காவிப் பாசிசத்தை வீழ்த்திடுவோம்! புதியதோர் சமத்துவ சமுதாயத்தைப் படைத்திடுவோம்!! என்ற முழக்கத்துடன் 24.7.2022 அன்று தஞ்சாவூர், நாஞ்சிக்கோட்டை சாலை, காவேரி திருமண மண்டபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) காவிப் பாசிச எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. தஞ்சை நகரத்திலும் மாநாட்டு மண்டபத்திலும் செங்கொடிகள் செங்கதிரொளியினூடே பறக்க, தோழர்கள் சந்திரகுமார் சந்திரசேகர்-சுப்பு பெயரிடப்பட்ட அரங்கத்தில் மாலை 3.30 மணிக்கு கோவை நிமிர்வு கலைக்குழுவினரின் தப்பாட்டத்துடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. மாநாட்டிற்கு இகை(மாலெ) தமிழ்நாடு மாநிலச் செயலாளர் தோழர் என்.கே.நடராஜன் தலைமை தாங்கினார். இகக(மாலெ) தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் தோழர் கண்ணய்யன் வரவேற்புரை யாற்றினார். இக்க(மாலெ) மத்தியக்குழு உறுப்பினர் தோழர் பழ.ஆசைத்தம்பி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். அரங்கம் நிறைந்து அரங்கத்திற்கு வெளியேயும் தோழர்கள் கூட்டம் அலைமோதியது. கூட்டத்தைப் பார்க்கும் முன்னரே, நகர்புற நக்சல்கள் நடத்தும் இந்த மாநாட்டினைத் தடை செய்ய வேண்டும் என்று முதல்நாள் பாஜகவின் பொய் விளம்பி எச்.ராஜா தமிழ்நாடு போலீஸிற்குக் கோரிக்கை விடுத்தார். கூட்டத்தைப் பார்த்திருந்தால் அவருக்கு இன்னும் கூட கோபம் வந்திருக்கும். காவிப் பாசிசம் என்பது தாங்கள்தான், பாஜகதான் என்பதை எச்.ராஜாவே தன் வாயாலேயே ஒப்புக் கொண்டு விட்டார். தமிழ்நாட்டில் சில காக்கி அதிகாரிகள் உள்பட அதிகார வர்க்கத்தை மறைமுகமாக தங்கள் கைகளில் வைத்துள்ள காவிக் கும்பல் எதையாவது செய்து தமிழ்நாட்டில் கால் பதித்துவிடத் துடிக்கிற இந்த வேளையில், சரியான தருணத்தில் சரியான தலைப்பில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது என்பதை பேசிய தலைவர்கள் அனைவரும் குறிப்பிட்டுச் சொன்னார்கள்.

    மாநாட்டில் இகக(மாலெ) அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் சிறப்புரை யாற்றினார். அவரின் ஆங்கில உரையை இக்க(மாலெ) மாநிலக்குழு உறுப்பினர் தேசிகன் தமிழில் மொழிபெயர்த்தார். காவிப் பாசிச எதிர்ப்பு மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தோழர் தொல்.திருமா வளவன், இக்க(மா) மத்தியக்குழு உறுப்பினர் தோழர் உ.வாசுகி, இகை மாநில நிர்வாகக் குழு உறுப்பினரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பின ருமான தோழர் பெரியசாமி, பச்சைத் தமிழகம் கட்சியின் தலைவர் தோழர் சுப. உதயகுமார், பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர் விடுதலை அரசு ஆகியோர் உரையாற்றினார்கள். மாநாட்டில் இதக(மாலெ) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் வீ.சங்கர், மத்தியக்குழு தோழர்கள் பாலசுந்தரம், சந்திரமோகன், சோ.பாலசுப்பிர மணியன் மற்றும் மாநிலக்குழு உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர். புரட்சிகர இளைஞர் கழகம் மற்றும் அகில இந்திய மாணவர் கழகத் தோழர்களின் செஞ்சட்டை தொண்டர் படையின் பணி பாராட்டுக்குரியது.