அணுஉலைப் பூங்கா மற்றும் அணுக்கழிவு எதிர்ப்புக் கூட்டமைப்பு
கடந்த 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 2014ஆம் ஆண்டு இறுதி வரை கூடங்குளம் அணுமின்நிலையத் திட்டத்திற்கு எதிராக நெல்லை மாவட்ட மக்கள் மாபெரும் அறவழிப் போராட்டங்களை நடத்தினர். போராடிய மக்களின் உணர்வுகளை முற்றிலுமாகப் புறந்தள்ளிவிட்டு, 3வது மற்றும் 4 வது அணுஉலைகளைக் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். மேலும் 5வது மற்றும் 6வது அணு உலைகளுக்கு முதல் காங்கிரீட் போட்டு (First Pour of Concrete) அவற்றை நிறுவுவதற்குமான நடவடிக்கைகளிலும் அணுசக்தித்துறை தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது. இதற்கிடையே முதலிரண்டு அணுஉலைகளுக்கான ‘அணுஉலைக்கு அகலே' (Away From Reactor) அணுக்கழிவு மையங்கள் கட்டுவதற்கான கருத்துக்கேட்புக் கூட்டம் ஒன்றை ஜூலை 10, 2019 அன்று இராதாபுரத்தில் நடத்தப்போவதாக அறிவித்துவிட்டு, மக்கள் எதிர்ப்பின் காரணமாக அதைக் கைவிட்டார்கள். இப்போது 3 - 4 அணுஉலைகளுக்கான அணுக்கழிவு மையங்களைகட்ட போவதாகவும் 1-2அணு உலைகளின் கழிவுகள் அங்கே சேமித்து வைக்கப் போவதாகவும் தெரிவிக்கிறார்கள். இதற்கான சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை மக்கள் பார்வைக்குத் தரப்படவேயில்லை. விரிவானத் திட்ட அறிக்கை தயாரிக்கப்படவேயில்லை. அணுசக்தி ஒழுங்காற்று வாரியம் இந்த அறிக்கையைக் கேட்காததால், நாங்கள் தயாரிக்க வில்லை என்று சொல்கிறது இந்திய அணுமின் கழகம். மக்களின் பாதுகாப்புக்கு எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை. கூடங்குளம் அணுஉலை வளாகம் 5.40 கி.மீ. நீளமும், 2.5 கி.மீ. அகலமும் கொண்டது. இந்த 13.5 சதுர கி.மீ. பரப்பில் ஆறு முதல் எட்டு அணுஉலைகள், அணுக்கழிவு மையங்கள், அணுக்கழிவு மறுசுழற்சி ஆலை (reprocessing plant), உப்பகற்றி ஆலைகள் (desalination plants), நிர்வாக அலுவலகங்கள் என அனைத்தையும் சேர்த்து அடர்த்தியாகக் கட்டுவது மிக மிக ஆபத்தானது. குறிப்பாக 1-2 அணுஉலைகளுக்கும் 3-4 அணுஉலைகளுக்கும் இடையே வெறும் 804 மீட்டர் இடைவெளிதான் இருக்கிறது. அதே போல, 3,4 அணுஉலைகளுக்கும் 5,6 அணுஉலைகளுக்கும் இடையே அதைவிடக் குறைவாக 344 மீட்டர் தூரம்தான் உள்ளது.
இந்த நிலையில் மேலும் 7, 8 அணு உலைகளும், அணுக்கழிவு மையங்களும், அணுக்கழிவு மறுசுழற்சி ஆலையும் (reprocessing plant) அமைக்கப்படவிருப்பதாகச் செய்திகள் வருகின்றன. ஆபத்தான அணுக்கழிவுகளை நிரந்தரமாகப் புதைத்து நெடுங்காலம் பாதுகாக்கும் 'ஆழ்நிலக் கிடங்கு' (Deep Geological Repository) நிர்மாணிக்கும் தொழிற்நுட்பம் தங்களிடம் இல்லை என்றும், அதற்கானத் தேவை இப்போது எழவில்லை என்றும் சொல்லும் இந்திய அணுமின் கழகமும், ஒன்றிய அரசும், 'ஆழ்நிலக் கிடங்கு' அமைப்பதற்கான எந்த நடவடிக்கையை யும் இதுவரை மேற்கொள்ளவில்லை.
இது அமைக்கப்படாதபட்சத்தில், கூடங்குளம் கழிவுகள் காலவரையறையின்றி கூடங்குளம் மண்ணிலேயேக் கொட்டப்படும் அபாயம் எழுகிறது. எனவே, 'ஆழ்நிலக் கிடங்கு' அமைத் துவிட்டுத்தான், AFR அமைப்புக்கள் கட்ட  வேண்டும்.
கூடங்குளம் அணுமின் திட்டத்திற்கு எதிராக அறவழியில் போராடிய எங்கள் மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளில் இன்னும் 63 வழக்குகளைத் தள்ளுபடி செய்யாமல் தமிழ்நாடு அரசு அப்படியே வைத்திருக்கிறது. இந்த விசயங்களில் தமிழக முதல்வர் அவர்கள் தலையிட வேண்டும் என்று கூறி அணுஉலைப் பூங்கா மற்றும் அணுக்கழிவு எதிர்ப்பு கூட்ட மைப்பு சார்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரை 27.6.2022 அன்று சந்தித்து மனு கொடுக்கப்பட்டது. இந்த நிகழ்வில், தோழர் சுப.உதயகுமார், இகக(மாலெ) நெல்லை மாவட்டச் செயலாளர் சங்கரபாண்டியன், மாநிலக் குழு உறுப்பினர் ஜி.ரமேஷ், புரட்சிகர இளைஞர் கழக மாநிலத் தலைவர் எம்.சுந்தர்ராஜ் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். கூடங்குளத்தில் ஆபத்துகள் தொடரும் நிலையில், அரசு இதில் உடனடியாகத் தலையிட வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடத்திட திட்டமிடப் பட்டுள்ளது. வரும் ஜூலை 15ம் தேதி நெல்லையில் அனைத்துக் கட்சியில் மாநிலத் தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.