மோடி அரசே! கூடங்குளம் அணுஉலைப்பூங்கா மற்றும் அணுக்கழிவு மைய திட்டத்தைக் கைவிடு! தமிழக அரசே ! மோடி அரசுக்கு நிர்பந்தத்தை ஏற்படுத்து!!
கூடங்குளத்தில் 1 மற்றும் 2 அணு உலைகள் அமைத்த போதே இகக(மாலெ) தொடர் போரட்டத்தை நடத்தியது. இன்று 8 அணு உலைகளை அமைப்பதற்கு ஒன்றிய அரசு பணிகளைத் தொடங்கியிருப்பது மட்டுமின்றி, கூடங்குளத்திலேயே எரிக்கப்பட்ட அணுக் கழிவுகளை வைப்பதற்கான அணுக்கழிவு மையத்தை ஏற்படுத்த இருக்கிறது. மக்கள் போராட்டங்களை வழக்குகள் போட்டு ஒடுக்கிவிட்டு இன்று மக்களின் வாழ்க்கையைப் பற்றி கவலைப்படாமல், மக்கள் விருப்பத்திற்கு மாறாக அணுஉலைப் பூங்காவை மட்டுமல்ல, ஆபத்தான அணுக்கழிவு மையத்தையும் அமைக்கவிருக்கிறது. இதனால் ஏற்படும் அணு சக்தி கதிர் வீச்சின் காரணமாக தென் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா கடற்கரை பகுதிகளில் வாழும் மக்கள் வாழ்வை இழக்க நேரிடும். இடிந்தகரை பகுதிகளில் கடல் நீர் சூடாக உள்ளதாக மீனவ மக்கள் கூறுகிறார்கள். கூடங்குளம் அணுஉலை உள்ள பகுதியைச் சுற்றி மீன் பிடிக்க வராதீர்கள் என்று கடலோரக் காவல் படையினர் கட்டுப்பாடுகள் விதிக்கிறார்கள். மீறி வந்தால் வழக்குகள் பாயும் என்று மிரட்டுகிறார்கள். ஏற்கனவே இருக்கும் வழக்குகளில் இன்னும் 65 வழக்குகள் அரசால் வாபஸ் வாங்கப்படாமல் உள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ளவர்களுக்கு கடவுச் சீட்டு கிடைப்பதில்லை என்பது மட்டுமல்ல, வேலைகளுக்கு, படிப்புகளுக்குச் செல்பவர்களுக்கு காவல்துறையின் சான்றிதழ்களும் கிடைப்பதில்லை. கூடங்குளத்தில் அணுஉலைகள் அடிக்கடி பழுது அடைந்து போவதாகவும் செய்திகள் வருகின்றன.
ஆகவே கூடங்குளத்தில் அணுஉலைப்பூங்கா மற்றும் அணுக்கழிவு மையம் அமைப்பதைக் கைவிட வேண்டும்; போராடிய மக்கள் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளும் முற்றிலுமாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி தொடர் பிரச்சாரம்,போராட்டங்களை நடத்திட கூடங்குளம் அணுஉலைப் பூங்கா மற்றும் அணுக்கழிவு மைய எதிர்ப்பு கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. இக்கோரிக்கைகளை ஆதரிக்கும் அனைத்து கட்சி மற்றும் இயக்கங்களைக் கொண்ட இந்த கூட்டமைப்பின் கூட்டம் கடந்த 14.6.2022 அன்று திருநெல்வேலி மாவட்ட இகக(மாலெ) கட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்திற்கு அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் சுப.உதயகுமார் தலைமை தாங்கினார். இகக(மாலெ) மாநிலக்குழு உறுப்பினர் தோழர் ஜி.ரமேஷ் ஒருங்கிணைத்தார். இகக(மா) நெல்லை மாவட்டச் செயலாளர் தோழர் க.ஸ்ரீராம், புரட்சிகர இளைஞர் கழக மாநில துணைத் தலைவர் சுந்தர்ராஜ், ஏஐசிசிடியு மாவட்ட பொதுச் செயலாளர் கணேசன், விசிக செய்தித் தொடர்பாளர் முத்துவளவன் மமக மாவட்டத் தலைவர் ரசூல்மைதீன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர். வருகிற ஜூலை 12 அல்லது 14 தேதியில் அனைத்து கட்சிகளின் இயக்கங்களின் மாநிலத் தலைவர்கள் கலந்து கொள்ளும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நெல்லையில் நடத்திட தீர்மானிக்கப்பட்டுள்ளது.