இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை கட்சியின் மறைந்த மாநிலச் செயலாளர் தோழர் என்.கே.நடராஜன் அவர்களுக்கு புகழஞ்சலிக் கூட்டம் கோவையில் 22.12.2022 அன்று மாலை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத் தோழர்கள் கொண்டு வந்திருந்த தோழர் என்.கே. நினைவுச் சுடரை, இகை(மாலெ) பொதுச் செயலாளர் தோழர் திபங்கரிடமும் என்.கே.யின் குடும்பத்தினரிடமும் வழங்கினார்கள். அதனைத் தொடர்ந்து தோழர் என்.கே.நடராஜன் அவர்களின் திருவுருவப் படத்தை தோழர் திபங்கர் திறந்து வைத்து அஞ்சலி செலுத்தினார்.
புகழ் அஞ்சலி நிகழ்ச்சிக்கு இகக(மாலெ) கோவை மாவட்டச் செயலாளர் தோழர் க.பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். தோழர் என்.கே.நடராஜன் அவர்களின் இணையர் தேன்மொழி, தோழர் என்.கே.யின் இளைய சகோதரர்கள் விஜயக்குமார், கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர். இகக(மாலெ) பொதுச் செயலாளர் தோழர் திபங்கர், இகக (மாலெ) அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் வீ.சங்கர், மத்தியக் கமிட்டி உறுப்பினர் தோழர் பாலசுந்தரம், சிபிஐ மாநில துணைச் செயலாளர் தோழர் ந.பெரியசாமி, சிபிஐ(எம்) கட்சி கோவை மாவட்டச் செயலாளர் தோழர் நடராஜன், விசிக ஒழுங்கு கட்டுப்பாடுக் குழு மாநிலச் செயலாளர் தோழர் தேவராஜன், தபெதிக தலைவர் தோழர் கு.இராமகிருஷ்ணன், பியூசிஎல் தேசிய செயலாளர் வழக்கறிஞர் பாலமுருகன், இகக (மாலெ) தமிழ்நாடு புதிய மாநிலச் செயலாளர் தோழர் பழ.ஆசைத்தம்பி, இதக (மாலெ) கர்நாடக மாநிலச் செயலாளர் தோழர் கிளிஃப்டன், இகக(மாலெ) மத்திய கமிட்டி உறுப்பினர்கள் தோழர் பாலசுப்பிரமணியன், தோழர் சந்திரமோகன் உள்ளிட்டவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
அஞ்சலிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
•கோவை, பிரிக்கால் தொழிற்சாலை நிர்வாகத்தின் அநீதியான போக்கால், பத்தாண்டுகளுக்கும் மேலாக நூற்றுக்கணக்கான தொழிலாளர் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். மணிவண்ணன், ராமமூர்த்தி ஆகிய இரண்டு தொழிலாளர்கள் ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரையும் ஆயுள்தண்டனையிலிருந்து விடுவிக்க வேண்டும். அநீதியாக வேலைநீக்கம் செய்யப்பட்டுள்ள 362 தொழிலாளருக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசாங்கம் உடனடியாக தலையிட்டு, பிரிக்கால் தொழிலாளர்கள் பிரச்சினைக்கு விரைந்து தீர்வுகாண வேண்டும்; பாதிக்கப்பட்ட அனைத்து தொழிலாளருக்கும் நீதி கிடைக்கச் செய்திட வேண்டுமென மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சி தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.
•கோவை தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டத்திற்குப் பிறகு, கோவை மாநகராட்சி நிர்வாகம் ஒப்புக்கொண்ட தினக்கூலி ரூ.721 யை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்; உடனடியாக அவர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மேலும், தமிழ்நாடு முழுவதும் உள்ள ஊரக, நகர்ப்புர உள்ளாட்சிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் தினக்கூலியை ரூ. 721 ஆக . உயர்த்த வேண்டும் மற்றும் அனைவரையும் பணிநிரந்தரம் செய்ய வேண்டுமென நினைவஞ்சலி கூட்டம் வலியுறுத்துகிறது.
•கோவை மாவட்ட ஈசா யோகா நிறுவன அத்து மீறல்கள், நில அபகரிப்புகள், சுற்றுச்சூழல் மாசு, பெண்களின் மர்ம மரணங்கள் விவகாரங்களில், பொது சமூகம் தரப்பிலிருந்து பல தீவிர புகார்கள் மற்றும் வழக்குகள் எழுப்பப் பட்டுள்ளன. ஆனபோதிலும், ஒன்றிய, மாநில அரசுகளின் தலையீடுகள், நீதிமன்ற ஆதரவுடன் ஈசா நிறுவனம் தொடர்ந்து தப்பித்து வருகிறது. ஈசா நிறுவனத்தின் நில அபகரிப்புகள், அத்துமீறல்கள் பற்றியதொரு விரிவான விசாரணை மேற்கொள்ள பொதுநல அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு சக்திகளும் பங்கேற்கும் உயர்மட்ட கமிட்டி ஒன்றை மாநில அரசு உருவாக்கி உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கிறது.
•ஒன்றிய பாஜக அரசானது, வளர்ந்த மாநிலங்கள் என்ற வரையறையை உருவாக்கி, நாடு முழுவதும் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை சீர்குலைக்கும் சதி முயற்சிகளை செய்து வருகிறது; இதன் மூலம் தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஆளும் மாநில கிராமப்புற மக்களை தண்டிக்க மோடி அரசு திட்டமிட்டு வருகிறது. மோடி அரசின் இந்த முயற்சியை வன்மையாக கண்டிக்கிறது. மேலும், இத்திட்டத்தில் 200 நாட்கள் வேலை, நாள் கூலி ரூ 600 உறுதிப் படுத்திட வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை விவசாயத்திற்கும் பேரூராட்சிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டுமென்றும் கூட்டம் ஒன்றிய மோடிஆட்சியை வலியுறுத்துகிறது.
•விவசாயத்தை அழிக்கும், சுற்றுச்சூழலை நாசப்படுத்தும் கோவை அன்னூர் சிப்காட்,சென்னை பரந்தூர் விமான நிலையம், பழனி சுவா எக்ஸ்புளோசிவ் வெடிமருந்து தொழிற் சாலை ஆகியவற்றை வலுக்கட்டாயமாக அமலாக்கும் முயற்சிகளை தமிழ்நாடு அரசு உடனடியாக கைவிட வேண்டுமென கோரிக்கை விடுக்கிற அதேநேரத்தில், எட்டு வழிச்சாலை, ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட பல்வேறு கார்ப்பரேட் ஆதரவு திட்டங்களை வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரால் கொண்டு வர தமிழ்நாடு அரசாங்கம் முயற்சித்தால், எமது அமைப்புகள் விவசாயிகளை, மக்களை அணிதிரட்டிப் போராடும் என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டம் தொடர்பாக, அருணா ஜெகதீசன் அறிக்கையில் பரிந்துரை செய்துள்ள படி ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூட்டம் வலியுறுத்துகிறது.
•தொழிலாளர் மிக அதிகமாக உள்ள தமிழகத் தில் தொழிலாளர்களது வாழ்வாதாரத்தையும் உரிமைகளையும் கொடூரமாக பறிக்கும் நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகள்படி தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ள விதிகளை திரும்பப் பெற வேண்டும். மேலும், மோடி அரசு கொண்டு வந்துள்ள தொழிலாளர் விரோத நான்கு சட்டங்களுக்கு எதிராக, தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமெனவும் கூட்டம் வலியுறுத்துகிறது.
• 2023 ம் ஆண்டு பிப்ரவரி 15 முதல் 20 வரை பீகார், பாட்னாவில் நடைபெறும் இகக(மாலெ) கட்சியின் 11 வது அகில இந்திய மாநாட்டை வெற்றிகரமாக்க ஒட்டுமொத்த கட்சியும் முழுமூச்சாக பணியாற்ற வேண்டும். கோவை உழைக்கும் மக்களும் முற்போக்கு சக்திகளும் கட்சிக் காங்கிரஸ் வெற்றிபெற ஆதரவுதர வேண்டுமென கூட்டம் வேண்டுகோள் விடுத்தது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)