செப்டம்பர் 8 அன்று, இந்தியா கேட்டில் புதிய கர்தவ்ய பாதையைத் திறந்து வைத்துப் பேசிய பிரதமர் நரேந்திரமோடி, ராஜ பாதை (ஆங்கிலத்தில் கிங்ஸ்வே என்பதில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது) என்பது அடிமைத் தனத்தின் ஒரு அடையாளமாக இருந்தது என்று கூறினார். அதேபோல், கடந்த வாரம் ஐஎன்எஸ் விக்ராந்த் துவக்க நிகழ்வின் போது மோடியினால் வெளியிடப்பட்ட இந்திய கப்பற்படை கொடியில் ஏற்கனவே இருந்த புனித ஜார்ஜின் சிலுவை அகற்றப்பட்டு அந்த இடத்தில் ஒரு புதிய சின்னம் சேர்க்கப்பட்டிருந்தது. இந்தியாவின் காலனியாதிக்க கடந்த காலத்திலிருந்து விலகி நிற்கும் முயற்சியே இந்த மாற்றம் என்று பிரதமர் அலுவலகம் திரும்பவும் சொன்னது.

ராஜ பாதையை, கர்தவ்ய பாதை என பெயரை மாற்றிய அன்றே, மோடி அரசாங்கம் காலனியாதிக்க, அடிமைத்தன அடையாளத்திற்கு எதிராக நிற்பதற்கான தனது கர்தவ்யத்தைத் (கடமையை) துறந்துவிட்டது. மறைந்துபோன உயர்ந்த மனிதருக்கு மரியாதை செலுத்தும் முகமாக செப்டம்பர் 11 அன்று தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்கவிட வேண்டும் என்று அரசாங்கத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த மறைந்து போன உயர்ந்த மனிதர் யார் என்றால், பிரிட்டன் மற்றும் வடக்கு அயர்லாந்தின் மகாராணி 2ம் எலிசபத். அவர் வகித்த பதவிதான் உலகின் பல நூற்றாண்டு கால காலனியாதிக்கச் சுரண்டலுக்கும் அடிமைத்தனத்திற்கும் கொள் ளைக்கும் அடையாளமாக இருந்தது.

2ம் எலிசபத் 1953ம் ஆண்டு மகாராணியாக மகுடம் சூட்டப்பட்டார். பிரிட்டன் மன்னராட்சியில் நீண்டகாலம் அதிகாரத்தில் இருந்தவராவார். அவர் காலனியாத்திக்க காலத்தின் மிச்ச சொச்சம் மட்டுமல்ல. 1950களிலும் 1960களிலும் உலகெங்கிலும் நடைபெற்ற காலனியாதிக்கத்திற்கு எதிரான போர்களை பிரிட்டன் கொடூரமாக ஒடுக்கியபோது காலனித்துவமாக்கலில் மிகவும் செயலூக்கத் துடன் பங்கெடுத்தவர்.

இந்தியாவில், 1857ன் புரட்சியாளர்கள் படுகொலை, வங்கதேச பஞ்சம், ஜாலியன் வாலாபாக் படுகொலை, பகத்சிங்கையும் மற்ற புரட்சியாளர்களையும் தூக்கிலிட்டது, வெள்ளை யனே வெளியேறு இயக்கத்தை, ஒட்டுமொத்த விடுதலைப் போராட்டத்தையும் ஒடுக்கியது எல்லாம் பிரிட்டிஷ் மன்னராட்சியின் அரச முத்திரையின் கீழ் செய்த மாபெரும் காலனி யாதிக்கக் குற்றங்களில் சிலவாகும். 1765ஆம் ஆண்டு முதல் 1938ஆம் ஆண்டு வரையிலும் இந்தியாவிலிருந்து பிரிட்டன் திருடியது 45 லட்சம் கோடி டாலர் ஆகும் என்று பொருளாதார வல்லுநர் உத்ஸா பட்நாயக் கூறுகிறார்.

எவ்வித வருத்தமோ, இழப்பீடோ அல்லது மன்னிப்போ தெரிவிக்காமல் மன்னராட்சியைத் தொடர்ந்து நடத்தியது இந்த மகாராணி 2ம் எலிசபத்தான். காலனியாதிக்கத்தின் மைய நிறுவனத்திற்கு மரியாதை செலுத்துவதற்காக, விடுதலைப் போராட்டத்தின் அடையாளமான நமது தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் நாம் எப்படி பறக்கவிட முடியும்?


இந்தியா பிரிட்டிஷ் காலனியாதிக்கப் பிடிகளில் இருந்து விடுதலை பெற்ற பின்னரும் கூட, தொடர்ந்து ஐம்பது ஆண்டுகளாக காலனி யாதிக்கத்திற்கு எதிரான போராட்டங்களை உலகின் பல்வேறு நாடுகள் நடத்த வேண்டியதாக இருந்தது. அந்த நாடுகளில் எல்லாம் இந்த மகாராணி 2ம் எலிசபத் ஆட்சியை அமல்படுத்து வதற்காக வன்முறையையும் படுகொலை யையும் பிரிட்டிஷ் படைகள் அரங்கேற்றின. இவரது ஆட்சியின் போதுதான் 1950களில் கென்யாவில் மௌ மௌ விடுதலைப் போராட்டம் ஒடுக்கப் பட்டு, பல்லாயிரக் கணக்கான மக்கள் படு கொலை செய்யப் பட்டார்கள். பிரிட்டிஷ் காலனிய அதிகாரிகளால் 20,000க்கும் மேற்பட்ட மௌ மௌ உறுப்பினர்கள் மொத்தமாக கொல்லப்பட்டார்கள், பெரும் எண்ணிக்கை யிலான மக்கள் பிரிட்டிஷ் அதிகாரிகளால் சித்தரவதை முகாம்களுக்கு அனுப்பப் பட்டார்கள். அங்கு பாலியல் வன்கொடுமை களையும் சித்தரவதைகளையும் அனுபவித்து தப்பிப் பிழைத்த மாவீரர்கள் இன்று வரை நீதிக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவற்றையெல்லாம் முற்றிலுமாக மூடி மறைத்துவிட்டு, காலயாதிக்கக் குற்றங்களில் இருந்து ராணியை விலக்கி வைத்து, அவரை நவீன பிரிட்டனின் 'பாறை'யாக அடையாளம் காட்ட தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப் படுகிறது. ஆனால், உலகம் முழுவதும் பல
நூற்றாண்டுகளாக நடைபெற்ற காலனியாதிக்கக் கொடுமைகளுக்கு காரணமான பிரிட்டிஷ் மன்னராட்சியின் சிம்மாசனத்தின் (யார் அதில் அமர்ந்துள்ளார் என்பது பிரச்சனையில்லை) மீது படிந்துள்ள இரத்தக் கறையை முற்றிலுமாக துடைத் தெறிந்துவிடமுடியாது.

இன்று நாம் இந்திய விடுதலைப் போரின் 75ம் ஆண்டை (விடுதலைப் போரின் அமுதப் பெருவிழா) காலனியாதிக்கதிற்கு எதிரான புகழ்மிக்க விடுதலைப் போராட்டத்திற்கு மரியாதை செலுத்துவதைக் குறிக்கும் வகையில் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். மோடி அரசாங்கம் செய்யச் சொல்வதுபோல், நம் தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்கவிடுவது என்பது, காலனிய நுகத்தடிகளை முறிப்பதற்காக தங்கள் இரத்தத்தைச் சிந்திய விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாகத்தை அவமானப்படுத்துவதாகும். இதைச் செய்வதன் மூலம் மோடி அரசாங்கம், தன்னை காலனிய ஆட்சியாளர்களின் விசுவாசமான வாரிசு என்பதையும் பகத்சிங் சொன்ன பிரபலமான எச்சரிக்கையான பழுப்பு நிறக் கொள்ளையர்கள் என்பதையும் மீண்டும் ஒரு முறை நிரூபித்துக் கொண்டுள்ளது.