்.
சென்னை பெரு வெள்ளத்தின் போது அனிருத் போட்ட பாடல் ஒன்றைப் பற்றி இந்த இசைஞானியிடம் செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு இவருக்கு எவ்வளவு கோபம் வந்தது அன்று. அது போலத்தான் அம்பேத் காருடன் மோடியை ஒப்பிடும்போது கோபம் வருகிறது உண்மையிலேயே இருவரையும் சரியாகப் படித்து அறிந்தவர்களுக்கு. மோடியால் கட்டமைக்கப்பட்டு வரும் தற்சார்பு இந்தியா விடுதலைப் போராட்ட தியாகிகளுக்குச் செலுத்தும் சரியான அஞ்சலி என்கிறார் ராஜா. அம்பேத்காரை மட்டுமல்ல விடுதலைப் போராட்டத்தையும் சரியாகப்படிக்கவில்லை இந்த இளையராஜா என்று தெரிகிறது. விடுதலைப் போராட்டத்தின்போது அந்தமான் சிறையில் இருந்து தன்னை விடுவிக்கச் சொல்லி பல முறை மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்த சாவர்க்கரை இந்திய சுதந்திரப் போராட்ட தியாகியாகக் காட்டும், காந்தியைக் கொன்ற கோட்சேவை தியாகியாகக் காட்டும் மோடியைப் பற்றிய புத்தகத்தை, மோடி புகழ் பாடுவதற்காகவே பொய்ப் புனைவுகளுடன் எழுதப்பட்ட அந்த புத்தகதை இளைய தலைமுறையினருக்கு இளையராஜா பரிந்துரைக் கிறாராம். பாஜகவின் திட்டம் சரியாகவே வேலை செய்கிறது. முதல்வர் ஸ்டாலின் கூட இதற்காக இளையராஜாவை விமர்சனம் செய்ய வேண்டாம் என்று சொன்னதாகச் சொல்கிறார்கள்.
அம்பேத்கரும் ஏழ்மையில் வளர்ந்தார், மோடியும் ஏழ்மையில் வளர்ந்தார் என்று இளையராஜா சொல்கிறார். ஏன் இளையராஜா வும் பாக்கிராஜும் கூட ஏழ்மையில் வளர்ந்த வர்கள்தான். அம்பேத்கார் தன் ஏழ்மையை மட்டுமல்ல இந்திய நாட்டின் ஏழ்மையைப் போக்கக் கனவு கண்டார். அதற்காகப் பாடுபட்டார். மோடியோ அதை மறந்து அதானிக்காகவும் அம்பானிக்காகவும் பாடு பட்டுக்கொண்டிருக்கிறார். இந்தியும் சமஸ் கிருதமும்தான் இந்தியாவில் இணைப்பு மொழியாக இருக்க வேண்டும் என்கிறார்.
“பழகின பாஷையில படிப்பது
பாவமில்ல என்னமோ ராகம்
என்னனமோ தாளம் தலைய
ஆட்டும் புரியாத கூட்டம்
எல்லாமே சங்கீதந்தான்
சத்தத்தில் பொறந்த சங்கதி
தான் சட்ஜமம் என்பதும்
தைவதம் என்பதும் பஞ்ச
பரம்பரைக்கு அப்புறந்தான்”
என்று ‘பாடறியேன், படிப்பறியேன்’ பாட்டிற்கு இசையமைத்த இளையராஜா, பாவலர் சகோதரர்களாக பட்டி தொட்டியெல்லாம் சென்று எழுச்சிப் பாடல்களை இளைஞர்கள் மனதில் விதைத்ததை இன்று மறந்திருந்தாலும், இந்தியாவைச் சூழ்ந்துள்ள பாசிச விஷச் சூழலை விசிறிக் கொடுத்து, தங்கள் இசையை ரசிப்பதற்கே இளைய தலைமுறையினர் இல்லா நிலையை உருவாக்கிட வேண்டாம்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)