தலையங்கம்
எதற்காகப் பள்ளிக்கூடங்கள்? யாருக்காகப் பள்ளிக்கூடங்கள்?
தமிழ்நாட்டில் அடுத்தடுத்து இரண்டு பிரச்சனைகள் கவனத்தை ஈர்த்தன. ஒன்று சென்னை அரசு பள்ளிக்கூடங்களில் நடைபெற்ற சொற்பொழிவு! மற்றொன்று நிதியமைச்சரிடம் ஜிஎஸ்டியின் அவலம் குறித்து கோவை அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் பேசியதற்கு அவரை மன்னிப்பு கேட்க வைத்த அராஜகச் செயல். பிஞ்சு உள்ளங்களில் நஞ்சை விதைப்பது ஆபத்தானது. பரம்பொருள் பவுண்டேசன் என்ற பெயரில் கோடிக்கணக்கில் பணம் பார்க்கும் நபர் அரசுப் பள்ளிக்கு 1லட்ச ரூபாய் நன்கொடை அளித்துவிட்டு, மாணவர்கள் மத்தியில் ஆன்மீகச் சொற்பொழிவு என்ற பெயரில் மூடநம்பிக்கையைப் பரப்பினார். முற்பிறவியில் செய்த பாவத்தால்தான் இப்பிறவியில் மாற்றுத் திறனாளிகளாகப் பிறக்கிறார்கள் என்றார். அதற்கு அப்பள்ளியில் இருந்த பார்வைச் சவால் கொண்ட ஆசிரியர் சங்கர் உடனே எதிர்ப்பு தெரிவித்தார். அந்த போலி சொற்பொழிவாளர், ஆணவத்துடன் ஆசிரியரை அவமானப்படுத்தினார். வழக்கம்போல் சங்கிகள் அந்தச் சொற்பொழிவாளருக்கு வக்காலத்து வாங்கினார்கள். அரசுப் பள்ளிக் கூடங்களில் ஆன்மீகம் கற்றுக் கொடுக்கக் கூடாதா? தனியார் பள்ளிகளில், சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளில் அவர்கள் மதப் பிரச்சாரம் செய்யவில்லையா? என விஷத்தைக் கக்கினார்கள். தொடர்ந்து அவர் இந்துக் கடவுள்கள் பற்றி பேசியதும் வெளியே வர, சங்கிகள் அடங்கிப் போனார்கள். ஆங்கிலேயராவது அனைத்து சாதியினரும் கல்வி கற்க வாய்ப்பளித்தார்கள். அவர்கள் நடத்திய பள்ளிக் கூடங்களில் படித்த மாணவர்கள் எல்லாம் கிறிஸ்தவர்களாக மாறிவிடவுமில்லை. அப்பள்ளிகள்தான் மாணவர்களுக்கு அறிவியலைக் கற்றுக் கொடுத்தன. தற்போது சில தனியார் பள்ளிகளில் நடப்பதுபோல், அரசுப் பள்ளிகளிலும் ‘மோட்டிவேஷன் ஸ்பீச்’ என்ற பெயரில் அறிவுபூர்வமான விசயங்களை சொல்லிக் கொடுப்பதற்கு மாறாக மாணவர்களை அழவைத்து, தன்னம்பிக்கை இழக்கச் செய்கிறார்கள். இதன் பின்னால், சங்பரிவார் உள்ளது என்பதைச் சொல்லத் தேவையில்லை. ஆனால், தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையும்கூட அதற்கு துணை போகிறதோ? என்கிற சந்தேகம் எழாமலும் இல்லை. சமீபத்தில் ஆசிரியர் தினத்தன்று பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ‘ஒன்றிய அரசின் ‘பிஎம் ஸ்ரீ’ (Prime Minister Schools for Rising India) எழுந்து வரும் இந்தியாவுக்கான பிரதம மந்திரியின் பள்ளிக்கூடங்கள் திட்டத்தை தமிழ்நாடு அரசு ஆரம்பத்தில் ஏற்றுக் கொண்டது; தற்போது புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட மறுக்கிறது, தமிழ்நாடு அரசு தெளிவின்றி இருக்கிறது. இத்திட்டத்தை ஒட்டுமொத்தமாக வேண்டாமென்று தமிழ்நாடு அரசு ஒதுக்கிவிடவில்லை’ என்றார். பிஎம்ஸ்ரீ திட்டம் தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதி. இதை ஏற்றுக் கொண்டால்தான் தமிழ்நாட்டிற்கு அரசுப் பள்ளிகள் மேம்பாட்டு நிதி 4305.66 கோடி ரூபாயை விடுவிப்போம் என்கிறது ஒன்றிய அரசு. “ஏற்கனவே தேசிய கல்விக் கொள்கை 2020 உடன் இணைந்த சர்வசிக்ஷா திட்டத்தை தமிழ்நாடு செயல்படுத்தி வருகிறது. சமக்ராசிக்ஷா திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு ரூ.1876 கோடி வந்துள்ளது. இப்போது பிஎம்ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திட வேண்டும். தமிழ்நாட்டில் தமிழில்தான் கற்பிக்கப்படும்” என்கிறார் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திரபிரதான். பிஎம்ஸ்ரீ பள்ளிகளிலோ மும்மொழித் திட்டம். தமிழ்நாட்டிலோ இரு மொழிக் கொள்கைதான். அப்படியிருக்க, கடந்த மார்ச் மாதம் தமிழ்நாடு பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “பிஎம்ஸ்ரீ திட்டப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டாலும் புதிய கல்விக் கொள்கையை எந்நாளும் எதிர்ப்போம்” என்றார். அதாவது மோடி அரசின் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்போம், ஆனால், அத்திட்டங்களை அமல்படுத்துவோம் என்கிறார்! இந்தப் பின்னணியில்தான் அரசு பள்ளிகளில் நடந்த ஆன்மீகச் சொற்பொழிவும் பார்க்கப்பட வேண்டும். அந்த சர்ச்சைக்குரிய சொற்பொழிவாளர், அன்பில் மகேஷை சந்தித்த படங்களும் உள்ளன. ஆனால், பிரச்சனை பெரிதானதால், கல்வி அமைச்சர், ‘எனது இடத்திற்குள் வந்து என்னுடைய ஆசிரியரை அவமதித்தவரை சும்மா விடமாட்டேன்’ என்று பேசி ஆசிரியர் சங்கருக்கு சால்வை போட்டு சாமாளித்துள்ளார். ஆர்எஸ்எஸ்-பாஜக தங்கள் கொள்கைகளை பிஞ்சு உள்ளங்களில் பதியச் செய்ய பல்வேறு திட்டங்களுடன் வருகின்றன. அப்படியிருக்கும்போது அவற்றுக்கெதிராக வலுவான எதிர்ப்பைக் கட்டமைப்பதற்கு மாறாக திமுக அரசு ஒப்புக்காகப் பேசிக்கொண்டிருக்கிறது. கல்வி காவிமயமாக்கம்தான் மோடியின் தேசிய கல்விக் கொள்கை. ஆனால் அதை எதிர்ப்பதாகச் சொல்லிக் கொண்டே அதன் இணைப்புத் திட்டங்களை அமல்படுத்தி வந்தால்…? பள்ளிக் கூடங்கள் மாணவர்களுக்கு அறிவியலைக் கற்றுத்தர வேண்டும். பாடங்களை தாய் மொழியில் கற்றுக் கொடுக்க வேண்டும். மதச் சார்பற்ற அரசு என்றால், எப்படி அரசியலோடு மதத்தை கலக்கக் கூடாதோ அதுபோல், கல்வியோடும் மதத்தை கலக்கக் கூடாது. பள்ளிக்கூடங்கள் மாணவர்களுக்கானது. அவர்களை அறிவில் சிறந்தவர்களாக, சுயமாகச் சிந்திப்பவர்களாக, பகுத்தறிவாளர்களாக ஆக்கும் இடம். கல்வி கடைச் சரக்காக, தனியார் கையில் போனதால்தான் இதுபோன்ற பிரச்சனைகள் தலை தூக்குகின்றன. கல்வியை தனியார்மயமாக்குவது, காவிமயமாக்குவது மட்டுமின்றி சிலருக்கு மட்டுமே கல்வி என்பதற்கானதே மோடியின் தேசிய கல்விக் கொள்கை. எனவே அது தமிழகத்தில் எந்த வடிவத்திலும் உள்நுழைவதை அனுமதிக்கக் கூடாது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)