வண்டலூர் உயரியல் பூங்கா ஏஐசிசிடியு தொழிற்சங்கத் தலைவர் தோழர் இரணியப்பன் கைது
அரசுத் துறையில் 10 ஆண்டுகளாகப் பணிபுரியும் தினக்கூலி தொழிலாளர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று திமுக 2021 தேர்தலின்போது வாக்குறுதி அளித்திருந்தது. ஆண்டுகள் 3 கடந்த பின்னரும் வண்டலூர் உயிரியல் பூங்காவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்யவில்லை. அந்தக் கோரிக்கைக்காக பல போராட்டங்கள் நடத்தியும் தீர்வு கிடைக்கவில்லை என்பதால் 20.8.2024 அன்று சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என ஏஐசிசிடியு அறிவித்திருந்தது. 20.8.2024 அன்று அதிகாலை ஏஐசிசிடியு மாநில சிறப்புத் தலைவரும் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான சொ.இரணியப்பன் வீட்டிற்கு காவல்துறையினர் சென்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரைக் கைது செய்து, கிளாம்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்திருந்தனர். தமிழ்நாடு முழுவதும் இந்த தொழிலாளர் விரோத, கைது நடவடிக்கையைக் கண்டித்து குரல் எழுந்தவுடன் 20.8.2024 காலை 11.30 மணியளவில் உயிரியல் பூங்கா இயக்குனருடன் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தார்கள். பேச்சுவார்த்தையில் சொ.இரணியப்பன், சங்கத் தலைவர் ஜெயசீலன், சங்க நிர்வாகிகள் சரவணன், சரசு, ராமச்சந்திரன், மணிமேகலை, திவாகர், கௌசல்யா ஆகியோர் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையில், தொழிலாளர்கள் பணி நிரந்தரம் குறித்து இயக்குனர் பரிந்துரை செய்து அரசுக்கு அனுப்புவதாக உறுதியளித்தார். தொழிற்சங்க காரணங்களால் பழிவாங்கப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணிக்கு எடுத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சம்பளம் இரு மடங்காக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உத்தரவாதம் அளித்தார். அதன் அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. ஏஐசிசிடியுவின் இந்த போராட்டத்திற்கு சிஐடியு, ஏஐடியுசி தொழிற்சங்கத் தலைவர்கள் தங்கள் ஆதரவைத் தெரிவித்ததோடு, தோழர் இரணியப்பன் கைது செய்யப்பட்டதற்கு கடும் கண்டனத்தையும் தெரிவித்தனர். கைதை கண்டித்து சிபிஅய்எம்எல் கள்ளக்குறிச்சி மாவட்டக்குழு ஆர்ப்பாட்டம் நடத்தியது.