புதுச்சேரியில் கொந்தளிக்கும் அரசியல்.
கூர்மை அடையும் மக்கள் போராட்டங்கள்!
2024 நாடாளுமன்றத் தேர்தலில், புதுச்சேரியில் பாஜக-என் ஆர் காங்கிரஸ் கூட்டணியின் தோல்விக்கு முக்கிய காரணம், மக்களை கொந்தளிக்கச் செய்த கோரிக்கையான 'பல ஆண்டுகளாக மூடப்பட்டிருக்கும் ரேஷன் கடைகளை திறப்பது எப்பொழுது?' என்பதுதான். தேர்தலில் என் ஆர் காங்கிரஸ் பாஜக கூட்டணியின் வேட்பாளர் பாஜக அமைச்சர் நமச்சிவாயத்தை எதிர்த்து களம் கண்ட, இந்தியா கூட்டணி வேட்பாளர் வைத்திலிங்கத்தை சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்து, மக்கள், கோபத்தை சரியாக வெளிப்படுத்தி ரேஷன் கடைகளை மூடிய என் ஆர் காங்கிரஸ் பாஜக கட்சிகளுக்கு பாடம் புகட்டினர்.
புதுச்சேரியில் ஏறக்குறைய அனைத்து பொதுத்துறை, கூட்டுறவுத்துறை நிறுவனங்களும் முழுமையாக மூடப்பட்டு விட்டன. பாரம்பரிய பஞ்சாலைகளான ரோடியர், பாரதி, சுதேசி, திருபுவனை கூட்டுறவு பஞ்சாலை, காரைக்கால் ஜெயபிரகாஷ் நாராயண்பஞ்சாலை என அனைத்தும் மூடி கிடக்கின்றன. பாப்ஸ்கோ, பாசிக் போன்ற வணிக பொதுத்துறை நிறுவனங்கள், மாநிலத்தின் மிகப்பெரிய கூட்டுறவு அங்காடி அமுதசுரபி, கூட்டுறவு கைத்தறி நிறுவனங்களான பாண்பேப், பாண்டெக்ஸ் ஆகியன ஒட்டுமொத்தமாக நலிவடைய செய்யப்பட்டு விட்டன. அரசு நிறுவனங்களில் பணி புரிந்த பல்லாயிரக்கணக்கானோர் வேலை இழந்துவிட்டதால் என் ஆர் காங்கிரஸ் பாஜக கூட்டணி அரசாங்கம் அரசியல் ரீதியாக தோல்வி அடைந்து விட்டது. புதுச்சேரி மாநிலத்தில் மூலப் பொருட்கள் வளம் பொதுவாக இல்லை. மானியங்கள், அரசு சலுகைகள் வழியாக நடைபெற்ற உற்பத்தி ஆலைகள், சரக்குகள் - சேவைகள் வரிகள் நடைமுறைக்கு வந்த பின்னர் மாநிலத்தை விட்டு பெரும்பாலும் வெளியேறி விட்டன. மாநிலம் முழுவதும் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர் எண்ணிக்கை இரண்டு லட்சத்தைத் தாண்டி உள்ளது. வேலையில்லாதோர் பட்டாளத்தில் கடும் கோபமும், அதிருப்தியும் கொப்பளிக்கின்றன. அது மட்டுமின்றி பத்தாண்டுகளுக்கும் மேலாக அரசு துறைகளில் பணியிடங்களை தொடர்ந்து நிரப்பாததால் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன. பணியில் சேர்ந்திடும் வயது வரம்பை பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் தாண்டிவிட்டதால் அவர்களுக்கு அரசு வேலைகள் கிடைக்கும் வாய்ப்புகளும் நழுவி விட்டன. வீழ்ச்சியடைந்துவிட்ட பொருளாதார நடவடிக்கைகளை மீட்டெடுக்க சீரழிந்த போதைசுற்றுலாக் கொள்கையை அரசு பின்பற்றுவதால் மக்கள் மத்தியில் அருவருப்பை எதிர்கொள்கிறது.
முன்னதாகவே அனைத்து முனைகளிலும் மக்களை வதைத்து, எரித்து கொண்டு இருக்கும் தீயில் எண்ணெய் ஊற்றுவது போல் மாநிலத்தின் மிகப்பெரிய இரண்டாவது அரசுத்துறையான மின்துறையை ஒன்றிய பாஜக அரசு தனியாருக்கு விற்பனை செய்ய முடிவு செய்து மாநில அரசை கட்டாயப்படுத்துகிறது. சந்தை மதிப்பில் மின்துறை சொத்து மதிப்பு சுமார் 2000 கோடி ரூபாய். ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணி புரியும் துறை இது. மாநில தகுதிக்காக போராடுவதாக மார்தட்டிக் கொள்ளும் என் ஆர் காங்கிரஸ் முதல்வர் ரங்கசாமி, ஒன்றிய அரசு நெருக்கடிகளுக்கு எதிராக குரல் கொடுக்காமல் அவருடைய கட்சி மூலம் போராடாமல் இரட்டை வேடம் போடுகிறார். மின்துறை தனியார் மயத்திற்கு எதிராக இடதுசாரி கட்சிகளான சிபிஐ( எம் எல்), சிபிஐ(எம்), சிபிஐ கூட்டுப் போராட்டங்களுக்குத் திட்டமிட்டன . இடதுசாரிகளின் போராட்டத் திட்டமிடலை தெரிந்து கொண்ட திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட இதர இந்தியா கூட்டணி கட்சிகளும் இணைந்து கடந்த 2/9/2024ல் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது. மின்துறை தனியார் மயத்தை திரும்பப் பெற வலியுறுத்தி 18/9/2024ல் மாநிலம் தழுவிய முழுக் கதவடைப்பை நடத்தியது. கதவடைப்பின்போது நடைபெற்ற மறியலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் கைதாகியது ஆட்சியாளர்களுக்கு நெருக்கடியை உருவாக்கியது.
தற்போது மாநில மக்களையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் வகையில் புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக ஒரே நாடு ஒரே மொழி என்ற ஆர் எஸ் எஸ் கருத்தியலை திணித்திடும் வகையில் என் ஆர் காங்கிரஸ் பாஜக கூட்டணி அரசாங்கம் மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் நடுவண் இடைநிலை, மேல்நிலை கல்வி வாரிய திட்டத்தை நடைமுறைப்படுத்தி தாய்மொழி வழி கல்வி கதவுகளை மூடிவிட்டது. அரசாங்கத்தின் இந்த முடிவு மாணவர்கள், இளைஞர்கள், பெற்றோர்கள் இடையில் பெருத்த கொந்தளிப்பு ஏற்படுத்தி வருகிறது. சி பி ஐ எம் எல் முன்முயற்சியால் தமிழ் கல்வி இயக்கம் என்ற பெயரில் அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளையும் ஒருங்கிணைத்து தாய்மொழிக்கான போராட்ட இயக்கம் துவங்கி உள்ளது. அனைத்து முனைகளிலும் தோல்வி அடைந்துவிட்ட என் ஆர் காங்கிரஸ் பாஜக கூட்டணி அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் போராட்ட அலைகள் மாற்றத்தை நோக்கி வீச தொடங்கியுள்ளன.
-சோபா-
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)