உழைப்புச் சுரண்டல், பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகும் ஆயத்த ஆடை பெண் தொழிலாளர்கள்.

  • கிருஷ்ணவேணி

24 மே 2024 அன்று சர்வதேச தொழிலாளர் அமைப்பின் இணைய வழிக் கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் பெண்கள் பெருமளவு பணிபுரியும் ஆயத்த ஆடைத் தொழிலில் நிலவும் பாலின பாகுபாடு மற்றும் ஒடுக்குமுறைகள்பெண்களை அதிகாரமயப்படுத்துவதில் உள்ள தடைகள், அவற்றைக்  களைவதற்கான வழிமுறைகள் குறித்து இந்தக் கூட்டம் நடைபெற்றது. இந்திய தொழிற்சங்கங்களின் தமிழக தலைவர்கள் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.ஏஐசிசிடியு சார்பாக, மாநில துணைத் தலைவர் தோழர் கிருஷ்ணவேணி கலந்து கொண்டு கீழ்க்காணும் கருத்துக்களை முன்வைத்தார்.

  • தமிழக ஆயத்த ஆடை நிறுவனங்களில் வெளி மாநிலங்களில், வெளி மாவட்டங்களில் இருந்து இளம்பெண்கள் அழைத்து வரப்பட்டுஉணவும் இருப்பிடமும் அளிக்கப்பட்டு 24 மணி நேரமும் நிர்வாகத்தின் கண்காணிப்பில் கேம்ப் கூலி போன்று நடத்தப்படுகின்றனர். பொதுச் சமூகத்துடன் எந்த தொடர்பும் இல்லாமல், கொத்தடிமைகளாக நடத்தப்படுகின்றனர்
  • ஆயத்த ஆடை நிறுவனங்களில் பணிபுரியும் மொத்த ஊழியர்களில் 90 சதவீதம் பேர் பெண் தொழிலாளர்கள். 10 சதவீதம்தான் ஆண்கள். அவர்கள் சூப்பர்வைசர்கள், மேனேஜர்களாக பணிபுரிகின்றனர். இந்த  பணிச்சூழலில் பாலியல் அத்துமீறல்கள் என்பது அன்றாட நிகழ்வாகவே இருக்கிறது. வெளியில் சொன்னால் வேலையை விட்டு நிறுத்தி விடுவார்களோ என்ற அச்சம் காரணமாக பெண்கள் புகார் கொடுக்கத் தயங்குகின்றனர். ஆண்கள் மதுக்கடைகளிலும் மற்ற போதைகளிலும் வருமானத்தை இழந்து விட்டு வரும்போது பெண்களின் வருமானமே குடும்பத்தின் வாழ்வாதாரமாக உள்ளது. பெருநிறுவனங்களில் இது போன்ற புகார்களை விசாரிக்க அரசுகளால் பரிந்துரைக்கப்பட்ட விசாகா கமிட்டி  பெயரளவிற்கே இயங்குகிறது. இதன் உறுப்பினர்கள் நிர்வாகத்தின் ஆதரவாளர்களாகவே செயல்படும்போது பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகும் பெண்களுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை.
  • பெண்களுக்கு குறைந்தபட்சக் கூலி வழங்கப்படுவதில்லை. நிரந்தர வேலை கிடையாது. கூலியுடன் கூடிய வாராந்திர, பண்டிகைகால, பேறுகால விடுமுறை என்பது பெயருக்குக்கூட இல்லை. பீஸ்ரேட் கூலி என்ற பெயரில் பெண்கள் கடுமையாகச் சுரண்டப்படுகின்றனர். அதிக வேலை குறைந்த கூலி என்பதாலும்விடுமுறை என்பதே இல்லாததாலும் 45-50 வயதிலேயே வலுவிழந்து நோய்வாய்ப்படுகின்றனர். பணிமூப்புக் காலம் வரை வேலை செய்ய அனுமதிக்கப்படாமல் வெளியேற்றப்படுகின்றனர்
  • இஎஸ்ஐபிஎப்போன்ற சமூகநலத் திட்டங்கள் பெரும்பாலான ஆயத்த ஆடை நிறுவனங்களில் பெண்தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதில்லை. பென்ஷன் என்ற சொல்லையே அவர்கள் கேட்டதில்லை. சில நிறுவனங்களில் இத்திட்டத்தின் தொழிலாளர் பங்களிப்பாக பிடிக்கப்படும் பணம் இஎஸ்ஐபிஎப் அலுவலகத்தில் செலுத்தப்படுவதில்லை. நிர்வாகத்தின் பங்கும் செலுத்தப்படுவதில்லை. கடைசியில்  தொழிலாளர்கள் ஏமாற்றப்படுகிறார்கள்.
  • தொழிற்துறை ஜனநாயகம் பேணப்படுவதில்லைதொழிலாளர் நலனுக்காக எத்தனையோ சட்டங்கள் இருந்தும் அரசின் தொழிலாளர் துறையின் அக்கறையின்மையால் சட்டங்கள் நடைமுறைக்கு வருவதில்லை. அரசும் நிறுவனங்களும் ஒருவருக்கொருவர் ஆதரவாகவே செயல்படுகின்றனர்.