அரசமைப்பைக் காப்போம்! ஜனநாயகம் காப்போம்!! புல்டோசர் ஆட்சியை வீழ்த்துவோம்!!! அனைத்திந்திய நீதிக்கான வழக்கறிஞர் சங்கம் (AILAJ)அழைப்பு
சட்டத்துறையைச் சார்ந்த சகோதரர்களே! நாடு தற்போது இருந்து கொண்டிருக்கும் அபாயகர மான சூழலில் நாம் கண்ணை மூடிக்கொண்டோ அமைதியாகவோ இருக்கக்கூடாது.
1975ஆம் ஆண்டு இந்திரா காந்தி நெருக்கடி நிலையை அமல்படுத்திய அதே ஜூன் 25ம் நாளன்று மனித உரிமைப் போராளி தீஸ்தா செதல்வத்தும் குஜராத் காவல்துறையின் முன்னாள் தலைவர் ஆர்.பி.ஸ்ரீகுமாரும் கைது செய்யப் பட்டுள்ளனர். 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் முஸ்லீம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறையில் மோடிக்கும் அவரது கூட்டாளிகளுக்கும் எவ்வித பங்கும் இல்லை என்று இந்திய உச்சநீதிமன்றம் பரிசுத்த பத்திரம் வாசித்த இரண்டு நாட்களில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இந்து மதவாதக் கும்பல்களால் பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்களுக்கு தொடர்ந்து ஆதரவாக நின்ற அவர்கள் மீது வழக்கு தொடுத்து கைது செய்வதற்கு அரசை தூண்டிவிட்டது உண்மையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புதான். இது உண்மையில், நெருக்கடி நிலையின் போது ஏடிஎம் ஜபல்பூர் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் சரணாகதியை (அதில் மாண்புமிகு நீதிபதி கன்னா மட்டும் விதிவிலக்கு) நமக்கு நினைவுபடுத்துகிறது. அச்சமயத்தில் அடிப்படை உரிமைகளுக்குத் தடைவிதித்து, சட்டத்தின் ஆட்சியை இல்லாமல் செய்தது. நீதியானது குற்றமயமாக்கும் நோக்கத்தில் நீதிமன்றத்தால் வழங்கப்படும்போது வழக்கறிஞர்களான நாம்தான் அரசமைப்பை உயர்த்திப் பிடிக்க அக்கறை கொள்ளவேண்டும். ஜூன் 27ம் தேதி, அல்ட்நியூஸ் சேனலின் இணை நிறுவனரான முகமது சுபையரை டெல்லி காவல்துறை ஒரு புனையப்பட்ட பொய் வழக்கில் கைது செய்துள்ளது. முகமது சுபையர், சங்கிகளின் வெறுப்புப் பேச்சை தொடர்ந்து வெளிச்சத்திற்குக் கொண்டு வந்ததை நாம் அனைவரும் நன்கு அறிவோம். பாஜகவின் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவின் சமீபத்திய வெறுப்புப் பேச்சை வெளிக்கொண்டுவந்தார். ஆனால், நுபுர் சர்மா இன்னும்டெல்லிபோலீஸாரால்கைதுசெய்யப்படவில்லை!
குறிவைக்கப்பட்ட வெறுப்புப் பேச்சு பிரச்சாரத்தால், அரச வன்முறையால் மிகுந்த வேதனைக்குள் தள்ளப்பட்டுள்ள இஸ்லாமிய சமுதாயம், இஸ்லாமிய அபாயம் மற்றும் முகமது நபி பற்றிய அவதூறு பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காக, துப்பாக்கிச் சூட்டையும் தடியடியையும் கண்டபடியான கைது நடவடிக் கையையுமே சந்தித்தார்கள். அதுமட்டு மின்றி, புல்டோசர் வடிவில் நிர்வாகத்தால் பழிவாங்கப் பட்டார்கள். இதைத் தொடர்ந்து அக்னிபாத்திற்கு எதிரான போராட்டங்கள் வெடித்தன. இதிலும் கல் எறிதல், சாலை தடுப்புகள் மற்றும் கைது நடவடிக்கைகள் எல்லாமும் இருந்தன. ஆனால், குண்டுகளோ, தடியடியோ, புல்டோசர்களோ காணப்படவில்லை. காவல்துறையினரிடம் பரவலாக காணப்பட்ட முஸ்லீம் போராட்டக் காரர்களுக்கு எதிரான பாரபட்ச நடவடிக்கையை இது அம்பலப்படுத்தியுள்ளது. வகுப்புவாதம் மற்றும் தனியார்மயத்திற்காக அரசமைப்பையும் ஜனநாயகத்தையும் பலி கொடுத்துக் கொண்டிருக்கும் அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிராக நாம் நிற்க வேண்டியதிருக்கிறது.
மற்றொருபுறம், வழக்கறிஞர் ஹன்ஸ்ரா மவாலியாவின் வலிமிகுந்த மரணத்தை நாம் பார்த்தோம். ராஜஸ்தான் மாநிலம் சிக்கரில் துணை நிலை நடுவர் நீதிமன்ற அலுவலகத்தில் வைத்து தன் மீது தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். சிக்கர் துணை நிலை நடுவர் நீதிபதியும் கண்டேலா காவல் நிலைய பொறுப்பு அதிகாரியும் நீதிமன்றத்தில் நடை பெற்ற ஒவ்வொரு வாய்தாவின் போதும் லஞ்சம் கேட்டு வழக்கறிஞர் ஹன்ஸ்ராஜை துன்புறுத்தி வேதனைப் படுத்தியதே அவரின் தற்கொலைக்குக் காரணமாகும். உண்மையில், வழக்க றிஞர் ஹன்ஸ்ராஜ் அனுபவித்த துன்பங்களை லட்சக்கணக்கான வழக்கறிஞர்களும் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள், குறிப்பாக பெண்கள், ஒதுக்கப்பட்ட, வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட சமூகத்தினர், வழக்கறிஞர் தொழில் மூலம் ஒரு நல்ல கண்ணியமான வாழ்க்கையை உருவாக்கிக்கொள்ள போராடுபவர்கள் இந்த அவலத்தைச் சந்திக்கிறார்கள். சமூகத்தைப் போன்றே வழக்கறிஞர்களின் சமூக, பொருளாதார நீதியும் அரசாங்கத்திற்கு ஒரு நிகழ்ச்சி நிரல் இல்லை.
அரசமைப்பையும் ஜனநாயகத்தையும் கீழ்மைப்படுத்தும் அரசாங்கத்தின் நடவடிக்கையை நாம் ஒவ்வொரு நாளும் தாங்க வேண்டியுள்ளது. சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டில், சுதந்திரப் போராட்டத்தால் கிடைக்கப் பெற்ற பெரும் பலன் ஆன ஜனநாயகம் சீரழிக்கப்படுவது மாபெரும் சோகம் ஆகும். ஆட்சியில் மக்களின் பங்களிப்பு என்பது மட்டுமே ஜனநாயகம் ஆகிவிடாது. அரசமைப்பு அறநெறியை ஒரு நிலையான உறுதிப்பாட்டுடன் வைத்திருக்கக்கூடிய சமூகம்தான் அதற்கு சிறப்பு நிபந்தனையாகும். அரசமைப்பு முகவுரையிலேயே ஜனநாயகத்தின் முக்கிய பண்புகள் குறிப்பிடப்பட்டுள்ளது. (சமூக, பொருளாதார, அரசியல்) நீதி, (சிந்திக்க, வெளிப்படுத்த, நம்பிக்கை கொள்ள, நம்பிக்கை கொண்டு வழிபட) சுதந்திரம், (அந்தஸ்திலும் வாய்ப்புகளிலும்) சமத்துவம் மற்றும் (தனிமனித கவுரவத்தையும் தேச ஒற்றுமையையும் உறுதிபடுத்தி) நிலைத் திருக்கக்கூடிய சகோதரத்துவ உணர்வை மக்களிடத்தில் ஊக்குவித்தல். டாக்டர் மார்டின் லூதர் கிங்கின் பிரபலமான வாசகம், 'எங்காவது அநீதி இருக்குமானால் அது எல்லா இடத்திலும் உள்ள நீதிக்கு ஒரு ஆபத்தாகும்'. இது தற்போதைய சூழலுக்கு மிகவும் பொருத்தமானதாகும். பிரிவினைவாத, வெறுப்பு அரசியலுக்கு மற்றும் அனைத்து பிரிவு மக்களையும் பாதிக்கும் பொருளாதார கொள்கைகளுக்கு எதிராக எழுந்து நிற்க வேண்டும் என அனைத்து பிரிவு சட்டத்துறை சகோதரர்களுக்கு அனைத்திந்திய நீதிக்கான வழக்கறிஞர்கள் சங்கம் அழைப்பு விடுக்கின்றது. அரசமைப்பு அறநெறியை உள்வாங்கி, அனைத்து மக்களிடத்திலும் நல்லிணக்கத்தை வளர்த்திடுவது நம் ஒவ்வொருவரின் கடமை என அரசமைப்பு நம்முன் வைத்துள்ளது. வழக்கறிஞர்கள் மற்றும் சட்டத்துறையிலுள்ள இதர சகோதரர்களுக்கான சமூக, பொருளாதார நீதிகாகவும் சமூகத்தில் சமூக, பொருளாதார நீதிக்காகவும் இந்த பணியை நாம் ஒன்று சேர்ந்து முன்னெடுத்துச் செல்வோம். இந்தச் செய்தியை நாம் சட்டத்துறை சகோதரர்களிடத்தில், நீதிமன்றங்களில், சட்டக் கல்லூரிகளில் 2022 ஜூலை 4 - 8 பிரச்சாரத்தின் மூலம் கொண்டு செல்வோம். பீமா கொரேகான் வழக்கில் நிறுவனப் படுகொலை செய்யப்பட்ட பாதிரியார் ஸ்டேன்ஸ் சாமியின் முதலாம் ஆண்டு நினைவு நாளான ஜூலை 5 அன்று அவரை நினைவுகூர்ந்து, "அரசமைப்பைக் காப்போம், ஜனநாயகம் காப்போம், புல்டோசர் ஆட்சியை வீழ்த்திடுவோம்" என்ற முழக்கத்துடன் ஒரு போராட்டத்தை/விழிப்புணர்வு விளக்கேற்றும் நிகழ்ச்சியை நடத்திடுவோம்.
'புல்டோசர் ஆட்சிக்கு முடிவுகட்டுவோம்'