மத வன்முறை நடவடிக்கைகள் மூலமாக

மக்களை பிளவுபடுத்தும், கார்ப்பரேட் ஆதரவு காவிப்பாசிச மோடி ஆட்சியின் திசைதிருப்பும் அரசியல் தந்திரங்களில் இருந்து நாட்டையும், மக்களையும் பாதுகாத்து, வாழ்வாதாரப் பிரச்சினை களின் மீது விரிவான இயக்கத்தை கட்டமைப்பது, ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் 2ம் கட்ட போராட்டத்தின் மய்ய கடமையாக வகுக்கப்பட்டது; இந்திய தொழிலாளி வர்க்கத்துடன் கரங்கோர்த்து விவசாயிகள் விரோத, தொழிலாளர்கள் விரோத, தேச விரோத கார்ப்பரேட் காவிப் பாசிச மோடி அரசை, 2024 பொது தேர்தலில் வீழ்த்தும் அரசியல் கடமையை மேற்கொள்வது என கடந்த 2023 ம் ஆண்டு 24 ஆகஸ்ட்டில் டில்லி தல்கடோரா ஸ்டேடியத்தில் நடைபெற்ற, அனைத்து மத்திய தொழிற் சங்கங்கள் மற்றும் எஸ்கேம் - ஐக்கிய விவசாயிகள் முன்னணி யின் ஒன்றுபட்ட மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது.

ஆளுநர் அலுவலகங்கள் முற்றுகை:

டில்லியின் அனைத்து எல்லைகளையும் முற்றுகை இட்டுப் போராடிய இலட்சக்கணக்கான விவசாயிகளின் இயக்கத்தை முடிவுக்கு கொண்டுவர, கடந்த 2021 டிசம்பர் 9 ல் மோடி அரசாங்கம் தனது அமைச்சர்கள் மூலம் எஸ்கேஎம் பிரதிநிதிகள் உடன் பேச்சுவார்த்தை நடத்தி கொடுத்த வாக்குறுதிகளை இரண்டு ஆண்டுகளாக நிறைவேற்றத் தவறியதை கண்டித்தும், பாஜக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், நவம்பர் 26,27, 28 தேதிகளில், நாடுமுழுவதும் உள்ள ஆளுநர் அலுவலகங்களை முற்றுகை இடுவது எனவும் அந்த மாநாடு முடிவுசெய்தது. பல்வேறு மாநிலங்களில் இதற்கான விரிவான பரப்புரை இயக்கம் மற்றும் மகாபஞ்சாயத்துகள் / மாநாடுகள் திட்டமிட்டு நடத்தப்பட்டன. தமிழ்நாட்டிலும், கடந்த 2023 ஆகஸ்டு 29ல் திருச்சியில் ஓராயிரம் விவசாயிகள் மற்றும் செயற்பாட்டாளர்கள் பங்கெடுத்துக் கொண்ட ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாநில மாநாடு நடைபெற்றது.

பல்வேறு மாநிலங்களின் ஆளுநர் மாளிகைகளும் நவம்பர் 26,27,28 மூன்று நாட்கள் பெருந்திரளாக முற்றுகை இடப்பட்டன. தமிழ் நாட்டிலும், சென்னையில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டது. 

நவம்பர் 26, 27 தேதிகளில் தமிழகத்தில் கிண்டி ஆளுநர் மாளிகை அருகில் பெருந்திரள் அமர்வு நடை பெற்றது. ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில், பல் வேறு மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் எஸ்கேஎம் மில் உள்ள விவசாய சங்கங்கள் சார்பில், தமிழ் நாட்டின் விவசாயிகள், தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள் 5000 ற்கும் அதிகமானவர்கள் அணிதிரண்டனர்.

சனவரி 26 டிராக்டர்கள், வாகனங்கள் பேரணி:

சனவரி 26 குடியரசு நாளன்று 27 மாநிலங்களில், 484 மாவட்டங்களில் 1,41,000 க்கும் அதிகமான வாகனங்கள் (சுமார் 37,000 டிராக்டர்கள் பஞ்சாப்பில் மட்டுமே 21,000 டிராக்டர்கள் மற்றும் 85, 000 இருசக்கர வாகனங்கள்) பங்கேற்ற பேரணிகள் நடைபெற்றன. காவல்துறை அனுமதி மறுப்பு மற்றும் கெடுபிடிகள் இருந்தபோதிலும் கூட, அவற்றை எல்லாம் கடந்து, தமிழ்நாட்டில் 33 மாவட்டங்களில் சுமார் 3700 வாகனங்களில் 7000 ற்கும் கூடுதலான தொழிலாளர்கள், விவசாயிகள் பங்கெடுத்துக் கொண்ட பேரணிகள் நடைபெற்றன.

எஸ்கேஎம், மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு மேடையானது, பாஜக அரசின் மதவெறுப்பு பிளவுவாத அரசியலை பின்னுக்குத் தள்ளி, இந்திய நாட்டின் விவசாயிகள், தொழிலாளர்களும் விவசாயத் தொழிலாளர்களும் அன்றாடம் எதிர்கொள்ளும் வாழ்வாதார பிரச்சினைகள் / கோரிக்கைகளான MSP, வேலைவாய்ப்பு, குறைந்தபட்ச கூலி, ஏழ்மை, கடன் தள்ளுபடி ஆகியவற்றை மய்யத்திற்கு கொண்டுவந்தன.

பிப்ரவரி 16 கிராமப்புற பந்த் மற்றும் தொழிற்துறை துறைசார் நிறுவனங்களின் வேலைநிறுத்தம் :

பிப்ரவரி 16 நாடுதழுவிய போராட்டத்தின் நோக்கங்களை விளக்கியும், இலட்சக்கணக்கான விவசாயிகள், தொழிலாளர்களை அணிதிரட்டவும் நாடு முழுவதும் விரிந்த பிரச்சார இயக்கத்தை கூட்டு மேடை நடத்தியது. இதற்கிடையில், எஸ்கேஎம் மத்திய தொழிற் சங்கங்களின் கூட்டுமேடையில் இல்லாத சில அமைப்புகள் (குறிப்பாக, அரசியலற்ற எஸ்கேஎம் சிவ்குமார் காக்கா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா சர்வன் சிங் பாந்தர் ஆகியோர்) தலைமை யில், 'டில்லி சலோ!' என்ற இயக்கத்தை, டிராக்டர் பேரணியை பிப்ரவரி 13ம் தேதி துவக்கின; பஞ்சாபிலிருந்து டில்லி நோக்கி ஆயிரக்கணக்கான விவசாயிகள்,விவசாயத் தொழிலாளர்களை அணிதிரட்டின. இந்த இயக்கமானது "வேளாண் விளை பொருள்களுக்கு (எம்எஸ்பி) குறைந்தபட்ச ஆதார விலையை உத்தரவாதப்படுத்த வேண்டும்!" என்ற முழக்கத்தை மட்டுமே மய்யப்படுத்தின. ஏற்கனவே, எஸ்கேஎம், பல்வேறு BKU சங்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் கூட்டுமேடை கூர்மையாக முன்வைத்த 'மோடி அரசின் கார்ப்பரேட் சார்பு அரசியல் மீது' குறிவைக்கவில்லை. எப்படிப் பட்ட முழக்கமாக இருந்தாலும், தலைநகர் நோக்கிய அணிதிரட்டலை விரும்பாத மோடி அரசாங்கம், சம்பு எல்லையில் ஹரியானா பாஜக அரசாங்கம் மூலமாக மிருகத்தனமான தாக்குதல்களை தொடுத்தது. வானிலிருந்து டிரோன்கள் மூலம் விவசாயிகள் அணிவகுப்பு மீது கண்ணீர் புகைகுண்டுகளை வீசி, நெடுஞ்சாலைகளில் தடையரண்களை அமைத்து தடுத்தது. விவசாயிகள் மீது லத்திசார்ஜ், பெல்லட் துப்பாக்கிச் சூடு, கண்ணீர் புகைகுண்டுகள், வீடு வீடாக சென்று மிரட்டுதல், 'போர்' போன்ற அணுகுமுறையைக் கையாளுதல் என அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டது. சிலர் படுகாயங்களை அடைந்தனர்; ஒரு சிலர் கண் பார்வைகளை இழந்துள்ளனர்

மூன்று ஒன்றிய அமைச்சர்கள் மூலமாக பேச்சுவார்த்தைகள் என்ற பெயரால் ரகசியமாக பேசி இழுத்தடித்து ஏமாற்றியது. எம்எஸ்பி கோரிக்கை ஏற்கப்படவில்லை. அதேசமயம் பிப்ரவரி 13 அன்று எஸ்கேஎம் தலைமையானது, இந்தியப் பிரதமருக்கு, விவசாயிகள் கோரிக்கைகளைப் பரிவுடன் கவனிக்க வேண்டும் என்று ஒரு எழுத்துப்பூர்வ வேண்டுகோளை அனுப்பியது; அதையும் பாஜக அரசு ஒதுக்கித் தள்ளியது.

பிப்ரவரி 16 போராட்டம் :

கிராமப்புற பந்த், தொழில்துறை / துறைசார் நிறுவனங்களின் வேலைநிறுத்தம் மாபெரும் வெற்றி பெற்றது. மிகப்பெரியளவு விவசாயிகள் பங்கேற்புடன், தொழிலாளர்கள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள், என அனைத்து பிரிவு மக்களும் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டு, மோடி அரசின் கொடூர அடக்கு முறைக்கு எதிரான தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி உள்ளனர். 

மோடி அரசும், பாஜக தலைமையிலான அரியானா மாநில அரசும், டெல்லிக்குப் பேரணியாகச் சென்ற விவசாயிகள் மீது பஞ்சாபின் சம்பு எல்லையில் நடத்திய கொடூரத் தாக்குதலுக்கு எதிராக மக்களின் கோபத்தையும் வெளிப்படுத்தியுள்ளது. 

பஞ்சாப் உள்ளிட்ட அனைத்து மாநிலங் களிலும், யூனியன் பிரதேசங்களிலும் கடைகள், தொழில்கள், சந்தைகள் மற்றும் கல்வி நிறுவனங் களும், கிட்டத்தட்ட இயங்கவில்லை; கிராமங்களில் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டன. தொழிலா ளர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர்.

மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் இணைந்தனர்.

இலட்சக்கணக்கான மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்ற மாபெரும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கண்டனப் பேரணிகள் நடைபெற்றன. தமிழ்நாடு துவங்கி ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகர் வரை போராட்டங்கள் எழுச்சியுடன் நடைபெற்றன.

'விவசாயிகளின் தற்கொலையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு, குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்வது மற்றும் கடன் தள்ளுபடி கொள்கைகளில் மாற்றம் கொண்டு வரப்படும்வரை போராட்டம் தீவிரப்படுத்தப்படும்' என எஸ்கேஎம் அறிவித்துள்ளது. இதன் தொடர்ச்சி யாக, பாஜக எம்பிக்கள் மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏ க்களுக்கு எதிரான அடுத்தடுத்த தொடர் போராட்டங்களையும் அறிவித்துள்ளது.

பிப்ரவரி 16 மாபெரும் நடவடிக்கை, இந்தியா முழுவதும் விவசாயி தொழிலாளர் ஒற்றுமையை வலுப்படுத்தவும், கிராமம், நகரம் வரையிலான மக்களின் ஒற்றுமையை மேலும் முன்னேற்றவும் உதவியுள்ளது. இது, மோடி அரசின் கார்ப்பரேட் மதவாத வெறுப்பு அரசியலுக்கு எதிரானப் போராட்டத்தின் மிகப்பெரிய சாதனையாகும். மக்களவைப் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக, தேசிய நிகழ்ச்சி நிரலில் மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளை மீண்டும் முன்னுக்கு கொண்டு வருவதில் வெற்றி பெற்றது.

அதனைத் தொடர்ந்து மோடி அரசுடன் பேச்சுவார்த்தையில் முன்னேற்றங்கள் ஏற்படவில்லை என்பதால் டெல்லியை நோக்கி முன்னேறிய விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி ஒரு இளம் விவசாயியைக் கொன்றுள்ளது. பலர் இதில் காயம் அடைந்துள்ளார்கள். போராட்டம் தொடர்கிறது.