பீகாரை மாற்றுவோம்! நீதிக்கான பயணம்
பீகாரை மாற்றுவோம்! நீதியை நிலை நாட்டுவோம் என்ற முழக்கத்துடன் பீகாரின் பல்வேறு முனைகளில் இருந்து ஒரே நேரத்தில் நடைபயணங்களும் மக்கள் பேரணிகளும் அக்டோபர் 16 முதல் 26 வரை நடைபெற்றன. இகக(மாலெ) கட்சி தலைமையில் துடிமிக்களவில் பெரும் மக்கள் பங்களிப்புடன் நடந்த இந்த பயணங்கள் எப்போது நினைவுகூரக் கூடிய ஒன்றாகும். மிகக் குறுகிய காலத்தில் முடிவு செய்யப்பட்டு, பத்தே நாட்களில் ஏற்பாடு செய்யப்பட்டு, பீகாரில் மொத்தமுள்ள 38 மாவட்டங்களில் 30 மாவட்டங்களில் கிட்டத்தட்ட 24 பேரணிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன. இந்தப் பயணங்களில் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், இகக(மாலெ) நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பல்வேறு கட்சிக்குழுக்களின் உறுப்பினர்கள் உள்பட சுமார் 5,000 தோழர்கள் சுமார் 3000 கிலோமீட்டர்கள் மாநில, மாவட்ட, தேசிய நெடுஞ்சாலைகள் வழியாகச் சென்றனர். கடைசி நாளில் பீகாரின் வரலாற்றுச் சிறப்புமிக்க மில்லர் பள்ளிக்கூட மைதானத்தில் மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த பயணங்களின்போது குறைந்த பட்சம் 1000 பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. 10,000த்திற்கும் மேற்பட்ட மக்கள் அவற்றில் பங்கெடுத்துள்ளார்கள். பகட்டான ரோடு ஷோக்களும் பணத்தைக் கொண்டு நடக்கும் அரசியலும் உள்ள இன்றைய சூழ்நிலையில், மக்களுடைய அரசியல், மக்களுக்கான அரசியல், மக்களால் அரசியல் என்கிற அடிப்படையில் உழைப்பை- உழைக்கும் மக்களை மையமாகக் கொண்டு முன்மாதிரியாக நடத்தப்பட்டதுதான் இந்த மக்கள் பயணம்-பேரணியாகும். இந்தப் பிரச்சாரப் பயணம் வெற்றிகரமானது மட்டுமின்றி பல்வேறு மக்கள் பிரிவினர் குறிப்பாக பாதிப்புக்குள்ளாகியுள்ள, உரிமை பறிக்கப்பட்ட மக்கள் - நிலம் கணக்கெடுப்பு என்ற பெயரில் அப்புறப்படுத்தப்படும் அச்சத்திலிருக்கும் நிலமற்ற ஏழைக் குடும்பத்தினர், பிரி-பெய்ட் மீட்டர் மற்றும் அதிகமான மின் கட்டணம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள அன்றாடங்காய்ச்சியினர், நிலபிரபுத்துவ, மதவெறி வன்முறையால் தாக்குதலுக்குள்ளாகும் தலித்துகள் மற்றும் சிறுபான்மையினர், அடிப்படை உரிமைக்காகவும் வாழ்க்கைக் கூலிக்காகவும் போராடிக் கொண்டிருக்கும் திட்டத் தொழிலாளப் பெண்கள், பீகாரிலுள்ள பள்ளிக்கூடங்களின் நிலை பற்றி அக்கறையுள்ள இளம் மாணவர்கள்- கோரிக்கைகளை முன்னெடுத்துச் சென்றது.
‘எங்கள் பங்கைக் கொடுத்திடு- உங்கள் சொல்லைக் காப்பாற்று’ என்பதே பயணத்தின் முக்கிய முழக்கமாகும். மாதம் ரூ.6000த்திற்கும் குறைவான வருமானம் உள்ள 95 லட்சம் ஏழைக் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.2 லட்சம் நிதியுதவி, நிலமற்ற ஏழைக் குடும்பங்கள் ஒவ்வொன்றிற்கும் 5 சென்ட் நிலம், அனைவருக்கும் வசதியான வீடு ஆகியவையே பயணத்தின் பிரதான கோரிக்கைகளாக இருந்தன. இவைகள் நிச்சயமாகத் தரப்படும் என்று இரட்டை எஞ்சின் டெல்லியில் நரேந்திரமோடியும் பாட்னாவில் நிதிஷ்குமாரும் திரும்பத் திரும்ப வாக்குறுதி அளித்தார்கள். ஆனால், பல லட்சக்கணக்கான பீகார் ஏழைகளும் ஏமாற்றப்பட்டுள்ளார்கள். சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றாததைக் கண்டித்து நூற்றுக்கணக்கான ஒன்றியங்களில் ஆகஸ்ட்-செப்டம்பர் மாதத்தில் மட்டும் லட்சக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல், அந்த ஏழை மக்கள் மீது மேலும் இடியை இறக்குகிறது நிதிஷ்குமார் அரசாங்கம். ஒன்று, நிலப்பிரபுத்துவம் ஒழிப்பு காலத்தில் இருந்தே நிலப் போராட்டத்தின் மூலம் பெற்று பல பத்தாண்டுகளாக அனுபவித்து வரும் கொஞ்சநஞ்ச ஆதாரங்களையும் ‘நிலக் கணக்கெடுப்பு’ என்ற பெயரில் நிலமற்ற ஏழைகளிடமிருந்து பிடுங்கி, நில வங்கி மூலமாக கார்ப்பரேட்டுகளுக்கு வழங்கத்திட்டமிட்டுள்ளது நிதிஷ் அரசு. மற்றொன்று, குறைந்த வருமானத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஏழைகளிடமிருந்து, மின் பயன்பாட்டிற்கு முன் கட்டணம் மீட்டர் பொறுத்தி கொள்ளையடிப்பது மட்டுமின்றி அவர்களின் மின்சாரப் பயன்பாட்டு உரிமையையே பறிக்கிறது. ஏழை மக்கள் வசமுள்ள நிலங்களை முறைப்படுத்தி அவர்களுக்கு வழங்கும் வரை நிலக் கணக்கெடுப்பு நிறுத்தி வைக்கப்பட வேண்டும், நிலமற்ற ஏழைகளுக்கு 5 சென்ட் நிலம் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும், மின் பயன்பாட்டிற்கு முன் கட்டண மீட்டர் திட்டம் கைவிடப் படவேண்டும், பீகாரின் விவசாயிகள் மற்றும் ஏழை குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் மாதம் 200 யுனிட் இலவச மின்சாரம் வழங்கப்பட வேண்டும் என்பன பயணக் கோரிக்கைகளில் மிக முக்கமானவையாகும்.
அரசியல் மாற்றத்திற்கான கட்டத்தில் பீகார் இருக்கிறது. நிதிஷ்குமார், லல்லு பிரசாத், ராம் விலாஸ் பஸ்வான், சுஷில் மோடி காலத்தின் தலைமுறையில் இருந்து புதிய தலைமையை நோக்கி பீகாரின் அரசியல் சூழல் மாறி வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக பின்னால் இருந்து பீகாரில் ஆட்சி செய்து கொண்டிருக்கின்ற பாஜக, இப்பொழுது ஏற்பட்டுக் கொண்டிருக்கும் அரசியல் வெற்றிடத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, பக்கத்து மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் யோகியின் புல்டோசர் ராஜ் நடப்பதுபோல் பீகாரிலும் அப்படியொரு ஆட்சியை தான் நடத்துவதற்குத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. கிழக்கு பீகார் மாவட்டங்களில், முஸ்லீம் வெறுப்பை விதைத்து வன்முறையைத் தூண்டி, அரசிலமைப்புச் சட்டத்தை அப்பட்டமாக கேலிக்குள்ளாக்கி நடத்தப்பட்ட கிரிராஜ் ஹிந்து சுயமரியாதைப் பயணத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ‘பீகாரை மாற்றுவோம் நீதி கேட்டு பயணம்’ இருந்தது என்பது தற்செயலானது அல்ல. இளைய பீகாரின் கோரிக்கையான அதிகமான, தரமான பள்ளிகளுக்கு, கிரிராஜின் பதில் திரிசூலங்களை வழங்குதாகவே இருந்தது. எதிர்கால பீகாருக்கு இரண்டு பயணங்களும் இரண்டு வெவ்வேறு பார்வையை முன்நிறுத்துகின்றன.
பீகாரை மாற்றுவோம் என்பது வெறும் ஆட்சி மாற்றமோ அல்லது தலைமை மாற்றமோ அல்ல. பிரசாந்த் கிஷோர் அல்ல பாஜகவே சொல்வதுபோல், சில போலி நவீன தோற்றத்துடன் பழைய நிலபிரபுத்துவ முறையைக் கொண்டு வருவதல்ல. அதற்கு முற்றிலும் மாறானது. நீண்ட காலங்களாக மறுக்கப்பட்டு வரும் , மாறி மாறி வந்த அரசாங்கங்களால் வாயாலே வடை சுட்டு ஏமாற்றப்பட்ட மக்களின் அதிகரித்து வரும் அபிலாஷைகளை, அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவது. பிரபலமான முழக்கமான உணவு, உடை, உறைவிடம் என்பதிலிருந்து, அடிப்படை கட்டமைப்புகளான மின்சாரம், தண்ணீர், சாலைகள் மற்றும் மறுக்கப்பட்டுவரும் கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு என்பதாக மக்களின் தேவைகள் அதிகரித்துள்ளது. மலிவான உழைப்பை ஏற்றுமதி செய்யும் பீகார் போன்ற ஒரு பின்தங்கிய மாநிலத்தை பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலை, சமூக ஒடுக்குமுறை, வறுமையின் நுகத்தடியிலிருந்து விடுவிப்பதுதான் உண்மையான மாற்றமாகும்.
பீகார் பெண்கள் நிலை மிகவும் மோசம். மதிய உணவுத் திட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு நாளொன்றுக்கு வெறும் ரூ.55 தான் கொடுக்கப்படுகிறது. ஆண்டுக்கு 10 மாதங்கள் மட்டுமே வேலை. கோவிட் 19 காலத்தில், தங்கள் உயிரைப் பற்றி கவலைப் படாமல் பலருடைய உயிரைக் காப்பாற்றிய பீகாரின் ஆஷா தொழிலாளர்களுக்கு மாத ஊக்கத் தொகையாக ரூ.2500 ஒப்புக் கொண்டபடி நிதிஷ்குமார் அரசு வழங்காமல் புறக்கணித்து வருகிறது. இப்போது சுய உதவிக் குழுக்களில் பல லட்சக்கணக்கான பெண்களை பதிவு செய்வதற்கு முக்கிய பங்காற்றிய ஜீவிகா ஊழியர்களுக்கு கடந்த 20 ஆண்டுகளாக ஆட்சியிலிருக்கும் தேஜகூ அரசு துரோகமிழைத்து வருகின்றது. அதைப் போல பீகாரில் உள்ள தலித்-பகுஜன் சமூகத்தினர் நிலப்பிரபுத்துவ வன்முறையாலும் சமூகரீதியான புறக்கணிப்பாலும் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். பீகாரின் இளைஞர்கள் உயர் கல்விக்காகவும் வேலைக்காகவும் மற்ற இடங்களுக்குப் புலம்பெயர்ந்து வருகிறார்கள். கிரிராஜ்சிங்குகளின் வழியில் சென்றால், பீகார் முஸ்லீம்களுக்கு எதிராக வெறுப்பையும் வன்முறையையும் செயல்படுத்தும் ஒரு சோதனைக்கூடமாக மாறும்.
‘எங்கள் பங்கைக் கொடுதிடு, உங்கள் சொல்லைக் காப்பாற்று’ முழக்கத்துடன் நடைபெற்ற ‘பீகாரை மாற்றுவோம்! நீதிக்கான பேரணி’யானது சமூக மாற்றத்திற்கான நிகழ்ச்சி நிரலையும் முழுமையான நீதியையும் முன்னுக்குக் கொண்டு வந்துள்ளது. பீகாரின் ஏழைகள், பெண்கள், இளைஞர்களின் கூட்டு அறுதியிடலின் திறன் பற்றிய பார்வையை இந்தப் பயணம் நமக்குத் தந்துள்ளது. இது பீகாரை மாற்றுவதற்கு ஒரு நீடித்த மக்கள் இயக்கத்திற்கான தெளிவான அழைப்பாக இப் பேரணி முழுமையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. பீகாரில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் வெற்றிடத்தை, அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமான சக்திகள் மற்றும் பிற்போக்குக் கருத்துகள் பயன்படுத்திக் கொண்டு பீகாரை பின்னுக்குத் தள்ள அனுமதிக்கக் கூடாது. பீகாரின் துடிப்பான கம்யூனிஸ்ட்டு மற்றும் சோசலிஸ்டு பாரம்பரியத்தின் வாரிசுகள் தலைமையேற்று முன்னோக்கிய பாதையை அமைத்து, ஒரு கௌரவமான வாழ்க்கை, எல்லாருக்கும் உரிமைகள் மற்றும் நீதி, சமூக சமத்துவம் மற்றம் சமூக நல்லிணக்கத்திற்கான பதாகையை உயர்த்திப் பிடித்து பீகாரை முன்னேற்ற வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)