ஏஐசிசிடியுவின் 11ஆவது அகில இந்திய மாநாட்டை பெரு வெற்றி பெறச் செய்வோம்!
தொழிலாளர் வர்க்கத்தின் மீதான பாசிச தாக்குதலை முறியடிப்போம்!
சளைக்காத முயற்சிகள் மூலம் தடைகளை கடந்து ஏஐசிசிடியுவை புதிய சிகரங்களுக்கு எடுத்துச் செல்வோம்!
மகாராஷ்டிரா மாநிலம், புனேயில் ஏஐசிசிடியு வின் தேசியக்குழு கூட்டம் ஆகஸ்டு 28, 29-2024 தேதிகளில் நடைபெற்றது.
தோழர்கள் சங்கர், சசியாதவ், அதுல் திகே, சங்கர பாண்டியன், சுசேதா, நிர்மலா, நபேந்துதாஸ் குப்தா ஆகியோர் அடங்கிய தலைமைக் குழு கூட்டத்தை நடத்தியது.
இன்றைய தேசிய சூழல் பற்றி தேசியக்குழு விரிவாக விவாதித்தது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடி ஆட்சிக்கு எதிராக தெள்ளத் தெளிவான தீர்ப்பை மக்கள் வழங்கியிருக்கிறார்கள். பாஜகவால் அறுதிப் பெரும்பான்மைக்கு 32 இடங்கள் குறைவாக 240 தொகுதிகளிலேயே வெற்றி பெற முடிந்திருக்கிறது. இது 2019-ல் பாஜக பெற்ற தொகுதிகளை விட 63 இடங்கள் குறைவானதாகும். சிபிஐ (எம் எல்) கட்சியின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் வெற்றி உட்பட ஒரு வலுவான எதிரணி எழுந்து வந்திருக்கிறது. ஆனபோதிலும், சிறுபான்மை மோடி ஆட்சி தொழிலாளர் விரோத 4 சட்டத்தொகுப்புகளை அமலாக்குவதிலும், தனியார்மயத்தை தீவிரமாக முன்னெடுப்பதிலும், மக்கள் உரிமை மீது தாக்குதலை தொடுக்கும் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதிலும் குறியாக இருக்கிறது. மோடி 3.0 ஆட்சியின் பட்ஜெட், உழைக்கும் மக்களுக்கு, வேலையில்லா இளைஞர்களுக்கு பெரும் துரோகமிழைத்து விட்டது. “பொது சிவில் சட்டம்”, “ஒரு நாடு ஒரு தேர்தல்” ஆகிய பிரதமர் மோடியின் சுதந்திர தின பேச்சு தொடர்ந்து ஜனநாயகத்தையும் அரசியலமைப்புச் சட்டத்தையும் சீர்குலைக்கும் விதத்திலேயே அமைந்துள்ளது.
இதுபோன்ற சூழலில் தொழிலாளி வர்க்கம் எழுந்து நின்று, வீதிகளில் அணி திரண்டு மோடி ஆட்சிக்கு தக்க பாடத்தை புகட்ட வேண்டிய அவசியம் உள்ளது. வரவிருக்கின்ற மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், ஜம்மு- காஷ்மீர் மற்றும் ஹரியானா சட்டமன்றத் தேர்தல்களில் பாஜகவை, தேசிய ஜனநாயக கூட்டணியை தோற்கடிக்க ஏஐசிசிடியு முக்கிய பங்காற்ற வேண்டியுள்ளது.
தேசிய கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்:
மத்திய தொழிற்சங்கங்கள் தொழிலாளர் சட்டத் தொகுப்புகளுக்கு எதிராக அறிவித்துள்ள செப்டம்பர் 23, கருப்பு தினத்தை பெரும் எண்ணிக்கையில் தொழிலாளர்களை திரட்டி வெற்றி பெறச் செய்வோம்.
ஏஐசிசிடியுவின் 11ஆவது அகில இந்திய மாநாட்டை 2025 பிப்ரவரி 23, 24, 25 தேதிகளில் டெல்லியில் வெற்றிகரமாக நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. பிப்ரவரி 23 பொது மாநாட்டு நிகழ்ச்சியானது பல்வேறு தொழிற்சங்கத் தலைவர்கள், வெளிநாட்டு விருந்தினர்கள் கலந்து கொள்ளும் நிகழ்வாக டெல்லி டலகோத்ரா ஸ்டேடியத்தில் நடைபெறும். பொது மாநாட்டுக்கான அணி திரட்டல் வட மாநிலங்களில் இருந்து செய்யப்படும்.
அகில இந்திய மாநாட்டுக்கு முன்னதாக தமிழ்நாடு ஒரு லட்சம் உறுப்பினர் சேர்க்க வேண்டும். இந்தியா முழுவதும் 6,75,000 உறுப்பினர்கள் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தொழிற்சங்க உறுப்பினர் இணைப்புக் கட்டணம், மாநாட்டு நிதி என்ற வகையில் ரூபாய் 40 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு பங்களிப்பாக 4 லட்சம் கொடுக்க வேண்டும்.
மாநில வாரியாக, துறைவாரியாக கூட்டங்கள் நடத்தி மாநாட்டு தயாரிப்பு பணிகளை துவக்க வேண்டும். இந்நிகழ்ச்சிகளில் அகில இந்திய தலைவர் / பொதுச் செயலாளர் கலந்து கொள்வர்.
இலக்கை அடைவதை, குறிப்பாக இளைஞர்கள் பெண்கள் மத்தியில் இருந்து ஊழியர்களை வளர்ப்பதை, அமைப்பைப் பலப்படுத்துவதையும் கொண்டே மாநாட்டு வெற்றிக்கான அளவீடு இருக்கும்.
உறுப்பினர் இலக்கை அடைவது என்பது நம் அமைப்பு கட்டமைப்பை பலப்படுத்துவதோடு, ஊழியர் கட்டமைப்பை வளர்ப்பதோடு, புதிய உத்வேகத்தை உட் செலுத்துவதோடு பின்னிப்பிணைந்ததாகும்.
நம் உறுப்பினர் எண்ணிக்கை அதிகரிக்க அரசின் பல்வேறு திட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், பல்வேறு அமைப்பாக்கப்பட்ட துறையில் வேலை செய்யும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுவான அமைப்பு சாரா தொழிலாளர்கள் மத்தியில் நாம் சென்றாக வேண்டும். ரயில்வே, நிலக்கரி சுரந்த தொழிலாளர்கள் மத்தியிலும் நமக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன.
அகில இந்திய கட்டுமானத் தொழிலாளர் கூட்டமைப்பு (AICWF), அகில இந்திய திட்டத் தொழிலாளர்கள் கூட்டமைப்பு (AISWF),அகில இந்திய நகராட்சி மற்றும் தூய்மைத் தொழிலாளர் கூட்டமைப்பு (AIMSWF), இந்திய ரயில்வே ஊழியர் கூட்டமைப்பு (IREF) ஆகியவற்றின் தேசிய மாநாடுகளை நாம் ஏற்கனவே நடத்தி முடித்துள்ளோம். மாநாடுகளில் நிர்ணயிக்கப்பட்ட உறுப்பினர் இலக்குகளை அடைய வேண்டியுள்ளது.
தேசிய கவுன்சில் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:
கொல்கத்தா ஆர் ஜி கர் மருத்துவமனையில் இளம் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதற்கு தேசிய கவுன்சில் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியது. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையை உறுதி செய்வதுடன் மருத்துவர்கள் மற்றும் மருத்துவத்துறை ஊழியர்களின் பணியிட பாதுகாப்பை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு மோடி அரசு கொண்டு வந்துள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் UPS ஐ நிராகரித்த தேசிய செயற்குழு பழைய ஓய்வூதிய திட்டத்தையே (OPS) அமல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறது.
பீகாரில் 2024 ஜூலை 8 முதல் முகத்தை அடையாளப்படுத்தி வைக்கும் வருகைப் பதிவு முறையை எதிர்த்தும் இன்னும் பல்வேறு கோரிக்கைகளுக்காகவும் போராடி வருகிற சுகாதாரத் துறை பணியாளர்கள் போராட்டத்திற்கு தேசிய கவுன்சில் முழு ஆதரவு தெரிவிக்கிறது. உடனடியாக பீகார் அரசு தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனையை சுமூகமாக தீர்க்க வேண்டுமென தேசியக்குழு கேட்டுக் கொள்கிறது.
அனைத்து வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியதாரர்களுக்கும் பஞ்சபடி உயர்வுடன் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ 10,000 நிர்ணயம் செய்ய வேண்டுமென கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
தமிழ்நாட்டின் டிவிஎஸ் குழுமத்தின் சோளிங்கர், பிரேக்ஸ் இந்தியா ஆலையில் பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை உடனடியாக பணிக்கமர்த்த வேண்டுமெனவும் மாநிலத்தின் பல்வேறு டிவிஎஸ் நிறுவனங்களில் நடைபெறும் சட்டவிரோத தொழிலாளர் நடைமுறையை தமிழக அரசாங்கம் தலையிட்டு நிறுத்த வேண்டுமெனவும் தீர்மானம் நிறைவேற்றியது.
வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா தொழிலாளர்களின் சட்டமன்ற முற்றுகை போராட்ட அறிவிப்பை தொடர்ந்து ஏஐசிசிடியு அகில இந்திய துணைத் தலைவர் தோழர் இரணியப்பன் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டதற்கு தேசிய கவுன்சில் கண்டனம் தெரிவித்தது. உயிரியல் பூங்கா நிர்வாகம் நான்கு தொழிலாளர்களை பணி நீக்கம் செய்ததையும் சங்கத்தின் கொடி, பெயர் பலகையை அகற்றி அராஜகமாக நடந்து கொண்டதையும் தேசிய கவுன்சில் வன்மையாக கண்டித்தது.
ஆயுத தளவாட தொழிற்சாலைகளை மீண்டும் அரசாங்க நிறுவனமாக கொண்டு வர வேண்டும் என்றும் அத்தியாவசிய பாதுகாப்பு சேவை சட்டத்தை ரத்து செய்து தொழிற்சங்க உரிமைகளை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்றும் தேசியக் கவுன்சில் வலியுறுத்துகிறது.
பெங்களூருவின் ஆர் எம் சி ரெடிமிக்ஸ் கான்கிரீட் நிறுவனம் சட்ட விரோத கதவடைப்பு மூலம் தொழிலாளர்களின் வேலையை பறித்துள்ளதற்கு கண்டனம் தெரிவித்த தேசிய கவுன்சில், உடனடியாக கர்நாடக மாநில அரசு தலையிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறது.
நாட்டில் நிலவும் ஊதிய பாரபட்சத்தை பொறுத்துக் கொள்ள முடியாது எனவும் உடனடியாக அனைத்து உழைக்கும் மக்களுக்கும் குறைந்தபட்ச மாதாந்திர ஊதியமாக ரூபாய் 35,000 அறிவிக்க வேண்டுமெனவும் தேசியக் கவுன்சில் கேட்டுக்கொள்கிறது.
குறைந்தபட்ச வைப்புத் தொகை இல்லை எனக் கூறி கடந்த 3 ஆண்டுகளில் சாமானிய மக்களின் சேமிப்புக் கணக்கிலிருந்து ரூபாய் 10,000 கோடியை வங்கிகள் எடுத்துக் கொண்டதற்கு தேசியக் கவுன்சில் கடும் கண்டனம் தெரிவிக்கிறது. இதற்கு முரணான விதத்தில் பல லட்சம் கோடி கார்ப்பரேட் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை சுட்டிக்காட்டிய தேசியக் கவுன்சில் உடனடியாக மக்களின் சேமிப்பு கணக்கில் எடுக்கப்பட்ட பணம் மீண்டும் அவர்கள் கணக்கில் வரவு வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறது. கார்ப்பரேட்டுகளின் கடன் தள்ளுபடிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் தீர்மானம் செய்கிறது.
உடனடியாக தொழிலாளர் விரோத 4 சட்டத்தொகுப்புகள் திரும்பப் பெற வேண்டுமென்றும் பொதுத்துறை மற்றும் அரசாங்க துறைகளை தனியார் மயமாக்கும் கொள்கைகள் உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும் என்றும் தேசியக் கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றுகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)