பட்டாசு ஆலைகளா? கொலைக் கூடங்களா?
தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளிலும் கல் குவாரிகளிலும் வெடி மருந்து விபத்துகள் அதிகரித்த அளவில் நடந்து வருகின்றன. 25க்கும் மேற்பட்டோர் 5 மாதங்களில் பலியாகி உள்ளனர். இன்னும் பலர் கடுமையான தீக்காயங்களுடன் சிகிச்சையில் உள்ளனர்.
பட்டாசு ஆலைகள், கல் குவாரி நிறுவனங்கள் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாதது, பட்டாசுத் தொழிற்சாலைகளை, லைசென்சுகளை குத்தகைக்கு விடுவது, போதிய பயிற்சி இல்லாத தொழிலாளர்களைப் பணிக்கமர்த்துவது என்பது ஒரு புறமிருக்க, இன்னொரு புறம் பட்டாசு ஆலைகளும் கல்குவாரிகளும் எவ்வித முறையான கண்காணிப்புக்கும் உட்படுத்தப்படுவதில்லை.
நாட்டில் நிலவும் கடும் வேலையின்மையினால் உயிரை பணயம் வைத்து வெடி மருந்தைக் கையாளும் வேலைகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதையே பட்டாசு ஆலை முதலாளிகள் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
அரசாங்கம் காத்திரமான கண்காணிப்பு பொறியமைவுகளை ஏற்படுத்தாமல் தொடர்ந்து நடக்கும் விபத்துகளை வேடிக்கை பார்த்து வருகிறது.
உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் தாங்கொணா துன்பத்தில் இருக்கும் போது, இந்த சுட்டெரிக்கும் கோடையில் தீக்காயம் அடைந்தவர்களும் கடும் துன்பத்தை அனுபவித்து வருகின்றனர்.
மே 9 அன்று நடந்த விபத்தைத் தொடர்ந்து ஏஐசிசிடியு மாநிலக் குழு உறுப்பினர் தோழர் ராசையா, தோழர் முருகன் குழுவினர் விபத்தில் காயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் சந்தித்ததோடு விபத்தில் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கும் சென்று ஆறுதல் கூறினர்.
- பட்டாசு ஆலை நிர்வாகம் உயிரிழந்தவர்களுக்கு ரூ 50 லட்சமும் காயம் அடைந்தவர்களுக்கு ரூ 20 லட்சமும் இழப்பீடாக உடனடியாக வழங்க வேண்டும்.
- அதுபோல பசுமைத் தீர்ப்பாயம் நியமித்த குழுவின் பரிந்துரைகளான வெடி மருந்துப் பொருட்களை கையாள இயந்திர மயமாக்கல், வேதிப்பொருள்களை கலக்கும் ஊழியர்களுக்கு உரிய பயிற்சி, சான்றிதழ் பெற்ற தொழிலாளர்களை மட்டுமே வேதிப்பொருட்களைக் கலக்கும் வேலைகளில் ஈடுபடுத்துவது, பட்டாசு ஆலை கிடங்குகளை கண்காணிக்கும் அமைப்புகளை வலுப்படுத்துவது, பட்டாசு ஆலை உரிமையாளர்கள் 6 மாதத்திற்கு ஒருமுறை பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுவது சம்பந்தமான அறிக்கையை சமர்ப்பிப்பது ஆகிய பரிந்துரைகளை திட்டவட்டமாக அமல்படுத்துவதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.
- அவற்றைக் கடைபிடிக்காத பட்டாசு ஆலைகள், கல் குவாரிகள் நிரந்தரமாக மூடப்பட வேண்டும்.
- சிவகாசி பகுதி மக்களுக்கு மாற்று வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்களை தமிழக அரசு உத்தரவாதம் செய்ய வேண்டும்.
- மாவட்ட, மாநில அளவில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள், பட்டாசு மற்றும் கல்குவாரி தொழிலாளர்கள் மத்தியில் வேலை செய்யும் சங்கங்கள், பட்டாசு ஆலை நிர்வாகங்கள், கல்குவாரி உரிமையாளர்கள், கண்காணிப்பு அலுவலர்கள் ஆகியோரை உள்ளடக்கிய கூட்டத்தைக் கூட்டி முறையான விதிமுறைகள் பின்பற்றப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். போதிய ஊழியர்கள் அலுவலர்கள் இல்லாமல் கண்காணிப்புப் பொறியமைவு திறனற்றதாக இருக்கிறது. பட்டாசு ஆலைகளின் கல்குவாரிகளின் எண்ணிக்கைக்கு தகுந்தார் போல் கண்காணிப்பதற்கான ஊழியர்கள் கொண்ட பொறியமைவை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்.
- பட்டாசு ஆலைகள் மற்றும் கல் குவாரிகளில் பணிபுரிவோருக்கு கௌரவமான ஊதியம், பொருளுள்ள சமூகப் பாதுகாப்புத் திட்டம், காப்பீட்டுத் திட்டம் ஆகியவற்றை மத்திய, மாநில அரசுகள் பொறுப்பேற்று உறுதி செய்ய வேண்டும்.
- இதுவரை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை அணுகி குடும்பத்தினரின் புனர்வாழ்வுக்கான நடவடிக்கைகளை தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் மேற்கொள்ள வேண்டும்.
- பசுமைத் தீர்ப்பாய குழு பரிந்துரைகளின் அமுலாக்கத்தை உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலான குழு கண்காணிக்க வேண்டும்.
- விதிமுறைகளை மீறி, குத்தகைக்கு விடுவதை குற்றச் செயலாக கருதி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
- முறையான உரிமம் பெறாத பட்டாசு ஆலை உரிமையாளர்கள், ஆலைகளை குத்தகைக்கு விடுபவர்கள் ஆகியோருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை வழங்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட வேண்டும்.
- விபத்துகள் நடக்கும் போது ஆலையின் ஃபோர்மேன், மேலாளர்களை மட்டும் கைது செய்தால் போதாது. உரிமம் பெற்ற உரிமையாளரையும் கைது செய்ய வேண்டும்.