உறுதிமொழி:

இந்திய சுதந்திரத்தின் 75 வது ஆண்டில், பிரிட்டிஷ் காலனியத்தின் தளைகளிலிருந்து இந்தியாவை விடுவிக்க தங்கள் அனைத்தையும் தியாகம் செய்த மாபெரும் தியாகிகளுக்கும் சுதந்திரப் போராளிகளுக்கும் எங்களது மரியாதைக்குரிய அஞ்சலியை செலுத்துகிறோம். அரசமைப்புச் சட்டத்தால் பிரகடனம் செய்யப்பட்டுள்ள லட்சியமான இறையாண்மை கொண்ட சோசலிச மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசை நோக்கி இந்தியாவை நடத்திச் செல்ல சுதந்திரப் போராட்ட இயக்கம், கருத்துகள், போராட்டங்கள் எனும் வளமிக்க மரபை வழங்கியிருக்கிறது. இன்று நமது அரசமைப்புச் சட்ட அடித்தளமும் குடியரசு கட்டமைப்பும் இந்தியாவின் ஒருங்கிணைந்த கலாச்சாரமும் சமூக இழைகளும் சாமான்ய மக்களது வாழ்வும் வாழ்வாதாரமும் மாறுபடும் குடிமக்களின் சுதந்திரமும் முன்னெப்போதுமில்லாத தாக்குதலை எதிர்கொள்வதால், நமது சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் புகழ்மிக்க மரபை முன்னெடுத்துச் செல்லவும், இறையாண்மை கொண்ட சோசலிச, மதச்சார்பற்ற, ஜனநாயக இந்தியாவிற்கான போராட்டத்தை தீவிரப்படுத்தவுமான எமது உறுதிப்பாட்டை புதுப்பித்துக் கொள்கிறோம்.