சட்டமன்றத் தேர்தலில் பாசிச பாஜகவின் வேட்பாளர் செய்த பணப்பட்டுவாடாவை அம்பலப்படுத்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சியின் நெல்லை மாநகரச் செயலாளரும் புரட்சிகர இளைஞர் கழகத்தின் மாநிலத் தலைவருமான எம்.சுந்தர்ராஜ், இக்க(மாலெ) நெல்லை பாட்டப்பத்து கிளைச் செயலாளர் பேச்சிராஜா மற்றும் சில குடும்பத்தினரையும் காவிக்கும்பல்களின் ஆதரவில் கட்டுப்பாடு என்ற பெயரில் ஊர் விலக்கம் செய்து வைத்ததற்கு எதிராக தொடர் நடவடிக்கைகள் இகக(மாலெ) கட்சியால் எடுக்கப்பட்டது. தோழர்களையும் கட்சியையும் அவதூறாகப் பேசிய காவல் உதவி ஆணையாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இகக(மாலெ) மாநிலச் செயலாளர் தோழர் என்.கே.நடராஜன், இடதுசாரிக்கட்சித் தலைவர்கள் மற்றும் பல்வேறு கட்சிகள் அமைப்புகள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் 20.6.2022 அன்று நடைபெற்றதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து பேசப்பட்டது. அதன் விளைவாக மாநகர காவல் துணை ஆணையர் திரு. சரவணக்குமார் அவர்கள் மாநிலக்குழு உறுப்பினர் தோழர் ஜி.ரமேஷ், தோழர் சுந்தர்ராஜ் மற்றும் கட்சித் தோழர்களை அழைத்துப் பேசினார். அப்போது நெல்லை நகர காவல் உதவி ஆணையர் விஜயகுமார் நடந்து கொண்டவிதம் சரியானது அல்ல. அதற்காக தான் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார். அதன் பின்னர் ஊர் கட்டுப்பாடு என்ற பெயரில் சட்டவிரோத கட்டப்பஞ்சாயத்து, ஊர் விலக்கம் நடைமுறைக்கு முடிவு கட்டப்படும் என்று உறுதி கூறினார். அதன் தொடர்ச்சியாக 15.7.2022 அன்று இரவு நெல்லை காவல் நிலையத்தில் ஆய்வாளர் திரு.இளவரசன் அவர்கள் முன்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. நம் தரப்பில் கேட்டுக் கொண்டதற்கிணங்க எதிரிகள் 7 பேர் மீதும் எப்ஐஆர் போடாமல், இனி அவர்கள் ஊர் விலக்கம், காலில் விழச் செய்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டோம் என்று குவிமு சட்டப் பிரிவு 107ன் கீழ் உறுதிமொழிப் பத்திரம் எழுதிக் கொடுக்க வேண்டும் என்றும் அதை மீறி கட்சித் தோழர்களுக்கு எதிராக ஏதாவது செயலில் ஈடுபட்டால் எப்ஐஆர் போடப்படும் என்றும் 19.7.2022 அன்று ஊரைக் கூட்டி தோழர்கள் மீது எவ்வித ஊர்விலக்கமும் இல்லை என்று அறிவிக்க வேண்டும் என்று முடிவானது. பேச்சுவார்த்தையில் இகக(மாலெ) மாவட்டச் செயலாளர் தோழர் சங்கர பாண்டியன், மாநிலக்குழு உறுப்பினர் ரமேஷ், மாநகரச் செயலாளர் சுந்தர்ராஜ், கிளைச் செயலாளர் பேச்சிராஜா, மணி உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.